திருக்குறள் - சிரிப்பும் மகிழ்ச்சியும்
ஒரு நாளில் எத்தனை நிமிடம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் மகம் மலர்ந்து சிரிக்கிறீர்கள்? சிரிக்காவிட்டாலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள்?
ஏன் நாள் முழுவதும் சந்தோஷமாக இல்லை ? எப்போதும் சிரித்த முகத்துடன் ஏன் இருக்க முடியவில்லை? நாம் மனதுக்குள் மகிழ்வதை யார் தடுக்க முடியும்? இருந்தும் நாம் எப்போதாவது சந்தோஷமாக இருக்கிறோம். பெரும்பாலும் சிரித்த முகத்துடன் இருப்பது இல்லை.
உங்களை விடுங்கள், உங்களை சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களில் எத்தனை பேர் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்? எத்தனை பேர் மகிழ்ச்சியை மனதில் தேக்கி இன்பமாக இருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லோருமே உங்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எப்போதாவது மகிழ்வது, எப்போதாவது சிரிப்பது என்று.
இந்த மகிழ்ச்சியையும், சிரிப்பையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ளும் பகைவன் யார் தெரியுமா ?
வேறு யாரும் அல்ல, நம் கோபம் தான்.
வள்ளுவர் சொல்கிறார்
பாடல்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
பொருள்
நகையும் = முகத்தில் தோன்றும் புன்னகையும்
உவகையும் = மனதில் தோன்றும் சந்தோஷத்தையும்
கொல்லும் = கொல்லும்
சினத்தின் = சினத்தை விட
பகையும் = பகை
உளவோ பிற = வேறு ஏதாவது இருக்கிறதா ? (இல்லை என்பது பொருள்)
கோபம்தான் நம் புன்னகையையும், சந்தோஷத்தையும் கொல்கிறது.
அப்படியா, நான் அப்படி ஒன்றும் யார் மேலும் கோபப் படுவதே இல்லையே. என் மனைவி/கணவனை கேட்டுப் பாருங்கள். சத்தம் போட்டு ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. இருந்தும் நான் சந்தோஷமாக இல்லையே. என்று சிலர் சொல்லலாம்.
கோபம் என்றால் தாம் தூம் என்று குதிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
சாலையில் போகிறோம், குண்டும் குழியுமாக இருக்கிறது. அரசாங்கத்தின் மேல் கோபம் வருகிறது.
சாலை ஒழுங்கை கடை பிடிக்காமல் குறுக்கும் நெடுக்கும் போகும் ஆட்டோக்காரர்களை கண்டால் கடுப்பு வருகிறது.
சரியாக படிக்காத பிள்ளை, புரிந்து கொள்ளாத கணவன் / மனைவி, ஆட்டிப் படைக்கும் மாமியார், ஊழல் நிறைந்த சமுதாயம், நமக்கு வர வேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் உடன் வேலை செய்பவர்கள், துரோகம், நிராகரிப்பு என்று பலப் பல காரணங்களுக்காக நாம் கோப படுகிறோம்.
பிள்ளைகள் சொன்னால் கேக்காது.
மாமியாரிடம் சொல்லவும் முடியாது.
கணவனுக்கு சொன்னால் பிடிக்காது.
மனைவியிடம் சொன்னால் அதில் ஒரு குற்றம் கண்டு பிடிப்பாள்.
அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினால், பிடி வாரண்டு வரும்.
கோபத்தை மனதுக்குள்ளேயே போட்டு குமைகிறோம்.
சிந்தியுங்கள்.
கோபம் என்றால் சத்தம் போடுவது, சண்டை போடுவது மட்டும் அல்ல. கையாலாகாவிட்டாலும் கோபம் வரும்.
அந்த கோபம் தான், நம் மகிழ்ச்சியை, புன்னகையை நம்மிடம் இருந்து பறித்துப் போட்டு விடுகிறது.
கோபத்தை விடுங்கள். மனம் அமைதியாகும். அமைதியான மனதில் இன்பம் , ஆனந்தம், புன்னகை எல்லாம் பிறக்கும்.
பிறக்கட்டும்.
http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_25.html