Wednesday, September 7, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம்

இராமாயணம் - விராதன் வதைப் படலம்


இராமாயணத்தில் அதிகம் பேசப் படாத பாத்திரங்களில் ஒன்று விராதன்.

அவன் ஒரு கந்தர்வன். ஒரு சாபத்தால் அரக்கனாக வந்து பிறந்தான்.

அவனையும் ஆட்டி வைத்தது காமம். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம்.

அரக்கனாக பிறந்த அவன், சீதையை கவர முயல்கிறான். இராமனோடு சண்டை இட்டு , சாப விமோச்சனம் பெற்று மேலுலகம் அடைகிறான்.

போவதற்கு முன் கொஞ்சம் பேசுகிறான்.

அத்தனையும் வேதாந்த சாரம். தேனாய் தித்திக்கும் தமிழ் பாடல்கள்.

கல்லும் கரையும் தமிழ். ஒவ்வொரு பாடலையும் படித்து முடித்தவுடன் , அப்படியே கண் மூடி கரைந்து போக வைக்கும் பாடல்கள்.


அதிலிருந்து சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஒரு மாட்டுத் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் கட்டி இருக்கின்றன. அங்கே சில கன்றுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பசி வந்தால், அந்த கன்றுகள் , சரியாக தன் தாய் பசுவை சென்று அடையும். அது போல, தாய் பசுவுக்கும் தன் கன்று எது என்று தெரியும்.

இறைவா, நீ தான் இந்த உயிர்களை எல்லாம் படைத்தாய்.உனக்கு இந்த உயிர்களை எல்லாம் தெரியும். ஆனால், இந்த உயிர்களுக்குத் தான் உன்னைத் தெரியவில்லை.

இது என்ன மாயை என்று வினவுகிறான் விராதன்.

மாயைப் பற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருக்கின்றன. பெரிய பெரிய  மேதாவிகள், பண்டிதர்கள் எல்லாம் மாயை  என்றால் என்ன என்று  பக்கம் பக்கமாய் விளக்கி இருக்கிறார்கள். இருந்தும் நமக்கு அது சரியாக புரிவது  இல்லை.

மூலம் எது என்று தெரியாதது தான் மாயை.

நான்  யார், எங்கிருந்து வந்தேன், என்பது புரியாமல் குழம்புவது தான் மாயை  என்று நாலு வரியில் சொல்லிப் போகிறான் விராதன்.

பாடல்


தாய்தன்னை அறியாத கன்று
     இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய்
     ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை
     நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-
     வாராதே வரவல்லாய்!


பொருள்


தாய்தன்னை = தாயை

அறியாத கன்று இல்லை; = அறியாத கன்று இல்லை

தன் கன்றை = தன்னுடைய கன்றை

ஆயும் அறியும்; = தாய் பசுவும் அறியும்

உலகின் தாய் ஆகின், = நீ உலகின் தாய் போன்றவன்

ஐய! = ஐயா

நீ அறிதி எப் பொருளும்; = நீ அனைத்தும் அறிவாய்

அவை உன்னை நிலை அறியா = அவை உன் உண்மை நிலையை அறியா

மாயை இது என்கொலோ?- = இது என்ன மாயை

வாராதே வரவல்லாய்! = வாராதே வர வல்லாய்

அறிவு சேர சேர குழப்பம் அதிகமாகும். சந்தேகங்கள் அதிகம் ஆகும்.

இதை அறிந்துதான் மணிவாசகரும்

கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா ! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே என்றார்.

கன்றை ஈன்ற பசுவின் மனம் போல கசிந்து உருக வேண்டுகிறார் மணிவாசகர்.

பிள்ளையைப் பெற்ற ஒரு பெண்ணைப் போல என்று ஏன் சொல்லவில்லை. பசுவிடம் அறிவின் தாக்கம் குறைவு, உணர்வின் தாக்கம்  அதிகம்.

"கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் " என்பார் அவர்.

ஆதி மூலமே என்று அன்று ஒரு யானை தன் மூலத்தை அறிந்து கூப்பிட்டு , அவனை அடைந்தது.

வாதாடி, போராடி தோற்று "கோவிந்தா" என்று கை உயர்த்தி அவனைக் கண்டாள் பாஞ்சாலி.

மூலத்தை அறிய விடாமல் தடுப்பது மாயை.

மாயை விலக வேண்டும்.

தண்ணீர் மேல் படிந்திருக்கும் பாசி போல. பாசி விலகினால் நீரின்  தன்மை புரியும்.

ஆசைக் கடலில் அகப்பட்டு   அருளற்ற அந்தகன் கை
"பாசத்திடை" அல்லல் பட இருந்தேனை உன் பாதம் எனும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே

என்பார் அபிராமி பட்டர்.


பாசம் என்ற திரை மறைக்கும், வழுக்கும்.


வாராதே வரவல்லாய்!

சரி, நமக்குத் தான் இறைவனைத் தெரியவில்லை. அவனுக்குத் தான் நம்மைத்  தெரியுமே. அவன் நேரில் வந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள  வேண்டியது தானே. 

அவன் வரவில்லை என்று யார் சொன்னது. நாம் அறியவில்லை. அவ்வளவுதான்.  வராமலே வரும் ஆற்றல் உள்ளவன் அவன். 

‘வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தே  நீ  இடையே  துன்பம்  விளைக்க,
                                   மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக்
                                      காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?’

என்பது நம்மாழ்வார் வாகு.

வருவது போல வராமல் இருப்பாய்.  உன் மாயையை எங்களால் அறிந்து கொள்ள  முடியுமா என்கிறார் நம்மாழ்வார்.

சிந்திப்போம். மாயை என்ற திரை விலகும். உண்மையின் தரிசனம் கிடைக்கட்டும் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_7.htmlNo comments:

Post a Comment