பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா
கவிஞர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது கவிதையாக வெளிப் படுகிறது. உண்மையான கவிஞர்களின் கவிதைகள் காலம் கடந்து நிற்கின்றன. இன்றும் எத்தனையோ கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். பெரிய பெரிய ஆட்களைக் கொண்டு அணிந்துரை எழுதச் செய்து, பெரிய விளம்பரங்கள் செய்து, அழகான விலை உயர்ந்த காகிதத்தில் அச்சடித்து விற்கிறார்கள். சில ஆண்டுகள் கூட நிற்பதில்லை. காணாமல் போய் விடுகின்றன.
பனை ஓலையில், இரும்பு கம்பி கொண்டு எழுதிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நிற்கின்றன.
திருக்குறளும், தேவாரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் எப்படியோ காரியங்களுக்கும், தீக்கும் , வெள்ளத்திற்கும் தப்பி காலத்தை வென்று நிற்கின்றன.
எப்படி ?
உண்மை, சத்தியத்தின் சக்தியாக இருக்குமோ ?
பாரதியின் பாப்பா பாட்டு.
அவன் என்ன நினைத்து எழுதினானோ தெரியாது. இன்றும் நமது வாழ்க்கையில் அது மிக மிக அர்த்தம் உள்ளதாக இருக்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சொல்லுவதைப் போல சொல்லி இருக்கிறான் அந்த மகா கவி.
இன்று செல் போன் , லேப்டாப் கம்ப்யூட்டர், டிவி என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன. பிள்ளைகள் வெளியே சென்று விளையாடுவது என்பது மிக மிக குறைந்து விட்டது. வெளியில் சென்று விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் ?
முதலாவது, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட படிக்கலாம். Social skills வளரும்.
இரண்டாவது, அப்படிச் இப்படிச் செய் என்று சொல்லுவதிலும், அப்படி மற்ற குழந்தைகள் சொல்வதை கேட்பதிலும் ஒரு தலைமை பண்பு வளர வழி இருக்கிறது.
மூன்றாவது, வெளியில் விளையாடும் போது வெயில் பட்டு, வைட்டமின் டி கிடைக்க வழி பிறக்கும்.
நான்காவது, ஓடி விளையாடினால் தசைகள் வலுப் பெறும்.
ஐந்தாவது, ஓடி விளையாடும் போது மூச்சு வாங்கும். அதிகமான பிராண வாயு உள்ளே செல்லும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படும். அது மட்டும் அல்ல உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு அதிகமாக கிடைத்து அவை நல்ல நிலையில் செயல் படும்.
வீட்டுக்குளே இருந்து கொண்டு செல் போன், டிவி, லேப்டாப் என்று அடைந்து கிடந்தால், இது ஒன்றிற்கும் வழி இல்லை.
எனவே தான் அவன் சொன்னான்
ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
ஓடி விளையாடு என்றால் தான் மட்டும் ஓடிக் கொண்டிருப்பது இல்லை. மற்ற பிள்ளைகளையும் சேர்த்து விளையாடு என்றான்.
அப்படி மற்ற குழந்தைகளோடு விளையாடும் போது , சண்டை சச்சரவு வரலாம். அதற்காக ஒருவரையும் திட்டாதே என்றான்
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
குருவி போல அங்கும் இங்கும் பறந்து திரி.ஒரு இடத்தில் இருக்காதே என்றான்.
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
இயற்கையை இரசிக்கப் பழகு. மனதில் பறவைகள் மேல் மகிழ்ச்சி வந்தால் அவற்றை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வராது. அவை குடி இருக்கும் மரத்தை வெட்ட மனம் வராது.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
பிள்ளைகளை மட்டும் அல்ல, மற்ற உயிர்கள் மேலும் அன்பு செலுத்து. கோழியையும் கூட்டி வைத்து விளையாடு. இப்போதெல்லாம் கோழி எங்கே இருக்கிறது ? கடையில்தான் தொங்குகிறது.
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
சமுதாயத்தில் பசித்தவர்கள் இருப்பார்கள்.பசிக்காக திருடிவிட்டால் அவர்களை வெறுக்காதே. அவர்கள் மேல் இரக்கம் கொள். திருடும் காக்கை மேல் இரக்கம் கொள் என்றான். அதை அடித்து விரட்டாதே என்று சொல்லிக் கொடுத்தான்.
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
பசுவையும்,நாயையும் நேசிக்கக் கற்று கொடுத்தான்.
வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
வீட்ட்டில் வேலைக்கு இருப்பவர்களை சில எஜமானி அம்மாக்கள் அடிமைகளை போல நடத்துவார்கள்.ஒரு மரியாதை இல்லாமல் பேசுவார்கள். தினம் ஒரு வசவு தான். அவர்களும் மனிதர்கள் தான். நமக்கு கீழே வேலை செய்பவர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். குதிரையும்,மாட்டையும், ஆட்டையும் ஆதரித்துப் பழகி விட்டால் பின்னாளில் தனக்கு கீழே வேலை செய்பவரகளின் உழைப்பை மதிக்கும் மனம் வளரும்.
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
படிப்பு முக்கியம். அதற்காக எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருந்தால் மனம் மரத்துப் போய் விடும். மனம் பண் பட வேண்டும் என்றால் பாட்டு, நாடகம், இசை என்று இரசிக்கப் பழக வேண்டும். மனம் மென்மையாகும்.
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
படிப்பு, பாட்டு, உடல் உழைப்பு என்று இருக்க வேண்டும். அறிவும், மனமும் மட்டும் வேலை செய்தால் போதாது. உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேண்டாத நோய் எல்லாம் வந்து சேரும். உடலுக்கும் வேலை கொடுத்தான் பாரதி.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
பொய்யும், புறஞ் சொல்லுதலும் கூடாது என்றான்.
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே. மற்றவர்கள் மேல் பழி சொல்லி நீ தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே.
உண்மை சொல். பொறுப்பை ஏற்றுக் கொள். துன்பம் வரலாம். தீங்கு வராது. உண்மை சொல்லி வாழ்ந்தால் தெய்வம் உனக்கு துணையாக இருக்கும். பயப்படாதே என்று தைரியம் சொல்லித் தருகிறான்.
பெண்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். எதற்கு எடுத்தாலும் ஒரு ஆணின் துணியை நாடுபவர்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் பயந்து ஒதுங்காதே. சண்டை போடு அவனிடம். அவனை அவமரியாதை செய். அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது. துணிந்து நில் என்று தைரியத்தை விதைக்கிறான்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
வாழ்வில் எப்போதும் இன்பமே இருக்காது. எப்போதாவது துன்பம் வரும். துன்பம் வரும் போது துவண்டு விடாதே. சோர்ந்து விடாதே. நமக்கு அன்பான தெய்வம் துணை உண்டு.துவண்டு விடாதே என்று ஆறுதல் சொல்லுகிறான்.
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
வாழ்வில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், அதை போக்க ஒரே வழி சோம்பல் இல்லாமல் உழைப்பதுதான். சோம்பலில்லாமல் உழைக்க வேண்டும் என்றான்.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -
தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தாயார் சொன்னதை அப்படி கேள் என்றான். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காதே. அம்மா சொன்னால் அப்படியே கேள் என்றான்.
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
உடல் ஊனம் கண்டு வருந்தாதே. போராடு. வெற்றி அடைவாய் என்று சொல்லித்தருகிறான்.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
தாய் நமக்கு பால் தந்து, உணவு தந்து நம்மை பாதுகாக்கிறாள். அதே போல் நாம் பிறந்த மண்ணும் நமக்கு உணவும், இருக்க இடமும் தருகிறது. அதை தாய் என்று கும்பிடச் சொன்னான். தாய் நாட்டின் மேல் பற்று இருந்தால், அதை குப்பையாகச் சொல்லாது, அதன் பெயருக்கு களங்கம் வரும் படி எதுவும் செய்யத் தூண்டாது. அதன் வளங்களை சுரண்டச் சொல்லாது.
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
நம் முன்னோர்கள் தேசம் அமிழ்தை விட இனியது.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
மொழியின் மேல் மதிப்பு வேண்டும். நாட்டையும், மொழியையும் மதிக்காதவன் வேறு எதைத்தான் மதிப்பான்.
தமிழில் நமக்கு நூல்களை தந்தவர்கள் மகான்கள். வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும், ஆழவார்களும், நாயன்மார்களும் நாம் உய்ய வேண்டும் என்று தாங்கள் தேடிக் கண்ட உண்மைகளை பாட்டாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். நன்றி வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக , தமிழை தொழுது படித்திடச் சொன்னான்.
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
இந்த நாடு செலவச் செழிப்பான நாடு. இங்கு என்ன இல்லை என்று மற்ற நாடுகளுக்கு போகிறார்கள். நீ எங்கும் போகாதே. இங்கேயே இரு என்கிறான்.
வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
இந்த பொருள் வளம் குறைந்து இருக்கலாம். வாழ்க்கை வசதிகள் குறைவாக இருக்கலாம். வேதம் உடையது இந்த நாடு. இதை விட வேறு என்ன வேண்டும். நீதிக்காக போராடும் உள்ளம் கொண்ட வீரர்கள் உள்ள நாடு. இதை தெய்வம் என்று கும்பிடச் சொன்னான்.
சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
சாதிகள் இல்லையடி பாப்பா. உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் என்று சொல்லுவதே கூட பாவம் என்றான். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று நினைக்கச் சொன்னான்.
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
படிப்பறிவு, கல்வி , என்று இருந்து விட்டால் மட்டும் போதாது. அன்பு நிறைய இருக்க வேண்டும். அவர்கள்தான் மேலோர். அன்பு இல்லாதோர் எல்லாம் கீழோரே. படைத்தவனை மேலோர் என்று நினைக்காதே. உள்ளத்தில் அன்பு இல்லாதவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் பெரியவன் இல்லை.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
உயிர்களிடம் அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று அறிதல் வேண்டும்.
அன்பாக இருப்பவர்கள். தெய்வ பக்தி கொண்டவர்கள் ஏதோ கோழைகள் அல்ல.
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.
வைரம் போன்ற உறுதியான மனம் வேண்டும்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்றான்.
சொல்லித் தருவோம் - அடுத்த தலைமுறைக்கு, அதற்கடுத்த தலைமுறைக்கும்.
>>சாதிகள் இல்லையடி பாப்பா<< avvai, and Bharathi knew it and practiced it. But now? The guy at the last but one bottom rung ridicules the guy at the bottom-most rung. To get freebies and other privileges and benefits he calls himself and gets a certificate that he belongs to the Most Backward Class. What a shame!
ReplyDeleteVery bad 😆😝😡😡😡👹🤥
ReplyDelete🥱🥱🥱
ReplyDeleteNot bad
ReplyDeleteThankyou for this
ReplyDelete👍
ReplyDelete