Sunday, September 18, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்


மனிதன் நாளும் அலைகிறான். அங்கும் , இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். ஏன் ? எதற்கு ? எதை அடைய இந்த ஓட்டம் ?

எதை எதையோ அடைய அலைகிறான். தேடியதை அடைந்த பிறகு, அமைதியாக இருக்கிறானா என்றால் இல்லை. ஒன்றை அடைந்த பிறகு அடுத்ததை தேடி ஓடுகிறான்.

இந்த ஓட்டத்தில், எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று அறியாமல் போய் விடுகிறான்.

உடல் நிலை, குடும்பம், உறவுகள், இரசனை, நட்பு, கல்வி, ஓய்வு என்று ஆயிரம் நல்ல விஷயங்களை இழந்து விடுகிறான். ஏதோ ஒன்றை அடைகிறான். அதை அடைய ஆயிரம் நல்லவைகளை இழக்கிறான்.

தேடியதை அடைந்தபின் , எதை எல்லாம் இழந்தோம் என்று கணக்குப் போடுகிறான். இழந்தது அதிகம். பெற்றது கொஞ்சம் என்று அறியும் போது தன் மேல் தானே வருத்தம் கொள்கிறான்.

இது தானே வாழ்க்கை. இப்படித்தானே போகிறது.

மணிவாசகர் சொல்கிறார்.

ஒரு பெரிய சட்டியில் கெட்டி தயிர் இருக்கிறது. உறுதியாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களுக்குத் தெரியும், தயிர் உறைய வேண்டும் என்றால் அதை அசைக்கக் கூடாது. ஆடாமல், அசையாமல் இருந்தால் நீராக இருக்கும் பால், உறை ஊற்றிய பின் கெட்டியான தயிராக மாறும். அது உறைந்து கொண்டு இருக்கும் போது , அதில் ஒரு சின்ன மத்தை போட்டு கடைந்தால் என்ன ஆகும் ? தயிர் உடையும். நீர்த்துப் போகும். கொஞ்சம் கடைவது. பின் நிறுத்தி விடுவது. பின் சிறிது நேரம் கழித்து , மீண்டும் கொஞ்சம் கடைவது என்று என்று இருந்தால் என்ன ஆகும் ? தயிரும் உறையாது. வெண்ணையும் வராது. தயிர் தளர்ந்து போகும் அல்லவா.

பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்


மாழை = மா என்றால் மா மரம். மாவடுவைப் போன்ற

மைப் = கண் மை

பாவிய = பூசிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் = வன்மையான

மத்து இட = மத்தை இட்டு

உடைந்து = உடைந்து


தாழியைப் = தயிர் வைத்த பாத்திரத்தை

பாவு = பரவும்

தயிர் போல் = தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்து விட்டேன்

தட = பெரிய (தடக் கை )

மலர்த் தாள் = மலர் போன்ற திருவடிகளை கொண்டவனே

வாழி! = வாழ்க

எப்போது வந்து = நான் எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினைகளைச் செய்தவன்

ஆழி அப்பா! = ஆழி என்றால் கடல். கடல் போல பரந்து விரிந்தவனே

 உடையாய்! = அனைத்தும் உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே = அடியேன் உன் அடைக்கலம்


பெண்ணாசை ஒன்று தானா இந்த உலகில் ? மணிவாசகர் போன்ற பெரியவர்கள்  நம் குற்றங்களை தங்கள் மேல் ஏற்றிச் சொல்வார்கள்.

பெண்ணாசை என்பது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கும். பெண்களுக்கு ஆசையே  கிடையாதா ?

இருக்கும்.

எல்லோரின் ஆசைகளையும் ஒரு பாட்டில் பட்டியல் இட முடியாது.

பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசை என்ற ஒன்று வரும்போது  அது உறைந்த, உறைகின்ற தயிரை அலைக்கழித்து தளர்ச்சி அடைய செய்யும்.

கொஞ்ச நேரம் எடுத்து யோசியுங்கள்.

எந்த ஆசை உங்களை இந்த நேரத்தில் அலைக்கழிக்கிறது என்று ....

ஆசை நல்லதா , கெட்டதா என்பதல்ல கேள்வி.

ஆசை வரும்போது அது உங்களை அலைக்கழிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது வேண்டுமா , வேண்டாமா என்பது உங்கள்  முடிவு.

ஒவ்வொரு ஆசைக்கும் ஒரு விலை இருக்கிறது.

நீங்கள் தரும் விலை சரியானது தானா என்று அறிந்து கொள்ளுங்கள்.

நல்லதே நடக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_18.html



1 comment:

  1. தயிரைக் கலக்கும் மத்துப் போல, ஆசை நம் மனதை அலைக்கழிக்கிறது! என்ன நல்ல உவமை. நன்றி.

    ReplyDelete