Sunday, September 13, 2020

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் - பாகம் 2

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் - பாகம் 2


நேற்று இந்த குறள் பற்றி சிந்தித்த போது ஒரு வார்த்தையை விட்டு விட்டேன். நேற்றைய பதிவு கீழே இருக்கிறது. படிக்காதவர்கள் வாசித்துக் கொள்ளலாம்.

"ஏகினான்" என்று ஒரு வார்த்தை வருகிறது. ஏகினான் என்றால் சென்றான் என்று அர்த்தம். அது இறந்த கால வினை. அப்படி என்றால் இறைவன் ஏற்கனவே வந்து விட்டானா என்ற கேள்வி எழும்.

சில சமயம், கணவனும் மனைவியும் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று புறப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஒரு திருமண வீட்டுக்கு செல்ல இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மனைவி தயாராகிக் கொண்டே இருப்பாள். கணவன் வாசலில் நின்று கொண்டு, "என்ன, தயாரா, போகலாமா?" என்று கேட்பான். அதற்கு மனைவி, "இதோ வந்துட்டேங்க" என்று பதில் சொல்லுவாள். பதில் தான் வரும்,  ஆள் வர மாட்டாள்.

இன்னும் சிறிது நேரம் கழித்து கணவன் மறுபடியும் கேட்பான். "அதான் வந்துட்டேனு சொல்றேன் ல ...ஏன் அவசரப் படுத்தறீங்க " என்று குரல் வரும்.

வரவே இல்ல, ஆனால் "வந்துட்டேன்" என்று சொல்லுவதை நாம் கேட்கிறோம், அனுபவித்து இருக்கிறோம்.

இது கணவவன் மனைவி மட்டும் அல்ல.

நண்பர்கள் இடையிலும் இந்த பேச்சு வழக்கு உண்டு. ஒரு நண்பன் வெளியில் இருந்து குரல் கொடுப்பான்...உள்ளிருந்து அவன் நண்பன் சொல்வான் "வந்துட்டேண்டா"  என்று.

அவசரம் கருதி, எதிர் காலத்தில் நடக்க இருப்பதை இறந்த காலத்தில் சொல்லலாம் என்று  தொல்காப்பிய சூத்திரம் இருக்கிறது.

"வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44)

தொல்காப்பியத்தை கொஞ்சம் இளக்க வேண்டும்.

வாராக் காலம் என்றால் வருகின்ற காலம். அதாவது இனி வரப்போகின்ற காலம். எதிர் காலம்.

நிகழ் காலம் என்றால் இப்போது நிகழ்வது.

""வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்" என்றால் நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும்

ஓராங்கு = ஒரு சில சமயத்தில்

வரூஉம் = வருகின்ற

வினைச் சொற்  = செயலை குறிக்கின்ற சொற்கள் (வந்துட்டேங்க )

கிளவி = சொல்

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் = இறந்த கால குறிப்போடு இருப்பது

விரைந்த பொருள் என்மனார் புலவர்" = வேககமாக நிகழ்வதை குறிப்பதற்காக என்று   புலவர்கள் கூறுவார்கள் என்கிறார் தொல்காப்பியர்.

அவசரமாக கிளம்பி வருவதை ஏற்கனவே வந்துவிட்டதாக சொல்லும் வழக்கம்  உண்டு என்று கூறுகிறார்.

இறைவன் வேகமாக வருவானாம்.  எனவே வந்து விட்டான் என்ற சொல்லால் குறிக்கிறார்.

இரவி வர்மாவின் படங்களை பார்த்தால் தெரியும்.  யானையின் காலை முதலை பற்றிக் கொண்டது.  யானை "ஆதி மூலமே" என்று பிளிறியது.  திருமால்  சக்கரத்தோடு கிளம்பி வருவது போல இருக்கும். அதில் அவருடைய முடி கலைந்து , மேலே போட்டிருக்கும் பட்டு உடை பறக்கும். அவசரம் அவசரமாக கிளம்பி வருவதை குறிக்கும்.

எழுந்து, தலை சீவி, கொஞ்சம் வாசனை திரவம் போட்டு, நல்ல உடையை தேர்ந்து எடுத்து (அதுக்கு ஒரு , ஒரு மணி நேரம்), அப்புறம் அதுக்கு பொருந்தும் படி மத்த அலங்காரம் எல்லாம் செய்து கிளம்பவில்லை. போட்டது போட்டபடி கிளம்பி வருவார்.

அது போல, அன்பர்கள் மனதில் இறைவன் அடித்து புரண்டு வருவானாம். எனவே  "ஏகினான்" என்ற இறந்த கால வினைச் சொல்லை வள்ளுவர் போட்டு இருக்கிறார் என்று பரிமேல் அழகர் கூறுகிறார்.

எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள்.

ஏகினான் என்ற ஒரு வார்த்தையை விளக்க இவ்வளவு சொல்ல வேண்டி இருக்கிறது.

அப்படி எழுதவும், பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்.




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இந்தக் குறளை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?


மலரின் கண்ணே சென்றவனின் மாட்சிமை மிக்க திருவடிகளை சேர்ந்தவர் இந்த நில உலகில் நீண்ட நாள் வாழ்வார்கள்

என்று நாம் அர்த்தம் செய்வோம்.

வார்த்தைகளை கொண்டு அர்த்தம் செய்தால் அவ்வளவுதான் வரும்.

இதற்கு பரிமேலழகர் செய்து இருக்கின்ற உரையை படித்தால், இனி மேல் நமக்கு திருக்குறள் தெரியும் என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கும்.

இனி அவர் பார்வையில் இதற்கு அர்த்தம் காண்போம்.

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_12.html

மலர்மிசை ஏகினான்.

இறைவன் ஒரு மலரில் சென்று சேர்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட மலராக இருக்கும்?

ஒரு நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு இடத்துக்குப் போகிறார் என்றால்  அவர் எந்த மாதிரி இடங்களில் தங்குவார்?   மிகச் சிறந்த  இடத்தில் தானே  தங்குவார்?

இறைவன் ஒரு மலரில் போய் தங்குகிறான் என்றால் அது சிறந்த மலராகத்தானே  இருக்க வேண்டும்? அது என்ன மலர்?

அவருடைய அடியவர்களின் அன்பு கொண்ட மனம் தான் அந்த மலர்.

எனவே, அடியவர்களின் மனதில் இருக்கும் இறைவனின் மாண்புமிக்க  திருவடிகளை  சேர்ந்தார் நிலத்திடை "நீடு" வாழ்வார்.

நீடு வாழ்வார் என்றால் நீண்ட நாள் வாழ்வார் என்று பொருள்.

நீண்ட நாள் என்றால் எத்தனை நாள்.

மனித உயிரின் வாழ் நாள் ஒரு 100 வருடம் என்று வைத்துக் கொண்டால், 36500  நாள். இது ஒரு நீண்ட நாளா?

மனித பிறப்பை விட்டு விடுவோம்.

இந்த  பூமியே எப்போதும் இருக்காது. ஒரு நாள் அதுவும் அழியும். பல கோடி வருடம்  ஆகலாம். அதுவும் நீண்ட நாள் என்று சொல்ல முடியாது.

எனவே, நம் வாழ்நாளும் நீண்ட நாள் இல்லை.  நாம் வாழும் பூமியின் வாழ் நாளும்  நீண்ட நாள் இல்லை.

பின் எதுதான் நீண்ட நாள் ?

ஸ்வர்கம் என்று சொல்கிறார்களே  அங்கு சென்றால் நீண்ட நாள் வாழ முடியுமா என்றால்  அதுவும் இல்லை.

நாம் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்து விட்டால், நாம் மீண்டும் இங்கே வர வேண்டியதுதான்.  அதுவும் நீண்ட நாள் கிடையாது.

பின் எது தான் நீண்ட நாள்.

வீடு பேறு என்று சொல்கிறார்களே, அதாவது இறைவனை அடைந்து விட்டால் பின் பிறப்பு  கிடையாது. அங்கே சென்று விட்டால் எப்போதும் அங்கேயே இருக்கலாம். அவனுக்கு அழிவு கிடையாது. எனவே, நீண்ட நாள். அங்கு போய் விட்டால்,  நாம் வேறு எங்கும் போக வேண்டாம். எனவே நீண்ட நாள்.

எனவே, அன்பர்கள் மனதில் வாழும் இறைவனுடைய திருவடிகளைப் பற்றி விட்டால்,  அவனோடு ஒன்றாகி நீண்ட நாள் வாழலாம்.

என்று பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்.

நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா இந்த அளவு?

பரிமேல் அழகர் உரை வாசிக்கக் கொஞ்சம் கடினம்தான். பழகிக் கொண்டால் சுகமாக இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும்.

திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பரிமேல் அழகர் வேண்டும்.

திருக்குறளையும், பரிமேல் அழகர் உரையையும் தேடி கண்டு பிடித்துப் படியுங்கள்.

அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டால், இந்த கதை, கட்டுரை, நாவல் போன்றவற்றின் மேல் ஒரு வெறுப்பே வந்து விடும்.  என்ன குப்பை இது என்று.

குப்பைகளை மூளைக்குள் திணிப்பது நிற்கும். அறிவும் மனமும் சுத்தமாகும்.

No comments:

Post a Comment