Friday, October 24, 2014

இராமாயணம் - சொன்னவுடன் செய்ய வேண்டும்

இராமாயணம் - சொன்னவுடன் செய்ய வேண்டும் 


பொதுவாக பிள்ளைகளிடம் ஒரு காரியம் சொன்னால், சொன்னவுடன் செய்ய மாட்டார்கள். ஒன்றிற்கு மூணு தடம் சொன்ன பிறகு, அதுக்கு நாலு கேள்வி கேட்டு, தொண்டைத் தண்ணியை வாங்கி , பின் ஆடி அசைந்து செய்வார்கள்.

இராமனும் இலக்குவனும் எப்படி இருந்தார்கள் என்று இராமாயணம் காட்டுகிறது.

இளைய தலைமுறை படித்து உணர வேண்டும்.

கானகம் போ என்று கைகேயி சொன்னவுடன், "நான் எதுக்குப் போகணும், இப்பவே போகணுமா ? அடுத்த மாதம் போனால் போதாதா " என்றெல்லாம் இராமன் கேட்கவில்லை.

"மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன், விடையும் கொண்டேன்" என்று அந்த நொடியில் கிளம்பி விட்டான்.


 'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 


கிட்கிந்தா காண்டத்தில், கார்காலம் முடிந்து சீதையைத்  தேட ஆள் அனுப்புகிறேன்  என்று சொன்ன சுக்ரீவன் அனுப்பவில்லை.

இராமனுக்கு கோபம். "சுக்ரீவனை உடனே ஆள் அனுப்பச் சொல் இல்லையென்றால் அவனும் தண்டிக்கப் படுவான் " என்று இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்.

இராமன் சொன்னவுடன் , இலக்குவன், "சரிண்ணா , நாளைக்குப் போகிறேன்" என்று சொல்லவில்லை .

இராமன் சொன்னவுடன் புறப்பட்டு விட்டான். உடனே கிளம்பினான்.

பாடல்

ஆணை சூடி, அடி
     தொழுது, ஆண்டு, இறை
பாணியாது, படர்
      வெரிந் பாழ்படாத்
தூணிபூட்டி, தொடு
      சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் -
      சிந்தையின் நீங்கலான்.

பொருள்

ஆணை சூடி = இராமனின் ஆணையை தலைமேல் சூடி

அடி தொழுது = அவன் திருவடிகளைத் தொழுது

ஆண்டு = அங்கு

இறை பாணியாது = ஒரு நொடி கூட நிற்காமல்

படர் வெரிந் = பரந்த முதுகில்

பாழ்படாத் = குறையாத

தூணிபூட்டி = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை மாட்டிக் கொண்டு

தொடு சிலை தொட்டு = வில்லை கையில் பற்றிக் கொண்டு

அருஞ் சேணின் = நீண்ட பாதையில் 

நீங்கினன்  = செல்லத் தொடங்கினான்

சிந்தையின் நீங்கலான் = இராமனை தன் சிந்தையை விட்டு நீங்காமல் கொண்ட  இலக்குவன்


அண்ணன் சொன்னவுடன் இலக்குவன் உடனே கிளம்பினான். 


No comments:

Post a Comment