Monday, April 30, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - நளிர் மலர்க் கையினன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - நளிர் மலர்க் கையினன் 


இராமனிடம் அடைக்கலம் என்று வந்த வீடணனை, இராமனின் மந்திரிகள் மறித்து அவனிடம் விவரம்  கேட்டனர். பின், வீடணனை   அங்கேயே நிறுத்தி விட்டு இராமனிடம் சென்று கூறுகிறார்கள் அந்த மந்திரிகள்.

"பின்னால் நடக்கப் போவதை நாங்கள் அறிய மாட்டோம். வந்திருப்பவன் பெயர் வீடணன். குளிர்ந்த மலர் போன்ற கைகளை உடையவன். நான்கு பேரோடு வந்திருக்கிறான். களவும் வஞ்சனையும் கொண்ட இலங்கை வேந்தனின் இளவல்"

என்றனர்.

பாடல்


விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான்.

பொருள்

விளைவினை  = வரப் போகின்ற வினைகளை

அறிந்திலம்; = அறிய மாட்டோம்

வீடணப் பெயர் = வந்திருப்பவன் பெயர் வீடணன்

நளிர் = குளிர்ந்த

மலர்க் = மலர் போன்ற

கையினன், = கைகளை உடையவன்

நால்வரோடு உடன் = நான்கு பேரோடு வந்திருக்கிறான்

களவு இயல் = களவை இயல்பாகக் கொண்ட

வஞ்சனை  = வஞ்சனையான

இலங்கை காவலற்கு = இலங்கை வேந்தனுக்கு

இளவல்,  = இளையவன்

நம் சேனையின்  = நமது சேனையின்

நடுவண் எய்தினான் = நடுவில் வந்து இருக்கிறான். .

நமக்குத் தோன்றும் உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அவயத்தின் மூலம்  வெளிப்படுகின்றன.

கோபம் வந்தால் பல்லைக் கடிப்போம் , கண் சிவக்கும்.

காமம் வந்தால், காது சிவக்கும், இதயம் பட பட என அடித்துக் கொள்ளும்.

பயம் வந்தால் வயிற்றை என்னவோ செய்யும்.

பொறாமை வந்தால் வயிறு எரியும்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்

என்பார் வள்ளுவர்.

அந்தந்த உணர்ச்சிகள் சரியான படி வெளிப்படாவிட்டால், அவை சம்பந்தப் பட்ட  உடல் அவயங்களை அவை பாதிக்கும்.

"இதயமே வெடித்து விடும் போல இருக்கு" என்று சொல்வதில்லையா.

கள்ளத்தனமும், கயமையும் இருந்தால் உடல் விறைப்பாக இருக்கும். யார் எங்கே வருகிறார்கள் என்று கண் அலையும். இதயம் பட பட என அடித்துக் கொள்ளும். உடல் சூடாகும்.

வீடணன் கை , குளிர்ந்த மலர் போல மென்மையாக இருக்கிறதாம்.

வாள் , வேல் பிடித்து சண்டை போட்டு காய்த்துப் போன கை அல்ல.

மலர் போல மென்மையான கை.

குளிர்ந்த கை. கை குளிர்ந்து இருப்பதால், உடலும் குளிர்ந்து இருக்கும். மனதில் கோபம்,பயம் இல்லை.

அவ்வளவு பெரிய சேனைக்கு நடுவில் தைரியமாக , நாலே நாலு பேரோடு வந்திருக்கிறான்.

தான் செய்வது சரி என்பதில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. இராமனிடம் தூது விடவில்லை. நேரே வந்து  விட்டான்.  இறைவனுக்கும் நமக்கும் நடுவில் தரகர்கள் எதற்கு?

இறைவன் இவ்வளவு சமீபம் வந்த பின்னும், நடுவில் இன்னொரு தரகர் எதற்கு?

களவை இயல்பாகக் கொண்ட, வஞ்ச மனம் படைத்த இராவணனின் தம்பி.

குணம் என்பது குலத்தால் வருவது அல்ல. மூன்று சகோதரர்கள். இராவணன், வீடணன், கும்ப கர்ணன். குணத்தில் எவ்வளவு வேறுபாடு.

குலத்தால் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை என்று கம்பன் எடுத்துக் காட்டும் இடம்.

நான்கு வரியில் எத்தனை பாடம்.

படிக்கத்தான் நேரம் இல்லை.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_30.html

2 comments:

  1. "இறைவனுக்கும் நமக்கும் நடுவில் தரகர்கள் எதற்கு?" என மிக அழகாக சொன்னீர்கள்.
    தர்மம் கூட இருக்கும்போது வேறு என்ன துணை வேண்டும்? கூடவந்திருப்பவர்கள்
    விபீஷணனைப் போல ராவணன் செய்யும் அதர்மத்திற்கு துணை போகாதவர்களாக இருக்கக் கூடும்.

    ReplyDelete
  2. "நளிர் மலர்க் கையினன்" என்ற மூன்றே வார்த்தைகளில் எவ்வளவு செய்தி சொல்லி விட்டனர்!

    ReplyDelete