Thursday, October 22, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான் 


வீடணனின் அறிவுரைகள் இராவணன் அறிவில் ஏறவில்லை. வீடணனை பலவாறாக பழித்து "என் கண் முன் நில்லாதே...நின்றால் உன்னை கொன்று விடுவேன்" என்று சொல்லி துரத்துகிறான் இராவணன்.

வீடணனுக்கு வேறு வழி இல்லை. 

தன்னுடைய அமைச்சர்களோடு வானில் செல்கிறான். போவதற்கு முன்பும் பலப் பல அறங்களை எடுத்துச் சொல்கிறான். 


காமத்தின் முன் அறிவு எங்கே நிற்கும்? இராவணன் படித்த வேதங்களும், அவன் பெற்ற வரங்களும், அவன் வீரம் எல்லாம் காமத்தின் முன் மண்டியிட்டன . 


பாடல் 

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்

சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -

நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,

ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்;


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_98.html

pl click the above link to continue reading 

என்றலும் = என் கண் முன் நில்லாதே என்று இராவணன் சொன்னதும் 

இளவலும் = வீடணனும் 

எழுந்து, வானிடைச் சென்றனன்; = எழுந்து, வானத்தில் சென்றான் 

துணைவரும்  = அவனுடைய அமைச்சர்களும் 

தானும் = அவனும் (வீடணனும்) 

சிந்தியா நின்றனன் = சிந்தித்து நின்றான் 

பின்னரும் = அதன் பின்பும் 

நீதி சான்றன = நீதி சார்ந்த 

ஒன்று அல பலப்பல = ஒன்று அல்ல, பலப் பல 

உறுதி ஓதினான்; = உயர்ந்த விஷயங்களைச் சொன்னான் 


அது என்ன "சிந்தியா நின்றான் ". சிந்திக்காமல் நின்றான் என்று அர்த்தமா? இல்லை. 

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கணம் படித்தால், இந்தப் பாடல் மட்டும் அல்ல,  இலக்கியத்தில் எந்த இடத்தில் இது வந்தாலும், புரிந்து கொள்ள உதவும். 


தமிழில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 


ஒன்று பெயர்ச் சொல், இன்னொன்று வினைச் சொல். 


வினைச் சொல் காலம் காட்டும் என்பது விதி. 


எந்த வினைச் சொல்லையும் 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். 


1. பகுதி 

2. விகுதி 

3. இடை நிலை 

4. சாரியை 

5. சந்தம் 

6. விகாரம் 


என்பவை அந்த ஆறு. 


இதில் பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றை மட்டும் இப்போது படிப்போம். 


ஒரு வினைச் சொல் எப்படி இருக்கும் என்றால் 


பகுதி + இடை நிலை + விகுதி 

என்று இருக்கும். 


தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களும் இந்த மூன்று பகுதிகளாகத்தான் இருக்கும். 


உதாரணமாக 

படித்தான் = படி + (த் என்பது ந் ஆனது விகாரம்) + த் + ஆன் 

இதில் 

"படி" என்பது பகுதி 

"த்" என்பது இடைநிலை 

"ஆன்"  என்பது விகுதி 


வந்தான் = வா + (த்) + த் + ஆன் 


ஓடினான் = ஓடு + இன் +ஆன் 


ஆடினாள் = ஆடு + இன் + ஆள் 


வணங்கினார் = வணங்கு + இன் + ஆர் 


மேய்ந்தது = மேய் + (த்) + த் + அது 


இப்படி எந்த வினைச் சொல்லை எடுத்துக் கொண்டாலும், இந்த மூன்று பிரிவில் அடக்கி விடலாம். 


இது வரை புரிகிறதா? 


புரிந்தால், நாளை மேலே தொடருவோம். 

சந்தேகம் இருந்தால்,  அதை தெளிவு படுத்தி விட்டு மேலே செல்வோம். 





1 comment: