Tuesday, October 13, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் நிகர்க்க நேர்வரோ

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் நிகர்க்க நேர்வரோ

 

இராவணனுக்கு வீடணன் எவ்வளவோ அறிவுரை கூறுகிறான். இரணியன் மற்றும் பிரகலாதன் கதையைக் கூறுகிறான்.

பதிலுக்கு இராவணன் கேட்கிறான், 


"என்னதான் இருந்தாலும், இரணியன், பிரகலாதனின் தந்தை. தன்னுடைய தந்தையை ஒருவன் வயிற்றைக் கிழித்து குடலை உருவி இரத்தத்தைக் குடிப்பதை கண்டு ஒரு மகனால் மகிழ முடியுமா? ஆனால் பிரகலாதன் மகிழ்ந்தான். தன் தந்தையை கொடூரமாக கொன்றவனை வணங்கினான் பிரகலாதன். அவனைப் போலவே நீயும் நம் பகைவன் பால் அன்பு செய்கிறாய்..." என்று இராவணன் வீடணனைப் பார்த்து கூறுகிறான். 


இராவணன் கூறுவதை மறுக்க முடியாது. அவன் வாதத்தில் ஞாயம் இல்லாமல் இல்லை. 

எல்லா நிகழ்வுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. 

பாடல் 


ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்

ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்

நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_13.html

(click the above link to continue reading)


ஆயவன் = அவன் (பிரகலாதன்) 

வளர்த்த தன் தாதை = தன்னை வளர்த்த தந்தையின் 

ஆகத்தை = உடலை 

மாயவன் = திருமால் 

பிளந்திட = பிளக்க 

மகிழ்ந்த மைந்தனும் = அதில் மகிழ்ந்த மைந்தனும் 

ஏயும் = நமக்கு ஏற்பட்ட 

நம் பகைவனுக்கு = நம்முடைய பகைவனான இராமனிடம் 

இனிய நண்பு செய் = இனிய நட்பு பாராட்டும் 

நீயுமே நிகர்;  = நீ தான் அந்த பிரகலாதனுக்கு நிகர் 

பிறர் நிகர்க்க நேர்வரோ = வேறு யார் சமமாவார்கள் ?

அதர்மத்தின் கருவில் தர்மம் பிறக்கிறது. 

இரணியன் வீட்டில் ஒரு பிரகலாதன்.

இராவணன் வீட்டில் ஒரு வீடணன். 

அதர்மம் தன்னை தானே அழித்துக் கொள்ளும். 

இராவணனை அழிக்க வேண்டும் என்று இராமன் அயோத்தியில் இருந்து கிளம்பவில்லை. அவன் பாட்டுக்கு காட்டில் சுத்திக் கொண்டு இருந்தான். 

சூர்பனகை போய் வம்பில் மாட்டி, இராவணனை பலி கொடுத்தாள். 

என்பில் அதனை வெயில் போல காயுமே 
அன்பில் அதனை அறம் 

என்பார் வள்ளுவர். 

சூரிய ஒளியில் புழுக்கள் மாண்டு போகும். புழுவை அழிக்க வேண்டும் என்று சூரியன் வருவது   இல்லை. சூரியனின் நோக்கம் அது அல்ல. புழு தானே வெளியில் சென்று  சூட்டில் மாண்டு போகும். (என்பில் = எலும்பு இல்லாதது - புழு) 

இராமன் என்ற சூரிய ஒளியில் இராவணன் என்ற புழு தானே சென்று மடிந்தது. 

அறம் தேடிப் போனால், அறம்.

கதை தேடிப் போனால், கதை.

கவிதை தேடிப் போனால், கவிதை.

அதுதான் காப்பியம். 

மேலும் படிப்போம். 



2 comments:

  1. நெருங்கிய உறவுகளில் ஒருவன் மிக்க கொடூரமானவனாகவோ,அல்லது கொலையாளியாகவோ இருந்தால் அவனை சிறையில் அடைத்தாலோ அல்லது தூக்கில் போட்டாலோ,உறவுகள் மனதை திடப் படுத்திக்கொள்ளும்.. சில சமயங்களில் கொடுமை தாங்காமல் மாட்டிவிடவும் செய்யும். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், வீடணன்,பிரகலாதன் செய்தது நியாயமாகவே படுகிறது.

    ReplyDelete
  2. தன் உறவுகளை மீறி, "நியாயம், அநியாயம்" என்று ஒன்று உண்டு.

    ReplyDelete