Monday, April 19, 2021

திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும் - பாகம் 2

 

திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும்  - பாகம் 2 


வீடு பேறு அடைய வேண்டுமானால், துறவறம் வேண்டும். வீடு, மனைவி, மக்கள், செல்வம், என்று மேலும் மேலும் பற்றுக்களை வளர்த்துக் கொண்டிருந்தால் வீடு பேறு கிட்டாது. 

துறவறம் வேண்டும் என்றால், பொதுவாக, இல்லறம் வேண்டும். 

இந்த இரண்டு அறங்களும் வேண்டும் என்றால் மழை வேண்டும்.  மழை இல்லாவிட்டால் அனைத்து அறங்களும் சிதைந்து போகும். எனவே, கடவுள் வாழ்த்துக்கு அப்புறம் வான் சிறப்பு பற்றி கூற மேற்கொள்கிறார் வள்ளுவர். 


பாடல் 


வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று



பொருள் 



(click the above link to continue reading)



வானின்று  = வானத்தில் இருந்து 

உலகம் = உலகத்திற்கு 

வழங்கி வருதலால் = கொடுத்து வருவதால் 

தான் = அது 

அமிழ்தம் என்றுணரற் பாற்று = அமிழ்தம் என்று உணரக் கூடியதாக இருக்கிறது. 


வானத்தில் இருந்து உலகிற்கு கொடுத்து வருவதால், அது அமிழ்து என்று உணரப் படுகிறது என்கிறார். 

இனி பரிமேலழகர் உரையை பார்ப்போம். 


"அமிழ்து" : அமிழ்தம் உடலையும் உயிரையும் ஒன்றாக வைக்க உதவுவது. அதாவது, சாகாமல் இருக்க உதவுவது.  சாதல் என்றால் என்ன ? உடலை விட்டு உயிர் பிரிவது தானே? அப்படி பிரியாமல் சேர்த்து ஒட்டி வைத்து விட்டால், சாகாமல் இருக்கலாம் தானே?   

அமிழ்தம் உண்டவர்கள் சாக மாட்டார்கள்.  

மழைதான் அமுதம் என்கிறார். 

எப்படி சரியாகும்.  நாம் தினம் தினம் பார்க்கிறோம் எவ்வளவோ பேர் சாகிறார்கள்.  மழை அமுதம் என்றால் யாரும் சாகக் கூடாது அல்லவா?  அங்குதான் பரிமேலழகரின் நுட்பம் நமக்குப் புரியும். 

"அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்"


ஒரு தனி நபர் இறக்கலாம். ஒரு இராமசாமி இறந்தால் ஒரு குப்பு சாமி பிறப்பார்.  ஒரு மரம் வெட்டப் பட்டால், வேறு எங்கோ இன்னொரு மரம் முளைக்கும்.  பிறப்பும் இறப்பும் இடையறாது நிகழ மழை வேண்டும்.  மழை இல்லை என்றால் இறப்பு இருக்கும். பிறப்பு இருக்காது. செடி கொடி மரங்கள் இருக்காது. உணவு இருக்காது. பருக நீர் இருக்காது. உயிர்கள் மடிந்து கொண்டே இருக்கும். பிறப்பு என்பது இருக்காது. சில காலங்களில் பூமியே சுடுகாடாகி விடும். 

அப்படி ஆகாமல், உயிர்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதால், அது அமிழ்தம் என்கிறார். 


"அமிழ்தம் என்றுணரற் பாற்று":  சரி, வள்ளுவர் சொல்கிறார். மழை தான் அமுதம் என்று வேறு எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்டால். இதை எல்லாம் சொல்ல முடியாது.  "உணர்ந்து " கொள்ளலாம் என்கிறார்.  

காதலினிடம் அவனுடைய காதலி கேட்கிறாள். " நீ என்னை உண்மையிலேயே காதலிக்கிறாயா" என்று. அவன் "ஆம்" என்கிறான். "இல்லை, நான் நம்ப மாட்டேன், நிரூபித்து காண்பி" என்று கேட்டால் என்ன செய்வது? இதை எல்லாம் நிரூபணம் பண்ண முடியாது. அன்பை, காதலை உணரத்தான் முடியும். 


"வானின்று உலகம் வழங்கி" : உலகம் என்றால் என்ன? இங்குள்ள மலை, நிலம், கடல் எல்லாமா? மழை இல்லாவிட்டால் மலை என்ன ஆகும்? அது பாட்டுக்கு இருக்கும். பரிமேலழகர் "'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை" என்று உரை செய்கிறார். 

உயிர்கள் என்றால், மனிதர்கள் மட்டும் அல்ல. விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் எல்லாமே உயிரில் அடங்கும். 

மழையின் சிறப்பு கூறுகிறார். 



Sunday, April 18, 2021

திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும்

 திருக்குறள் - வான்சிறப்பு - அமிழ்தம் எனப்படும் 


திருக்குறளில், பால், இயல், அதிகாரம், குறள் என்ற அமைப்பு ஒரு புறம் இருக்க, இந்த அதிகாரங்களை எப்படி வகைப் படுத்தி இருக்கிறார் என்று நினைத்தாலே நமக்கு பிரமிப்பு வரும். 


வாழ்வின் நோக்கம், அதை அடையும் வழிகள் என்று ஒவ்வொரு படியாக நாம் எப்படி போக வேண்டும் என்று கை பிடித்து கூட்டிச் செல்லுவது போல அதிகார முறைமை இருக்கும். அது பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்யலாம். அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றை அடுக்கி இருக்கிறார். 


கொஞ்சம், மேலோட்டமாக இங்கே பார்ப்போம். அந்தந்த அதிகாரங்கள் வரும் போது அதன் போக்கை ஆழ்ந்து சிந்திப்போம். 


முதலில் பாயிர இயல். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_18.html


(click the above link to continue reading )


அதில் நான்கு அதிகாரங்கள். 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறத்தல். 


இந்த நான்கு அதிகாரங்களும் ஏன் இந்த வரிசையில் இருக்க வேண்டும்? 


கடவுள் வாழ்த்து சரி. அதற்கு அடுத்தது நீத்தார் பெருமையோ அல்லது அறன் வலியுறுத்தலோ சொல்லி இருக்கலாம்தானே? 


மழை இல்லாவிட்டால், உலகில் எந்த அறமும் நிலைக்காது. இல்லறமும் சரி, துறவறமும் சரி நிற்காது. உணவு இல்லை, நீர் இல்லை என்றால் உயிர்கள் வாடும். பசியால் சாகும். இல்லறத்தானிடம் உணவு இல்லை என்றால், முற்றும் துறந்த முனிவருக்கு (நீத்தார்) அவன் எவ்வாறு உணவு அளிக்க முடியும். 


நீத்தார் இல்லை என்றால் இந்த உலகில் அறங்களை எடுத்துச் சொல்வது யார்?  முற்றும் துறந்த ஒருவனைத் தவிர வேறு யார் சொன்னாலும் உலகம் அவனை சந்தேகிக்கும். "அவவன் சொல்வதில் ஏதோ உள் நோக்கம் இருக்கும்" என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எனவே,உலகுக்கு அறங்களை எடுத்துச் சொல்ல "நீத்தார்" வேண்டும். அவர்கள் சொல்லும் அறங்களின் வலிமையை பற்றிச் சொல்ல வந்த அதிகாரம் "அறன் வலியுறுத்தல்" 


எனவே, முதலில் மழை வேண்டும். மழை இருந்தால் உயிர்கள் தழைக்கும். உணவும், நீரும் கிடைக்கும். இல்லறம் சிறக்கும். இல்லறம் சிறந்தால் துறவறம் சிறக்கும். துறவு சிறந்தால், அறங்கள் வெளிப்படும். அதன் வலிமை புரியும். 


இந்த வரிசை தெரிந்து, இரண்டாவதாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைக்கிறார். 


"இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்."


என்று அதிகார முறைமை பற்றிக் கூறுகிறார். 


இனி, அதிகாரத்துக்குள் நுழைவோம். 


Saturday, April 17, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ களிக்கும் நாளே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ களிக்கும் நாளே 


திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளே, உன்னை நான் கண்டு களிக்கும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார்.


என்ன பிரச்சனை? போய் பார்த்துவிட்டு வர வேண்டியதுதானே? அவரை யார் தடுத்தார்கள். 


நாம் சில சமயம் கண் விழித்து அமர்ந்து இருப்போம். எதிரில் ஒரு நண்பர் கடந்து போய் இருப்பார். நாம் கவனித்து இருக்க மாட்டோம். பின் ஒரு நாள், நண்பர் கூறுவார் "நான் அன்னிக்கு உன்னைப் பார்த்து கை ஆட்டினேன்..நீ கண்டு கொள்ளவே இல்லை" என்று. நம் கவனம் எல்லாம் எங்கோ இருந்திருக்கும். எதிரில் உள்ள ஆள் தெரிந்து இருக்காது. 


அவ்வளவு ஏன், 


வீட்டில் மனைவி கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பாள்...அவரும் உம் உம் என்று கேட்டுக் கொண்டிருப்பார். அம்மையார் நேரில் வந்து "என்ன நான் சொல்றது உங்க காதுல விழுதா இல்லையா...இப்ப நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன் சொல்லுங்க பாப்போம்" என்று மடக்கினால், திரு திரு என்று முழிப்பார். 


காரணம், காது இங்கே தான் இருக்கிறது, ஆனால் மனம் வேறு எங்கோ இருக்கிறது. 


கோவிலுக்குப் போகலாம், சுவாமியை தரிசனம் பண்ணலாம், மனம் அங்கு இருந்தால் தானே....கண்ணை மூடினால் வீட்டுப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, மாமியார் பிரச்சனை என்று ஏதேதோ மனதுக்குள் ஓடுகிறது. 


அதை எல்லாம் விட்டு விட்டு, பெருமாளே உன்னை மட்டும் கண்டு களிக்கும் நாள் எந்நாளோ என்று ஏங்குகிறார். 


அற்புதமான பாசுரம். 


பாடல் 


*

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த


அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி


திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


*


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_72.html


(click the above link to continue reading)


இருளிரியச் = இருளை அரிய, இருளை கிழித்துக் கொண்டு 


சுடர் = சுடர் விடும் 


மணி களிமைக்கும் = மணிகள விட்டு விட்டு பிரகாசிக்கும் 


நெற்றி = நெற்றி


இனத்துத்தி = புள்ளிகளை உடைய 


யணி = அழகாக 


பணமா யிரங்க ளார்ந்த = ஆயிரம் படங்கள் படம் எடுத்து ஆட (ஆர்த்த = எழுந்து நிற்க) 


அரவரசப் = அரவுகளுக்கு (பாம்புகளுக்கு) அரசனான 


பெருஞ்சோதி = பெரிய ஜோதி வடிவான 


யனந்த னென்னும் = அனந்த ஆழ்வார் என்று அழைக்கப்படும் 


அணிவிளங்கு = அழகு மிகுந்த 


முயர் = உயர்ந்த 


வெள்ளை யணையை = வெண்மையான தலையணையில் 


மேவி = துயின்று 



திருவரங்கப் பெருநகருள் = திருவரங்கம் என்ற பெரிய நகரில் 


தெண்ணீர்ப் = தெளிந்த நீர் 


பொன்னி = பொன்னி நதி 


திரைக் = அலை என்ற 


கையால் = கையால் 


அடிவருடப் = திருவடிகளை வருட 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


கருமணியைக்  = கரிய மணியை 


கோமளத்தைக் = கோமளத்தை 


கண்டு கொண்டு = கண்டு கொண்டு 


என் = என்னுடைய 


கண்ணிணைகள் = கண் + இணைகள் = இரண்டு கண்களும் 


ளென்றுகொலோ = எப்போது 


களிக்கும் நாளே = இன்பமுறும் நாள் ?


பொன்னி நதியில் அலை அடிக்கிறது. அது பெருமாளின் பாதங்களை வருடி விடுவது போல் இருக்கிறதாம். 


குலசேகர ஆழ்வாரைப் போல அனுபவிக்க முடியுமா?


பெருமாள் முன் நிற்கிறார்....


பெருமாளின் வடிவம், பின்னால் உள்ள ஆதிசேஷன் உயிர் கொண்டு எழுந்து அந்த படங்களில் இருந்து கண்கள் ஒளி விடுவது போல இருக்கிறது. அவரின் பார்வை இன்னும் விரிகிறது. தலையில் இருந்து கால் நோக்கி வருகிறார். அங்கு பொன்னி நதி சல சலத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அது பெருமாளின் பாதங்களை வருடுவது போல் இருக்கிறது. 


அதில் இலயித்து இருக்கும் போது மனம் எங்கோ ஓடுகிறது. அந்த அனுபவ இன்பத்தை முழுமையாக அடைய முடியவில்லை. வந்த காட்சி ஓடி விட்டது. 


அதை எப்போது அடையப் போகிறேனோ என்று ஏங்குகிறார். 


குலசேகர ஆழ்வார் பாடு அப்படி. 


நாம் எல்லாம் எந்த மூலை என்று நாமே அறிந்து கொள்ள வேண்டியதுதான். 


எந்த அனுபவமும் நமக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. ஒன்றைப் பற்றும் போதே மனம் அதை விட்டு விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறது. 


மனம் ஒன்றி அந்தக் காட்சியில் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 


பொருள் முழுவதுமாக தெரிந்த பின், பாசுரத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 


சீர் பிரித்த பின் 



இருள் அரிய  சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி  அணி பணம் ஆயிரங்கள் ஆர்த்த 


அரவு அரசன் பெருஞ் சோதி அனந்தன் என்னும்  அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி 


திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி  திரைக் கையால் அடி வருடப்  பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே 

திருக்குறள் - இறைவன் அடி சேராதார்

திருக்குறள் - இறைவன் அடி சேராதார்


நான் இறைவனை நம்பவில்லை. இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா இல்லையா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது நான் ஏன் இறைவனை வணங்க வேண்டும் என்று நாத்திகவாதிகள் கேட்கலாம். 


இறைவன் இருக்கிறான். அவன் நல்லவன். உயர்ந்தவன். கருணை உள்ளவன். அப்படிப் பட்டவன் நான் ஏன் வந்து அவனை வணங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். இந்த கோஷம் போடுவது, கும்பிடு போடுவது, பல்லைக் காட்டி இளிப்பது என்பதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கு வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம். ஆண்டவனும் இந்த புகழுக்கு அடிமையானவன் தானா. இருக்க முடியாது. அப்படி இருக்க, நான் ஏன் அவனை வணங்க வேண்டும் என்று ஆத்திகவாதிகளும் கேட்கலாம். 



எப்படிப் பார்த்தாலும் வணங்க வேண்டியது இல்லை என்று தான் தோன்றுகிறது. 



வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம். 


பாடல் 


பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_17.html


(click the above link to continue reading)


பிறவிப் = பிறவி என்கின்ற 


பெருங் கடல் = பெரிய கடலை 


நீந்துவர் = நீந்துவர் 


நீந்தார் = நீந்தாதார் 


இறைவன் அடி சேராதார் = இறைவனின் திருவடிகளை சேராதவர்கள் 


இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்கள் இந்த பிறவி என்ற பெரிய கடலை நீந்தி கரை சேர்வார்கள். மற்றவர்கள் நீந்த மாட்டார்கள். 


இனி பரிமேலழகரின் உரையை பார்ப்போம். 


பெருங் கடல்: பிறவியை ஏன் பெரிய கடலுக்கு ஒப்பாக சொன்னார்? பிறந்து, இறந்து, பிறந்து இறந்து முடிவில்லாமல் போய்க் கொண்டே இருப்பதால், அதைக் கடல் என்றார்.   நடுக் கடலில் தத்தளிப்பவனுக்கு கரை எந்தப் பக்கம் என்று தெரியாது. 


நீந்தார்:  கடலுக்குள் விழுந்தாகி விட்டது. நீந்தாவிட்டால் என்ன ஆகும்? கடலுக்குள்ளே அழுந்திச் சாக வேண்டியது தான். நான் நீந்த மாட்டேன் என்று அடம் பிடித்தால், யார்க்கு நட்டம்?


பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்


குறளிலே "நீந்தார் இறைவன் அடி சேராதார்"என்று இருக்கிறது. அப்படியானால் நீந்துபவர் என்ன ஆவார்கள் என்ற கேள்விக்கு குறளில் விடை இல்லை.  "பிறவிப் பெருங்கடல் நீந்துவர்" என்று மொட்டையாக நிற்கிறது. 


பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு எழுதுகிறார். 


சிலருக்கு இலக்கணம் என்றாலே எட்டிக் காயாக இருக்கும். இலக்கணம் படிக்காமல் இலக்கியம் படிக்க முடியாது. இலக்கணம் வேண்டாம் என்றால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், கேள்விக்கு விடை கிடைக்காது. 


இலக்கணமும் படிக்க ஆவல் உள்ளவர்கள் மேலே தொடரலாம். 


"சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்":  அதாவது ஒரு சொல் இன்னொரு சொல்லைக் கூட்டிக் கொண்டு வரும். 


உதாரணமாக:


வந்த என்று சொல்லி நிறுத்தினால் அடுத்து என்ன சொல் வரும்? 


வந்த பையன்

வந்த பெண் 

வந்த மாடு 

என்று ஏதோ ஒரு பெயர்ச் சொல் வர வேண்டும் அல்லவா?  வந்த என்ற சொல்லுக்குப் பின் ஒரு வினை வருமா?


வந்த ஓடு, வந்த நட, வந்த சாப்பிடு என்று கூற முடியாது. 


எனவே வந்த என்பது பெயரெச்சம். பெயர் வர வேண்டும். வராமல் எச்சமாக (மிச்சமாக) நிற்கிறது. 


பொதுவாக, 'அ' என்ற ஈற்றுச் சொல் வந்தால் அது பெயரச்சமாகத்தான் இருக்கும். 


வந்த, சென்ற, நின்ற, ஓடிய, வாடிய (பயிரை கண்ட போதெல்லாம்), 


அது போல் வினையெச்சம் என்று ஒன்று இருக்கிறது. 


வந்து என்ற சொல்லைப் பாருங்கள். அது ஒரு வினையை கூட்டிக் கொண்டு வரும். 


வந்து சென்றான், வந்து நின்றான். வந்து வணங்கினான், வந்து சாப்பிட்டான் 


என்று வினையை கொண்டு வரும். 


வந்து பையன், வந்து பெண், வந்து மாடு, வந்து தலைவர் என்று சொல்ல முடியாது. 


'உ' என்ற ஈற்று எழுத்து வினை எச்சத்தைக் குறிக்கும். 


இங்கே, 


இறைவன் அடி (சேர்ந்தார் ) , நீந்துவர் 

இறைவன் அடி சேராதார், நீந்தார் 


என்று பொருள் கொள்ள வேண்டும். 


'சேர்ந்தார்' என்பது சொல்லெச்சம். 


கடவுள் வாழ்த்து அதிகாரம் முடிந்தது. இதில் ஒரு குறளில் ஒரு புது செய்தி தோன்றியது. சரியா தவறா என்று தெரியவில்லை. 


அதை நாளை பகிர்ந்து கொள்கிறேன். 




Friday, April 16, 2021

திருக்குறள் - தாளை வணங்காத் தலை

திருக்குறள் -  தாளை வணங்காத் தலை


நம் வீட்டில் grinder, mixie என்று பல பொருள்கள் இருக்கும். அவை நன்றாக வேலை செய்தால் சுகம்தான். வேலை செய்யாவிட்டால்? முடிந்த வரை பழுது பார்ப்போம். இல்லை என்றால் அதை கழித்துக்கட்ட வேண்டியது தான். இல்லையா? வேலை செய்யாத ஒன்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது?  அதனால் ஒரு பலனும் இல்லை.


அது போல, நம் உடலிலும் சில கருவிகள் இருக்கின்றன. அவை வேலை செய்யாவிட்டால், அவற்றால் ஒரு பலனும் இல்லை அல்லவா? முடிந்தவரை மருத்துவரிடம் காட்டி சரி செய்ய முயற்சி செய்வோம். இல்லை என்றால் அது பாட்டுக்கு ஒரு மூலையில் இருக்கும். அவற்றால் ஒரு பயனும் இல்லை.


நம் கண், காது, மூக்கு போன்றவற்றின் பலன் இறைவனை வணங்குவதே. அது செய்ய முடியாவிட்டால், அந்த பொறிகளால் ஒரு பயனும் இல்லை என்கிறார். 

கேட்காத காது, பார்க்காத கண் போல இறைவனை வணங்காத தலையால் ஒரு பயனும் இல்லை என்கிறார். 


பாடல் 


கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_16.html


(click the above link to continue reading)


கோளில் = கோள் + இலாத = குறிக்கோள் இல்லாத 

பொறியிற் = பொறிகளால் (கண், காது மூக்கு போன்றவை) 

குணமிலவே  = பயன் இல்லாததைப் போல 

எண்குணத்தான் = எட்டு வகையான குணங்களை கொண்டவனின் 

தாளை = திருவடிகளை 

வணங்காத் தலை = வணங்காத தலை 

இறைவனை வணங்காத தலையால் ஒரு பலனும் இல்லை. 


 இனி பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 



எண் குணங்கள், அதாவது எட்டு குணங்கள் இறைவனுக்கு என்று கூறுகிறார்கள். அவை என்ன ?

1.     தன்வயத்தன் ஆதல், 

2.    தூய உடம்பினன் ஆதல், 

3.    இயற்கை உணர்வினன் ஆதல், 

4.    முற்றும் உணர்தல், 

5.    இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், 

6.    பேரருள் உடைமை, 

7.    முடிவு இல் ஆற்றல் உடைமை, 

8.    வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.


அப்படி என்றால் இறைவனுக்கு எட்டு குணங்கள் மட்டும் தான் உண்டா என்றால் இல்லை. இந்த எட்டு குணங்களை கூர்ந்து நோக்கினால் தெரியும் அதன் அடிப்படை. 


தன்வயத்தன் ஆதல் என்றால் என்ன? தன் வசம் தானே எப்படி ஆக முடியும்? ஒருவன் தன் வசத்தில் இல்லை என்றால் பின் யாருடைய வசத்தில் இருக்கிறான்? தெரியாது.

தூய உடம்பினன் ஆதல். அப்படி என்றால் என்ன? எப்ப பார்த்தாலும் குளித்துக் கொண்டே இருப்பதா? உடம்பில் இருந்து வியர்வை போன்ற கழிப்பு பொருள்கள் வெளியேறாதா? உடம்பினுள் மலம், சலம் இருக்காதா? தெரியாது. 


இப்படி எல்லா குணத்துக்கும் ஒரே அடிப்படை - தெரியாது என்பது தான். இறையவனின் குணங்கள் நமக்குத் தெரியாது என்று சொல்லவே "எண் குணத்தான்" என்றார். 


எண்ணிலாத குணங்களை உடையவன்.


இப்படி சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது என்கிறார். மேலும் விவரம் வேண்டுபவர்கள் சைவ ஆகமங்களை படித்து தெளிந்து கொள்க. 



காணாத கண்ணும், பேசாத நாவும் போல இறைவனின் தாளை வணங்காத தலையும்.


தலை என்று சொன்னது ஒரு உதாரணத்துக்கு அதில் உள்ள கண், காது, மூக்கு, செவி, மூளை என்று எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் தலையில் தானே இருக்கிறது. ஒவ்வொன்றாக சொல்ல முடியாது என்பதால் தலை என்றார். 


வீட்டோடு வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்றால், கதவு, ஜன்னல், அதில் இருந்த கட்டில், மெத்தை, சாமான்கள், துணிமணிகள் என்று எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று அர்த்தம். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. 


தலை இருப்பதின் நோக்கமே வணங்கத்தான். 


நாக்கு இருப்பதின் நோக்கமே அவன் புகழ் பாடத்தான். 


கண் இருப்பதின் நோக்கமே அவனை காணத்தான்..


இப்படி விரித்து பொருள் கொள்க. 


ஒன்பது குறள் படித்து விட்டோம். இன்னும் ஒரு குறள் இருக்கிறது இந்த அதிகாரத்தில். அதை வரும் நாட்களில் சிந்திப்போம். 



Thursday, April 15, 2021

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - பாகம் 2

 

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - பாகம் 2 



பாடல் 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2_15.html

(click the above link to continue reading)


அறவாழி = அறமாகிய கடல்/சக்கரம் 

அந்தணன் = அந்தணன் 

தாள் = திருவடிகளை 

சேர்ந்தார்க்கு = சேர்ந்தவர்களுக்கு 

 அல்லால் = அல்லது , அதாவது சேராதவர்களுக்கு 

பிறவாழி = பிற கடல்/சக்கரம் 

நீந்தல் அரிது = நீங்குவது கடினம் 


இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த பிறவிக் கடலை கடப்பது கடினம்.


இது தான் பொதுவாக சொல்லப்படும் உரை. 


இனி பரிமேலழகரின் ஆழ்ந்த உரையை பார்ப்போம். 


உரை: அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது


உரைக் குறிப்பு: அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)


"பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார்."


இறைவனுக்கு வடிவம் உண்டா? அப்படி என்றால் என்ன வடிவம்?


அறமே இறைவனின் வடிவம் என்கிறார் பரிமேலழகர். வடிவம் என்றால் உடல். இறைவனின் உடல், அல்லது வடிவம் என்பது அறத்தால் ஆனது. 


அப்படி என்றால் ஒருவன் அறத்தோடு மோதுகிறான் என்றால் அவன் இறைவனோடு மோதுகிறான் என்று பொருள். 


நாம் பல புராணங்கள் படித்து இருக்கிறோம். அரக்கர்கள் தவம் செய்து பல வரங்களைப் பெற்று பாவங்கள் பல செய்வார்கள். இறைவன் வந்து அவர்களை அழிப்பான்? காரணம், அறத்தின் மேல் ஒருவன் போர் தொடுக்கிறான் என்றால் அது இறைவனோடு மோதுவதற்குச் சமம். முடிவு நமக்குத் தெரியும். ஒருவன் கூட தப்பிப் பிழைத்தது இல்லை. 

அறக் கடல் = கடவுள். 

பிற ஆழி என்றால் பொருள், இன்பம் என்ற கடல்கள். 


இங்கேதான் ஒரு சிக்கல் வருகிறது.   


ஆழி என்ற சொல்லுக்கு சக்கரம் என்று ஒரு பொருள் உண்டு. அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு, வள்ளுவர் சொன்னது சக்கரம் கையில் உள்ள எங்க சாமியைத்தான். எனவே வள்ளுவர் எங்க ஜாதி என்று ஒரு சிலர் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். 


"'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். "


என்று பரிமேலழகர் உரைக் குறிப்பு எழுதுகிறார்.  அப்படி பொருள் சொன்னால் தவறு என்று பரிமேலழகர் சொல்லவில்லை. அது அவர் நேர்மையை காட்டுகிறது. அப்படியும் பொருள் சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்று கூறி விட்டுப் போகிறார்.  அதை அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அவர் அப்படி உரை சொல்லவில்லை. இருந்தும், நான் இப்படிச் சொல்கிறேன். இது மட்டும் தான் என்று இல்லை. இதற்கு இன்னொரு விளக்கமும் இருக்கிறது. இப்படியும் பொருள் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போகிறார். 


நான் சொன்னதே சரி என்று அவர் அடம் பிடிக்கவில்லை. 


சரி. அடுத்து. 


"அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்"


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது


என்ற குறளில் இறைவனை கடல் என்று குறிப்பிடுகிறார்.  பிற ஆழி என்று பொருளையும் இன்பத்தையும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். இதில், இறைவனின் திருவடியை "புணை" என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். அப்படி குறளில் இல்லை.  எப்படி பரிமேலழகர் இல்லாத ஒன்றை எழுதலாம் என்ற கேள்விக்கு அவர் ஒரு இலக்கணம் சொல்கிறார். 


"இஃது ஏகதேச உருவகம்" 


ஏகதேச உருவகம் என்றால் என்ன. 


ஏகம் என்றால் ஒன்று. தேசம் என்றால் இடம். 


அதாவது இரண்டுக்கு மேற்பட்ட பொருள்களுக்கு உவமை சொல்லும் போது ஒன்றுக்கு சொல்லி, மற்றதுக்கு சொல்லாமல் விட்டால் அதற்கு ஏக தேசம் உவமை என்று பெயர். 

உதாரணம்.


யானை போன்ற தயரதன் இராமனை கட்டித் தழுவினான். 


இதில் தயரதன், இராமன் என்ற இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றன. அதில் தயரதனுக்கு யானையை உதாரணம் சொல்லிவிட்டு, இராமனுக்கு ஒரு உவமையும் சொல்லவில்லை. 


யானை போன்ற தயரதன் புலி போன்ற இராமனை கட்டித் தழுவினான் என்று சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லாமல் விட்டதால், அது ஏக தேசம் உவமை. 


உவமை அணி, உருவக அணி என்று இரண்டு உண்டு. 


அதைப் பற்றியும் கொஞ்சம் புரிந்து கொள்வோம். 


நிலவு போன்ற முகம் 


என்று சொல்லும் போது, 


நிலவு உவமை 

முகம் என்பது உவமிக்கப் படும் பொருள் 

போன்ற என்பது உவம உருபு. 


இதற்கு உவமை அணி என்று பெயர். 


இதில் "போன்ற" என்ற உவம உருபை எடுத்துவிட்டால் 


நிலவு முகம் என்று வரும். 


அதற்கு எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர். "போன்ற" என்ற உவம உருபை எடுத்துக் காட்ட வேண்டி இருப்பதால்,  அது எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.


இதில் உவமையை, உவமேயத்தின் மேல் ஏற்றிச் சொன்னால் அது உருவகம். 


முக நிலவு என்றால் அதற்கு உருவகம் என்று பெயர். 


மூன்று விஷயங்கள் 


உவமை அணி  - நிலவு போன்ற முகம் 

எடுத்துக்காட்டு  உவமை அணி   - நிலவு முகம் 

உருவக அணி - முக நிலவு 


இங்கே, அறம் , பொருள், இன்பத்தை கடலுக்கு உவமானம் சொல்லி விட்டு, இறைவனின் திருவடியை "புணை" அல்லது "தெப்பம்" என்று சொல்லாமல் விட்டதால் அது ஏக தேச உருவகம். 


கடலை கடக்க முடியாது என்று கூறியதால், இறைவனின் தாள் "புணை" அல்லது "தெப்பம்" என்பது வருவிக்கப் பட்டது. 


இலக்கியம் படிக்க இலக்கணம் எவ்வளவு இன்றியமையாதது என்பது புரிகிறது அல்லவா?
















Wednesday, April 14, 2021

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

திருக்குறள் - தாள்சேர்ந்தார்க்கு அல்லால்


ஒரு நூலுக்கு பொருள் சொல்லும் போது அல்லது உரை எழுதும் போது அந்த மூல நூல் ஆசிரியன் என்ன நினைத்து சொன்னான் என்று அறிந்து உரை செய்ய வேண்டும். மாறாக, உரை செய்பவன் தன் கருத்தை மூல நூலின் கருத்தின் மேல் திணிக்கக் கூடாது. அது மூல நூல் ஆசிரியனுக்கும், வாசகனுக்கும் செய்யும் துரோகம் என்றே நான் கருதுகிறேன். 


பின்னாளில் வந்த, சமயம் சார்ந்த நூல் ஆசிரியர்கள் திருவள்ளுவர் தங்கள் சமயக் கருத்துக்களைத் தான் சொல்கிறார் என்று தங்கள் கருத்துகளை வலிந்து திணிக்கிறார்கள். குறளில் உள்ள சொற்களுக்கும், அவர்கள் சொல்லும் உரைக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. 


தங்கள் சமயத்தை வளர்க வேண்டி, உயர்ந்த நூல்களின் கருத்தை சிதைத்து பாவம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது. 


இதற்கு மத்தியில் மிக மிக நடு நிலையாக நின்று, உரை செய்கிறார் பரிமேலழகர். அவரையும் அந்தணர் என்று கூறி அவரின் உரைக்கும் ஜாதி சாயம் பூசுபவர்களும் இருக்கிறார்கள். 


பரிமேலழகரின் நேர்மையான உரைக்கு இந்த குறளுக்கு அவர் உரை செய்த விதம் ஒரு சான்று. 


பாடல் 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_14.html


(click the above link to continue reading)


அறவாழி = அறமாகிய கடல்/சக்கரம் 

அந்தணன் = அந்தணன் 

தாள் = திருவடிகளை 

சேர்ந்தார்க்கு = சேர்ந்தவர்களுக்கு 

 அல்லால் = அல்லது , அதாவது சேராதவர்களுக்கு 

பிறவாழி = பிற கடல்/சக்கரம் 

நீந்தல் அரிது = நீங்குவது கடினம் 


இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த பிறவிக் கடலை கடப்பது கடினம்.


இது தான் பொதுவாக சொல்லப்படும் உரை. 


இனி பரிமேலழகரின் ஆழ்ந்த உரையை பார்ப்போம். 


உரை: அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது


உரைக் குறிப்பு: அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)


ஆழி என்ற சொல்லுக்கு கடல் என்றும் சக்கரம் என்று பொருள் உண்டு. இவர் கடல் என்று பொருள் கொள்கிறார். 


அறவாழி = அறக்கடலாகிய 


அறத்துக்கு பல கூறுகள் உண்டு. அதன் ஆழம் காண முடியாது. எனவே, கடவுளை அறக் கடல் என்கிறார்.


சரி, அப்படி என்றால் "பிறவாழி" என்பதற்கு என்ன அர்த்தம்?


மொத்தமே மூன்று தான் உண்டு. அறம், பொருள், இன்பம். அறவாழி என்று அறத்தைக் கூறி விட்டதால், "பிற" என்பது பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கும் என்கிறார். 


அதாவது, இறைவனின் திருவடியை சேராவிட்டால், பொருளும் இன்பமுமாகிய கடல்களையும் கடக்க முடியாது என்கிறார். 


பொருளுக்கும் இன்பத்துக்கும் அறம் தான் அடிப்படை. 


யோசித்துப் பார்ப்போம். நம் நடைமுறை, நம் சட்ட திட்டங்கள் எல்லாம் இதன் அடிப்படையில் தான் அமைந்து இருக்கின்றன. 


பொருள் தானே முக்கியம் என்றால் களவின் மூலம் பொருள் செய்தால் என்ன? கொள்ளை அடித்தால் என்ன. பிறரை ஏமாற்றி பொருள் பறித்தால் என்ன? தவறு என்று தெரிகிறது அல்லவா? சட்டமும் அதைத்தான் சொல்கிறது. சட்டம் தெரியாவிட்டால் கூட, அது தவறு என்று நமக்குத் தெரிகிறது அல்லவா?  அது அறம் பிழைத்த செயல். 


இன்பம் தானே முக்கியம்.  அது யாரிடம் இருந்து வந்தால் என்ன? ஏன் மனைவி/கணவன் உறவை பெரிது படுத்த வேண்டும். எனக்கு வேண்டியது இன்பம். அதை நான் யாரிடமும் அனுபவிப்பேன் என்று கூற முடியாது அல்லவா. 


எனவே, பொருளுக்கும் , இன்பத்துக்கும் அறம் தான் அடிப்படை. அதை புரிந்து கொள்ள வேண்டும். 


அறவழியில் நிற்காவிட்டால், பொருளும் இன்பமும் கூட அனுபவிக்க முடியாது. 


அறத்தின் மூலம் இறைவன்.  முந்தைய குறளில் படித்தோம் அல்லவா "ஐந்தவித்தானது குறை தீர் ஒழுக்க நெறி" என்று. 


ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், மீதியை அடுத்து வரும் ப்ளாகுகளில் காண்போம்.