Sunday, August 5, 2012

கம்ப இராமாயணம் - தீமையா ? நன்மையா ?


கம்ப இராமாயணம் - தீமையா ? நன்மையா ?


கூனியின் போதனையால் கைகேயி மனம் மாறினாள். அவள் மனம் மாறியதற்கு காரணம் கூனியின் போதனை மட்டும் காரணம் அல்ல...

"அரக்கர்களின் பாவமும், தேவர்களின் தவமும் ஒன்று சேர, தன் அருள் மனம் மாறி, இந்த உலகம், வரும் காலம் எல்லாம் இராமனின் புகழ் என்னும் அமுதினை பருக" வழி செய்தாள் என்கிறான் கம்பன். 


அரக்கர் பாவமும்,
     அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள்
     தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ,
     இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ்
     அமுதினைப் பருகுகின்றதுவே?

அரக்கர் பாவமும் = அரக்கர்கள் செய்த பாவமும்

அல்லவர் இயற்றிய அறமும் = (அரக்கர் ) அல்லாதவர் (அதாவது தேவர்கள்) இயற்றிய தவமும்

துரக்க = துரத்த, பின் தொடர்ந்து வந்து தள்ள

நல் அருள் துறந்தனள் = தன் அருள் உள்ளத்தை துறந்தாள் (கைகேயி)

தூ மொழி மடமான்; = தூய மொழி பேசும் மான் போன்ற கைகேயி

இரக்கம் இன்மை அன்றோ = அவளின் இரக்கம் இன்மை அல்லவா

இன்று = இன்றும்

இவ் உலகங்கள், = இந்த உலகங்கள் எல்லாம்

இராமன் = இராமனின் 

பரக்கும் தொல் புகழ் = பரந்து விரிந்து பழைய புகழ் என்ற

அமுதினைப் பருகுகின்றதுவே? = அமுதினை பருகுகின்றது

அமுதம், உடலையும் உயிரையும் ஒன்றிணைக்கும். 
இராமனின் புகழைப் படித்தால், படித்தவர் சொல்லக் கேட்டால், அது அமுதம் போல் நன்மை பயக்கும்...
அந்த நன்மைக்கு வித்திட்டவள் கைகேயி







1 comment:

  1. அருமையான பாடல்
    கலித்துறை
    (மா விளம் விளம் விளம் மா)

    அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்
    துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்;
    இரக்கம் இன்மையன் றோஇன்றிவ் உலகங்கள், இராமன்
    பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே? 78

    - மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்


    ReplyDelete