Saturday, September 12, 2020

திருக்குறள் - மாணடி சேர்ந்தார்

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் 




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இந்தக் குறளை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?


மலரின் கண்ணே சென்றவனின் மாட்சிமை மிக்க திருவடிகளை சேர்ந்தவர் இந்த நில உலகில் நீண்ட நாள் வாழ்வார்கள்

என்று நாம் அர்த்தம் செய்வோம்.

வார்த்தைகளை கொண்டு அர்த்தம் செய்தால் அவ்வளவுதான் வரும்.

இதற்கு பரிமேலழகர் செய்து இருக்கின்ற உரையை படித்தால், இனி மேல் நமக்கு திருக்குறள் தெரியும் என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கும்.

இனி அவர் பார்வையில் இதற்கு அர்த்தம் காண்போம்.

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_12.html

மலர்மிசை ஏகினான்.

இறைவன் ஒரு மலரில் சென்று சேர்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட மலராக இருக்கும்?

ஒரு நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு இடத்துக்குப் போகிறார் என்றால்  அவர் எந்த மாதிரி இடங்களில் தங்குவார்?   மிகச் சிறந்த  இடத்தில் தானே  தங்குவார்?

இறைவன் ஒரு மலரில் போய் தங்குகிறான் என்றால் அது சிறந்த மலராகத்தானே  இருக்க வேண்டும்? அது என்ன மலர்?

அவருடைய அடியவர்களின் அன்பு கொண்ட மனம் தான் அந்த மலர்.

எனவே, அடியவர்களின் மனதில் இருக்கும் இறைவனின் மாண்புமிக்க  திருவடிகளை  சேர்ந்தார் நிலத்திடை "நீடு" வாழ்வார்.

நீடு வாழ்வார் என்றால் நீண்ட நாள் வாழ்வார் என்று பொருள்.

நீண்ட நாள் என்றால் எத்தனை நாள்.

மனித உயிரின் வாழ் நாள் ஒரு 100 வருடம் என்று வைத்துக் கொண்டால், 36500  நாள். இது ஒரு நீண்ட நாளா?

மனித பிறப்பை விட்டு விடுவோம்.

இந்த  பூமியே எப்போதும் இருக்காது. ஒரு நாள் அதுவும் அழியும். பல கோடி வருடம்  ஆகலாம். அதுவும் நீண்ட நாள் என்று சொல்ல முடியாது.

எனவே, நம் வாழ்நாளும் நீண்ட நாள் இல்லை.  நாம் வாழும் பூமியின் வாழ் நாளும்  நீண்ட நாள் இல்லை.

பின் எதுதான் நீண்ட நாள் ?

ஸ்வர்கம் என்று சொல்கிறார்களே  அங்கு சென்றால் நீண்ட நாள் வாழ முடியுமா என்றால்  அதுவும் இல்லை.

நாம் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்து விட்டால், நாம் மீண்டும் இங்கே வர வேண்டியதுதான்.  அதுவும் நீண்ட நாள் கிடையாது.

பின் எது தான் நீண்ட நாள்.

வீடு பேறு என்று சொல்கிறார்களே, அதாவது இறைவனை அடைந்து விட்டால் பின் பிறப்பு  கிடையாது. அங்கே சென்று விட்டால் எப்போதும் அங்கேயே இருக்கலாம். அவனுக்கு அழிவு கிடையாது. எனவே, நீண்ட நாள். அங்கு போய் விட்டால்,  நாம் வேறு எங்கும் போக வேண்டாம். எனவே நீண்ட நாள்.

எனவே, அன்பர்கள் மனதில் வாழும் இறைவனுடைய திருவடிகளைப் பற்றி விட்டால்,  அவனோடு ஒன்றாகி நீண்ட நாள் வாழலாம்.

என்று பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்.

நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா இந்த அளவு?

பரிமேல் அழகர் உரை வாசிக்கக் கொஞ்சம் கடினம்தான். பழகிக் கொண்டால் சுகமாக இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும்.

திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பரிமேல் அழகர் வேண்டும்.

திருக்குறளையும், பரிமேல் அழகர் உரையையும் தேடி கண்டு பிடித்துப் படியுங்கள்.

அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டால், இந்த கதை, கட்டுரை, நாவல் போன்றவற்றின் மேல் ஒரு வெறுப்பே வந்து விடும்.  என்ன குப்பை இது என்று.

குப்பைகளை மூளைக்குள் திணிப்பது நிற்கும். அறிவும் மனமும் சுத்தமாகும்.


3 comments:

  1. அது சரி பரிமேல் அழகர் உரைக்கு கோனார் notes வேணும் என்ற எனக்கு. So for me this blog is enough.

    ReplyDelete
  2. பரிமேலழகர் உரை புத்தகம் வாங்க பார்க்கிறேன் .விலை அதிகமில்லை.
    இருப்பினும் உங்கள் விளக்கம் கடினமானதையும் எளிதில் புரிய வைக்கிறது.

    ReplyDelete
  3. "மலர்மிசை ஏகினான்" என்ற சொற்களுக்கு "மலரில் இருப்பவன்" என்ற பொருளை மட்டுமே படித்திருக்கிறேன். அது யாரு, ஒருவேளை பிரம்மாவாக இருக்குமோ என்று எண்ணி இருக்கிறேன். அட, திருக்குறளில் கூட இப்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாம் உண்டா என்று புதிராக ஆச்சரியப்படிடிருக்கிறேன்.

    அதை எல்லாம் விட்டுவிட்டு, அதற்கெல்லாம் ஒரு தேவையே இல்லாமல் என்ன ஒரு அருமையான விளக்கம்!

    இந்த BLOG -இன் தயவால் இதை படிக்கக் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete