Wednesday, September 9, 2020

கம்ப இராமாயணம் - நம்பிக்கு ஒரு நன்மகனோ ?

கம்ப இராமாயணம் - நம்பிக்கு ஒரு நன்மகனோ ?


இராமாயணத்தில் பல கதா பாத்திரங்கள், கதை ஓட்டத்தில் முக்கியத்வம் பெறாமல் போய் விடுகின்றன.

நுணுகிப் பார்த்தால் அவை கிடைக்கலாம்.

வால்மீகி இராமாயணத்தை தழுவி எழுதும் போது கம்பனுக்கு எதை எடுப்பது, எதை விடுவது என்ற படைப்புச் சிக்கல் வந்திருக்கும்.

கம்பன் ஒன்றை விடாமல் தன் காப்பியத்தில் சேர்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஒரு கதா பாத்திரம் அதிகாயன் என்ற பாத்திரம்.  இராவணனின் இன்னொரு பிள்ளை. நமக்கு இந்திரஜித்தை நன்றாகத் தெரியும்.

அதிகாயன் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது.

கும்பகர்ணன் போரில் இறந்து போனான். இன்னொரு தம்பி வீடணன், இராமன் பக்கம் போய் விட்டான்.

கும்பகர்ணனை இழந்து வருந்தும் இராவணனைப் பார்த்து அதிகாயன் கூறுகிறான்.

"உன் தம்பியை கொன்று உன்னை வருந்த வைத்த அந்த இராமனை, அவன் தம்பியை கொன்று  அதே போல் வருந்த வைக்கிறேன். அப்படி இல்லை என்றால்,  ஆடவரில் சிறந்த உனக்கு நான் ஒரு நல்ல பிள்ளையாவேனா ?"

என்று வஞ்சினம் கூறி போருக்கு புறப்படுகிறான்.


பாடல்

‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஒர் வன்துயர் கண்டிலெனேல்
நம்பிக்கு ஒரு நன்மகனோ இனி நான்?


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_9.html


‘உம்பிக்கு = உன் தம்பிக்கு

உயிர் ஈறு செய்தான் = உயிருக்கு இறுதி (முடிவு) செய்தான்

ஒருவன் = இராமன்

தம்பிக்கு = அவனுடைய தம்பிக்கு (இலக்குவனுக்கு)

 உயிர் ஈறு சமைத்து = உயிருக்கு இறுதி செய்து

அவனைக் = அவனை

கம்பிப்பது = நடுங்கும்படி

ஒர் வன்துயர் கண்டிலெனேல் = ஒரு வலிமையான துயரை தரவில்லை என்றால்

நம்பிக்கு = ஆடவரில் சிறந்த உனக்கு

 ஒரு நன்மகனோ இனி நான்? = ஒரு நல்ல மகனாக நான் இருப்பேனா?


அம்மா உயிரோடு இருக்கும் போது , அப்பா இன்னொரு பெண்ணை, அதுவும் மற்றொருவன் மனைவியை  கவர்ந்து வந்து சிறை வைத்து இருக்கிறான்.

அவனுக்காக தம்பி, மகன் என்று எல்லோரும் சண்டைக்குப் போகிறார்கள்.

அவன் செய்வது தவறு என்று தெரிந்தும், அந்தக் குடும்பத்தில் ஒரு ஒற்றுமை  இருக்கிறது.

மாறாக, இராமன் குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு சற்று சங்கடம் வரும்.

மூத்தவள் மகனுக்கு மகுடம் என்றதும் பொறாத இளைய மனைவி.

கணவன் பேச்சை கேட்காத இளம் மனைவி.

பரதனை திட்டி தீர்க்கும் இலக்குவன்.

தயரதனையும், கைகேயியையும் திட்டும் இலக்குவன்.

நீ என் மனைவி இல்லை,  பரதன் என் பிள்ளை இல்லை என்று வெறுத்துப் பேசும்  தயரதன்.

இராமன் பரம் பொருள் என்பதால் இவற்றை நாம் கவனிப்பது இல்லை.

கசப்பான உண்மை இது.



Tuesday, September 8, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே


நம் உடலை நாம் எப்படி பயன் படுத்தலாம்?

நல்ல விஷயத்துக்கும் பயன் படுத்தலாம், அல்லாத விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

சிக்கல் என்ன என்றால், எது நல்லது, எது அல்லாதது என்று நமக்குத் தெரிவது இல்லை.

அல்லாததை நல்லது என்று நினைத்துக் கொண்டு நாளும் அதைச் செய்கிறோம்.

அல்லது, எது நல்லது என்று தெரியாமல் குழம்புகிறோம்.

அந்த மாதிரி மயக்கம், குழப்பம் வரும் போது உயர்ந்த நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும். தெளிவு பிறக்கும்.

வள்ளுவரைக் கேட்டால் சொல்லுவார், செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றிற்கும் ஈயப் படும் என்று.

அவரே சொல்லுவார், தலை எதற்கு இருக்கிறது என்றால் இறைவனை வணங்க என்று.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பிரபந்தத்தில் (362) பெரியாழ்வார் சொல்கிறார்


"இந்த கையும் வாயும் எதற்கு இருக்கிறது என்றால் அவன் நாமங்களை சொல்லவும், எத்தனை தரம் சொன்னோம் என்று எண்ணிக் கொள்ளவும் தான் இருக்கின்றன. அதை விடுத்து சிலர், இந்த கை உணவை எடுத்து வாயில் போடவும், இந்த வாய் அந்த உணவை தின்பதற்கும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்"  என்கிறார்.


பாடல்

வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி கிழலெழும்
திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.


பொருள்

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_8.html


வண்ணநல்மணி யும் = வண்ண மயமான நல்ல மணியும்

மரகதமும்  = மரகதமும்

அழுத்தி = பதித்து

கிழலெழும் =  ஒளி விடும்

திண்ணைசூழ்  = திண்ணைகள் சூழ்ந்த

திருக் கோட்டியூர்த்  = திருக்கோட்டியூர்

திரு மாலவன்  = திருமாலவன்

திரு நாமங்கள் = திரு நாமங்கள்

எண்ணக் கண்ட விரல்களால்  = எண்ணிக் கொள்ளும் விரல்களால்

இறைப் பொழுதும் = இமைப் பொழுதும்

எண்ணகி லாதுபோய் = எண்ணுவதை விட்டு விட்டு

உண்ணக் கண்ட = உண்பதற்கும்

தம் = தம்முடைய

ஊத்தைவாய்க்குக் = ஊத்தை வாய்க்கு

கவளம் = கவளம் கவளமாக

உந்துகின் றார்களே. = அள்ளிப் போடுகிறார்களே

பொதுவாகச் சொல்லப் போனால், இந்த உடலை நல்ல விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம். தீய விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

எப்படி பயன் படுத்துகிறோம் என்று எப்போதும் சிந்தித்துச் செயல் பட வேண்டும்.



Monday, September 7, 2020

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே 


கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில், நாம் புதிதாகச் செய்தது என்ன?

உணவு, உடை, பேச்சு, நாம் கண்ட பொருள்கள், மனிதர்கள், கேட்ட செய்திகள்?

திருப்பி திருப்பி அதே தோசை, வடை, பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார்...

அதே உடை....சேலை,  சுடிதார், pant , shirt , டீ-ஷர்ட் ....

மீண்டும் மீண்டும் அதே பேச்சு...மாமியார் சரி இல்லை, வீட்டு காரருக்கு ஒண்ணும் தெரியாது, மனைவிக்கு சரியா சமைக்கத் தெரியாது, அந்த கட்சி மோசம், இந்த கட்சி நல்லது, வெயில், மழை.....

அதே டிவி, அதே சீரியல், அதே blog , அதே பாட்டு

சலிப்பு வராதா?

ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும், முன்னேற வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நமக்கும் பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றாதா?

இப்படி செக்கு மாடு போல சில விஷயங்களில் சுத்தி சுத்தி வருகிறேனே, என்னக்கு ஒரு நல்ல வழியை காட்டுவாய் என்று சிவனை வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.

பாடல்

உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே.


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_7.html


உண்டதேயுண்டு  = உண்டதே உண்டு

முடுத்ததேயுடுத்து = உடுத்ததே உடுத்து

மடுத்தடுத்து = அடுத்து அடுத்து

உரைத்த யுரைத்தும்,  = சொன்னதையே சொல்லி

கண்டதேகண்டுங் = பார்த்ததையே பார்த்து

கேட்டதேகேட்டுங் = கேட்டதையே கேட்டு

கழிந்தனக நாளெல்லாம், = கழிந்தன நாட்கள் எல்லாம்

விண்டதா மரைமேலன்னம் = விண்ணில் தாமரை மேல் அன்னம்

வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா, = அதன் மேல் வீற்று இருக்கும் திரு வெண்காட்டில் உறையும் சிவனே

அண்டரே = தேர்வர்களே

போற்ற = போற்ற

வம்பலத்தாடு = அம்பலத்து ஆடும்

உமையனே = உமை ஒரு பங்கனே

உய்யு மாறருளே. = உய்யுமாறு அருள் செய்யேன்

வேறு ஒன்றும் தெரியாததால், தெரிந்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.

புதிதாக ஏதாவது செய்தி வந்தால் கூட, அதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. "அதெப்படி? நான் நம்புவதற்கு எதிராக அல்லவா இருக்கிறது...அதை எப்படி ஏற்றுக் கொள்ளுவது"  என்று எந்த புதிய செய்தி வந்தாலும், அதை புறம் தள்ளி விடுகிறோம்.

அறிவு எப்படி வளரும்?

ஐந்து வயதில் தெரிந்தது தான் ஐம்பது வயதிலும் தெரியும் என்றால், 45 வருடம்  வீணாகி விட்டது என்று அர்த்தம்.

அறிவு வளர வேண்டாமா?

உய்யு மாறருளே...வேறு என்ன செய்வது....அவன் காப்பாற்றினால் தான் உண்டு.





Sunday, September 6, 2020

இலக்கியமும், சினிமா பாடல்களும்

இலக்கியமும், சினிமா பாடல்களும்


ஏதோ அந்தக் காலத்தில் தான் உயர்ந்த பாடல்கள் எழுதப்பட்டன, இப்போதெல்லாம் அப்படி தரமான பாடல்கள் எழுத ஆள் இல்லை என்று நாம் நினைக்கலாம்.

பல சினிமா பாடல்களை கேட்கும் போது, அட, என்ன ஒரு அருமையான வரி என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். இந்த சினிமா பாடல் வரிகள் இலக்கியத்தில் இருந்து வந்ததா, அல்லது இலக்கியம் இந்த வரிகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்ததா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மனித மனதின் உணர்வுகளை, உறவின் பிரிவை, பரிவை,  அதில் எழும் சிக்கல்களை அன்றும் பாடி இருக்கிறார்கள், இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது.

அன்று பாடியவை கொஞ்சம் கடினமான தமிழாக இருக்கிறது. காரணம், அதில் உள்ள பல தமிழ் வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இல்லை. மேலும், நாம் நமது மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வது இல்லை. எத்தனை பேர் தமிழ் அகராதி பார்த்து இருப்பீர்கள்?

வாலி இறந்து கிடக்கிறான்.  தாரை அவன் மேல் விழுந்து அழுது புலம்புகிறாள்.

"நீயும் நானும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இருப்பதாக சொல்லிக் கொண்டு எவ்வளவு அன்போடு இருந்தோம். நான் உன் என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால், இராமன் விட்ட அம்பு என் மேல் குத்தி இருக்க வேண்டும். நீ என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால் , இப்படி இறந்து கிடக்க மாட்டாய். நாம் ஒருவர் மனதில் இன்னொருவர் இருந்தோம் என்று சொன்னது எல்லாம் பொய் தானா? " என்று புலம்புகிறாள்

பாடல்

செரு ஆர் தோள! நின்
      சிந்தை உளேன் எனின்,
மருவார் வெஞ் சரம்
      எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை
      ஆகின், உய்தியால்;
இருவே முள்
      இருவேம் இருந்திலேம்.

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_6.html

செரு ஆர் = போர் செய்ய சிறந்த

தோள!  = தோள்களை உடையவனே

நின் = உன்னுடைய

சிந்தை உளேன் எனின், = மனதில் நான் உள்ளேன் என்றால்

மருவார்  = பகைவரது (இராமனின்)

வெஞ் சரம் = கொடிய அம்பு

எனையும் வவ்வுமால்; = என்னையும் கொன்றிருக்க வேண்டும்

ஒருவேனுள் = தனியான என்

உளை ஆகின், =  (நீ ) உள்ளாய் என்றால். அதாவது, என் மனதில் நீ இருந்தால்

உய்தியால்; = நீ தப்பித்து இருப்பாய்

இருவே முள் = இருவருக்குள்

இருவேம் = இருவரும்

இருந்திலேம். = இருக்க வில்லை

இன்று வருவோம்.

முதல்வன் படப் பாடல்.

காதலி பாடுகிறாள்.

உன் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன் என்றால், உன் உயிர் எனக்குள் இருக்கிறது. என் உயிர்  உனக்குள் இருக்கிறது. 

உன்னை கொல்ல வந்த கூற்றுவன், உன் உயிர் உன் உடம்பில் இல்லாததை கண்டு  குழம்பிப் போய் விடுவான்.  உன் உயிரை எடுக்க வேண்டும் என்றால் என்னைக் கொல்ல வேண்டும். என்னை கொல்ல வேண்டும் என்றால் என் உயிர் உனக்குள் இருக்கிறது. பாவம், எமன் என்ன செய்வான் என்று தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.


(உன்) உசிா் என்னோட இருக்கையிலே
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சீவனே நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா


(முழுப் பாடலையும் தரவில்லை. பல முறை கேட்ட பாடல் தான்).

youtube link கீழே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=gYD0jmmZtJU&ab_channel=TamilFilmSongs

கம்ப இராமாயணமாக இருந்தால் என்ன,  சினிமா பாடலாக இருந்தால் என்ன,  அன்பு வெளிப்படும் விதம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

திறந்த மனதோடு எல்லாவற்றையும் அணுகுவோம், இரசிப்போம்.




Saturday, September 5, 2020

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்


நம்மிடம் பணம் இருந்தால் என்ன செய்யலாம்?

பணத்தை நாம் விரும்பிய விதத்தில் செலவழித்து இன்பம் அடையலாம். நல்ல உடை வாங்கலாம், சிறப்பான உணவை உண்டு மகிழலாம்,  சினிமா, ட்ராமா, உல்லாச பயணம் என்று செலவழிக்கலாம்.

அல்லது

அதை சேமித்து வைக்கலாம், கார், வீடு, நிலம், நகை என்று முதலீடு செய்யலாம்.

அவரவர் விருப்பம்.

பணம் மட்டும் அல்ல, நம் நேரமும் அப்படியே. நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி செலவழிக்கலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

whatsapp , facebook , டிவி, அரட்டை என்று செலவழிக்கலாம்.

அல்லது,

அறிவை வளர்க்க, உடல் ஆரோக்கியத்தை வளர்க்க , நமக்கும் , பிறருக்கும் பயன்படும் வகையில் செலவழிக்கலாம்.

இது  நமக்குத் தெரியும். இருந்தும், நல்ல பெரிய விஷயங்களை செய்யாமல் சில்லறை  விஷயங்களில் நம் நேரத்தை செலவழிக்கிறோம்.

ஏன்?

அப்புறம் செய்து கொள்ளலாம். என்ன அவசரம். இப்ப தலைக்கு மேல வேற விஷயங்கள் இருக்கின்றன.  நல்லதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம்  என்று நினைக்கிறோம்.

அந்த "அப்புறம்" என்பது வருவதே இல்லை.

நேரம் ஓடி விடுகிறது.  ஐயோ, நேரத்தை வீணடித்து விட்டேனே என்று நாம் வருந்த நேரலாம்.

பாடல்


நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.


பொருள்

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_5.html



நரைவரும் என்றெண்ணி  = நரை வரும் என்று எண்ணி. அதாவது முதுமை வரும் என்று நினைத்து

நல்லறி வாளர் = நல்ல அறிவு உள்ளவர்கள்

குழவி யிடத்தே = சிறு வயதிலேயே

துறந்தார் = பயன் தராதவற்றை துறந்தார்

புரைதீரா = குற்றம் அற்ற

மன்னா = மன்னவனே

இளமை மகிழ்ந்தாரே = இளமை காலத்தில், மகிழ்ந்து , காலத்தை வீணே போக்கியவர்கள்

கோல் ஊன்றி = கோல் ஊன்றி

இன்னாங் கெழுந்திருப் பார். = துன்பத்தில் இருந்து எழுந்திருப்பார்


இளமையும், ஆரோக்கியமும் எப்போதும் இருக்காது. இருக்கும் போதே அதை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்.




Friday, September 4, 2020

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி 


சிவ பெருமான் நேரில் வந்து, மாணிக்க வாசகருக்கு உபதேசம் தருகிறேன் என்றார்.

மாணிக்க வாசகருக்கு ஆயிரம் வேலை.  முதன் மந்திரி வேலையில் இருந்தார். எனவே, இறைவன் வந்ததையும், அருள் தர இருந்ததையும் தெரியாமல் கை நழுவ விட்டு விட்டார்.

பின் அதை நினைத்து நினைத்து புலம்பிய புலம்பலின் தொகுப்பு தான் திருவாசகம்.

உருகி உருகி பாடியிருக்கார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற அந்தாதியில் இருந்து ஒரு பாடல்


பாடல்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

பொருள்

( click the following link to continue reading )

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_4.html



வளர்கின்ற = எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற

நின் கருணைக் கையில் = உன் கருணை நிறைந்த கைகளால்

வாங்கவும் = என்னை வாங்கி, அருள் தர நினைத்தாய். ஆனால் நானோ

நீங்கி = உன்னை விட்டு நீங்கி

இப்பால் = இந்த உலக வாழ்க்கையில்

மிளிர்கின்ற = கிடந்து வாழ்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெண் மதிக் கொழுந்து ஒன்று = பிறை நிலவு ஒன்று

ஒளிர்கின்ற = ஒளி வீசும்

 நீள் முடி = நீண்ட சடை முடியை உடைய

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

தெளிகின்ற பொன்னும் = தெளிவான சிறந்த பொன் போலவும்

மின்னும் = மின்னல் போலவும்

அன்ன = போன்ற

தோற்றச் செழும் சுடரே. = தோன்றுகின்ற செழுமையான சுடரே

இதில் என்ன இருக்கிறது.  மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்த நினைத்தான்.  அவர் மறுத்து விட்டார். அதனால் புலம்புகிறார். அதனால் நமக்கு என்ன?

இதை நாம் ஏன் உட்கார்ந்து படிக்க வேண்டும். இதில் நமக்கு என்ன பயன்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம்.   திருக்குறள், கம்ப இராமாயணம், ஆத்திச் சூடி,  கொன்றை வேந்தன்,  கீதை, மற்ற எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோம்.

படித்து விட்டு என்ன செய்கிறோம்?

செல் போனில் என்ன செய்தி வந்து இருக்கிறது,  என்ன ஜோக் வந்து இருக்கிறது என்று  பார்ப்போம் , இன்னைக்கு என்ன சமையல், அந்த fixed deposit  போடணும், அந்த பில் கட்டணும், அலுவலக வேலை, என்று நம்ம வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

ஒரு புத்தகம் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும். படித்துத் தள்ள வேண்டியது. ஒரு சதவீதம் கூட  அது நம்மை பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது.

மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்ய வந்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல்  குதிரை வாங்கப் போய்விட்டார்.

இத்தனை புத்தகங்களும் அருள் தர வரிசையில்  நின்று கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் எட்டி எட்டி பார்த்து விட்டு நாம் நம் குதிரைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

மணி வாசகரை இறைவன் விடவில்லை. துரத்தி துரத்தி வந்து அருள் செய்தார்.

ஆனால், அதற்கு முன்னால் சிறைத் தண்டனை, சுடு மணலில் நிற்க வைத்தல் என்று  அத்தனை துன்பமும் பட்டார்.

தேவையா? 

முதலிலேயே கேட்டிருந்தால் இத்தனை துன்பம் வந்திருக்குமா?

அது இருக்கட்டும், ஏதோ மெசேஜ் வந்த மாதிரி இருக்கே, என்னனு பார்ப்போம்.



Tuesday, September 1, 2020

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன்

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன் 


கடவுள் போல் ஆக வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?

மாட்டார்கள்.

ஏன் என்றால், கடவுள் போல் நம்மால் ஆக முடியாது. எதுக்கு வீணா நேரத்தை வீணாக்குவானானேன் என்று இருந்து விடுவார்கள்.

இராமன் கடவுள் என்று சொன்னால், "அப்படியா, அப்படி என்றால் இராமன் செய்தை எல்லாம் நம்மால் செய்ய முடியாது.  கடவுள் எல்லாம் செய்வார். நம்மால் ஆகாது. நம்ம வேலையை பார்ப்போம்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால், இராமனும் நம்மைப் போல ஒரு மானிடனாக இருக்க வேண்டும். அதற்காகவே இராமனில் பல மனித குணங்களை ஏற்றிக் காட்டுகிறார்கள். "பார்த்தாயா, அவனும் உன்னைப் போலத்தான்" என்று காட்டுவது, அவனை கீழே இறக்க அல்ல, நம்மை மேலே ஏற்ற. உன்னைப் போன்ற ஒருவன் அப்படி இருக்க முடியும் என்றால், நீயும் அப்படி இருக்கலாம் என்று நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்லவும் தான்.

அப்படி காட்டும் இடங்களில் இராமன், சீதையை பிரிந்து வாடுவதாக வரும் இடங்கள்.

தவிக்கிறான். ஒரு சாதாரண மானிடன் இப்படி துணையை பிரிந்து தவிப்பானோ, அப்படி தவிக்கிறான்.


வாலி வதம் முடிந்து விட்டது. சீதையைத் தேட வேண்டிய கார் காலம் வந்து விட்டது. சுக்ரீவன் வந்த பாடில்லை. கார்காலம் (மழைக் காலம்) பெரும் தவம் செய்த முனிவர்களையே வாட்டும் என்றால், இராமன் பாடு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்.


பாடல்

அளவு இல் கார் எனும் அப்பெரும்
    பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்
    தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
    குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்
    அது வருத்தோ?


பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post.html

அளவு இல் = நீண்ட

கார் எனும்  = கார் காலம் என்று சொல்லப் படும்

அப்பெரும் பருவம் = அந்த பெரிய பருவ நிலை

வந்து = வந்து

அணைந்தால் = சேர்ந்து கொண்டால்

தளர்வர் என்பது = தளர்ந்து போவார்கள் என்பது

தவம் புரிவோருக்கும் = தவம் புரியும் முனிவர்களுக்கும்

தகுமால்; = ஏற்படும் என்றால்

கிளவி = மொழி, சொல், குரல்

தேனினும் அமிழ்தினும் = தேனையும், அமுதத்தையும் விட

குழைத்தவள் = குழைத்து தந்ததைப் போல உள்ள

வளைத் தோள் = மூங்கில் போன்ற நீண்ட தோள்கள்

வளவி = தழுவி

உண்டவன் = இன்பம் அனுபவித்தவன்

வருந்தும் என்றால் = (அவளைப் பிரிந்து ) வருந்துகிறான் என்றால்

அது வருத்தோ? =  அது என்ன சாதாரண வருத்தமா?


பெண்களின் குரல் தேனையும், அமுதத்தையும் கலந்த மாதிரி இனிமையாக இருந்ததாம்.  அந்தக் காலத்தில்.

அகத்தில் இருப்பது, புறத்தில் வரும்.

மனம் இனிமையாக இருந்தால், குரல் இனிமையாக இருக்கும்.

அன்பும், கருணையும், பாசம், காதலும் இருந்தால் குரலில் அது வெளிப்படும்.

இப்போதெல்லாம்  அப்படி எதிர் பார்க்க முடியாது.  ஆணும் பெண்ணும் சமம். ஆணின் முரட்டுக் குரல்தான் பெண்ணுக்கும் வரும். குரல் மட்டும் வேறாக ஏன் இருக்க வேண்டும்?


அது ஒரு புறம் இருக்கட்டும்.


"கார் எனும் பெரும் பருவம்" என்கிறார் கம்பர்.

சீதையை பிரிந்து இருப்பதால், ஒவ்வொரு நொடியும் நீண்டு இருப்பதைப் போல இராமனுக்குத் தெரிகிறது. அந்த கார் காலமே நீண்டு இருப்பதாகப் படுகிறது.



"வளைத் தோள் வளவி உண்டவன் வருந்தும்"

வளவி உண்டவன் என்றால் இன்பம் துய்த்தவன் என்று ஒரு பொருள்.

அவள் கைகளால் உணவு ஊட்ட உண்டவன் என்று பொருள்.

வருத்தம் இருக்காதா?