Tuesday, September 13, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு 


சாப விமோச்சனம் பெற்று விண்ணுலகம் போகும் முன், இராமனைத் தொழுது விராதன் சில சொல்லுகிறான்.

ஆன்மீகத்தின் சாரம் அந்தப்  பாடல்கள்.

பாடல்

துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்
    தோன்றியக்கால்,
மறப்பரோ தம்மை? அது அன்றாகில்,
    மற்றவர்போல்
பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற
    பதம் பெறல் அரிதோ?
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!

பொருள்

துறப்பதே = துறப்பதையே

தொழில் ஆகத் = தமது கடமை என்று

தோன்றினோர் = தோன்றியவர்கள்

தோன்றியக்கால் = தோன்றினால்

மறப்பரோ தம்மை?  = தங்களை மறப்பார்களா ?

அது அன்றாகில்  =  அது அப்படி இல்லை என்றால்

மற்றவர்போல் = மற்றவர்களை போல

பிறப்பரோ? = பிறப்பார்களா ?

எவர்க்கும் = அவர்களுக்கும்

தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ? = எஅவர்கள் பெற்ற நிலை அறியதானதே

இறப்பதே = இறப்பதே

பிறப்பதே = பிறப்பதே

எனும் விளையாட்டு = எனும் விளையாட்டு

இனிது உகந்தோய்! = இனிமையாகக் கொண்டவனே

நாம் மிக மிக பயப்படுவது எதைக் கண்டு ?

மரணத்தைக் கண்டு தான்.

பயங்களுக்குள் பெரிய பயம் மரண பயம்.

ஆனால், அந்த மரணம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அதைக் கண்டு இவ்வளவு பயப்படத் தேவை இல்லை என்று தான் நம் இலக்கியம் சொல்லி வந்திருக்கிறது.

பயமான விஷயத்தை விடுவோம்.

எது சுகமான விஷயம் ? தூங்குவது சுகமான விஷயம்தானே.

ஆடி, ஓடி களைத்த பின் அப்பாட என்று கிடந்து உறங்குவது ஒரு சுகம்தான்.

இந்த மரணம் கூட தூக்கம் போல சுகமானதுதான் என்கிறார் வள்ளுவர்.

தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பது போலும் பிறப்பு.

அவ்வளவுதான் வாழ்க்கை.

தினம் தினம் தூங்கி தூங்கி எழுந்திரிக்கிறோம். ஐயோ, தூக்கம் வரப் போகிறதே என்று யாராவது பயப்படுவார்களா ? எப்படா படுக்கலாம் என்று தான்  நினைப்போம்.அது போல , இறப்பும் ஒரு குட்டித் தூக்கம் போலத் தான்.

இதை , விராதனும் சொல்லுகிறான்.

மரணம் இனிமையாக இருக்கும் எப்போது என்றால், வாழும் போது எனக்கு எனக்கு  என்று சேர்த்து வைத்துக் கொள்ளாமல், பற்று அற்று இருந்தால்  , இந்த மரணம் கூட ஒரு விளையாட்டு தான்.


துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்

எது கிடைத்தாலும் அதை துறப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அப்படியும் சிலர் இருந்திருக்கிறார்கள். இந்த சொத்து, சுகம், பட்டம் , பதவி எல்லாம் வேண்டாம் என்று வைத்தவர்கள் இருக்கிறார்கள்.

எட்டு கோடி பொன்னை (அந்தக் காலத்தில்) வேண்டாம் என்று ஒரு கோவணத்துடன் தெருவில் இறங்கினார் பட்டினத்தடிகள். முடியுமா ?

அகண்ட இராஜ்யத்தை வேண்டாம் என்று இரவோடு இரவாக  இறங்கினான்  சித்தார்த்தன். நினைத்துப் பார்க்க முடியுமா ?

நாடு இல்லை, காட்டுக்குப் போ என்றவுடன் சிரித்துக் கொண்டே போனான் இராமன். சிந்தித்துக் கூட பார்க்க முடியுமா நம்மால்.

அப்படி துறப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.


தோன்றியக்கால்,

அப்படிப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.


'அவா' என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும்,
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'.

என்பார் வள்ளுவர். ஆசை என்பது பிறவிக்கு வித்து என்பது வள்ளுவம். "பிறப்பு ஈனும் வித்து".

தோன்ற மாட்டார்கள்.

ஒரு வேளை தோன்றினால் ?


மறப்பரோ தம்மை?

அவர்கள் தாங்கள் யார் என்று மறக்க மாட்டார்கள். அதாவது , ஒரு பிறவியில் துறவறம் மேற் கொண்டால், பின் பிறவி என்பது இல்லை. அப்படியே பிறந்தாலும், அவர்கள் தங்கள் முப்பிறவியில் செய்ததை இந்தப் பிறவியிலும் மறக்காமல் தொடர்வார்கள்.

இது உண்மையா ? கற்பனையா என்று தெரியாது.

இருந்தாலும், ஒரு வசீகரமான  கருத்து. நம்புபவர்கள் அதிகமாக இரசிக்க முடியும்.




அது அன்றாகில், மற்றவர்போல் பிறப்பரோ?

அப்படி இல்லை என்றால் மற்றவர்கள் மாதிரி பிறப்பார்களா ? மாட்டார்கள். அதாவது, ஒரு பிறவியில் துறவு மேற்கொண்டவர்கள், மறு பிறவி எடுத்தாலும் அது மற்றவர்கள் மாதிரி இருக்காது.



எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ?

துறவு அடைந்தவர்கள் அடைகின்ற நன்மை இருக்கிறதே, அது அரிதிலும் அரிதானது.


இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!

இந்த இறப்பும் , பிறப்புமாய் நடக்கும் இந்த வாழ்க்கையை ஒரு விளையாட்டு போல மகிழ்ச்சியாக செய்பவனே (இராமா).


அலகிலா விளையாட்டு உடையவன் அவன் என்று முதலிலேயே கம்பர் சொல்லி இருக்கிறார். 


 உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


விளையாடுத்தான் வாழ்க்கை.

பிறப்பும், இறப்பும், இருப்பும் எல்லாமே ஒரு விளையாட்டுதான்.

ரொம்ப serious ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எதற்கெடுத்தாலும், ஒரு கோபம், சிடுசிடுப்பு, எல்லோர் மேலும் ஒரு வெறுப்பு என்று வாழ்க்கையை சிக்கலாக்காதீர்கள்.

சிரியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

இது வரை எப்படியோ, இன்று முதல் மகிழ்ச்சியாக இருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_13.html



1 comment:

  1. மிக அழகாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete