Monday, October 26, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம் 


பக்தி என்றால் என்னவோ இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டு, கடவுளே கதி என்று போய் விடுவது அல்ல. எல்லாவற்றையும் துறந்து சாமியாராக போவது அல்ல பக்தி. 

இந்த உலகை, அதன் அழகை, அதன் உயிர்ப்பை இரசிப்பது தான் பக்தி. 

என் பிள்ளையை பாராட்டினால் எனக்கு சந்தோஷம்தானே. உலகை இரசித்துப் பாராட்டினால் அதைப் படைத்த இறைவனுக்கு சந்தோஷம் இருக்காதா? 

அதை விடுத்து, இறைவன் செய்த எல்லாம் தேவை இல்லாதது என்று ஒதுக்கி வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?


நமது பக்தி இலக்கியத்தில் பார்த்தால் தெரியும். உலகை, இயற்கையை, அதன் அழகை, உயிர்ப்பை மிக நுண்ணியமாக இரசித்து எழுதிய பாடல்களை காணலாம். 

உலகை வெறுத்த ஒருவரால் இவ்வளவு தூரம் இரசித்து இருக்க முடியாது. 


பேயாழ்வார் சொல்கிறார்....

திரு வேங்கட மலையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அவை , அங்குள்ள மரத்தில் உள்ள பழங்களை பறித்து உண்ணுகின்றன.  அப்படி சாப்பிடும் போது, நடுவில் தாகம் எடுத்தால் அங்குள்ள குளம் அல்லது நீர் நிலைகளை தேடிச் செல்லும். நீர் குடிக்க குனிந்தால், குனியும் அந்த குரங்கின் உருவம் அந்த நீரில் தெரியும். அடடா இன்னொரு குரங்கு உள்ளே இருக்கிறது என்று பயந்து ஓடும். பின், மெல்ல வந்து,  தான் கையில் வைத்து இருப்பது போலவே அந்த நிழல் குரங்கின் கையிலும் ஒரு பழம்   இருப்பதைக் கண்டு, "எனக்கு அதைத் தா"  என்று கை நீட்டி கேட்குமாம்"

அப்படிப் பட்ட குரங்குகள் நிறைந்த மலை திருவேங்கடம் என்று கூறுகிறார். 


பாடல்  


பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_86.html


click the above link to continue reading


பார்த்த கடுவன் = பார்த்த குரங்கு 

சுனைநீர் = சுனையில் உள்ள நீரில் 

நிழற்கண்டு = தன் நிழலைக் கண்டு 

பேர்த்தோர் = வேறு ஒரு 

கடுவனெனப் = குரங்கு என்று 

பேர்ந்து = விலகிச் சென்று 

கார்த்த 

களங்கனிக்குக் = கரிய களங் கனிக்கு 

கைநீட்டும் வேங்கடமே = கையை நீட்டும் வேங்கட மலையே 

மேனாள் = முன்பொரு நாள் 

விளங்கனிக்குக் = விளங்கனிக்கு 

கன்றெறிந்தான் = கன்றாக வந்த அசுரனை அதன் மேல் எறிந்த கண்ணனின் 

வெற்பு = மலை 


உலகை மறுத்து என்ன பக்தி? 

குரங்கு தன் நிழலைப் பார்த்து பயந்து பின் கனி கேட்டதை வேலை மெனக்கெட்டு  எழுதி இருக்கிறார். இதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? 

பக்தி என்பது வாழ்வை இரசிப்பது. இயற்கையோடு ஒன்றி வாழ்வது. குரங்கும், மலையும் , அது உண்ணும் கனியும், அதன் சேட்டைகளும் எல்லாம் இயற்கைதான். 

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்பதும் பிரபந்தம். 

வாழ்க்கையை கொண்டாட வேண்டும். 



கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்


வீடணன் கூறிய அற உரைகளை ஏற்க மறுத்து அவனையும் விரட்டி விடுகிறான் இராவணனின். 

போவதற்கு முன், கடைசியாக வீடணன் கூறுகிறான் 


"என் தந்தை போன்றவனே. உனக்கு நன்மை தரக்கூடிய நல்லவை பலவும் சொன்னேன். நீ கேட்கவில்லை. என் மேல் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்து அருள்வாய்" 


என்று கூறி விட்டு, அந்த ஊரை விட்டு விலகினான். 


பாடல் 

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,

ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;

அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,

உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_26.html

Pl click the above link to continue reading

'எத்துணை வகையினும் = பல வகைகளில் 

உறுதி எய்தின, = உனக்கு நல்லது தருவனவற்றை 

ஒத்தன, = அறத்துக்கு ஒத்தவற்றை 

உணர்த்தினேன் = சொன்னேன் 

உணரகிற்றிலை; = நீ உணரவில்லை 

அத்த ! = என் தந்தை போன்றவனே 

என் பிழை பொறுத்தருளுவாய்' என, = என் பிழை எதுவும் இருந்தால் பொறுத்து அருள்வாய் என்று கூறி விட்டு 


உத்தமன்  = உத்தமனான வீடணன் 

அந் நகர் ஒழியப் போயினான். = அந்த ஊரை விட்டு விலகிப் போனான் 


இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்ன என்றால், 


வீடணன் திட்டமிட்டு இராவணனை விட்டு விலகினான். இராவணனுக்கு துரோகம்  செய்தான் என்று ஒரு குற்றச்சாட்டு வீடணன் மேல் உண்டு. 

காப்பியத்தை ஊன்றி படித்தால் தெரியும், அவன் இராவணனை விட்டு போக திட்டம் தீட்ட வில்லை. 


அவனை இராவணன் விரட்டி விட்டான் என்பதே உண்மை. 

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது , நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்ன என்றால், நாம் நம் தகுதியை அந்த நூலின் உயரத்துக்கு  உயர்த்த முயற்சி செய்ய வேண்டுமே அல்லாமல், நம் நிலைக்கு நூலை கீழே கொண்டு வரக் கூடாது. 

அரை குறையாக படித்து விட்டு, வீடணன் திட்டம் போட்டே இராவணனை கவிழ்த்து விட்டான், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தான், செஞ்சோற்று கடனை மறந்தான்  என்றெல்லாம் வாய்க்கு வந்தமாதிரி  பேசிக் கொண்டு திரிகிறார்கள். 


வீடணனை தன்னை விட்டு  விலக்கியது இராவணனே.


வீடணன் செய்தது சரியா தவறா என்பதல்ல வாதம். வீடணன் திட்டமிட்டு இராவணனை வஞ்சனை செய்யவில்லை.  


"என் முன் நின்றால் கொன்று விடுவேன்..போய் விடு" என்று இராவணன் வீடணனை  விலக்கினான். 


அது தான் நடந்தது. 



Saturday, October 24, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

அறிவுரை கூறிய வீடணனை இராவணன் கொடும் சொல் கூறி விரட்டி விடுகிறான். வானில் நின்று வீடணன் மேலும் கூறுகிறான். 


"இராவணா, நீ வாழ்க. நான் சொல்வதைக் கேள். உன் வாழ்க்கை உயர நான் வழி சொல்கிறேன். நீண்ட நாள் வாழும் வரம் பெற்ற நீ புகழோடு வாழ வேண்டாமா?  தீயவர்கள் சொல் கேட்டு உனக்கு நீயே கெடுதல் தேடிக் கொள்ளாதே.  அறம் பிழைத்தவருக்கு வாழ்க்கை இருக்குமா? சிந்தித்துப் பார் "


பாடல் 


'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_24.html

pl click the above link to continue reading


'வாழியாய் ! = நீ வாழ்க 

கேட்டியால்: = நான் சொல்வதைக் கேள் 

வாழ்வு கைம்மிக = வாழ்வு உயர்வு அடைய 

ஊழி காண்குறு = ஊழிக் காலம் வரை நிலைத்து நிற்கும் 

நினது = உனது 

உயிரை  = உயிரை, வாழ் நாளை 

ஓர்கிலாய், = நீ நினைத்துப் பார்க்கவில்லை 

கீழ்மையோர் சொற்கொடு  = தீயவர்கள் சொல் கேட்டு 

கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கேட்டை தேடிக் கொள்ளப் போகிறாயா 

வாழ்மைதான் = வாழ்க்கைதான் 

அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழை விட்டவர்களுக்கு வாய்க்குமோ?

இராவணனுக்கு தெரியாத அறம் அல்ல. 


நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவை உடையவன் அவன். 


இருந்தும்  செய்வது தவறு என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை? 

அல்லது, தெரிந்தும் ஏன் செய்தான்?


இராவணனை விட்டு விடுவோம். அவன் கதை முடிந்த கதை. 

நம் கதையைப் பார்ப்போம்.


நமக்குத் தெரிந்தே நாம் பல தவறுகளைச் செய்கிறோம். அல்லது நல்லதை செய்யாமல் விடுகிறோம். 

ரொம்ப சாப்பிடக் கூடாது, புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு, சர்க்கரை விஷம், எல்லாம் தெரியும். இருந்தும் செய்கிறோம் அல்லவா?


உடற் பயிற்சி முக்கியம். உணவு கட்டுப்பாடு முக்கியம். நிறைய நீர் குடிக்க வேண்டும். நல்ல ஒய்வு வேண்டும். 


செய்கிறோமா? 


இல்லையே. 


பின், இராவணனை குறை சொல்லி என்ன பயன்?  தெரிந்தே தவறுகளை நாம் செய்வது போல  அவனும் செய்தான். 


இது எவ்வாறு நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? 

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். செய்ய மாட்டேன் என்கிறோம். ஏன்?


அது தெரிந்து விட்டால், இராமாயணம் படித்த புண்ணியம் வந்து சேரும்.

ஏன் நாம் நம்மை வழி நடத்த முடியவில்லை? நாம் நினைப்பதை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

ஏன் தெரியுமா? ....


Thursday, October 22, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான் 


வீடணனின் அறிவுரைகள் இராவணன் அறிவில் ஏறவில்லை. வீடணனை பலவாறாக பழித்து "என் கண் முன் நில்லாதே...நின்றால் உன்னை கொன்று விடுவேன்" என்று சொல்லி துரத்துகிறான் இராவணன்.

வீடணனுக்கு வேறு வழி இல்லை. 

தன்னுடைய அமைச்சர்களோடு வானில் செல்கிறான். போவதற்கு முன்பும் பலப் பல அறங்களை எடுத்துச் சொல்கிறான். 


காமத்தின் முன் அறிவு எங்கே நிற்கும்? இராவணன் படித்த வேதங்களும், அவன் பெற்ற வரங்களும், அவன் வீரம் எல்லாம் காமத்தின் முன் மண்டியிட்டன . 


பாடல் 

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்

சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -

நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,

ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்;


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_98.html

pl click the above link to continue reading 

என்றலும் = என் கண் முன் நில்லாதே என்று இராவணன் சொன்னதும் 

இளவலும் = வீடணனும் 

எழுந்து, வானிடைச் சென்றனன்; = எழுந்து, வானத்தில் சென்றான் 

துணைவரும்  = அவனுடைய அமைச்சர்களும் 

தானும் = அவனும் (வீடணனும்) 

சிந்தியா நின்றனன் = சிந்தித்து நின்றான் 

பின்னரும் = அதன் பின்பும் 

நீதி சான்றன = நீதி சார்ந்த 

ஒன்று அல பலப்பல = ஒன்று அல்ல, பலப் பல 

உறுதி ஓதினான்; = உயர்ந்த விஷயங்களைச் சொன்னான் 


அது என்ன "சிந்தியா நின்றான் ". சிந்திக்காமல் நின்றான் என்று அர்த்தமா? இல்லை. 

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கணம் படித்தால், இந்தப் பாடல் மட்டும் அல்ல,  இலக்கியத்தில் எந்த இடத்தில் இது வந்தாலும், புரிந்து கொள்ள உதவும். 


தமிழில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 


ஒன்று பெயர்ச் சொல், இன்னொன்று வினைச் சொல். 


வினைச் சொல் காலம் காட்டும் என்பது விதி. 


எந்த வினைச் சொல்லையும் 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். 


1. பகுதி 

2. விகுதி 

3. இடை நிலை 

4. சாரியை 

5. சந்தம் 

6. விகாரம் 


என்பவை அந்த ஆறு. 


இதில் பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றை மட்டும் இப்போது படிப்போம். 


ஒரு வினைச் சொல் எப்படி இருக்கும் என்றால் 


பகுதி + இடை நிலை + விகுதி 

என்று இருக்கும். 


தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களும் இந்த மூன்று பகுதிகளாகத்தான் இருக்கும். 


உதாரணமாக 

படித்தான் = படி + (த் என்பது ந் ஆனது விகாரம்) + த் + ஆன் 

இதில் 

"படி" என்பது பகுதி 

"த்" என்பது இடைநிலை 

"ஆன்"  என்பது விகுதி 


வந்தான் = வா + (த்) + த் + ஆன் 


ஓடினான் = ஓடு + இன் +ஆன் 


ஆடினாள் = ஆடு + இன் + ஆள் 


வணங்கினார் = வணங்கு + இன் + ஆர் 


மேய்ந்தது = மேய் + (த்) + த் + அது 


இப்படி எந்த வினைச் சொல்லை எடுத்துக் கொண்டாலும், இந்த மூன்று பிரிவில் அடக்கி விடலாம். 


இது வரை புரிகிறதா? 


புரிந்தால், நாளை மேலே தொடருவோம். 

சந்தேகம் இருந்தால்,  அதை தெளிவு படுத்தி விட்டு மேலே செல்வோம். 





திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி

திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி


வான் சிறப்பில் மூன்றாவது குறள்.


இந்த பூமி கடலால் சூழப் பட்டது. கடல் என்றால் நீர் தானே. மழை பெய்யாவிட்டால் என்ன, எவ்வளவு நீர் இருக்கிறது கடலில். சமாளித்துக் கொள்ள முடியாதா என்றால், முடியாது. 


மழை பெய்யாவிட்டால், இந்த கடல் சூழ்ந்த உலகில் பசி எல்லோரையும் வருத்தும். 


பாடல் 


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_22.html


Pl click the above link to continue reading


விண்ணின்று = விண்ணில் இருந்து 

பொய்ப்பின் = மழை பெய்யாமல் பொய்த்து விட்டால் 

விரிநீர் = விரிந்த நீரை உடைய கடல் 

வியனுலகத்து = பரந்த உலகில் 

உண்ணின்று = உணவு இன்றி 

உடற்றும் பசி. = வருத்தும் பசி 


பசி என்றால் ஏதோ கொஞ்ச பொறுத்துக் கொண்டால், உணவு தயாராகி விடும்  என்றல்ல.  உணவே வராது. உணவே எங்கும் கிடையாது.


எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? வீட்டில் உணவுப் பொருள்கள் இல்லை. அரிசி, புளி , கோதுமை, காய் கறிகள், பழங்கள், எண்ணெய் என்று எதுவும் இல்லை. கடைகளிலும் இல்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும்  உணவுப் பொருள்கள் இல்லை.  

இன்று போய் விளைவித்தாலும், ஒரு வாரம் பத்து நாள் ஆகும். மழை இல்லாவிட்டால்  அதுவும் முடியாது. 


அப்படி ஒரு பசி வந்தால், அனைத்து உயிர்களும் பசியால் வாடி இறந்து போகும் அல்லவா? 

இந்த உலகில் உயிர்கள் இருக்கக் காரணம், மழை தான். 


மழை என்றால் ஏதோ நீர் ஆவியாகிறது, மழை வருகிறது என்று நாம் எளிதாக நினைத்துக் கொள்கிறோம். அப்படி அல்ல. 

மழை என்பது உயிர். 

நம் உறவுகள் அனைத்தையும் நம்மோடு சேர்த்து வைத்து இருப்பது, மழை.

இந்த உலகம் உயிர்களோடு, அழகாக இருக்கக் காரணம் மழை.

எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறார். 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும். 





Wednesday, October 21, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒல்லை நீங்குதி

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒல்லை நீங்குதி 

சீதையை விட்டு விடு என்று எவ்வளவோ வீடணன் சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. மாறாக, வீடணனை பழித்துப் பேசுகிறான். 


கடைசியில், "ஒழிஞ்சு போ. என் கண் முன்னால நிக்காத" என்று அவனை விரட்டி விடுகிறான். 


பாடல் 

பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை; 

ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி; 

விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன்- 

அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_21.html

click the above link to continue reading



பழியினை உணர்ந்து = உடன் பிறந்தவனைக் கொன்றான் என்ற பழி வரும் என்று உணர்ந்து 

யான் படுக்கிலேன், உனை = உன்னைக் கொல்லாமல் விடுகிறேன் 

ஒழி, சில புகலுதல்; = ஒழிந்து போ. எனக்கு அறிவுரை சொல்வதை விடு. 

ஒல்லை நீங்குதி;  = ஒல்லை என்றால் சீக்கிரம். இங்கிருந்து உடனே போய் விடு 

விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நிற்காதே 

விளிதி' என்றனன்- = நின்றால் உன்னைக் கொன்று விடுவேன் என்றான் 

அழிவினை எய்துவான் = அழிவை அடைய இருப்பவன் 

அறிவு நீங்கினான். = அறிவு இல்லாதவனான இராவணன் 


வீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்தான் என்பது நமக்குத் தெரியும். 


வீடணன் நேரே சென்று அடைக்கலம் அடைந்தானா?


முதலில் இராவணன், வீடணனை கோபித்து விரட்டி விடுகிறான். 


வீடணன் தனித்து விடப் படுகிறான். அவன் தனித்து இருந்து இருக்கலாம் அல்லது  இராமனிடம் சென்று அடைக்கலம் அடைந்து இருக்கலாம். 


இராவணன் "என் கண் முன்னே நிற்காதே, நின்றால் உன்னைக் கொன்று விடுவேன்,  ஓடிப் போ " என்று விரட்டிய பின் வீடணன் என்ன செய்தான்?


நேரே இராமனிடம் போனானா?


Tuesday, October 20, 2020

திருக்குறள் - எல்லாம் மழை

 திருக்குறள் - எல்லாம் மழை 

வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் முதல் குறளில் மழையை அமுதம் என்று கூறினார். 

அடுத்த குறள். 

சரியான tongue twister 


பாடல் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

 பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_20.html

(please click the above link to continue reading)


துப்பார்க்கு = துய்ப்பவர்களுக்கு, அதாவது அனுபவிப்பவர்களுக்கு.

துப்பாய = வலிமை, சத்து ஆகி. 

துப்பாக்கி = துப்பாக்கி என்றால் ஏதோ சுடுவதற்கு பயன்படும் AK 47 போன்ற பொருள் அல்ல. துப்பு + ஆக்கி. துய்க்கக் கூடிய உணவாகி 

துப்பார்க்கு = மீண்டும் துப்பார்க்கு என்கிறார். அதாவது, துய்ப்பவர்களுக்கு 

துப்பாய தூஉம் = துய்க்கும் படியாக இருப்பதும் 

மழை = மழை 

ஒண்ணும் புரியலைல?

ரொம்ப எளிமையானது. 


அதாவது, மழை உணவை உண்டாக்கவும் பயன்படுகிறது, உணவாகவும் இருக்கிறது. 


எப்படி என்று பார்ப்போம். 

அரிசி, கோதுமை, காய் கறிகள், கனிகள் எல்லாம் வளர வேண்டும் என்றால், மழை வேண்டும். 

மழை இல்லாவிட்டால் என்ன, நாங்க நிலத்தடி நீரை பயன் படுத்தி விவசாயம் செய்வோமே  என்று நினைக்கலாம். 

செய்யலாம். ஆனால், ரொம்ப நாளைக்கு செய்ய முடியாது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய் கொண்டே இருக்கும்.  நாளடைவில் தீர்ந்து போகும். 

பயிர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொள்வோம் என்று நினைக்கலாம்.  அசைவ உணவு வேண்டும் என்றால் அதற்கு வேண்டிய விலங்குகள் உயிர் வாழ வேண்டும். அவை உயிர் வாழ காய் கறிகள், நெல், புல் எல்லாம் வேண்டும். மழை இல்லாவிட்டால், அந்த விலங்குகளும்  இறந்து போகும். 


நமக்கு உணவு வேண்டும் என்றால், உணவை செய்ய வேண்டும் என்றால் மழை வேண்டும். 

ஒரு கவளம் உணவை கையில் எடுக்கும் போது, எங்கோ, எப்போதோ பெய்த மழை  நினைவு வர வேண்டும். 

உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க பயன் படுகிறது. 

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி.

உண்பவர்களுக்கு வலிமை தரும் உணவாக்கி. 


அடுத்தது, மழை உணவை உண்டாக்க மட்டும் அல்ல, தானே உணவாகவும் இருக்கிறது. 

அது எப்படி?

என்னதான் உயர்ந்த உணவாக இருந்தாலும், தண்ணி இல்லாமல் விருந்தை உண்ண முடியுமா?  

உடம்புக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நீரும் முக்கியம். ரொம்ப தாகம் எடுக்கும் போது, இரண்டு இட்லி கொஞ்சம் கட்டி சட்னி வைத்து சாப்பிட்டால்  தாகம் அடங்குமா?

என்ன உணவு உண்டாலும், எவ்வளவு சிறப்பான, வலிமை மிக்க உணவு உண்டாலும், நீரும் வேண்டும். 

நீரும் ஒரு உணவு போன்றது.

நமது நாக்கு எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கில் நீர் இல்லை என்றால் உணவை உண்ண முடியாது. சுவை தெரியாது.உமிழ் நீர் சுரக்காது. உணவு தொண்டை வழியே   உள்ளே போகாது. 

உணவை உண்ண , உண்ட உணவை ஜீரணம் செய்ய நீர் வேண்டும். 


இவை அன்றி, நீர் உணவாகவும் இருக்கும். 

துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

துய்ப்பவர்களுக்கு உணவு ஆவதும் மழை. 

துய்ப்பவர்களுக்கு உணவை உண்டாக்குவது, உணவாகவே இருப்பதும் , எல்லாம் மழை. 

உணவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருந்து விடலாம். நீர் இல்லாமல் இருக்க முடியுமா? 

துப்பார்க்கு, துப்பு ஆய துப்பு ஆக்கி 

துப்பார்க்கு, துப்பு ஆவதும் மழை. 

என்று வாசித்தால் எளிதாக புரியும். 

நல்லா இருக்குல ?