Monday, October 20, 2014

இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்

இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்


சாம்ராஜ்யம் உன்னது  என்ற போது இராமன் மகிழவில்லை.

சாம்ராஜ்யம் உனக்கு இல்லை, நீ கானகம் போக வேண்டும் என்று சொன்னபோதும்  கலங்கவில்லை.

கோபம் கொண்ட இலக்குவனைக் கூட "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை...விதியின் பிழை " என்று அமைதிப் படுத்தினான் இராமன்.

ஆனால், மனைவியை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் வர கால தாமதம் ஆனதால் கோபம் பொங்குகிறது இராமனிடம்.

இராஜ்ஜியம் பொருட்டு அல்ல, கானகத் துன்பம் பெரிதல்ல. மனைவியின் பிரிவு ரொம்பப் பெரியது . கோபம் இல்லாத இராமனையும் கோபம் கொள்ளச் செய்கிறது சீதையின் பிரிவு .

அமிழ்து உடலையும், உயிரையும் சேர்த்து வைக்கும்.

மனைவி அமிழ்து போன்றவள். போன உயிரையும் மீட்டு வருவாள். கணவனின் உயிரை காபாற்றுபவள்.

"ஆவியை, அமிழ்தின் வந்த தேவியை பிரிந்ததால் திகைத்தனை போலும் செய்கை " என்று வாலி, சீதையைப் பற்றி, இராமனிடம் கூறுவான்.


இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்

"நஞ்சு போன்றவர்களை தண்டித்தால் அது வஞ்சம் அல்ல, மனு நீதி ஆகும். ஆதலால், அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் நெஞ்சில் உரைக்கும் படி கூறுவாய் "  என்று.....

பாடல்


‘நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.


பொருள் 

‘நஞ்சம் = கொடுமையான

அன்னவரை = மக்களை

நலிந்தால் = தண்டித்தால்

அது = அது

வஞ்சம் அன்று = வஞ்சம் அன்று

மனுவழக்கு = மனு நீதி ஆகும்

ஆதலால் = ஆதலால்

அஞ்சில்  ஐம்பதில் = அஞ்சில் அம்பதில்

ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாதவன்

நெஞ்சில் = மனதில் 

நின்று = நிலைத்து 

நிலாவ = நிற்கும் படி 

நிறுத்துவாய் = செய்வாய்


அது என்ன அஞ்சில் அம்பதில் ஒன்றரியாதவன்  ?

ஒரு அர்த்தம்,

அஞ்சில் = ஐந்து வயதில்
அம்பதில் = ஐம்பது வயதில்
ஒன்றும் அறியாதவன். அஞ்சு வயதிலும் தெரியாது. ஐம்பது வயதிலும் தெரியாது.


இன்னொரு அர்த்தம்;

அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அச்சம் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறிய  மாட்டான்.

இன்னொரு அர்த்தம்;

இன்னொரு அர்த்தம்

அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்

நான்காவது = அஞ்சு + அம்பது + ஒன்று = 56 . அதாவது , 56 ஆவது வருடம் தந்துபி வருடம். இலக்குவன் தந்துபி என்ற அரக்கனின் எலும்பு கூட்டை கால் கட்டை விரலால் உந்தி தள்ளினான். அதை சுக்ரீவன் அறிந்தான் இல்லை. அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.

ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்கு தருவதற்கு ஒரு பதிலும் இல்லை, திரு திரு என்று முழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன்




2 comments:

  1. ஆஹா, இதைப் படிக்கும்போது ஏதோ கிருபானந்த வாரியார் வந்து சொல்வது போல் தோன்றுகிறது! அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம் ! நன்றி !
    வாரியார்சுவாமிகள் இன்னுமோர் பொருள் கூறுகின்றார் !
    அஞ்சு+ இல்+அம்பு பதில் ஒன்றறியாதவன்
    அச்சத்துடன் இருந்து கண்ணீர் விடும் இல்லாளாகிய சீதைக்கு பதில் கூறத்தெரியாதவன்

    அம்பு=நீர்

    ReplyDelete