Saturday, September 26, 2020

திருக்குறள் - இன்சொல்

திருக்குறள் - இன்சொல் 


எப்படி எல்லாம் பேசக் கூடாது என்று கேட்டால் பெரிய பட்டியல் போடலாம். 

பொய் சொல்லக் கூடாது, புறம் சொல்லக் கூடாது, பயனில சொல்லக் கூடாது, என்று நீண்ட பட்டியல் தரலாம்.

எப்படி பேசுவது என்று கேட்டால் என்ன சொல்லுவது?

இனிமையாக பேச வேண்டும். 

சரி, இனிமையாக பேசுவது என்றால் என்ன? 

யாரைப் பார்த்தாலும், "அடடா, உங்களைப் போல உண்டா" என்று அவர்களை புகழ்ந்து பேச வேண்டுமா? 

இல்லை. 

இன்சொல் என்பதற்கு வள்ளுவர் இலக்கணம் வகுத்துத் தருகிறார். 

பாடல் 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள் 

(pl click the following link to continue reading)


இன்சொலால் = இன் சொல் ஆல்  = ஆல் என்பது அசைச் சொல். அதை விட்டு விடுவோம். மீதி உள்ளது இன் சொல். 

ஈரம் அளைஇப்  = அன்பு கலந்து 

படிறிலவாம் = உண்மையான சொற்கள் 

செம்பொருள் = அறத்தினை 

கண்டார் = எ அறிந்தவர் 

வாய்ச் சொல் = வாயில் இருந்து வரும் சொற்கள். 

மேலே ஆராய்வோம்.

முதலில், பேசுகின்ற பேச்சில் அன்பு இருக்க வேண்டும். அன்பு கலந்து பேச வேண்டும். அன்போடு பேச வேண்டும். யோசித்துப் பார்ப்போம் , நமது பேச்சில்  எவ்வளவு அன்பு இருக்கிறது என்று. கோபம் இருக்கும், வெறுப்பு இருக்கும், சந்தேகம் இருக்கும், அதிகாரம் இருக்கும், கிண்டல், நக்கல், நையாண்டி  எல்லாம் இருக்கும்.  அன்பு இருக்குமா ?  அன்பு இல்லாத பேச்சு இன் சொல் அல்ல. 

இரண்டாவது, உண்மை. பொய் கலவாமல் பேச வேண்டும்.  பேசுகிறோமா?  உண்மை பேச முடியாவிட்டால், பேசாமல் இருந்து விட வேண்டும்.  எவ்வளவுதான் அன்பாக பேசினாலும், அதில் பொய் இருந்தால், அது இனிய சொல் அல்ல.  சிலர்  மற்றவர்களை வானளாவ புகழ்வார்கள். மனதுக்குள் வைது கொண்டே. அவர்களின் புகழ்ச்சியில் உண்மை இல்லை. 

மூன்றாவது, அறத்தினை உணர்ந்து பேச வேண்டும். அறம் என்றால் என்ன என்றே தெரியாவிட்டால்  எப்படி பேசுவது? பேசாமல் இருப்பது நலம். அறம் அல்லாதவற்றை  பேசுவது இனிய சொல் அல்ல. நல்லவற்றை, பயனுள்ளவற்றை மட்டும்தான் பேச வேண்டும். 

வாய்ச் சொல் என்றார். சொல் என்றாலே வாயில் இருந்து வருவது தானே. அது என்ன  வாய்ச் சொல்? மூக்குச் சொல், காது சொல் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையே. பின் ஏன், வாய்ச் சொல்?

வாயின் மூலமாக ஒன்றை மட்டுமே பேச முடியும் என்றால் ,அது பற்றிச் சொல்ல வேண்டாம். ஆனால், நம் வாய் இனியவற்றையும் பேசும், இன்னாததையும் பேசும்.  எனவே, இனியவற்றை மட்டும் பேசும் சொல் என்பதால், வாய்ச் சொல் என்றார். 

அறத்தின் தன்மை அறிந்து, அன்போடு உண்மை பேச வேண்டும். 

அது தான் இனிய சொல். 

நமது சொற்களில் எத்தனை இனிய சொல்லாக இருக்கும்? 

பழக வேண்டும். 

No comments:

Post a Comment