Friday, March 30, 2018

திருக்குறள் - துன்பப் படாமல் இருக்க

திருக்குறள் - துன்பப் படாமல் இருக்க



இன்பம் வரட்டாலும் போகட்டும், துன்பம் இல்லாமல் இருந்தால் சரி என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், துன்பம் இல்லாத ஆள் யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை.

துன்பம் எங்கிருந்து வருகிறது ? துன்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி எதிர் கொள்வது? என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

பாடல்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

பொருள்

இன்பம் விழையான் = இன்பத்தை விழையான்

இடும்பை = துன்பத்தை

இயல்பென்பான் = இயல்பானது என்பான்

துன்பம் உறுதல் இலன் = துன்பப் பட மாட்டான்


எல்லா துன்பத்துக்கும் காரணம் இன்பம் வேண்டும் என்று அலைவதுதான்.


அது சரி, இன்பம் வேண்டாமா? இன்பம் இல்லாத வாழ்கை ஒரு வாழ்கையா? பின் எதற்குத்தான் வாழ்வது? என்ற கேள்வி எழலாம்.

வள்ளுவர் சொற்களை தெரிந்து எடுத்து கையாள்கிறார்.


"இன்பம் விழையான்" என்றார். விழைதல் என்றால் மிக விரும்புதல் என்று பொருள்.

இன்பம் வேண்டும்தான். அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவுக்கு அதிகமாக இன்பம் வேண்டும்  என்று நினைப்பதால் துன்பம் வந்து சேர்கிறது.


நமது புராணங்களில் பார்த்தால் தெரியும்.

இந்த அரக்கர்கள் வரம் பெற்ற பின், அவர்களின் இன்பத் தேடல் அளவு கடந்து போகும்.  அகில உலகங்களையும் ஆள வேண்டும். சாகா வரம் வேண்டும், தேவர்கள்  தங்கள் காலடியில் விழ வேண்டும் என்றெல்லாம் விரும்புவார்கள். கடைசியில்  அடிபட்டு சாவார்கள்.

எந்த இன்பத்துக்கும் ஒரு அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி, வேறு எந்த இன்பமாக இருந்தாலும் சரி,  பேராசை படும் போது துன்பம் வந்து சேர்கிறது.

மேலும் மேலும் என்று அலையும் போது , துன்பம் வருகிறது.

மாம்பழம் நன்றாக இருக்கிறது என்று பத்து மாம்பழம் ஒன்றாகச் சாப்பிட்டால் ?

இன்பத்தின் மேல் அதிக நாட்டம்  துன்பத்துக்கு ஒரு காரணம்.

இன்னொன்று, துன்பத்தைக் கண்டு பயந்து ஓடுவது. என்னமோ துன்பமே வரக்கூடாது என்று நினைப்பது. வந்தால், அது உடனே ஓடி விட வேண்டும் என்று நினைப்பது.

துன்பம் இயல்பு என்று நினைக்க வேண்டும்.

தலை இருந்தால் தலைவலி வரும். மூக்கு என்று ஒன்று இருந்தால் அப்பப்ப சளி பிடிக்கும்.


உறவு என்று ஒன்று இருந்தால் உரசல் வரத்தான் செய்யும்.

இலாபம் வரும் போது , நட்டமும் வரும்.

துன்பம் இயல்பு என்று நினைக்க வேண்டும்.


துன்பம் வந்தால் அது ஏதோ வரக்கூடாதது வந்து விட்டது போல தையா தக்கா என்று குதிக்கக் கூடாது.

வராமல் இருந்து வந்தது. வந்த பின் போகும் என்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக, துன்பம் வந்தால் அப்படியே இருக்கச் சொல்லவில்லை. சரி, இதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொண்டு அதை நிவர்த்திக்க முயல  வேண்டுமே அல்லாமல், ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், கடவுளே உனக்கு கண் இல்லையா என்று புலம்பிக் கொண்டு இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால்

"துன்பம் உறுதல் இலன்" என்றார்.

உறுதல் என்றால் நிலைத்து நிற்றல், சேர்ந்து நிற்றல், உறுதியான என்று பொருள்.

அப்படி இருந்தால், துன்பம் வரும், ஆனால் வந்த துன்பம் நிலைத்து நிற்காது.

இப்போது இதன் மீதெல்லாம் உங்கள் ஆசை என்று பட்டியல் போடுங்கள். அதனால் வரும் துன்பங்களை நினைத்துப் பாருங்கள்.

தெளிவு  பிறக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/03/blog-post_30.html

1 comment:

  1. இன்பம் பிரச்சனை அல்ல; அந்த இன்பத்தை நாடி ஆசைப்பட்டு அலைவதே பிரச்சை. சரியான பேச்சுதான். நன்றி.

    ReplyDelete