Wednesday, October 14, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழவோ கருத்து ?

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழவோ கருத்து ?


சீதையை விட்டு விடும்படி வீடணன் இராவணனுக்கு எவ்வளவோ சொன்னான். இரணியன் கதையைக் கூறினான். 

இராவணன் ஏற்கவில்லை. 

இரணியன் கதையை அப்படியே தலை கீழாக புரிந்து கொள்கிறான் இராவணன்.


இராவணன் கூறுகிறான் 


"எப்படி தந்தை இறந்த பின் பிரகலாதன் அரசை ஏற்று அனுபவித்தானோ, அது போல நான் தோற்று இறந்த பின் இந்த அரசை நீ அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாய். அது நடக்காது" என்று 


என்ன செய்வது. நல்லது கூறினாலும், அதை அப்படியே தலை கீழாக மாற்றி தவறாக புரிந்து கொள்வது இன்றும் நடக்கிறது. 


உயந்த கருத்துகளை படிக்கும் போது, நம்மை அந்த அளவுக்கு நாம் உயர்த்திக்கொள்ள முயல வேண்டுமே அன்று அவற்றை நம் நிலைக்கு கீழே இரக்கக் கூடாது. 


பெரிய நூல்களை இப்படி ஜனரஞ்சகமாக எழுதுவது சில சமயம் தவறோ என்று தோன்றும். இவற்றைப் படிக்கும் சிலர் என்னிடமே கேட்டு இருக்கிறார்கள், "வள்ளுவர்  அப்படி சொன்னது தவறு இல்லையா?" என்று.  அதாவது, வள்ளுவரை விட  அவர்களுக்கு அறிவு அதிகம் என்று சொல்ல வருகிறார்கள். 

அரக்க குணம். என்ன செய்வது?


பாடல் 


பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,

சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,

ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்

வாழவோ கருத்து ? அது வர வற்று ஆகுமோ ?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)

பாழி சால் = வலிமை மிகக் கொண்ட 

இரணியன் = இரணியனின் 

புதல்வன் = புதல்வன், பிரகலாதன் 

பண்பு என = குணத்தைப் போல 

சூழ்வினை முற்றி = சூழ்ச்சி செய்து 

யான் அவர்க்குத் தோற்றபின் = நான் அந்த இராம இலக்குவனர்களிடம் தோற்ற பின் 

ஏழை = கோழை, ஏழையான நீ 

நீ என் பெருஞ் செல்வம் எய்தி = என்னுடைய அளவவற்ற செல்வத்தை பெற்று 

பின் வாழவோ கருத்து ? = அதன் பின் வாழவா கருதி இருக்கிறாய் 

அது வர வற்று ஆகுமோ ? = அது நடக்க முடியுமா ? (முடியாது என்று கருத்து)


வரம் கேட்டது இரணியன் 

தன்னை வணங்கும்படி எல்லோரையும் இம்சை செய்தது இரணியன் 

இந்தத் தூணில் இருக்கிறானா உன் ஹரி என்று கேட்டவன் இரணியன் 

தூணை பிளந்தவவன் இரணியன் 

நரசிம்மத்தால் கொல்லப்பட்டவன் இரணியன்.


இதில் பிரகலாதனின் பங்கு என்ன? பிரகலாதன் என்ன தவறு செய்தான்?


அதே போல், சீதை மேல் காமம் கொண்டது இராவணன், அவளைத் தூக்கி வந்தது இராவணன்,  அவளை விட மறுத்தது இராவணன். 


இதில் வீடணன் பங்கு என்ன?


தாங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழி போடுவது ஒரு அரக்க குணம் போலும். 


நம்மிடம் அந்தக் குணம் இருந்தால், அது பற்றி சிந்திக்க வேண்டும். 


3 comments: