Tuesday, April 24, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அன்பு பூண்டனென்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அன்பு பூண்டனென் 


தான் சொன்ன எதையும் இராவணன் கேட்கவில்லை என்றானபின், வீடணன் இல்லங்கையை விட்டு வெளியேறினான்.

அடுத்து என்ன செய்வது என்று அமைச்சர்களிடம் கேட்கிறான் வீடணன்.

இரண்டு விஷயங்களை கூறுகிறான் வீடணன்.

ஒன்று, அறத்தை தலையாகக் கொண்டவர்களிடம் நான் அன்பு கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது, புகழ் அல்லாத வாழ்வு எனக்கு வேண்டாம்

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள். என்று கேட்டான் வீடணன்.

மிக ஆழமான பொருள் கொண்ட பாடல். பார்ப்பதற்கு சாதாரண பாடல் போலத் தெரிந்தாலும், மிகுந்த அர்த்தம் உள்ள பாடல்.

பாடல்

அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான்.

பொருள்


அறம்தலை = அறத்தை தலைமை பண்பாகக் கொண்டு

நின்றவர்க்கு = நின்றவர்களிடம் (இராம இலக்குவனர்களிடம்)

அன்பு பூண்டனென்; = அன்பு கொண்டேன்

மறந்தும் = மறந்தும் கூட

 நன் புகழ் அலால்  = நல்ல புகழ் அல்லாத

வாழ்வு வேண்டலென்; = வாழ்வை விரும்ப மாட்டேன்

"பிறந்த என் = என் உடன் பிறந்த இராவணன்

உறுதி நீ பிடிக்கலாய்" எனாத் = தான் கொண்டதைப் போல செய்யும் செயலில் நான் உறுதியாக இல்லை என்று சொன்ன பின்

துறந்தனென்; = அவனைத் துறந்து விட்டேன்

இனிச் செயல் சொல்லுவீர் ' = இனி செய்யும் செயல் என்ன சொல்லுங்கள்

என்றான்.  = என்றான்

தீயவர்களுக்கு தீமை மேல் உள்ள உறுதி, நல்லவர்களுக்கு நல்லவை மேல் இருப்பது இல்லை.

கொஞ்சம் சிக்கல் வந்தாலும், நல்லவர்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒருவேளை நாம் செய்வது தவறோ என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விடுகிறது.

ஆனால், தீயவர்களோ, தாங்கள் செய்யும் தீமையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

உலகில் மிகப் பெரிய சிக்கல் அது தான்.

இலஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்க ஒரு அதிகாரி முயற்சி செய்கிறார். அவரை மற்றவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். அவரை ஊர் ஊராக மாற்றல் செய்கிறார்கள். கொஞ்ச நாளில் அவருக்கு சந்தேகம் வந்து விடுகிறது...தான் செய்வது சரிதானா என்று. எதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்.  நாமும்  மற்றவர்கள் போல் இலஞ்சம் வாங்கினால் என்ன என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்.

இராவணன் சொல்கிறான் வீடணனைப் பார்த்து

"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்"

என் உடன் பிறந்த நீ, என்னைப் போல உறுதியாக இல்லை என்று. இராவணனுக்கு தான் செய்யும் தீமை மேல் அவ்வளவு உறுதி.

அந்த மாதிரி உறுதி தளரும் வாய்ப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும் ?

தீயவர்களின் சகவாசத்தை விட்டு விலகி விட வேண்டும். அவர்கள் கூடவே இருந்தால் , அவர்கள் நம் உறுதியை குலைத்து நம்மையும் அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள். எப்போதெலலாம் நமக்கு குழப்பம் வருகிறதோ, அப்போது உடனடியாகச் செய்ய வேண்டியது, தீயவர்களை விட்டு விலக வேண்டும்.

"துறந்தனென்"

என்றான்.

அது மட்டும் அல்ல, நல்லவர்கள் பக்கம் சேர வேண்டும்.

வீடணன் சொல்கிறான்

"அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;"

அறத்தை தலையாகக் கொண்டவர்கள் மேல் எனக்கு அன்பு பிறக்கிறது என்று.

அறத்தை யார் தலையாகக் கொள்வார்கள் ? நல்லவர்கள்.

நல்லவர்கள் பால் சேர வேண்டும்.


தீயவர்களை விட்டு விலகி, நல்லவர்கள் பால் ஏன் சேர வேண்டும் என்றால், அப்போதுதான்  "நன் புகழ் " கிடைக்கும். 

இராவணன் கூட இருந்து சண்டை போட்டு உயிர் விட்டாலும் புகழ் கிடைக்கும். அது தீமைக்கு துணை நின்ற புகழ். மாற்றான் மனைவியை கபடமாக  கவர்ந்து வந்த ஒருவனுக்கு துணை நின்றதால் வரும் புகழ் நல்ல புகழா ? 

நல்ல புகழ் இல்லாத வாழ்வை மறந்தும் விரும்ப மாட்டேன் என்கிறான். 

"மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்"

நல்ல புகழ் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்கிறான்.

உங்கள் வாழ்வில் சிக்கலோ, குழப்பமோ வந்தால் முதலில் ,

கெட்டவர்களை விட்டு விலகுங்கள் 
நல்லவர்கள் பால் சேருங்கள் 
எது நீண்ட நல்ல புகழைத் தருமோ அதைச் செய்யுங்கள் 

கெட்டவர்கள் என்றால் தீமை செய்பவர்கள் என்று அர்த்தம் அல்ல. நம் தன்னம்பிக்கையை குலைப்பவர்கள் , நம் மேல் சந்தேகம் கொள்பவர்கள், நம் மீது பொறாமை கொண்டவர்கள்  ...அப்படிப் போன்றவர்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். தீயவர்கள் தாங்கள் கொண்ட நோக்கத்தில் மிக உறுதியாக இருப்பார்கள். 

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பழமொழி. 

வீடணன் சரணாகதி அடைந்தது சரியா தவறா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 

அந்த சரணாகதியில் நமக்கு கம்பன் தரும் பாடம் என்ன என்று கண்டு, சரி என்றால் அதை கடை பிடிப்பதல்லவா நமக்கு நல்லது ?

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_24.html





2 comments:

  1. அருமையான விளக்கம்.நன்றி.

    ReplyDelete
  2. மிக நல்ல விளக்க உரை. நன்றி.

    ReplyDelete