Friday, September 4, 2020

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி 


சிவ பெருமான் நேரில் வந்து, மாணிக்க வாசகருக்கு உபதேசம் தருகிறேன் என்றார்.

மாணிக்க வாசகருக்கு ஆயிரம் வேலை.  முதன் மந்திரி வேலையில் இருந்தார். எனவே, இறைவன் வந்ததையும், அருள் தர இருந்ததையும் தெரியாமல் கை நழுவ விட்டு விட்டார்.

பின் அதை நினைத்து நினைத்து புலம்பிய புலம்பலின் தொகுப்பு தான் திருவாசகம்.

உருகி உருகி பாடியிருக்கார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற அந்தாதியில் இருந்து ஒரு பாடல்


பாடல்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

பொருள்

( click the following link to continue reading )

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_4.html



வளர்கின்ற = எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற

நின் கருணைக் கையில் = உன் கருணை நிறைந்த கைகளால்

வாங்கவும் = என்னை வாங்கி, அருள் தர நினைத்தாய். ஆனால் நானோ

நீங்கி = உன்னை விட்டு நீங்கி

இப்பால் = இந்த உலக வாழ்க்கையில்

மிளிர்கின்ற = கிடந்து வாழ்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெண் மதிக் கொழுந்து ஒன்று = பிறை நிலவு ஒன்று

ஒளிர்கின்ற = ஒளி வீசும்

 நீள் முடி = நீண்ட சடை முடியை உடைய

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

தெளிகின்ற பொன்னும் = தெளிவான சிறந்த பொன் போலவும்

மின்னும் = மின்னல் போலவும்

அன்ன = போன்ற

தோற்றச் செழும் சுடரே. = தோன்றுகின்ற செழுமையான சுடரே

இதில் என்ன இருக்கிறது.  மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்த நினைத்தான்.  அவர் மறுத்து விட்டார். அதனால் புலம்புகிறார். அதனால் நமக்கு என்ன?

இதை நாம் ஏன் உட்கார்ந்து படிக்க வேண்டும். இதில் நமக்கு என்ன பயன்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம்.   திருக்குறள், கம்ப இராமாயணம், ஆத்திச் சூடி,  கொன்றை வேந்தன்,  கீதை, மற்ற எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோம்.

படித்து விட்டு என்ன செய்கிறோம்?

செல் போனில் என்ன செய்தி வந்து இருக்கிறது,  என்ன ஜோக் வந்து இருக்கிறது என்று  பார்ப்போம் , இன்னைக்கு என்ன சமையல், அந்த fixed deposit  போடணும், அந்த பில் கட்டணும், அலுவலக வேலை, என்று நம்ம வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

ஒரு புத்தகம் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும். படித்துத் தள்ள வேண்டியது. ஒரு சதவீதம் கூட  அது நம்மை பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது.

மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்ய வந்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல்  குதிரை வாங்கப் போய்விட்டார்.

இத்தனை புத்தகங்களும் அருள் தர வரிசையில்  நின்று கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் எட்டி எட்டி பார்த்து விட்டு நாம் நம் குதிரைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

மணி வாசகரை இறைவன் விடவில்லை. துரத்தி துரத்தி வந்து அருள் செய்தார்.

ஆனால், அதற்கு முன்னால் சிறைத் தண்டனை, சுடு மணலில் நிற்க வைத்தல் என்று  அத்தனை துன்பமும் பட்டார்.

தேவையா? 

முதலிலேயே கேட்டிருந்தால் இத்தனை துன்பம் வந்திருக்குமா?

அது இருக்கட்டும், ஏதோ மெசேஜ் வந்த மாதிரி இருக்கே, என்னனு பார்ப்போம்.



1 comment:

  1. படிப்பதற்கு..மிகவும் ஆர்வமாக உள்ளது..
    மிக்க நன்றி...
    என் சிறு வயதில் ஆசிரியர் சொல்லி தந்தது போல் தெளிவாக இருக்கிறது..
    மிக்க நன்றி...

    ReplyDelete