Sunday, October 26, 2014

திருக்குறள் - விருந்து ஓம்புதல் என்ற அறம்

திருக்குறள் - விருந்து ஓம்புதல் என்ற அறம் 


விருந்து ஓம்புதலை அறமாகச் சொன்னவன் தமிழன்.

விருந்தினர்களை உபசரிப்பது என்பது அறத்தின் ஒரு கூறு என்று கூறியது தமிழ் கலாச்சாரம்.

விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்கிறது இந்த குறள்.

விருந்தினர்களை கண்டவுடன், கண்ணில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும். பின் அவர்கள் உள்ளே வந்த பின் அவர்களோடு இனிய சொற்களை கூற வேண்டும்.

பாடல்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.


சீர் பிரித்த பின்

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன் சொல்லின் அதே அறம்.

எது அறம் என்று கேட்டால், கண்ட பொழுது முகத்தால் இனிமையாக நோக்கி, அகத்தால் இனிய சொற்களை கூறுவது அறம் .

அது என்ன முகத்தால் இனிமை, அகத்தால் இனிமை ?

இங்கே முகம் என்பதற்கு கண் என்பது சரியான அர்த்தமாக இருக்கும். விருந்தினர்களை  கண்டவுடன் நம் கண் மலர வேண்டும். கண் அந்த இனிமையைச் சென்று சொல்ல வேண்டும்.

சொல் பின்னால் வரும். மனதின் உணர்சிகளை முதலில் காட்டுவது கண்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பார் வள்ளுவர்.

விருந்தினர் வந்த பின், அவர்களோடு இனிய சொற்களை பேச வேண்டும். அதுவும்  உள்ளத்தில் இருந்து வர வேண்டும். ஏதோ உதட்டில் இருந்து வரக் கூடாது.

ஒரு விருந்தினர் வருகிறார் என்றால், அவருக்கு வேண்டிய உதவியை உடனே செய்து விட முடியாது. வீட்டுக்குள் நுழையும்போதே அவருக்கு வேண்டிய பொருள் உதவியைச் செய்ய முடியுமா ?

முடியாது.

முதலில் முக மலர்ச்சியோடு அவரை வரவேற்று, அவரோடு இனிமையாகப் பேசி, பின் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம்.

இப்போதெல்லாம் பிள்ளைகள், விருந்தினர்களை வரவேற்க,  அவர்கள் இருக்கும் அறையை விட்டு கூட வெளியே வருவது இல்ல. வந்தாலும் கையில் ஒரு கைபேசி, அல்லது, வீடியோ கேம் (video game ) என்று ஏதாவது ஒன்றுடன் வருகிறார்கள்.

விருந்தினரை சரியாகக் கூட பார்ப்பது இல்லை.

நம் பாரம்பரியங்களை, கலாச்சாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

முன்னவர்கள் சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நாம் தான் சொல்லித் தர தவறி விட்டோம்.

இடையில் சில தலைமுறைகள் நூலறுந்த பட்டம் போல திக்கு திசை இல்லாமல்  தவித்தது, தவிக்கிறது.

இனி வரும் தலை முறைக்காவது சொல்லி வைப்போம்.



1 comment:

  1. பிள்ளைகளை குறை சொல்வானேன்? எல்லா விருந்தினரையும் நமக்கே பிடிக்கிறதா என்ன?!

    ReplyDelete