Thursday, April 26, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - புன் புறப் பிறவியின் பகைவன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - புன் புறப் பிறவியின் பகைவன் 


உள்ளுணர்வு என்று சொல்லுவார்கள்.

அறிவுக்கு அப்பாற்பட்டது அது. தர்க்கத்திற்கு அடங்கியது அல்ல. ஒருவரைப் பார்தவுடன் அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று மனம் முடிவு செய்து விடும். அவரைப் பற்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது அல்ல. பார்த்த ஒரு கணத்தில் மனதில் அந்த எண்ணம் பிறந்து விடும்.

முதல் பார்வையில் காதல் என்பார்கள் (Love at first sight).

இந்த உள்ளுணர்வோடுதான் நாம் எல்லோரும் பிறக்கிறோம். இருந்தும் நாளடைவில் நமது கல்வி முறை, நமது சுற்றுப் புறம் இவற்றின் தாக்கத்தால் இந்த உள்ளுணர்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறோம்.

எல்லாமே தர்க்கம் (logical reasoning ) பண்ணித்தான் அறிந்து கொள்கிறோம்.

இதயத்தில் இருந்து விலகி நாம் தலைக்குள் குடி போய் விட்டோம்.

இன்றும் கூட பெண்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகமாக இருப்பதைக் காணலாம். கணவன் எங்காவது ஊர் சுற்றிவிட்டு வந்தால், வந்த ஒரு நொடியில் அவளுக்குத் தெரியும் இவன் எங்கோ ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறான் என்று. பிள்ளகைள் சொல்லும் பொய்களை ஒரு கணத்தில் தாய் கண்டு பிடித்துவிடுவாள்.

கணவன் முகத்திலோ பிள்ளைகள் முகத்திலோ கொஞ்சம் மாறுதல் இருந்தாலும்  போதும், அவர்கள் உடனே ஏதோ சரி இல்லை என்று கண்டு பிடித்து விடுவார்கள்.  அது பெண்மையின் குணம்.

வீடணன் சொல்கிறான்,

"இராமனை நான் முன்னப் பின்ன பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. அவன் மேல் இவ்வளவு அன்பு பிறக்கக் காரணம் என்ன என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. நெஞ்சம் உருகுகிறது. அவன் இந்த பொல்லாத பிறவியின் பகைவன் போலும் "

என்று


பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்


'முன்புறக் கண்டிலென் = முன்பு பார்த்தது இல்லை

கேள்வி முன்பு இலென் = கேள்விப் பட்டதும் இல்லை

அன்பு உறக் காரணம்  = அவன் மேல் அன்பு கொள்ளக் காரணம்

அறியகிற்றிலேன் = அறிய  மாட்டேன்

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிர்கிறது

 நெஞ்சு உருகுமேல் = நெஞ்சம் உருகுகிறது

அவன் = அந்த இராமன்

புன் புறப் பிறவியின் = கீழான இந்த பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது

காதல் வயப்பட்ட யாரிடமாவது கேட்டுப் பாருங்கள் ..."உனக்கு ஏன் அந்தப்
பெண்ணை அல்லது ஆணை பிடித்து இருக்கிறது" என்று.

"ஏன்னா என்ன சொல்றது. பிடிச்சிருக்கு. அவ்வளவுதான்" என்பதுதான் பதிலாக இருக்கும்.

காரணம் எல்லாம் தெரியாது.

காதல், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.

நாளையே இறைவன் உங்கள் முன்னால் வந்து நின்றாலும் உங்களுக்கு நம்பிக்கை வராது. அவர் ஏதாவது magic செய்து கட்டினால் தான் நம்புவீர்கள். காரணம், உள்ளுணர்வு இறந்து விட்டது. எல்லாம் மூளையைப் பற்றி நடக்கிறது.

வீடணன் உருகுகிறான்.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்று அருணகிரிநாதர் பாடியத்தைப் போல, "நெஞ்சம் உருகுகிறது" என்கிறான்.

இராமன் மேல் அன்பு பிறக்கிறது. அதற்கு காரணம் தெரியாமல் தவிக்கிறான். முன்னப் பின்ன தெரியாதவர்கள் மேல் இவ்வளவு காதலா ? அனுபவம் இருந்தால் எளிதாகப் புரியும்.

இந்தப் பிறவிச் சுழலை அழித்து ஒழிப்பவன் இந்த இராமன் என்கிறான்.

"புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்."

இந்த பிறவி என்ற பெரிய கடலை யார் நீந்திக் கரை சேர்வார்கள் என்றால், இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டவர்கள். மற்றவர்கள் கரை சேர மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் . நீந்தாதார் இறைவனடி சேராதார்

என்பது வள்ளுவம்.

வீடணன் , இராமனை சென்று அடைந்ததற்கு காரணம் அவனுக்கே தெரியாது. இராமனை அவன் பார்த்தது கூட கிடையாது. அவனைப் பற்றி வீடணனுக்கு ரொம்ப ஒண்ணும் தெரியாது.

ஏதோ ஒரு ஈர்ப்பு.  அவன் உள்ளுணர்வு சொல்கிறது. "அவனிடம் போ, அவன் இந்தப் பிறவிப் பிணியை மாற்றுவான் " என்று.

அவன் செய்தது சரியா தவறா என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளாமல், நாம் செய்ய வேண்டியது என்ன என்று யோசிக்கலாமே ?

உள்ளுணர்வை கூர்மை படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம், இதயம் சொல்வதைக் கேளுங்கள். அது ஒரு போதும் தவறு செய்யாது என்பது என் முடிவு.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_26.html

2 comments:

  1. As some one said,'The heart has its reasons,and they aren't debate topics.'
    உள்ளுணர்வால் ஒருவரை மிகவும் பிடித்து போய்விடும்.ஆனால் அவரை இறைவனாக உணர்வது புண்யசாலிகளுக்குதாம் வரும் என்பது என் எண்ணம்.
    நீங்கள் சொன்னதுபோல் இறைவனை புத்தியால் அடையமுடியாது,
    உள்ளுணர்வோடு கூடிய பக்தியால் தான் முடியும்.அருமையான பதிவு.

    ReplyDelete
  2. மறுபடியும் கம்ப ராமாயணம் பாடல்களையெல்லாம் உங்கள் வலைப்பதிவிலிருந்து படிக்க ஆரம்பித்துள்ளேன்.
    இதயத்திலிருந்து விலகி நாம்தலைக்குள் குடி போய்விட்டோம் என்பது உண்மை.
    கம்ப ராமாயணம் வார்த்தைக்கு வார்த்தை உரையுடன் புத்தகம் ஏதாவது கிடைக்குமா?புத்தகத்தின் தலைப்பும் ப்ப்ளிஷரின் பெயரையும் கொடுக்க இயலுமா? kpartha12@gmail.com

    ReplyDelete