Sunday, September 20, 2020

கம்ப இராமாயணம் - இடைபோல் இடையே குழைவாய்

 கம்ப இராமாயணம் - இடைபோல் இடையே குழைவாய்


அது ஒரு மரங்கள் அடர்ந்த மலை. நடுவில் ஒரு ஓலைக் குடிசை. மழைக் காலம் என்பதால் எந்நேரமும் மழை. வெயிலை பார்த்து நாட்கள் ஆகி விட்டன. 

இன்று கொஞ்சம் மேகம் விலகி லேசாக வெளிச்சம் படர்கிறது. பெய்த மழையில் மரங்கள், செடி கொடிகள் எல்லாம் தள தள என்று சிலிர்த்து சிரித்து நிற்கின்றன. 

மெல்லிய காற்று வீசுகிறது. குளிரில் உடல் சிலிர்த்துப் போகிறது. மரங்களில் இருந்து மழை நீர் தெறிக்கிறது. கொடிகள் காற்றில் வளைந்து நெளிந்து ஆடுகின்றன. 

ஜன்னல் வரை இரு ஒரு கொடி வந்து எட்டிப் பார்க்கிறது. 

"ஏய் கொடியே...என்ன பார்க்கிறாய்? அவ இருக்காளா னு பாக்கறியா? இல்ல. அவ இல்ல. புரியுது...இவ்வளவு பூ இருக்கு உன்னிடம். அவ இல்லையே சூடிக் கொள்ள. பூ இல்லாத சில சமயம், நெற்றிச் சுட்டி சூடி வருவாள். அப்படி ஒரு அழகு. ஆனா இப்ப அவ இல்ல. 

அவ இல்லாம நான் கிடந்து தவிக்கிறேன். நீ என்னடா என்றால் பூ பூத்து, வளைந்து நெளிந்து கை நீட்டி என்னைக் கூப்பிடுகிறாய். அவள் கை நீட்டி கூப்பிடுவது போல இருக்கு உன்னைப் பார்க்கும் போது. 

உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் அவள் நினைவு வந்து மனம் என்னமோ செய்கிறது"


பாடல் 

'மழை வாடையொடு ஆடி, வலிந்து, உயிர்மேல்,

நுழைவாய்; மலர்வாய் நெடியாய் - கொடியே! -

இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே

குழைவாய்; எனது       ஆவி குழைக்குதியோ?


பொருள் 

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_20.html


'மழை  = மழைக் காலத்தில் 

வாடையொடு = வாடைக் காற்றில் 

ஆடி = ஆடி 

வலிந்து = கட்டாயமாக 

உயிர்மேல் = என் உயிரினுள் 

நுழைவாய் = நுழைகிறாய் 

மலர்வாய் = மலர்களை கொண்டு இருக்கிறாய் 

நெடியாய் =  உயர்ந்து வளர்ந்த 

கொடியே! - = கொடியே 

இழை வாள் நுதலாள் = இழைத்து செய்யப்பட்ட வாளை போன்ற பள பளப்பான நெற்றியை உடைய அவள் 

 இடைபோல்  =  இடையைப் போல 

இடையே = இடை இடையே 

குழைவாய்;  = குழைந்து நெளிகிறாய் 

எனது ஆவி = என்னுடைய ஆவியை 

குழைக்குதியோ? = குழைய விடுகிறாய் 


மழைக் காலத்தில், சீதையைப் பிரிந்த இராமன் கிட்கிந்தையில் தவித்த போது பாடியது. 

2 comments:

  1. A good imagery employed to express the intense emotion of Rama in separation

    ReplyDelete
  2. என்ன அழகான பாடல்! நன்றி.

    ReplyDelete