Sunday, September 9, 2018

விவேக சிந்தாமணி - உறவும் சுற்றமும்

விவேக சிந்தாமணி - உறவும் சுற்றமும் 


நாம் தனியாக வாழ முடியாது. உறவும், சுற்றமும், நட்பும், வேண்டும். இந்த உறவும், சுற்றமும், நட்பும் ஒரு பலம். இவை வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பவை. வாழுவுக்கு வளம் சேர்ப்பவை.

எப்படி இந்த உறவையும், நட்பையும் பெறுவது. எப்படி சிலருக்கு மட்டும் இது நன்றாக வாய்க்கிறது. சிலருக்கு  அவ்வளவாக வாய்ப்பதில்லை. ஏன் ?

ஒரு பெரிய ஏரி. நீர் நிறைந்து இருக்கிறது. கரை எல்லாம் பசுமை. மரங்கள் உயர்ந்து செழிப்பாக வளர்ந்து இருக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த மரங்களில் வந்து தங்கி இருக்கின்றன. கூடு கட்டி , குஞ்சு பொரித்து, இன்பமாக வாழ்கின்றன.

கோடை வந்தது. நீர் எல்லாம் வற்றிப் போனது. மரங்கள் இலைகளை உதிர்த்து கிளை விரல் நீட்டி வானம் பார்த்து நின்றன.

அங்கிருந்த பறவைகள் எல்லாம் வேறிடம் தேடிப் போய் விட்டன.

உறவும், நட்பும், சுற்றமும் அப்படித்தான். பறவைகளை வா வா என்று என்று அந்த ஏரி அழைக்கவில்லை. நீர் வற்றிய பின், போ போ என்றும் சொல்லவில்லை.

உங்களிடம் செல்வமும், இனிய சொல்லும், இருந்தால் நட்பும், சுற்றமும் தானே தேடி வரும். இல்லை என்றால், அவை தானே போய் விடும்.


பாடல்

ஏரிநீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்,
மாரிநீர் மறுத்த போது வந்து அதில் இருப்பது உண்டோ?
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்தபோதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே.       


பொருள்

ஏரிநீர் நிறைந்த போது  = ஏரியில் நீர் நிறைந்து இருக்கும் போது

அங்கு இருந்தன பட்சி எல்லாம் = அங்கு பறவைகள் எல்லாம் வந்து இருந்தன

மாரிநீர் மறுத்த போது = மழை நீர் பெய்வது நின்ற போது

வந்து அதில் இருப்பது உண்டோ? = அந்தப் பறவைகள் அங்கு இருக்குமா ? (இருக்காது)

பாரினை ஆளும் வேந்தன் = உலகை ஆளும் அரசனாக இருந்தாலும்

பட்சமும் = அன்பும்

மறந்தபோதே = இல்லாது போனால்

யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே = அவனோடு இருக்காமல் எல்லோரும் போய் விடுவார்கள்

அரசன் கதி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை.

நல்ல குணம், செல்வம், அன்பு, இனிய சொல்லால் உங்களை நிறைத்து வையுங்கள்.

உறவும் நட்பும் தானே உங்களைத் தேடி வரும்.

1 comment: