Thursday, August 30, 2018

வில்லி பாரதம் - பழி தீர் வென்றி

வில்லி பாரதம் - பழி தீர் வென்றி


எத்தனையோ பாவங்கள் இருக்கின்றன. ஆவின் முலை அறுத்தோர், குருவுக்கு துரோகம் செய்தோர், கற்புடைய பெண்களின் கற்பை சூறையாடியோர், அரசனுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்தோர் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. அதில் உள்ள எந்த பாவத்தை செய்தாலும் அதற்கு ஒரு வடிகால் உண்டு, பாவ மன்னிப்பு உண்டு. ஆனால், பாவ மன்னிப்பே இல்லாத ஒரு பாவம் உண்டு என்றால், அது செய் நன்றி கொன்ற பாவம் தான்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய் நன்றி கொன்ற மகற்கு 

என்பது வள்ளுவம்.

அவ்வளவு பெரிய பாவம் அது.

கௌரவர்களும் பாண்டவர்களும் யுத்தம் செய்ய தயாராகி விட்டார்கள். நாட்டை போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நேரம். கர்ணனை பாண்டவர் பக்கம் சேரும்படி குந்தி வேண்டுகிறாள். தாய் என்று தெரிந்தும், கௌரவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தும், செய்நன்றி காட்ட கௌரவர்கள் பக்கம் நிற்பேன் என்கிறான் கர்ணன்.

பாவம்

ஆரென்றறியத் தகாத என்னை அரசுமாக்கி முடிசூட்டி
பேரும் திருவும் தனது பெருஞ் செல்வம் யாவும் தெரிந்தளித்தான்
பாரின்றறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றிப் பாண்டவர்க்கும்
போரென்றறிந்தும் செய்ந் நன்றி போற்றாதவரில் போவேனோ


பொருள்

ஆரென்றறியத் தகாத என்னை  = நான் யார் என்று அறிய முடியாத என்னை

அரசுமாக்கி = அரசனாக்கி

முடிசூட்டி = முடி சூட்டி

பேரும் = உயர்ந்த பேரும்

திருவும் = செல்வங்களும்

தனது பெருஞ் செல்வம் யாவும் = தனது பெரிய செல்வங்கள் யாவும்

தெரிந்தளித்தான் = பார்த்து பார்த்து தெரிந்து எடுத்து கொடுத்தான்

பாரின்றறிய = பார் இன்று அறிய

நூற்றுவர்க்கும் = நூறு பேரான கௌரவர்களுக்கும்

பழி தீர் வென்றிப் = பழி இல்லாத வெற்றி கொண்ட

பாண்டவர்க்கும் = பாண்டவர்களுக்கும்

போரென்றறிந்தும்  = போர் என்று அறிந்தவுடன்

செய்ந் நன்றி = செய் நன்றி

போற்றாதவரில் = போற்றாதாரில்  ?

 போவேனோ = போவேனா ? (போக மாட்டேன்)

துரியோதனன், கர்ணனுக்கு சும்மா அள்ளிக் கொடுத்து விடவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்து எது கரன்னனுக்கு தேவை என்று தெரிந்து எடுத்துக் கொண்டுத்தான்.

ஒன்றும் இல்லாதவனை அரசனாக்கி, பேரும் புகழும் தந்து அவனை எங்கோ கொண்டு போய் நிறுத்தினான்.


அந்த செய் நன்றி கடனுக்காக, கர்ணன் போராடி உயிர் விட்டான்.

அவன் நினைத்திருந்தால் பாண்டவர் பக்கம் போய் , அரசை ஆண்டிருக்கலாம்.

போகவில்லை. செய் நன்றிக்காக உயிரையும் கொடுத்தான்.




http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_30.html

Wednesday, August 22, 2018

அறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் ?

அறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் ?


தினமும் எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறது அறப்பளீச்சுர சதகம்


பாடல்

மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;
  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;

காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;
  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;

நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;
     நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
  நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,
     நேர்அலர் இடத்தில் வைரம்;

ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்; எமது
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


பொருள் 

" மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;"



மாதா பிதா , அதாவது பெற்றோரிடம் உள்ளன்புடன், கனிவுடன் மாறாத  ஒழுக்கத்தோடு  இருக்க வேண்டும்.  இந்தக் கால பிள்ளைகளுக்கு இதைச் சொல்லித் தர வேண்டும்.  சிறு வயது முதல்.  பெற்றோரிடம் அன்பும், கனிவும் , ஒழுக்கமும் இருக்க வேண்டும். 



"  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;"



ஆசிரியருக்கு, ஆச்சாரியருக்கு இனிமையான உபசார வார்த்தைகள் சொல்லி, அவரை வழிபட்டு, அவர் முன் அடக்கமுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும்  பெற்றோர்கள் வாய்க்கும். பெற்றோர் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால், எல்லோருக்கும் குரு அமையாது.  இறைவனே குரு வடிவில் வந்துதான்  அருள் புரிவான் என்கிறார் அருணகிரிநாதர்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

குருவுக்கு -  இனிய உபசார வார்த்தை, வழிபாடு, அடக்கம். 


" காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;"



காது வரை நீண்ட கரிய கண்களை உடைய மனைவிக்கு பள்ளி அறையில் இனிய சொல் வேண்டும்.  அது என்ன மனைவி என்றால் படுக்கை அறையில் மட்டும் தான் நல்ல சொல் வேண்டுமா ? மனைவி என்பவள் அதற்கு மட்டும் தானா  என்று கேட்கலாம். கேட்பார்கள்.

அது அப்படி அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகை பாராட்டினால் மிகவும் பிடிக்கும். மனைவியின் அழகை நண்பர்கள் முன் பாராட்டினால் என்ன நடக்கும். "உன் மூக்கு கிளியோபாட்ரா மூக்கு மாதிரி இருக்கு " என்று நண்பர்கள் மத்தியில் சொன்னால், அவனும் கூடவே "ஆமாம் ஆமாம், அதில் ஒரு சிகப்பு கல் மூக்குத்தி போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் " என்பான். அது மட்டும் அல்ல, நீங்கள் மூக்கை பாராட்டினால், "மூக்கு என்ன சார் மூக்கு, அந்த இடுப்பைப் பாருங்கள் " என்று நம்மோடு சேர்ந்து அவனும் பாராட்டத் தலைப்படுவான். தேவையா?

எனவே, மனைவியை பாராட்டுவது என்றால், தனிமையில் இருக்கும் போது மனம் விட்டு பாராட்ட வேண்டும்


" கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;"




அறிவில் மிகுந்த பெரியோர், முதியவர் போன்றவற்றுக்கு கருணையுடன் , அருளோடு  பொருள் உதவி செய்ய வேண்டும்.

" நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;"


பதவியில் இருப்பவர்களிடம் (அரசன்) பயம் கலந்த விநயத்துடன் இருக்க வேண்டும்.


" நெறியுடைய பேர்க்கு இங்கிதம்; "


நல்வழியில் செல்பவர்களுக்கு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும்.


" நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,"


நேசம் உள்ள உறவினர்களிடம் மனம் மகிழ்ந்து பரிவுடன் இருக்க வேண்டும். 

" நேர்அலர் இடத்தில் வைரம்;"


நேர் அலர் = பகைவர். பகைவர்களிடம் வைரம் போல உறுதியான மனதுடன் எதிர்த்து நிற்க வேண்டும். 


" ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்;"

பழைய மனு நூல் சொல்லும் முறை இது ஆகும். 


Monday, August 20, 2018

அறப்பளீசுர சதகம் - செய்ய முடியாத செயல்

அறப்பளீசுர சதகம் - செய்ய முடியாத செயல் 


அறப்பளீசுர சதகம் என்ற நூல் அம்பலவாண  கவிராயர் என்பவரால் எழுதப் பட்டது.  கொல்லிமலையில் உள்ள சிவன் மேல் பாடப்பட்ட நீதி நூல். மிக மிக எளிமையான நூல். 100 பாடல்களை கொண்டது.  அதில் இருந்து ஒரு  பாடல்.  பிடித்திருந்தால் , மற்ற பாடல்களை மூல நூலை படித்து  அறிக.

உலகில் யாராலுமே செய்ய முடியாத ஒன்று  இருக்கிறது.  எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும்  முடியாது.  அது என்ன காரியம் தெரியுமா ?

பாடல்


நீர்மே னடக்கலா மெட்டியுந் தின்னலா
நெருப்பைநீர் போற் செய்யலாம்
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலா
நீளரவி னைப்பூண லாம்
பார்மீதில் மணலைச் சமைக்கலாஞ் சோறெனப்
பட்சமுட னேயுண் ணலாம்
பாணமொடு குண்டுவில கச்செய்ய லாமரப்
பாவைபே சப்பண் ணலாம்
ஏற்மேவு காடியுங் கடையுற்று வெண்ணெயு
மெடுக்கலாம் புத்தி சற்று
மில்லாத மூடர்த மனத்தைத் திருப்பவே
எவருக்கு முடியாது காண்
ஆர்மேவு கொன்றைபுனை வேணியா சுரர்பரவு
மமலனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே. 15

பொருள்


நீர்மே னடக்கலாம் = நீர் மேல் நடக்கலாம்

எட்டியுந் தின்னலாம் = விஷம் நிறைந்த எட்டிக் காயையும் தின்னலாம்

நெருப்பைநீர் போற் செய்யலாம் = நெருப்பை நீர் போல குளிரச் செய்யலாம்

நெடிய = நீண்ட

பெரு வேங்கையைக் = பெரிய புலியை

கட்டியே தழுவலாம் = கட்டித் தழுவலாம்

நீளரவி னைப் = நீள் + அரவினை =  நீண்ட பாம்பை

பூண லாம் = ஆபரணமாக அணிந்து கொள்ளலாம்

பார்மீதில் = உலகில்

மணலைச் சமைக்கலாஞ் = மணலை சமைக்கலாம்

சோறெனப் = சோறு என்று

பட்சமுட னேயுண் ணலாம் = பலகாரமாக அதை உண்ணலாம்

பாணமொடு = அம்பு

குண்டு = துப்பாக்கி குண்டு

விலகச் செய்ய லாம் = விலகி ஓடும்படி செய்யலாம்

மரப் பாவை = மர பொம்மையை

பே சப்பண் ணலாம் = பேசும்படி செய்யலாம்


ஏற்மேவு காடியுங் = காடியை

கடையுற்று = கடைந்து

வெண்ணெயு மெடுக்கலாம் = வெண்ணை எடுக்கலாம்

புத்தி சற்று மில்லாத = புத்தி இல்லாத

மூடர் தம் மனத்தைத் = மூடர்களின் மனதை

திருப்பவே எவருக்கு முடியாது = திருப்ப யாருக்கும் முடியாது

காண் = கண்டு கொள்

ஆர்மேவு = விருப்பமுடன்

கொன்றை = கொன்றை மலரை

புனை வேணியா = புனைபவனே

சுரர் = தேவர்கள்

பரவு = போற்றும்

மமலனே = அமலனே

யருமை = அருமை

மதவேள்  = தேவனே

அனுதினமும் = அனு தினமும்

மனதினினை = மனதில் நின்னை

தரு சதுர கிரிவள = தருகின்ற சதுர கிரி வளர்

அறப்பளீ சுர தேவனே = அறப்பளீசுர தேவனே

http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_20.html

Friday, August 17, 2018

திருக்குறள் - தவம் என்றால் என்ன?

திருக்குறள் - தவம் என்றால் என்ன?


தவம் என்றால் என்ன ? ஏதோ காட்டில் போய், மரத்தடியில், புற்று மேலே வளர, சோறு தண்ணி இல்லாமல், கடவுளை நோக்கி வணங்குவதா தவம் ?

இல்லை.

இலக்கியங்கள் எதையும் மிகைப் படுத்தியே சொல்லும். அப்போதுதான் அது படிக்க சுவையாக இருக்கும். ஒருவன் கொஞ்சம் பலமானவனாக இருந்தால், அவனை "ஆயிரம் யானை பலம் கொண்டவன் " என்று வர்ணிப்பது இலக்கியத்தின் வழி.

ஆயிரம் யானை பலம் என்றால் சராசரியை விட கொஞ்சம் அதிக பலம் கொண்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அது போல, காட்டில் சென்று , சோறு தண்ணி இல்லாமல், ஆயிரம் ஆண்டுகள் இறைவனை நோக்கி வழிபடுவது தவம் என்று சொன்னால், பசி தூக்கம் பார்க்காமல் வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது என்று அர்த்தம்.

நான் சொல்லவில்லை. வள்ளுவப் பேராசான் சொல்கிறார்.


பாடல்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

பொருள்

உற்ற = வந்துவிட்ட

நோய் = துன்பம்

நோன்றல் = ஏற்றுக் கொள்ளுதல்

உயிர்க்கு = மற்ற உயிர்களுக்கு

உறுகண் = துன்பம்

செய்யாமை = செய்யமால் இருத்தல்

அற்றே = அதுவே

தவத்திற்கு உரு = தவத்தின் வடிவம்


வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுவதும், மற்ற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருப்பதுவே  தவத்தின் வடிவம்.

நோய் என்றால் துன்பம்.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நாம் நினைக்கலாம்.

சற்றே சிந்திப்போம்.

நமக்கு ஒரு துன்பம் வந்து விட்டால் நாம் என்ன செய்வோம்?

முதலில், துன்பம் தாங்காமல் புலம்புவோம். ஐயோ, எனக்கு இப்படி ஆகி விட்டதே, ஏன்தான் எனக்கு மட்டும் இப்படி வருகிறதோ என்று புலம்பித் தள்ளுவோம்.

அடுத்தது, இந்த துன்பத்திற்கு யார் காரணம் என்று யோசிப்போம். யாரையாவது  பலி கடாவாக்கி அவர்களை திட்டி தீர்ப்போம்.

மூன்றாவது, நமக்கு இந்த துன்பம் வரக் காரணமாக இருந்தவர்களுக்கு ஒரு துன்பம்  வரவேண்டும் என்று விரும்புவோம்.

ஒண்ணும் இல்லை, மனைவி ஒரு நாள் காப்பியில் சர்க்கரை கொஞ்சம் கூட குறைய  போட்டு விட்டால்...அந்தத் துன்பத்தை நம்மால் சகிக்க முடிகிறதா ? அவளை திட்டி தீர்க்க வேண்டியது. அவளை ஏச வேண்டியது. அவள் மனம் நோகும்படி  ஏதாவது சொல்ல வேண்டியது.

சாலையில் போகும் போது, டிராபிக் சிக்னலில் கொஞ்ச நேரம் நிற்க வேண்டி வந்தால், நொந்து கொள்வது, யாரையாவது திட்ட வேண்டியது.

சாலை குண்டும் குழியுமாக இருந்தால் பொறுமை அத்து யார் யாரையெல்லாமோ திட்டுவோம்.

இப்படி, நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளாமல், தவிக்கிறோம்.

அதே சமயம், நமது துன்பத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க நினைக்கிறோம்.  அப்படியே இல்லாவிட்டாலும், நமது இன்பத்துக்காக மற்றவர்களை துன்பப் படுத்த நினைக்கிறோம்.

இது வெளி உலகில் நடப்பது. வீட்டில், "இந்த குடும்பத்துக்காக நான் எவ்வளவு உழைக்கிறேன். உழைத்து உழைத்து ஓடாய் தேய்கிறேன். எனக்கு ஒரு மரியாதை இருக்கா இந்த வீட்டில்" என்று அலுத்துக் கொள்கிறோம்.

துன்பம் என்று வந்து விட்டால், அதை அமைதியாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

வீட்டுக்கு உழைப்பது, நாம் பணி புரியும் நிறுவனத்துக்கு உழைப்பது, இந்த சமுதாயத்துக்கு உழைப்பது எல்லாம் கொஞ்சம் துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். பொறுத்துக் கொண்டு உழைப்பதுதான் தவம்.

அதே சமயம், இன்னொரு உயிருக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது. உடலாலோ,மனதாலோ  மற்ற உயிரை துன்புறுத்தக் கூடாது.

அனைத்து உயிர்களிடமும் அன்போடு, மென்மையாக, கருணையுடன் பழக வேண்டும்.

யார் மனமும் புண் படும்படி பேசக் கூடாது.

நாம் வலியை பொறுத்துக் கொள்ள பொறுத்துக் கொள்ள , நம் வலிமை கூடும். மிகப் பெரிய வலிமையுடன், மற்றவர்கள் பால் அன்பாக நடந்தால் நம் மதிப்பு, மரியாதையும், செல்வாக்கும் உயரும்.

தவத்தால் வரும் பலன் அது.

நாளை முதல், கொஞ்சம் பசி, கொஞ்சம் காய்ச்சல், கொஞ்சம் தலைவலி , கொஞ்சம் உடல் வலி, கொஞ்சம் மன வலி இவற்றை பொறுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

பலன் இன்றி உழைப்பது துன்பம் தான். எதுக்கு கிடந்து இவ்வளவு கஷ்டப் பட வேண்டும் என்ற சலிப்பு வரத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

எல்லோரிடமும் அன்பாக, இனிமையாக பேசுங்கள்.

நீங்களும் ஒரு தவம் செய்பவர்தான்.

தவம் செய்வதன் பலன் உங்களுக்கும் கட்டாயம் கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post.html








Sunday, August 12, 2018

வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?

வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?


வில்லிப் புத்தூர் ஆழ்வாரின் இழையும் தமிழ்.

கர்ணனின் பிறப்பு இரகசியத்தை அவனிடம் கூறி, அவனை பாண்டவர் பக்கம் வரும்படி கண்ணன் கூறுகிறான். அதற்கு கர்ணன் கூறுவதாக வில்லியாரின் பாடல்கள் அத்தனையும் தேன்.

"கண்ணனா, அன்று கன்று வடிவில் வந்த ஒரு அரக்கனை, அந்த கன்றின் காலைப் பற்றி அருகில் உள்ள விளா மரத்தின் மேல் எரிந்து கொன்றாய். புல்லாங்குழல் ஊதி ஆவினங்களை அழைத்தாய். மலையை தூக்கிப் பிடித்து உன் ஆயர்பாடி மக்களை காத்தாய். உன்னால், இன்று என் பிறப்பின் இரகசியத்தை அறிந்தேன். ஆனால், இப்போது பாண்டவர் பக்கம் போனால், இந்த உலகம் என்னைப் பார்த்து சிரிக்காதா ?  என்கிறான்

பாடல்

கன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின் 
             கணம் அழைத்தும், 
குன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும் 
             செல்வக் கோபாலா! 
'இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்' என்று அன்பு 
             உருகி, எம்பியர்பால் 
சென்றால், என்னை நீ அறியச் செகத்தார் 
             என்றும் சிரியாரோ?

பொருள்

கன்றால் = கன்றுக் குட்டியால்

விளவின் = விளா மரத்தின்

கனி = பழங்களை

உகுத்தும் = உதிர்ந்து விழும்படி செய்தும்

கழையால் = புல்லாங்குழலால்

நிரையின் = பசுக்களின்

கணம் = கூட்டத்தை

அழைத்தும் = அழைத்தும்

குன்றால் = மலைக் குன்றால்

மழையின் =மழையில் இருந்து

குலம் தடுத்தும் = யாதவர் குலத்தை தடுத்து காத்தும்

குலவும் = உலவும்

செல்வக் கோபாலா! = செல்வச் சிறப்புள்ள கோபாலா (கண்ணா)

'இன்றால்,  = இன்று

எனது பிறப்பு உணர்ந்தேன் = எனது பிறப்பின் இரகசியத்தை அறிந்து கொண்டேன்

என்று = என்று கூறினான்

அன்பு உருகி = அன்பினால் உருகி

எம்பியர்பால் = என் தம்பிமார்களிடம்

சென்றால் = சென்றால்

என்னை = என்னைப் பார்த்து

நீ அறியச் = நீ பார்க்கும்படி

செகத்தார் = இந்த உலகில் உள்ள மக்கள் எல்லோரும்

என்றும் சிரியாரோ? = இன்று மட்டும் அல்ல, என்றென்றும் சிரிக்க மாட்டார்களா ?

இது நேரடியான பொருள்.

வில்லியின் சொல்லுக்குள் இன்னொரு பொருளும் உண்டு.


கன்றால் விளவின் கனி உகுத்தும் = மாயக் கண்ணா, நீ கன்று குட்டியை எறிந்து விளா மரத்தின் கனியை உதிர்த்தாய். நான் கன்றுக் குட்டியும் இல்லை, துரியோதனன் விளா மரமும் இல்லை

கழையால் நிரையின்  கணம் அழைத்தும், = வேணு கோபாலா, உன் குழல் இசைக்கு பசுக் கூட்டம் வரலாம். நான் மயங்க மாட்டேன்.

குன்றால் மழையின் குலம் தடுத்தும் = நீ குன்றை உயர்த்தி சரம் சரமாய் பெய்யும் மழையில் இருந்து உன் யாதவ கூட்டத்தை காப்பாற்றினாய். ஆனால், என் வில்லில் இருந்து சரம் சரமாய் பாயும் அம்பு மழையில் இருந்து பாண்டவ கூட்டத்தை உன்னால் காக்க முடியாது



வில்லி புத்தூராரின் வார்த்தை ஜாலம்.

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_12.html