Thursday, September 15, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 1

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 1


நம்பிக்கை.

நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம். நம்மால் எதையாவது முழுவதுமாக நம்ப முடிகிறதா ?

வைகுண்டம் வேண்டும், கைலாயம் வேண்டும் , இறைவன் திருவடி நிழல் வேண்டும் என்று நம்பிக்கையோடு தொழுபவர்கள் கூட, இறைவனே நேரில் வந்து "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம்...வா பரலோகம் போகலாம் " என்று கூறினால் , எத்தனை பேர் உடனே கிளம்புவார்கள் ?

இது ஒரு வேளை கடவுள் இல்லையோ ? பரலோகம் கூட்டிப் போகிறேன் என்று வேறு எங்காவது கூட்டிக் கொண்டு போய் விட்டால் ? போட்டது போட்ட படி இருக்கிறது. பிள்ளையின் படிப்பு, அவர்களின் திருமணம், அவர்களின் பிள்ளைகள், சொத்து விவகாரம் என்று ஆயிரம் விஷயங்கள் கிடக்கிறது. அத்தனையும் விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்குவார்கள்.

கடவுள் தானே கூப்பிடுகிறார். அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கும் ?

நான் எல்லா விட்டால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று நினைப்பவர்களே அதிகம் இருப்பார்கள்.

சரி , அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் தான் அனைத்தையும் செய்கிறான் என்றால், நமக்கு வரும் துன்பங்களும் அவன் செய்வது தானே. அதற்காக ஏன் வருந்த வேண்டும். நமக்கு என்ன வேண்டும் , எவ்வளவு வேண்டும், எப்போது  வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா ?

புலம்புவது ஏன் ?

நம்பிக்கை இன்மை.

நமது சமயமும், இலக்கியமும் சரணாகதி, அடைக்கலம் என்பதைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றன.

நம்மை, நம் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது பெரிய விஷயம்.

வைணவம் சரணாகதி பற்றி பேசுகிறது.

சைவம் அடைக்கலம் என்று கூறுகிறது.

எல்லாம் ஒன்று தான். ஒருவரிடம் நம்மை முழுவதுமாக கொடுத்து விடுவது.

இதில் மூன்று நிலை இருக்கிறது.

கையடைப் படுத்துவது. இடைக்கலம் . அடைக்கலம்.

கையடை என்றால் ஒருவரை இன்னொருவரிடம் "இனி இவன்/இவள் உன் பொறுப்பு " என்று ஒப்படைப்பது.

பெற்றோர் , ஆசிரியரிடம் பிள்ளையை விட்டு "இனி இவன் உங்கள் பொறுப்பு...அவனை / அவளை படித்து நல்ல குடிமகனாக ஆக்குவது உங்கள்  பொறுப்பு " என்று விடுவது கையடை.

இதில், கையடையாக போபவரின் சம்மதம் இருக்காது. குழந்தையின் சம்மதம் கேட்டு ஆசிரியரிடம் விடுவது கிடையாது.

இராமாயணத்தில் , தீ வளர்த்து, சீதையை இராமனிடம் "இவன் இனி உன் கையடை " என்று சனகன் கொடுத்தான்.

'நெய் அடை தீ எதிர் நிறுவி, ''நிற்கு இவள்
கையடை'' என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனோடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்றுஅரோ.


அடுத்தது, இடைக்கலம். இது ஒருவர் தன்னைத் தானே மற்றோரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்புக்  கொடுப்பது.

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்

இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக்
காட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித்
தூநீறணிந்துன்

அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம்
பலத்தரனே.

இடைக்கலம் அல்லேன் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் .


அடைக்கலம் என்பது, தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்புக் கொடுப்பது.

விபீஷணன் அடைக்கலமாக வந்தான். சரணாகதி என்பது.

‘இடைந்தவர்க்கு “அபயம் யாம் “ என்று
    இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம்
    உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
    உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
    அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?

அப்படி வந்த விபீடணனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த அறம் என்ன ஆண்மை என்ன என்று கேட்கிறான் இராமன்.

திருவாசகத்தில், மாணிக்க வாசகர் அடைக்கலப் பத்து என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

தன்னை எப்படி ஆண்டவனிடம் அடைக்கலமாகத் தருகிறார் என்பது பற்றி.

முதல் பாடல்


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

பொருள்

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

1 comment:

  1. ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் தருக

    ReplyDelete