Monday, September 14, 2020

திருக்குறள் - பொய் தீர் ஒழுக்க நெறி

திருக்குறள்   - பொய் தீர் ஒழுக்க நெறி 

இலக்கியம் படிக்க இலக்கணம் இன்றி அமையாதது. இலக்கணம் தெரிந்தால் இலக்கியத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதை நுணுக்கமாக இரசிக்க முடியும். இல்லை என்றால்  ஂமேல் எழுந்த வாரியாக வாசிக்கத்தான் முடியும். இலக்கணம் தெரியாவிட்டால் சில சமயம் தவறான அர்த்தம் கூட வந்து விடும்.

பாடல்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_14.html

பொறி = கண் மூக்கு வாய் செவி உடல் என்ற ஐந்து பொறிகள்

வாயில் = வழியாக

ஐந்து = ஐந்து விதமான புலன்கள் வழியாக செல்லும் அவாவினை  (சுவை,

ஒளி,ஊறு , ஓசை, நாற்றம்)

அவித்தான் = அடக்கியவன்

பொய்தீர்= பொய்மை தீர்ந்த

ஒழுக்க நெறி = ஒழுக்கமான வழியில்

நின்றார் = வாழ்பவர்

நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்

ஐந்து புலன்கள் வழியாக செல்லும் ஆசைகளை அடக்கியவனின் ஒழுக்கமான வழியில் நிற்பவர் நீண்ட நாள் வாழ்வார். 

ஆசை ஒன்றா அல்லது பலதா?

நல்ல உணவை கண்டால் உண்ண வேண்டும் என்ற ஆசை, நல்ல இடங்களை பார்த்தால் அங்கு  போக வேண்டும் என்ற ஆசை, இப்படி ஆசை பலவிதமாக  இருக்கிறதே என்றால் இல்லை.

ஆசை என்பது ஒன்றுதான். அது வெவ்வேறு புலன்கள் வழியாக வெவ்வேறு விதமாக  வெளிப்படுகிறது. அவ்வளவுதான். 

ஐந்து புலன்கள் என்பதால் ஐந்து ஆசை என்பது இல்லை. ஒரே ஆசை ஐந்து விதமாக வெளிப்படுகிறது. 

சரி. 

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி
என்பதில்  

"பொறிவாயில் ஐந்தவித்தான்" " பொய்தீர் ஒழுக்க நெறி"

என்ற இரண்டு சொல் தொடர்கள் இருக்கின்றன. 

ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே.

ஐந்து அவித்தான் ஒரு பக்கம். ஒழுக்க நெறி இன்னொரு பக்கம். இதை எப்படி பொருள் கொள்வது?

இங்குதான் இலக்கணம் நமக்கு உதவி செய்யும். 

கிழமை என்றால் உரிமை என்று பொருள். 

முருகனை குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லுவார்கள். குறிஞ்சி நிலத்துக்கு  உரியவன், தலைவன் என்று பொருள். 

ஞாயிற்றுக் கிழமை என்றால் சூரியனுக்கு உகந்த கிழமை, சூரியனுக்கு உரிய கிழமை.

அதே போல் செவ்வாய், புதன், சனி என்று பொருள் கொள்க. 

இந்த கிழமை என்பது மூன்று வகைப்படும்.

தற் கிழமை 
பிறிதின் கிழமை 
செய்யுட் கிழமை 

என்று மூன்று விதமான கிழமைப் பொருள்கள் உண்டு. 

அது என்ன?

என்னுடைய கை என்று நான் சொன்னால், அது என்னுடையதுதான். அது ஒரு போதும்  மற்றவரின் பொருளாக ஆகாது. எனவே அது தற் கிழமை. 

என் பணம் என்று சொன்னால். என்னிடம் இருக்கும் வரை அது என் பணம்.  என்னை விட்டு சென்று விட்டால் அது மற்றவர் பணம். எனவே அது பிறிதின் கிழமை. 

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 

இதை இரண்டையும் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும் என்று.

யோசித்து இருக்கிறார்கள். அதற்கு ஒரு இலக்கணமும் எழுதி இருக்கிறார்கள். 

அது தான் செய்யுட் கிழமை என்பது. 

திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். அந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இருக்கிறது என்பதற்காக அது நான் எழுதியது என்று ஆகி விடுமா?  யாரிடம் அது போனாலும், அது திருவள்ளுவர் எழுதியதுதான். அது அவருடையது தான். 

அதாவது, அதை அவர் செய்தார். என்னவே அது அவருடைய உடமை. செய்ததால் வந்த  உரிமை செய்யுட் கிழமை.

மனைவி நினைக்கிறாள் கணவன் தன் உரிமை என்று. 

தாய் நினைக்கிறாள், அவன் செய்யுட் கிழமை என்று. என் பிள்ளையை அவள் கொண்டு போய் விட்டாள் . என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை. செய்யுட் கிழமை. 

சரி, குறளுக்கு வருவோம். 

திருவள்ளுவரது குறள்.
கம்ப காவியம் என்றால் கம்பனின் காப்பியம். 
கபிலரது பாட்டு 

என்பது போல, ஐந்து அவித்தானது ஒழுக்கம். 

இந்த ஒழுக்க என்பது இறைவன் செய்தது. நாம் கடை பிடிக்கலாம், எழுதலாம்,   உபதேசம் செய்யலாம் , ஆனால், அது யாருக்கு உரியது என்றால் இறைவனுக்கு உரியது. 

அவன் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன். அவனுடைய ஒழுக்க நெறியில்  நின்றவர்கள்  நீண்ட நாள் வாழ்வார்கள். நீண்ட நாள் என்றால், இறைவன் திருவடிக் கீழ் வாழ்வார்கள் என்று  அர்த்தம். மற்றவை எல்லாம் சிறிது நாள்தான். 

இலக்கணம் புரிந்தால், இலக்கியம் எவ்வளவு சுவையாக இருக்கிறது. 


தனியே இலக்கணம் படிப்பது என்பது சற்று கடினமான விஷயம். இலக்கியத்தோடு சேர்ந்து படித்தால், இலக்கணமும் எளிமையாக விளங்கும், இலக்கியமும் சுவைக்கும். 

No comments:

Post a Comment