Thursday, October 15, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உன் புகல் அவர்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உன் புகல் அவர் 

சீதையை சிறை பிடித்தது அறம் அன்று, அவளை விட்டு விடு என்று இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் வீடணன். அத்தனையும் வீணாகப் போயிற்று. 

கோபத்தில் இராவணன், வீடணனை தகாத வார்த்தைகள் பேசுகிறான். 


"முன்பே அவர்கள் (இராம இலக்குவனர்கள்) மேல் உனக்கு அன்பு உண்டு. அந்த பகை கொண்ட மனிதர்கள் மேல் உள்ள அன்பினால் உனக்கு எலும்பு உருகுகிறது. அவர்களை போற்றுகிறாய். உனக்கு புகல் இடம் அவர்கள்தான். நான் வேற என்ன சொல்ல" 


பாடல் 

முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;

வன் பகை மனிதரின், வைத்த அன்பினை;

என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;

உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ ?

பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_15.html


(pl click the above link to continue reading)

முன்புற = முன்பே 

அனையர்பால் = அவர்களிடம் 

அன்பு முற்றினை; = உனக்கு நிறைய அன்பு உண்டு 

வன் பகை  = கொடுமையான பகை 

மனிதரின் = மனிதர்கள் மேல் 

 வைத்த அன்பினை = வைத்த அன்பினால் 

என்பு உற உருகுதி = எலும்பு வரை உருகுகிறாய் 

அழுதி = அன்பின் மிகுதியால் அழுகிறாய் 

ஏத்துதி; = அவர்களைப் போற்றுகிறாய் 

உன் புகல் அவர் = அவர்கள்தான் நீ சென்று புகல் அடைய சிறந்த இடம் 

பிறிது உரைக்க வேண்டுமோ ? = வேறு என்ன சொல்ல?


வீடணன் சொன்னது, "சீதையை விட்டு விடு" என்று. 


பதிலுக்கு இராவணன் சொல்லுவது "இராமனிடம் சரண் அடைந்து விடு"  என்று. 


கண் முன்னே நின்ற பாரா பொருள் வீடணனுக்கு கடவுளாகத் தெரிந்தது. இராவணனுக்கு மனிதனாகத் தெரிந்தது. 


பார்க்கும் பார்வையில் இருக்கிறது எல்லாம். 


கண்ணனை இடையனாக பார்த்தான் துரியோதனன் என்ற மடையன். 

இராமனை மனிதனாகப் பார்த்தான் இராவணன் என்ற ஒரு அரக்கன். 

முருகனை குழதையாகப் பார்த்தான், சூரபத்மன். 

அழிந்தார்கள் என்பது வரலாறு. 


வீடணன், இராமனிடம் அடைக்கலம் போக வேண்டும் என்ற முடிவை முதலில் எடுத்தது  இராவணன். "உனக்கு அவர்கள்தான் புகலிடம்" என்று வீடணனிடம் முதலில் கூறியது இராவணன். 

                               

காப்பிய நீரோட்டம் எப்படி போகிறது பாருங்கள். 

உன்னிப்பாக கவனித்தால் இந்த இடத்தில் காப்பிய ஆறு சற்று வழி மாறுவது  தெரியும். 

வீடணனை, இராமனை நோக்கி நகர்த்துகிறான் இராவணன்.

மேலும் எப்படி போகிறது என்று சிந்திப்போம். 







1 comment:

  1. "கண் முன்னே நின்ற பாரா பொருள் வீடணனுக்கு கடவுளாகத் தெரிந்தது" என்பது அல்ல முக்கியமான செய்தி.

    எது சரி, எது தவறு, எனது நியாயம், எது அநியாயம் என்பது விபீடணனுக்குத் தெரிந்து இருந்த்தது - இதுதான் முக்கிய செய்தி.

    ReplyDelete