Sunday, April 29, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன் 



நம் நண்பர்களிடம் நம்மைப் பற்றி கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள். "...அவரா...அவர் இன்னது படித்து இருக்கிறார்..இங்கே வேலை செய்கிறார்...கல்யாணம் ஆகி ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் இருக்கிறார்கள்.." என்று நம்மைப் பற்றிச் சொல்லுவார்கள். நம் குணத்தைப் பற்றி என்ன சொல்லுவார்கள்?

உங்கள் நண்பர்கள் , உங்களைப் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருப்பார்கள் ? உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள், உங்கள் கணவன்/மனைவி, உங்கள் பிள்ளைகள் உங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ? கேட்டுப் பாருங்கள் ஒரு நாள். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.

இராவணனை விட்டு விலகி வந்த வீடணன், அமைச்சர்களோடு இராமனை காண வருகிறான். அப்போது, அங்கிருந்த வானரங்கள் எல்லாம், வீடணனை "அடி ,பிடி, கொல் " என்று கோபத்தோடு வந்தனர். அந்த சமயம், அனுமன் அனுப்பிய இரண்டு தூதர்கள் வீடணனிடம் "நீ யார்" என்று கேட்டனர். அதற்கு, வீடணனின் அமைச்சர் பதில் தருகிறான்

"சூரிய குலத்தில் தோன்றிய உலகின் நாயகனான இராமனின் பாதங்களை சரண் அடைந்து, உய்யும் வழி தேடி வந்திருக்கிறான். தகைமை வாய்ந்த மனதை உடையவன், நீதி தர்மம் இவற்றின் வழி நிற்பவன், ப்ரம்மாவின் பேரனின் மகன் " என்றான்.

அவ்வளவு உயர்வாக சொல்கிறான் வீடணனைப் பற்றி.

பாடல்

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன்-
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்.

பொருள்



'பகலவன்  வழி முதல் =  சூரிய குலத்தில் தோன்றியவன்

பாரின் நாயகன் = உலக நாயகன் (முதல் உலக நாயகன் பட்டம் பெற்றவன் இராமன்)

புகல் அவன் கழல்  = சரணம் அவன் திருவடிகள் என்று

அடைந்து = அடைந்து

உய்யப் போந்தனன் = கடைத்தேற வந்திருக்கிறான்

தகவு உறு சிந்தையன் = தகைமை நிறைந்த சிந்தை உள்ளவன் . தகைமை என்றால் தகுதி, பெருமை, சிறப்பு என்று பொருள்

தக்கார் தாகவுள்ளார் அவரவர்தம் எச்சத்தால் காணப்படும் என்பது வள்ளுவம்.  தகுதி உள்ளவர் யார், தகுதி இல்லாதவர் யார் என்று அவரவர் விட்டுச் செல்லும் மிச்சத்தால் காணப்படும்.

தரும நீதியன் = தர்மம் மற்றும் நீதியை கடைப் பிடிப்பவன்

மகன் மகன் மைந்தன் = பேரனின் மகன்

நான்முகற்கு = பிரம்மாவிற்கு

வாய்மையான் = உண்மையானவன்


நம்மிடம் நல்ல குணங்கள் இருந்தால் மட்டும் போதாது. அது வெளிப்படவும் வேண்டும்.  துன்பப் படுபவர்களை கண்டு வருந்தினால் போதாது, அவர்கள் துன்பத்தைப்  போக்க ஏதாவது செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நல்ல குணத்திற்கு ஒரு மதிப்பு இருக்கும்.  நல்ல குணங்கள் வெளிப்பட வேண்டும்.

வீடணன் தகவு உறு சிந்தையன் , தரும நீதியன் , வாய்மையாளன் ...அவனுடைய அந்த நல்ல குணங்கள் வெளிப்பட்டது இராமனிடம் புகல் தேடி வந்ததில்.

இராமனிடம் சரண் அடைந்தது இவ்வளவு உயரிய குணங்களின் வெளிப்பாடு.

அது தவறு என்று சொல்லுவது எதன் வெளிப்பாடாக இருக்கும்?

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_29.html

1 comment:

  1. தர்மமும் நியாயமும் எங்கு உள்ளதோ அங்கு விபீஷணன்சேர்வது மிக சரியாகப்படுகிறது. த்வாபர யுகத்தில் சான்றோர்களான பீஷ்மர், துரோணர் துரியோதன்னின் அதர்ம செயலகள் தெரிந்தும் சோற்று கடன் என நியாயப்படுத்தி அவனுடன் செயல்பட்டது எவ்வளவு வித்தியாசமாக படுகிறது.
    வேறுபட்ட யுகமானதால் தர்மம் மாறுமா என்ன?

    ReplyDelete