Sunday, October 5, 2014

இராமாயணம் - நல்ல காரியம் செய்யும் முன் நல்ல காரியம் செய்ய வேண்டும்

இராமாயணம் - நல்ல காரியம் செய்யும் முன் நல்ல காரியம் செய்ய வேண்டும் 


நம் வீட்டில் எவ்வளவோ நல்ல காரியங்கள் நடை பெறுகிறது. பிறந்த நாள், திருமண நாள், பிள்ளைகள் பள்ளியில் சாதித்து வரும் நாட்கள், அலுவகலத்தில் பணி உயார்வு, ஊக்கத் தொகை (bonus ) கிடைக்கும் நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் பல நல்ல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

நாமும் அந்த நல்ல நிகழ்வுகளினால் மகிழ்கிறோம்.

அந்த மாதிரி நாட்களில், இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்தினால் நம் இன்பம் இரட்டிப்பாகும்.

ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு, காப்பாரற்ற முதியோர்களுக்கு, ஊனம் உற்றவர்களுக்கு என்று யாருக்காவது அந்த தினங்களில் உதவி செய்யலாம்.

நாம் மகிழும்போது, அந்த மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் இன்னொரு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கும்.

இராமனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது.

புத்தாடை அணிந்து தேர் ஏறப் போகிறான்.

அதற்கு முன்னால் நிறைய தான தர்மங்கள் செய்கிறான் - நல்லவர்களுக்கு.

பாடல்

பல் பதினாயிரம் பசுவும் பைம் பொனும்
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நால் மறைச்
செல்வர்கள் வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான்.


பொருள் 

பல் பதினாயிரம் = பல்லாயிரம்

பசுவும் = பசுவும்

பைம் பொனும் = பொன்னும்

எல்லை இல் நிலனொடு =  எல்லை இல்லாத நிலமும்

மணிகள் யாவையும் = நவரத்தினங்களும்

நல்லவர்க்கு உதவினான் = நல்லவர்களுக்கு தானம் செய்தான்

நவிலும் நால் மறைச் = நான்கு வேதங்களை ஓதும்

செல்வர்கள் = நல்லவர்கள்

வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான் = வாழ்த்துச் சொல்ல தேரில் ஏறினான்

சீதை போன்ற ஒரு அழகான பெண்ணை மணந்து கொள்ளப் போகிறோம் என்றால் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்.

ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருமா ?

இராமனுக்கு வந்தது.

அது இராமன்  காட்டிய வழி.

பாடம் படிப்போம்.




1 comment:

  1. பிள்ளைகள் கல்யாணத்துக்கு, ஐம்பது பொன் நகையும், ஐநூறு பேருக்கு விருந்தும் இட்டுச் செலவு செய்வதே பெருமை என்று எண்ணுகிறோம்! ஆடம்பரமான திருமணம் வேண்டாம் என்று சொல்லி, அந்தப் பணத்தை எத்தனை பேர் அநாதை ஆசிரமத்துக்குக் கொடுக்கிறோம்?

    ReplyDelete