Thursday, May 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தீதில் நன்னெறி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - தீதில் நன்னெறி 


உலகமே மின் அணு இயலால் சூழப் பட்டு இருக்கிறது. நம்மை அறியாமலேயே இந்த மின் வலை நம்மை சுற்றி பின்னப் பட்டு இருக்கிறது. 


நல்லாரோடு சேர வேண்டும், தீயவர்களை காண்பதும் தீது, தீயவர்களோடு பழகுவதும் தீது, அவர்களைப் பற்றி சிந்திப்பது கூட தீது என்று சொல்லப் பட்டது. 


இப்போதெல்லாம் நாம் தீயவர்களைத் தேடிப் போக வேண்டாம். அவர்கள் நம் வீட்டுக்குள், நாம் அழையாமலேயே வந்து விடுகிறார்கள். தீயவற்றை நம் மனதில், நம் மூளையில் விதைத்து விட்டுச் செல்கிறார்கள். 


டிவி. எங்கோ நடக்கும் தீய செயல்கள் எல்லாம் நம் வீட்டில் கொண்டு வந்து கொட்டுகிறது. விலாவாரியாக, நொடிக்கு நொடி அந்த தீய செயல்களை நம் வீட்டில் அரங்கேற்றிக் காட்டுகிறது. எங்கோ வெடித்த வெடி, நம் வீட்டு ஹாலில் நடக்கிறது. எங்கோ நடந்த கொலை, நம் கண் முன் அரங்கேறுகிறது.  அத்தனை குப்பைகளையும் வாரிக் கொண்டு வந்து நம் வீட்டில் கொட்டி விட்டுப் போகிறது. நம்மை அறியாமலேயே அவற்றை நாம் உள் வாங்குகிறோம்.


whatsapp. எத்தனையோ குழுக்களில் நாம் உறுப்பினராக இருப்போம். அறிவிலிகள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், அறிவியல் கண்ணோட்டம் இல்லாதவர்கள், மூட நம்பிக்கை மலிந்தவர்கள், மற்றவர்கள் மேல் பொறாமையும், வெறுப்பும் கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் நாளும் தங்கள் எண்ணங்களை இந்த குழுக்களில் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவற்றை படித்து படித்து நம் மனத்திலும் அந்த களங்கத்தின் சுவடுகள் படியத் தொடங்கும். 


கணணி (computer), மடிக் கணணி (laptop) இவற்றின் மூலம் நம்மிடம் வந்து சேரும் வக்கிரங்கள் கணக்கில் அடங்காதவை. 


தீயவர்களின் எண்ணங்கள், நாம் கேட்காமலேயே வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது நம் வீட்டில், நம் உள்ளங் கையில், நம் மடியில். சுவாசிக்கும் காற்று தூய்மையாக இல்லாவிட்டால், நாம் அந்த நச்சுக் காற்றை சுவாசிப்போம். நாம் விருபுகிறோமோ இல்லையோ, அந்த நசுக் காற்று நம் உடலை பாதிக்கும். அது போல இந்த நஞ்சுகள் நம் மனதை பாதிக்கும். 


இவர்களை விட்டு விலகி நிற்கிறேன். உன் பற்றே பற்று என்கிறார் ஆண்டவனிடம் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்

நீதி யாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்

பேதை மாமண வாளன்றன் பித்தனே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_6.html


(please click the above link to continue reading)



தீதில் = தீமை இல்லாத 


நன்னெறி = நல்ல வழிகளில் 


நிற்க அல்லாது = நிற்க முடியாமல் 


செய் நீதி யாரொடும் = நல்ல வழியில் நிற்க முடியாமல் தீய வழியில் செல்கின்ற அவர்களோடு 


கூடுவ தில்லையான் = சேர்வது இல்லை யான் 


ஆதி = முதல், தொடக்கம்  


ஆய = ஆன 


அரங்கன் = திருவரங்கன் 

அந் தாமரைப் = தாமரை மலரில் வசிக்கும் 


பேதை = பெண் (திருமகள்) 


மாமண வாளன்றன் = பெரிய, சிறந்த மணவாளன் (திருமால்) 


பித்தனே = அவனுக்கு நான் பித்தனே. அவன் மேல் பைத்தியமாக இருக்கிறேன் 


தீயவற்றை விட்டால்தான் நல்லவற்றைப் பற்ற முடியும். 


நாளும் தீமைகளோடு பழகி, அதில் ஒரு ஆர்வமும், உருசியும் வந்து விடுகிறது. பின், அது தீமை என்று கூட நமக்குத் தெரிவதில்லை. 


தேவையல்லாத குழுக்களில் இருந்து விலகுங்கள்.


தேவை இல்லாத குப்பைகளை டிவியில் பார்க்காதீர்கள். 


கணனியில் நல்லவற்றை பாருங்கள். கேளுங்கள்.


தீயவை விலக, நல்லவை தானே வந்து சேரும். 


வாழ்த்துக்கள். 


Wednesday, May 5, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - ஓரைந்தும் காப்பான்

திருக்குறள் - நீத்தார் பெருமை - ஓரைந்தும் காப்பான்


ஒரு வண்டியில் மாட்டினை கட்டி இழுக்க வைக்கலாம். குதிரையை கட்டலாம். கழுதையை கூட கட்டலாம். 


ஐந்து மதம் கொண்ட யானைகளை கட்டி வண்டி ஓட்ட முடியுமா? ஒரு மதம் கொண்ட யானையை கட்டி இழுக்க வைப்பதே கடினம். இதில் ஐந்து மதம் கொண்ட யானைகள் என்றால் முடியுமா? ஒன்றை சரி பண்ணி ஓட வைப்பதற்குள், மத்த நாலு யானைகளும் நாலு பக்கம் பியித்து கொண்டு ஓடும். 


ஓடினாலாவது பரவாயில்லை, வண்டியையையும் அதை ஓட்டுபவனையும் போட்டு மிதித்து துவம்சம் செய்து விட்டு ஓடி விடும்.


அந்த ஐந்து மதம் கொண்ட யானைகள் தான் நம் ஐந்து புலன்களும். ஒவ்வொன்றும் எங்கே நாம் சொல்வதை கேட்கின்றன? அததது பாட்டுக்கு நம்மை அவை விரும்பும் பக்கம் எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. 


மருத்துவர் சொல்கிறார்..."சர்க்கரை வியாதி முற்றி விட்டது...இனிப்பை கையில் தொடவே கூடாது" என்று. முடிகிறதா? இலட்டை பார்த்தவுடன் எச்சில் ஊறுகிறது. "ஒரே ஒரு இலட்டு தானே...வேணும்னா இன்னொரு இன்சுலின் மாத்திரை போட்டுக்கலாம்" என்று தின்ன ஓடுகிறது. 


இந்த புலன்களை எப்படித் தான் அடக்குவது? 


அறிவு என்ற அங்குசத்தால் அடக்க வேண்டும். 


"அட போங்க சார், அறிவு ஆயிரம் சொன்னாலும் நம்ம புலன்கள் எங்கே கேக்குது..." என்று நீங்கள் கூறலாம். அதையும் யோசித்து வள்ளுவர் வழி சொல்கிறார். 


பாடல் 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_5.html


(please click the above link to continue reading)


உரனென்னும்  = உறுதி, திண்மை என்ற 


தோட்டியான் = தோட்டி என்றால் அங்குசம். யானையை அடக்கும் அங்குசம். அங்குசத்தை உடையவன் 


ஓரைந்தும் = புலன்கள் ஐந்தையும் 


காப்பான் = தவறான வழியில் செல்லாமல் காப்பவன் 


வரனென்னும் = உயர்ந்தது என்று சொல்லப்படுகிற 


வைப்பிற்கோர் = வைக்கும் இடத்துக்கு ஒரு 


வித்து = விதை 



இனி பரிமேலழகர் உரையை பார்ப்போம். 



முதலாவது, குறளில் யானை என்ற சொல்லே இல்லை. யானைய அடக்கும் என்று எப்படி சொல்லலாம்?  அதற்கு ஏகதேச உருவக அணி என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒன்றை சொல்லி (ஏகம் என்றால் ஒன்று) மற்றதை சொல்லாமல் விடுவது. 



இன்றைய தலைமுறைக்கு சொல்வது என்றால் திரைக் கதை என்று சொல்லலாம். "முருகனுக்கு ஏகப்பட்ட சொத்து, வீடு, வாசல், நிலம், நீச்சு, ஆள், அம்பு, சேனை...." என்று சொல்லிக் கொண்டே போகலாம். மாறாக, சினிமாவில் காட்டுவது என்றால் முருகன் விலை உயர்ந்த ஆடை அணிந்து,  விலை மதிப்புள்ள ஒரு காரில் இருந்து இறங்கி வருவதை காட்டினால் போதும்...அவன் பெரிய பணக்காரன் என்று நாம் அறிந்து கொள்கிறோம் அல்லவா. 



அது போல, அங்குசத்தால் அடக்கி என்று கூறியதன் மூலம், புலன்களை யானைக்கு ஒப்பிடுகிறார் என்று புரிந்து கொள்ள முடியும். அங்குசத்தை வைத்து எதை அடக்குவார்கள்? பூனையையா அடுக்குவார்கள்? 



இரண்டாவது, அந்த அங்குசம் வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். சும்மா ஒரு அட்டையில் அங்குசம் செய்து வைத்துக் கொண்டு யானையை அடக்க முடியாது. அது போல அறிவு மட்டும் இருந்தால் போதாது. அது வலிமை உள்ளதாக, உறுதி உள்ளதாக இருக்க வேண்டும். "திரண்" என்ற சொல்லை வள்ளுவர் பயன் படுத்துகிறார்.


மூன்றாவது, "ஓரைந்தும் காப்பான்"...ஏதோ ஒன்றிரண்டை காப்பாற்றினால் போதாது, ஐந்து புலன்களையும் காக்க வேண்டும். ஒரு சிலருக்கு இனிப்பு பிடிக்காது. (அப்படியும் சிலர் இருக்கிறார்கள்). அதற்காக அவர்கள் அனைத்து புலன்களையும் வென்று விட்டதாக அர்த்தம் அல்ல. 



நான்காவது, "வரன் எனும் வைப்பு". உயர்ந்த இடத்தில் என்று பொருள். எது  உயர்ந்த இடம்? வீடு பேறு. அது தான் அனைத்திலும் உயர்ந்த இடம். 



ஐந்தாவது, "வித்து". விதை. எல்லா விதையும் எல்லா இடத்திலும் முளைக்காது. காஷ்மீரில் விளைவது கன்யாகுமரியில் விளையாது. மலையில் விளைவது, மற்ற இடத்தில் விளையாது. 


அது போல, வீடு பேறு என்று சொல்லப் படும் அங்கு விளையும் விதை இந்த உரன் என்ற தோட்டியால் ஓரைந்து புலன்களையும் கட்டுப் படுத்துபவன். இந்த விதை அங்குதான் முளைக்கும். 


அப்படி என்றால் என்ன அர்த்தம்?  இங்கு முளைக்காது என்று அர்த்தம். அவன், மீண்டும் இங்கு வந்து பிறக்க மாட்டான் என்று அர்த்தம். 


எப்படி சொல்கிறார் பாருங்கள். 


பிறப்பு அறுத்து வீடு பெறுவான் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார். 


வீடு பேறு அடைகிறோமோ இல்லையோ, குறள் படிப்பதன் மூலம் அழகாக பேசவும், எழுதவும் படித்துக் கொள்ளல்லாம். 


உறுதியான அறிவைக் கொண்டு புலன்களை கட்டுப் படுத்தினால் வீடு பேறு கிட்டும் என்பது குறளின் சாரம். 


கிட்டட்டும். 


(சிலர் வற்புறுத்திக் கேட்டாதால் ஒரே ஒரு முறை என் e mail id: rethin@hotmil.com)






Tuesday, May 4, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - அறம் பூண்டார் பெருமை

 திருக்குறள் - நீத்தார் பெருமை - அறம் பூண்டார் பெருமை 


இந்த வாழ்கை இன்பமானதா? ஆம், என்றால் பின் எதற்கு வீடு பேறு? இங்கேயே இருக்கலாம். இறந்தாலும் மீண்டும் இங்கேயே வந்து பிறக்க வரம் கேட்கலாமே. 


இல்லை, இந்த வாழக்கை இன்பமானது அல்ல. துன்பம் நிறைந்தது என்று நினைத்தால், எதற்கு வாழ வேண்டும்?


சில சமயம் இன்பமாக இருக்கிறது. சில சமயம் துன்பமாக இருக்கிறது. மாறாக, வீடு பேறு, அது இன்பமானது என்று சொல்கிறார்கள் ஆனால் அது நமக்குத் தெரியாது. எனவே, தெரியாத ஒன்றிற்காக, தெரிந்த ஒன்றை விடுவதா என்ற குழப்பம் இருக்கும். 


இதில் நிறைய குழப்பம் இருக்கிறது. 


இந்த இரண்டின் தன்மைகளை தெரிந்து கொண்டு, வீடு பேறு அடைய துறவறம் மேற்கொண்டவர்களின் பெருமையே பெரிய பெருமை என்கிறார். 


பாடல் 



இருமை ஆராய்ந்து அறிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_4.html


(Please click the above link to continue reading)


இருமை  = இரண்டின் 


வகைதெரிந்து = தன்மை தெரிந்து கொண்டு 


ஈண்டு = இங்கு 


அறம் பூண்டார் = அறத்தினை மேற் கொண்டவர்களின் 


பெருமை  = பெருமையே 


பிறங்கிற்று உலகு = பெரியது உலகில் 


இருமை என்றால் என்ன என்று பரிமேலழகர் கூறுகிறார். நாம் நினைப்போம் இருமை என்றால் இரண்டின் தன்மை என்று...அதாவது இன்பம், துன்பம்; இரவு பகல்; பாவம் புண்ணியம்; நல்லது கெட்டது என்று. அப்படி அல்ல 


இருமை என்றால் "பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை"  என்று உரை செய்கிறார். 


பிறப்பினால் வரும் துன்பத்தையும், வீடு பேற்றினால் வரும் இன்பத்தையும் 


வகைதெரிந்து =  ஆராய்ந்து அறிந்து


சட்டென்று புரியாது. எது இன்பம், எது துன்பம் என்று தெரியாது. அதை ஆராய்ந்து அறிந்து. 


நம்மில் பல பேருக்கு எது சரி எது தவறு என்று தெரியும். தெரிந்தும், சரியானதை செய்யாமல், தவறானதை செய்து கொண்டிருப்போம். 


அப்படி இல்லாமல், 


"ஈண்டுஅறம் பூண்டார்" - ஆராய்ந்து அறிந்து பின் அவ்வழியே செல்ல அற வழியை மேற்கொண்டாறது. தெரிந்தால் மட்டும் போதாது, அந்த வழியிலேயே செல்ல வேண்டும். 


அது என்ன அறம் என்று வள்ளுவர் சொல்லவில்லை. சும்மா அறம் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். பரிமேலழகர் உரையில் "துறவறத்தில்" ஈடு பட்டார் என்று விளக்கம் செய்கிறார். 


"பெருமை பிறங்கிற்று உலகு". அப்படி வீடு பேறு நோக்கி துறவறத்தை மேற்கொண்டவர்களின் பெருமையே உயர்ந்தது என்கிறார். 


இதில் "ஏகாரம்" விகாரத்தால் தொக்கியது. 


இராமன் வென்றான் என்றால், இராமன் வென்றான் என்று தெரியும். இராமன் மட்டும் தான் வென்றானா என்று தெரியாது. 


இராமனே வென்றான் என்றால் அவன் மட்டும் தான் வென்றான் என்று பொருள் சொல்ல முடியும். 


ஆதி பகவன் முதற்றே உலகு என்று கூறினார் போல. அவர் மட்டும் தான் முதல். 


அது போல "பெருமையே பிறங்கிற்று உலகு" என்று ஒரு "யே" சேர்த்து இருக்க வேண்டும். அது தொக்கி (மறைந்து) நிற்கிறது என்று உரை செய்கிறார். 


நம் சமுதாயம் யாருக்கு முதலிடம் கொடுத்தது?


பணக்காரனுக்கா, படித்தவனுக்கா என்றால் படித்தவனுக்கே. 


படித்தவனுக்கா, ஒழுக்கம் நிறைந்தவனுக்காக என்று கேட்டால் ஒழுக்கம் உள்ளவேனுக்கே. இராவணன் மெத்தப் படித்தவன். பெரிய செல்வந்தன். ஒழுக்கம் இல்லை என்றால் அவனை நம் உலகம் கொண்டாடாது. 


பணக்காரன், படித்தவன், ஒழுக்கம் உடையவன், அரசன், என்று எத்தனை பேரைக் கொண்டு வந்து வைத்தாலும், எல்லோரிலும் பெரியவன் ஒரு துறவியே என்று நம் சமுதாயம் கொண்டாடியது. 


நம் சமுதாயம் மட்டும் அல்ல, அத்தனை நாடும், மதமும், சமூகங்களும் துறவிக்குத் தான் முதலிடம் தந்து வந்திருக்கின்றன. 


சில பேர் வாழ்கை வெறுத்துப் போய் துறவி ஆவார்கள், சில பேர் துறவில் உள்ள மரியாதைக்காக துறவு மேற்கொள்வார்கள் .


அதெல்லாம் வள்ளுவர் கணக்கில் சேர்க்கவில்லை. 


பிறவி வீடு பேறு இந்த இரண்டின் துன்ப இன்பங்களை ஆராய்ந்து அறிந்து, வீடு பேற்றுக்கான துறவறத்தை மேற்கொண்டவர்களையே துறவி என்று வள்ளுவர் கொள்கிறார். 


எனக்கு சர்க்கரை வியாதி வந்ததால் நான் சர்க்கரையை விட்டு விட்டேன். அதற்குப் பெயர்  "சர்க்கரையை துறந்து விடுதல்" அல்ல. 


ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவின் காரணமாக துறவு மேற்கொள்ள வேண்டும். 


எவ்வளவு நுணுக்கமான குறள்....






Monday, May 3, 2021

திருக்குறள் - துறந்தார் பெருமை

திருக்குறள் - துறந்தார் பெருமை 


திருவள்ளுவர் உயர்ந்த விடயங்களை, மிக ஆழமாகவும் அதே சமயம் மிக சுருக்கமாகவும் சொல்லும் இயல்பு உடையவர். அவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமா? 


இருக்கிறது என்று சில இடங்களில் தொட்டுக் காட்டுவார். அப்படி தொட்டுக் காட்டும் இடங்களில் இந்தக் குறளும் ஒன்று. 


துறப்பது கடினம். அப்படி துறந்தவர்களின் பெருமை எவ்வளவு பெரியது என்று கேட்டால் எப்படி சொல்லுவது? அதை எப்படி அளப்பது? மலை அளவு பெரியது...வானம் போல உயர்ந்தது என்று சொல்லலமா என்று யோசிப்போம். 


வள்ளுவர் சொல்கிறார் "துறந்தார் பெருமை எவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியும். அது எவ்வளவு என்றால் இதுவரை மொத்தம் இந்த உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு" என்கிறார். 


"நீ போய் இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுத்துக் கொண்டு வா. அந்த எண் எவ்வளவு பெரியதோ அதை விட பெரியது துறந்தார் பெருமை" என்று இடக்கு மடக்காக கேட்பவர்களுக்கு அவர்கள் வழியிலேயே பதில் சொல்கிறார். 


பாடல் 


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_3.html


Please click the above link to continue reading


துறந்தார் = முற்றும் துறந்தவர்கள் 


பெருமை = பெருமை, புகழ் 


துணைக்கூறின் = எத்துணை என்று சொல்ல வேண்டும் என்றால் 

வையத்து = உலகில் 


இறந்தாரை = இதுவரை இறந்தவர்களின் 


எண்ணிக்கொண் டற்று. = கணக்கு எடுத்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய  எண் வருமோ அந்த அளவு 


எண்ணி எடுக்க முடியுமா? முடியாது என்பதால், துறந்தவர்களின் பெருமையும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.  அது கணக்கில் அடங்காதது. 


சின்னதாக ஒரு புன்னகையை வரவழைக்கும் குறள். 


சரிதானே?



Sunday, May 2, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 2

 

திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 2

இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1.html


பாடல் 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2.html


(please click the above link to continue reading)



ஒழுக்கத்து நீத்தார் = ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது 

பெருமை = பெருமை 

விழுப்பத்து வேண்டும் = பெருமையை விரும்பும், உயர்ந்தவற்றை விரும்பும் 

பனுவல் = நூல்களின் 

துணிவு. = முடிவு 


ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது பெருமையே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று உயர்ந்தவற்றைப் பற்றி பேசும் அனைத்து நூல்களும் உறுதியாகச் சொல்கின்றன. 


பார்க்க மிக சாதாரண குறள் போல் தெரியும். 


அதற்கு பரிமேல் அழகர் செய்யும் உரை, நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 


"ஒழுக்கத்து நீத்தார்" - என்றால் என்ன? ஒழுக்கத்தை விட்டு நீங்கியவர்கள் என்று பொருள் கொண்டால் விபரீதமாகிவிடும். ஒழுக்கம் இல்லாமல் இருப்பவர்கள் என்று பொருள் வந்து விடும். அது தவறு. 


பரிமேல் அழகர் கூறுகிறார் "தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை" என்று. 


மேலும் 


"தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக"


என்று உரை செய்கிறார். 


இங்கே நாம் நிறுத்தி, இதை ஆழுந்து புரிந்து கொள்ள வேண்டும். 


வர்ணம், நிலை என்பது பற்றி முன்பும் பல முறை சிந்தித்து இருக்கிறோம். 


வர்ணம் என்பது - சூத்திரன், வைசியன், சத்ரியன், அந்தணன் என்ற நான்கு. 


நிலை என்பது - பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற நான்கு. 


இதில் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வர்ணத்திலும், ஏதோ ஒரு நிலையிலும் இருப்போம். அந்த வர்ணத்துக்கும், நிலைக்கும் சொல்லப்பட்ட ஒழுக்கம் என்ன என்பதை அறிந்து அதை கடை பிடிக்க வேண்டும். 


ஒரே ஒரு உதாரணம் பார்போம். மீதியை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். 


பிரம்மச்சாரி, சத்ரியன் என்றால் அவன் அரச நீதி, போர் கலை இவற்றை கற்க வேண்டும் என்பது அவனுக்கு விதித்த ஒழுக்கம். 


இப்படி ஒவ்வொரு வர்ணத்துக்கும், நிலைக்கும் உரிய ஒழுக்கத்தை சொல்லிக் கொண்டே போகலாம். 


இந்த ஒழுக நிலைகளில் நின்று பின் அவற்றை விட்டும் நீங்க வேண்டும். 


அப்படி நீங்கினால் என்ன ஆகும் என்று பரிமேலழகர் கூறுகிறார்.  அவர் சொல்லாவிட்டால், நமக்கு இது ஒரு காலத்திலும் புரியாது....


"

உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக 

அறம் வளரும்; 

அறம் வளரப் பாவம் தேயும்; 

பாவம் தேய அறியாமை நீங்கும் ; 

அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; 

அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; 

அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; 

அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். 

ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க.

"


அவரவர் தங்கள் ஒழுக்கங்களை தவறாது கடை பிடித்தால் அறம் வளரும்.  அறம் வளராமல் போவதற்கு காரணம், யாரும் தங்களுக்கு உரிய ஒழுக்கங்களை கடை பிடிக்காமல் இருப்பது தான். ஒழுக்கம் தவறும் போது அறம் தேய்கிறது. 


அறம் வளர்ந்தால் பாவம் தேயும்.  அற வழியில் நிற்கும் போது, பாவம் செய்வது நிகழாமல் போகும். 


பாவம் நீங்கினால், அறியாமை நீங்கும். 


அறியாமை நீங்கினால் எது நிரந்தரமானது, எது நிலையற்றது என்ற அறிவு தோன்றும். நிலை இல்லாதவற்றை நிலை என்று நினைத்து அவற்றின் பின்னே போகிறோம். செல்வம், இளமை இதெல்லாம் நிலையானது என்று நினைத்து அவற்றின் பின்னே போகிறோம். சோப்பு குமிழியை துரத்தும் குழந்தைகளைப் போல. 


அந்த அறிவு தோன்றினால், இம்மை மறுமை இவற்றில் உண்டாகும் இன்பங்களின் மேல் உள்ள பற்றும், துன்பத்தின் மேல் உள்ள வெறுப்பும் போகும். மேலும், பிறவியினால் வரும் துன்பங்களும் தெரிய வரும். 


இம்மை, மறுமை, பிறவித் துன்பங்கள் போன்றவற்றின் உண்மயான நிலை தோன்றிய பின், அவற்றில் இருந்து விடுபட்டு வீடு பேறு அடைய வேண்டும் என்ற ஆசை வரும். 


இங்கு உள்ளதை எல்லாம் விட்டு விட்டு வா, வீடு பேறு தருகிறேன் என்றால் யார் போவார்கள். நாம் இந்த இன்பங்களை மிக விரும்புகிறோம். அறியாமை நீங்கினால் தான் வீடு பேற்றின் மேல் ஆசை வரும். 


வீடு பேறு அடைய ஆசை வந்தால், அதற்கான யோக முயற்சிகள் போன்றவை செய்யத் தோன்றும்.  அது மட்டும், வீடு பேறுக்கு உதாவத பயன் இல் முயற்சிகளை விட்டு விடத் தோன்றும். (whatsapp செய்திகளை படிப்பது போன்றவை). இருக்கும் ஒவ்வொரு நொடியும் வீடு பேறு அடைவதற்கு முயற்சி செய்வோம். 


அவ்வாறு யோக முயற்சியில் ஈடு படும் போது, நான் எனது என்ற அக புற பற்றுகளை விட்டு விடுவோம். 


ஒரு escalator ல் போவது போல, ஒரு லிப்ட் ல் போவது போல, மேலே ஏறி நிற்க வேண்டும். அவ்வளவு தான். அது நம்மை கொண்டு சேர்த்து விடுவது போல, நமக்கு உரிய ஒழுக்கங்களை நாம் கடைபிடித்தாலே வீடு பேற்றினை அடைந்து விடுவோம். 


ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அந்த ஊருக்குப் போகும் வண்டியில் ஏறி உட்கார்ந்தால் போதும். அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்து விடும். 


அது போல, தத்தமக்கு உரிய ஒழுக்கங்களை கடை பிடித்தாலே வீடு பேறு என்ற ஊருக்குப் போய் சேர்ந்து விடுவோம். 


பனுவல் என்றால் நூல். உலகில் உள்ள பல்வேறுபட்ட நூல்களும் இதைத்தான் சொல்கின்றன என்கிறார். 


ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தார் கட்டாயம் வீடு பேறு அடைவார் என்பதால் அவருடைய பெருமையே அனைத்திலும் உயர்ந்தது என்கிறார். 


வள்ளுவரும், பரிமேலழகரும் சொல்ல வந்த செய்தியை முழுமையாக சொல்லி விட்டேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. 


சரியாக புரியவில்லை என்றால், உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த வரை மேலும் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன். 











Saturday, May 1, 2021

நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு

 

நல்வழி - விண்டாரைக்  கொண்டாடும் வீடு 



தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.

வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.

அது எல்லாவற்றிலும் பெரிய வலி. 

அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?

இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.

பாடல்
 

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post.html

(pl click the above link to continue reading)



இடும்பைக்கு = துன்பத்திற்கு

இடும்பை = இட்டு  வைக்கும் பை. இந்த உடம்பு என்பது துன்பங்களால் நிறைந்த பை. 

இயலுடம்பி தன்றே = இயல்பான இந்த உடல் அல்லவா ?

இடும்பொய்யை = இந்த உடம்பில் நிறைய பொய்களை இட்டு வைத்து இருக்கிறோம். அவற்றை 

மெய்யென் றிராதே = மெய் என்று இருக்காதே

இடுங் = இடுங்கள். தானம் இடுங்கள்

கடுக = விரைந்து. உடனே

உண்டாயி னுண்டாகும் = அந்த தானம் செய்யும் குணம் உங்களுக்கு உண்டானால், உங்களுக்கு உண்டாகும். எது ?

ஊழிற் பெருவலிநோய் = விதியால் வரும் பெரிய வலியான நோய். அது என்ன நோய்?  மரணம் என்கின்ற நோய்.

விண்டாரைக் = வென்றவர்கள், அதை விட்டு விலகியவர்கள்

கொண்டாடும் வீடு = கொண்டாடும் வீடு பேறு உங்களுக்கு உண்டாகும்.

தமிழ் எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள்

இடும்பை = துன்பம்
இடும் பை = இட்டு வைக்கும் பை
இடும் பொய்யை = பொய்யை இட்டு வைக்கும் 
இடுங்கள் = தானம் இடுங்கள் 

உண்டாயின் உண்டாகும் = தானம் செய்யும் குணம் உண்டானால் வீடு பேறு  உண்டாகும் 

தானம் இடுங்கள். மரண வலியை வெல்லுங்கள். 


தானம் செய்தால் மரணம் வராதா?

வரும். மரணம் வரும்.  ஆனால், அந்த மரண தருணத்திலும் "இருந்த வரை நிறைய பேருக்கு நல்லது செய்தோம். நம்மால் நாலு பேர் மகிழ்ந்தார்கள். சில பேர் கண்ணீரையாவது துடைத்தேன்" என்ற திருப்தி இருக்கும், மனதில் ஒரு நிம்மதி இருக்கும், ஒரு சாந்தி பிறக்கும். 

இல்லை என்றால், "வாழ் நாள் எல்லாம் என்ன செய்தேன்? என்னால் யாருக்கு என்ன பயன். பணம் சேர்த்தேன், கொஞ்சம் செலவழித்தேன், மீதி எல்லாம் சொத்தாக அங்கங்கே இருக்கிறது...இதுக்கா இந்தப் பாடு பட்டேன்...காலம் எல்லாம் இப்படி வீணாகி விட்டதே " என்று மரண வலியோடு மன வலியும் சேர்ந்து கொள்ளும். 

சாகும் போதாவது சந்தோஷமாக இருக்க வேண்டாமா? 

தானம் செய்யுங்கள்...விண்டாரைக் கொண்டாடும் வீடு உங்களையும் கொண்டாடும். 

திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 1

 திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 1 

ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பரிமேலழகர் ஒரு அதிகாரப் பாயிரம் சொல்லுவார். அதாவது, அந்த அதிகாரம் எதைப் பற்றியது, ஏன் அந்த அதிகாரம் அந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான காரணம் சொல்லி, பின் உரை எழதப் புகுவார். 


யோசித்துப் பாருங்கள். மொத்தம் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தை மூன்றாவதாக ஏன் வைக்க வேண்டும்? அதற்கு ஒரு காரணம் இருக்கிறதா என்று ஆராய்ந்து அதை கூறுவார். 


இங்கே, 


"அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது."


என்று கூறுகிறார். 


இந்த அதிகாரம் "முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல்" என்கிறார். எனவே, இந்த அதிகாரத்தில் என்ன படிக்கப் போகிறோம் என்பது தெளிவாகி விட்டது.  


யார் அந்த முற்றத் துறந்த முனிவர் என்றால் "அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் " என்று உரை எழுகிறார்.  உள்ளது உள்ளபடி கூற அவரால்தான் முடியும். காசுக்காகவோ, புகழுக்காகவோ சொல்ல மாட்டார்.  உள்ளவாறு உணர்த்துவார். தெய்வத்தின் பேரைச் சொல்லி பணம் சம்பாதிக்க நினைப்பவர் அல்லர். அவருக்கு பணம் வேண்டாம். அவர் தான் முற்றத் துறந்தவராச்சே. பணம், பொருள், புகழ், சுகம், பெருமை, அதிகாரம் என்று எதிலும் பற்று இல்லாதவர். அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. 


சரி, இந்த அதிகாரத்தை ஏன் இங்கே கொண்டு வைத்து வைத்தார்? 


அறம் என்பது இறைவன் வடிவம். எனவே முதலில் இறை வணக்கம். பின், அந்த அறம் நிலைக்க மழை வேண்டும். யார் என்ன சொன்னாலும், மழை இல்லாவிட்டால் அறம் நிற்காது என்பதால் வான் சிறப்பு என்ற அதிகாரம் இரண்டாவது. 


எது அறம், எது அறம் அல்ல என்று சொல்ல ஒரு ஆள் வேண்டுமே? அந்த ஆள் தான் நீத்தார் என்பதால், "நீத்தார் பெருமை" மூன்றாவதாக வருகிறது. 


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 


பாடல் 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1.html


(please click the above link to continue reading)



ஒழுக்கத்து நீத்தார் = ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது 

பெருமை = பெருமை 

விழுப்பத்து வேண்டும் = பெருமையை விரும்பும், உயர்ந்தவற்றை விரும்பும் 

பனுவல் = நூல்களின் 

துணிவு. = முடிவு 


ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது பெருமையே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று உயர்ந்தவற்றைப் பற்றி பேசும் அனைத்து நூல்களும் உறுதியாகச் சொல்கின்றன. 


பார்க்க மிக சாதாரண குறள் போல் தெரியும். 


அதற்கு பரிமேல் அழகர் செய்யும் உரை, நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 


அது மிக மிக விரிவான ஒன்று என்பதால் அதை தனியே ஒரு ப்ளாகாக நாளை எழுதுகிறேன். இல்லை என்றால் இந்த ப்ளாக் மிக நீண்டு விடும். படிக்க ஒரு சோர்வு வந்து விடும். 


நாளையும் சந்திப்போம்.