Thursday, April 5, 2018

திருக்குறள் - மாத்தி யோசி

திருக்குறள் - மாத்தி யோசி 



பாடல்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

பீலிபெய் = மயில் பீலி (தோகை )

சாகாடும் = சகடம், வண்டியின் சக்கரம்

அச்சுஇறும் = அதை இணைக்கும் அச்சு,

அப்பண்டம் = அந்த பண்டம், அதாவது மயில் தோகை

சால = அதிகமாக

மிகுத்துப் = மிகுதியாக

பெயின் = ஏற்றினால்

மயிலின் தோகை மிக மிக மென்மையானது. எடை குறைந்தது. லேசானது. எடை குறைவாகத் தானே இருக்குறது என்று அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும்.

இது அரசர்களுக்குச் சொன்னது.

சின்ன பகைதானே என்று சேர்த்துக் கொண்டே போனால், ஒரு நாள் அந்த சின்ன பகை எல்லாம்  ஒன்றாக சேர்ந்து கொண்டு உன்னை அழித்து விடும் என்று மன்னர்களுக்கு எச்சரிக்கை செய்தார் வள்ளுவர்.

இதனையே நாம் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன ?

நல்ல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே வந்தால், அது பெரிய  தீமையை வீழ்த்தி விடும்.

அது எப்படி ? சில உதாரணங்கள் பார்ப்போம்.


உடல் எடை என்பது பெரும்பாலானோருக்கு ஒரு பெரிய தலை வலி. என்ன செய்தாலும்  அது குறைவது இல்லை. அதிக எடை என்பது ஒரு தீமை தான். அந்தத் தீமையை எப்படி மாற்றுவது ?

சின்ன சின்ன நல்ல விஷயங்களாக செய்து கொண்டே போனால், எடை பருமன் என்பது  முற்றாக வீழ்ந்து விடும்.

முதலில் தினமும் 30 நிமிடம் நடப்பது என்று வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டாம். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம்  நடக்க வேண்டும். ஒரு மாடி, இரண்டு மாடி என்றால் லிப்ட் உபயோகப் படுத்தாமல் படி ஏறி போக வேண்டும். வீடு அல்லது அலுவலகம் ஐந்தாவது மாடியில் இருக்கிறதா ? இரண்டு மாடி ஏறிப் போய் அங்கிருந்து லிப்ட் பிடித்து போகலாம். காரை நிறுத்தி விட்டு, கொஞ்சம் சுத்தி  போகலாம்.

காப்பி டீயில் போடும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைக்க வேண்டும்.

எண்ணெய் பலகாரம், இனிப்பு போன்றவற்றை உண்ண விரும்பினால் ஒன்றுக்கு மேல் சாப்பிடுவது இல்லை என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் அளவை கொஞ்சம் குறைக்க வேண்டும். மூன்று தோசை சாப்பிடும் இடத்தில்  இரண்டு சாப்பிட வேண்டும்.

பணம் சேர்க்க வேண்டும். என்ன செய்யலாம் ?

எவ்வளவோ வெட்டி செலவு இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். வெளியில் சாப்பிடும் அளவை குறைக்க வேண்டும். மாதம் இரண்டு முறை என்றால், ஒரு முறையாக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அவசரப்படாமல், நிதானமாக யோசித்து நல்ல விலையில் பொருள்களை வாங்க வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக   நல்ல விஷயங்களை செய்து கொண்டே வந்தால், பணத் தட்டுப்பாடு என்ற வண்டியின் அச்சு முறிந்து போகும். அதாவது அந்த பிரச்சனை அகன்று விடும்.

பரீட்சைக்கு படிக்க வேண்டுமா. அரட்டை அடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். whatsapp நேரத்தை குறைக்க வேண்டும். ஊர் சுற்றுவதை குறைக்க வேண்டும். இப்படி தவறான வழியில் செல்லும் நேரத்தை குறைத்து அதை படிப்பில் செலவழித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"சால மிகுத்து பெயின்"

சாலை என்றால் அதிகம் என்று பொருள். சால , உறு , தவ, நனி , கூர், கழி என்பன  "அதிகமான" என்ற ஒரு பொருளை குறிக்கும் பல உரிச்சொற்கள்.

சால மிகுத்துப் பெயின் என்று சொல்லும் போது மிக அதிகமாக செய்ய வேண்டும் என்கிறார்.

சின்ன சின்ன நல்ல காரியங்களை மிக அதிகமாச் செய்தால் , தீமை அழிந்து போகும்.

கொஞ்சம் நடக்கனும் , கொஞ்சம் படி ஏற வேண்டும், கொஞ்சம் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், கொஞ்சம் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும் ..இப்படி செய்து வந்தால், எடை அதிகம் என்ற வண்டி அச்சு முறிந்து விடும்.


தினமும் நடக்கிறேன், எடையே குறைய மாட்டேன் என்கிறதே என்று அலுத்துக் கொள்ளக் கூடாது. நடப்பது நல்லது. ஆனால் அது மட்டும் போதாது. நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் முனேற்றம். அவ்வளவுதான்.  ஆனால், நிறைய  விஷயங்களில் அந்த சின்ன சின்ன முன்னேற்றம் இருக்க வேண்டும்.


நாலு டீ குடிக்கும் இடத்தில், மூணு டீ குடிக்கலாம். அந்த மூணு டீயிலும் , முழு  கிளாஸ் குடிப்பதற்கு பதில் , முக்கால் கிளாஸ் குடிக்கலாம். அந்த முக்கால் கிளாஸிலும் , இரண்டு தேக்கரண்டி சர்கரைக்குப் பதில் ஒரு தேக்கரண்டி மட்டும் போட்டுக் கொள்ளலாம். அருகில் உள்ள கடையில் குடிப்பதற்கு பதில் நாலு கடை தள்ளி நடந்து சென்றும் குடித்து விட்டு வரலாம். போகும் போதும் வரும் போதும் லிப்ட் உபயோகிக்காமல் படி இறங்கி ஏறலாம்.

சின்ன சின்ன முன்னேற்றம் என்பது கடினமாக இருக்காது.

யோசித்துப் பாருங்கள்.

எளிய வழியில், பெரிய சிக்கல்களை விடுவிக்கும் வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_5.html




1 comment:

  1. நல்ல கருத்து உள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete