Showing posts with label திருசதகம். Show all posts
Showing posts with label திருசதகம். Show all posts

Wednesday, February 25, 2015

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை 


இந்திரன் வாழும் இந்திர லோகம்,  திருமால் வாழும் பரம பதம், பிரம்மா வாழும் சத்ய உலகம் இது எல்லாம் கிடைத்தாலும் வேண்டாம்.

சரி, இது எல்லாம் வேண்டாம், என்ன தான் வேண்டும் ? வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ? இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்...இது எல்லாம் வேண்டாம்...நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை...

இது என்னடா புதுக் குழப்பம்.  வைகுண்டம் வேண்டாம், நரகம் வேண்டும் என்கிறாரே இந்த மணிவாசகர்.

"இறைவா, உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம்" என்கிறார்.

இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை.

என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு சேர மாட்டேன் என்கிறார். அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை.

தீயவரே ஆயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறுவான். அது எப்படி தீயவர்களை நட்பாக கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. சுக்ரீவனின் நண்பன் தீயவனாக இருக்க மாட்டான் என்பது இராமனின் நம்பிக்கை.

 பாடல்


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

பொருள்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு = புரந்தரன் என்றால் இந்திரன். மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா. அவர்களின் வாழ்வே கிடைத்தாலும் கொள்ள மாட்டேன். 


குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்;  = என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதோரோடு சேர மாட்டேன்


நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்;= உன் திருவருள் இருக்கப் பெற்றால், நரகமே கிடைத்தாலும் இகழ மாட்டேன்


இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; = உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் 


எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே

இறை அருள் போதும். வேறு எதுவும் வேண்டாம். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று  கூறுகிறார்.

வழி இருக்கிறது. நமக்கு போகத்தான் மனம் இல்லை.



Monday, February 23, 2015

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே 


திருச் சதகம் என்பது 100 பாடல்களை கொண்டது. பத்து தொகுதிகளாக உள்ளது.

மணி வாசகர் உருகி உருகி எழுதி இருக்கிறார்.

முடிந்தால் அனைத்தையும் எழுத ஆசை.

முதல் பாடல்.

என் உடலில் வியர்வை அரும்பி, உடல் விதிர் விதிர்த்து, என் தலைமேல் கைவைத்து உன் திருவடிகளை , கண்ணீர் ததும்ப, வெதும்ப, உள்ளத்தில் பொய்யை விட்டு, உன்னை போற்றி, ஒழுக்கத்தை கை விட மாட்டேன்....என்னை கொஞ்சம் கண்டு கொள்ளேன் " என்று உள்ளம் உருகுகிறார்.


பாடல்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, `போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

பொருள்

மெய் தான் அரும்பி = உடலில் வியர்வை அரும்பி

விதிர்விதிர்த்து = நடு நடுங்கி

உன் = உன்னுடைய

விரை ஆர் = மனம் பொருந்திய

கழற்கு = திருவடிகளுக்கு

என் = என்னுடைய

கை தான் தலை வைத்து =  கையை தலைமேல் வைத்து

கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி

வெதும்பி = வெதும்பி

உள்ளம் = உள்ளமானது

பொய் தான் தவிர்ந்து = பொய்யை விடுத்து

உன்னை = உன்னை

`போற்றி, சய, சய, போற்றி!' = போற்றி,  சய சய போற்றி

என்னும் = என்ற

கை தான் நெகிழவிடேன் = கை என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தை கை விட மாட்டேன்

உடையாய்! = உடையவனே

என்னைக் கண்டுகொள்ளே = என்னை கண்டு பின் (ஆட் ) கொள்வாய் 

வழிபாடு எப்படி இருக்க வேண்டும் ?

உடலால், மொழியால், உள்ளத்தால்

"மெய் தான் அரும்பி, 
விதிர்விதிர்த்து, 
என் கை தான் தலை வைத்து, 
கண்ணீர் ததும்பி"

இது எல்லாம் உடல் மூலம் பக்தி செலுத்துவது.

"உள்ளத்தில் பொய்யை விட்டு"

இது மனதால் பக்தி செய்வது

"போற்றி, சய, சய, போற்றி!" 

இது வாக்கால் பக்தி செய்வது

மூன்று கரணங்களாலும் வழி படுவது என்றால் இதுதான்.

இன்னொன்று,

வழிபடும்போது கையை தலைக்கு மேல் உயர்த்தி வழிபட வேண்டும்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 

என்பார் அடிகள் திருவாசகத்தில்

தலைக்கு மேல் கையை உயர்த்தி ஏன் வழிபட வேண்டும் ?