Thursday, August 2, 2012

கம்ப இராமாயணம் - கைகேயி எதனால் மனம் மாறினாள் ?


கம்ப இராமாயணம் - கைகேயி எதனால் மனம் மாறினாள் ?


கூனி ஏதேதோ சொல்லி கைகேயியின் மனத்தை மாற்ற முயற்சி செய்தாள். ஒன்றும் பலிக்கவில்லை.

கடைசியில் அவள் ஒன்று சொன்னாள். அதனால கைகேயி மனம் மாறினாள்.

அது என்ன ஒன்று ?

"இராமன் பட்டம் சூட்டிய பின், உன்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு நீ எப்படி உதவி செய்வாய் ?

கோசலையிடம் கேட்டு வாங்கித் தருவாயா ?
இல்லையென்றால், அவர்களுக்கு உதவி செய்யாமல் வெறும் கையேடு அனுப்பி விடுவாயா ?

இல்லை உதவி செய்ய முடியவில்லையே என்று வெட்கப்பட்டு உன் உயிரை விட்டு விடுவாயா ?"

என்று கூனி கைகேயியை கேட்டாள்.

தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற நினைப்பு கைகேயியை மனம் மாறச் செய்தது.....


தூண்டும் இன்னலும் வறுமையும்
    தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு,
    இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ?
    விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ?
    எங்ஙனம் வாழ்தி?


தூண்டும் = பிறரிடம் சென்று உதவி கேட்கத் தூண்டும்

இன்னலும், = துன்பமும்

வறுமையும், = ஏழ்மையும்

தொடர்தரத் துயரால் = அவர்களை தொடருந்து வர 

ஈண்டு வந்து = அதிலிருந்து விடு பட, அவர்கள், இங்கு உன்னிடம் வந்து

உனை இரந்தவர்க்கு, = உன்னிடம் உதவி என்று யாசிப்பவர்களுக்கு

இரு நிதி, = தானத்தை

அவளை = கோசலையையை

வேண்டி ஈதியோ? = கேட்டு, வாங்கித் தருவாயா ?

வெள்குதியோ? = அல்லது கோசலையிடம் கேட்க வெட்கப்பட்டு (அல்லது) உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாததை நினைத்து வெட்கப்படுவாயா ?

விம்மல் நோயால் = அந்த வருத்தத்தால் விம்மி

மாண்டு போதியோ? = இறந்து போவாயா ?

மறுத்தியோ? = உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யாமால் மறுத்து அவர்களை வெறும் கையோடு அனுப்பி விடுவாயா ?

எங்ஙனம் வாழ்தி? = எப்படி வாழப் போகிறாய் ?

அதை கேட்ட கைகேயின் மனம் மாறத் தொடங்குகிறது...அதை கூட கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறான் என்று பின்னால் பார்ப்போம்....





1 comment:

  1. This means that Kaikeyi did not have any confidence in Rama that she would be treated equal to Kosala. I wonder when and how she started feeling that way.

    ReplyDelete