இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன்
ஒரு சாபத்தால் அரக்கனாக பிறந்த விராதன், இராமனிடம் போராடி, அவன் பாதம் பட்டதால் , சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன், சில சொல்லுகிறான்.
பிரமனுக்கும், மற்றும் உள்ள தேவர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் நீயே முதல் தந்தை. நீ தந்தை என்றால் , தாய் யார் ? தருமத்தின் வடிவாக நின்றவனே.
பாடல்
ஓயாத மலர் அயனே முதல் ஆக
உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால்
ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின்
தனி மூர்த்தி!
பொருள்
ஓயாத = இடைவெளி இல்லாமல், தொடர்ந்து
மலர் அயனே = தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன்
முதல் ஆக = தொடங்கி
உளர் ஆகி = உள்ளவர்கள் ஆகி
மாயாத வானவர்க்கும் = இறப்பு என்பது இல்லாத வானவர்களுக்கு
மற்று ஒழிந்த = அவர்களைத் தவிர
மன்னுயிர்க்கும் = நிலைத்த உயிர்களுக்கும்
நீ ஆதி முதல் தாதை, = நீயே முதலில் தோன்றிய தந்தை
நெறி முறையால் = சரியான வழியில்
ஈன்று எடுத்த = பெற்றெடுத்த
தாய் ஆவார் யாவரே?- = தாயாக இருப்பவர் யார் ?
தருமத்தின் = அறத்தின்
தனி மூர்த்தி! = தனிச் சிறப்பானவனே
எனக்கு ஒரு அப்பா இருக்கிறார். அவருக்கு ஒரு அப்பா இருக்கிறார், அதாவது என் தாத்தா. இப்படி போய் கொண்டே இருந்தால், முதன் முதலில் ஒருவர் வேண்டும் அல்லவா . அந்த முதல் தந்தை நீதான் என்று இராமனை வணங்குகிறான் விராதன்.
பிரமனுக்கும், தேவர்களுக்கும், மற்றும் உள்ள உயிர்களுக்கும் நீயே தந்தை என்று சொல்லிவிட்டு, "சரி, தந்தை நீயானால், தாய் யார் " என்று கேள்வியும் கேட்கிறான்.
கேள்வியிலேயே பதிலை ஓட்ட வைக்கிறார் கம்பர் ?
தாய் யாராக இருக்க முடியும் என்று கேட்கிறான். கேட்டு விட்டு, "தர்மத்தின் தனி மூர்த்தி" என்று முடிக்கிறான்.
அது மட்டும் அல்ல, உடலுக்கு தந்தை யார் என்று தெரியும். உயிருக்கு யார் தந்தை ? "நீயே தர்மத்தின் தனி மூர்த்தி" என்று சொல்கிறான் விராதன்.
சரி, தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்றால், தாய் வேண்டுமே ? தாய் இல்லாமல் தந்தை எப்படி என்ற கேள்வி எழும் அல்லவா ?
ஆதி மூலத்துக்கு தந்தை என்ன, தாய் என்ன ? எல்லாம் ஒன்று தான்.
அவன் தந்தையானவன். தாயும் ஆனவன்.
நீயே தாயும் தந்தையும் என்று சொல்லி முடிக்கிறான் விராதன்.
அம்மையும் நீ, அப்பனும் நீ என்பார் மணிவாசகர். அம்மையே அப்பா.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
அப்பன் நீ, அம்மை நீ என்பார் நாவுக்கரசர்.
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
ஊர்ந்த செல்வன் நீயே.
மூன்று வயது ஞான சம்பந்தர், குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய தந்தை திருக்குளத்தில் நீராட , நீரில் மூழ்கினார். தந்தையை க் காணாத குழந்தை அழுதது. குளத்தை பார்த்தல்லவா அழ வேண்டும். அது கோபுரத்தைப் பார்த்து அழுதது. எப்படி ?
அம்மே, அப்பா என்று அழுதது.
மெய்ம்மேற்கண் டுளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ? சாரும்பிள் ளைமைதானோ?
செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்
"தம்மே! யப்பா! வென்றென்றழுதருளி யழைத்தருள.
சேக்கிழார் உருகுகிறார்.
அம்மே அப்பா என்று எண்ணி அழைத்து அருளி அழைத்து அருள என்று சேக்கிழார் நெகிழ்கிறார். மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் ததும்பும் பாடல்.
காணாமல் போனது அப்பா. பிள்ளை அழுவதோ, அம்மே, அப்பா என்று. அம்மாவைத் தேடி பின் அப்பாவைத் தேடுகிறது.
இரண்டும் வேறா என்ன ?
காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்,
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டரையாதன கண்டேன் என்றார் நாவுக்கரசர்.
ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக அனுப்புடன் இருப்பதைப் பார்த்த அவருக்கு , அது இறை வடிவமாகவே தெரிகிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதுதான் மூலம். அது தான் ஐக்கியம்.
சொல்லிக் கொண்டே போகலாம்.
காலம் கருதி சுருக்கி உரைத்தேன்.
சிந்தித்துணர்க.
http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_21.html