Showing posts with label aga naanooru. Show all posts
Showing posts with label aga naanooru. Show all posts

Sunday, February 4, 2018

அகநானூறு - நீங்குதல் மறந்தே

அகநானூறு - நீங்குதல் மறந்தே 


பொருளாதாரம் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

பல வீடுகளில் கணவன் காலையில் ஒரு ஏழு அல்லது எட்டு மணிக்கு வேலைக்குப் போனால் இரவு வரும் போது எட்டு அல்லது ஒன்பது ஆகி விடும். அலுவலக நேரம் போக நிறைய நேரம் போக்குவரத்தில் போய் விடுகிறது.

இரவு வந்த பின், களைப்புதான் இருக்கும். போதா குறைக்கு பல நேரங்களில் conference call என்று வீட்டுக்கு வந்த பின்னும் வேலை தொடரும்.

வேலை இல்லாவிட்டாலும், அலுவலக சிந்தனையில் இருப்பார்கள்.

கொடுமை என்ன என்றால், பெண்களும் இப்போது வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைக்கு மேல் , வீட்டு வேலையும் அவர்களுக்கு சேர்ந்து கொள்கிறது.

கணவன் மனைவிக்கு இடையில் அன்பை பரிமாறிக் கொள்ள நேரம் இல்லை.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் செலவழிக்க நேரம் இல்லை.

ஓடி ஓடி சம்பாதித்து, களைத்த பின், அந்த சம்பாதித்த பணத்தை மருத்துவரிடம் தந்துவிட்டு ....என்ன ஆயிற்று நம் வாழ்க்கைக்கு என்று ஏங்குவதே முடிவாக இருக்கும்.

இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனை இல்லை.

சங்க காலம் தொட்டு நிகழ்வதுதான்.

அக நானூறில் ஒரு பாடல்.

அது ஒரு வறண்ட பாலை நிலம். மழை பெய்து ஆண்டு பல ஆகி விட்டன. பச்சை நிறமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்.

அந்த பொட்டை காட்டில் , ஒரு பெரிய மரம். அதுவும் பட்டுப் போய் இருக்கிறது. மரத்தின் அடி பாகத்தில் ஒரு பெரிய ஓட்டை. அதன் மூலம் வெப்பக் காற்று வீசும் போது ஊய்ய்ய் என்று சத்தம் வருகிறது.

மரத்தின் உச்சியில் ஒரு பருந்து கூடு. அதில் வாழும் இரண்டு பருந்துகள். அடிக்கடி தின்று விட்டு போட்ட மிச்ச மாமிச துண்டுகளில் இருந்து மாமிச வாடை அடித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கூண்டில்.

அடிக்கிற வெயிலிலும், உலர்ந்த காற்றிலும், அந்த பருந்துகளின் இறக்கையில் தீப் பிடித்தது போல  ஒரு தோற்றம்.

அந்தக் காட்டின் வழி சென்று, பொருள் தேடி வர நினைக்கிறான் கணவன்.

அவனுக்குள் ஒரு சஞ்சலம்.

மனைவியை விட்டு பிரிய வேண்டும். அவளின் அன்பு, அவளின் காதல், அவள் அணைப்பு தரும் சுகம் , இவற்றை எல்லாம் விட்டு விட்டுப் போகவும் மனம் இல்லை. பொருள் பெரிதா, மனைவியோடு இருந்து அவள் தரும் அன்பு பெரிதா என்ற கேள்வி அவன் முன் நிற்கிறது.

அவன் என்ன முடிவு செய்தான் ?

பாடல்

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
2
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி   5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
3
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது,                 10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.

பொருள் 

ஆள் வழக்கு அற்ற  = ஆள் அரவம் அற்ற


சுரத்திடைக் = காட்டு வழியில், காட்டின் இடையில்

கதிர் தெற = வெயில் மண்டைய பிளக்க

நீள் = நீண்ட, இங்கு அதிக

எரி பரந்த = அனல் பறக்கும்

நெடுந் = நெடிய, உயரமான

தாள் = அடி , அடி மரம்

யாத்து = 'யா ' என்ற மரத்தின்

போழ் வளி முழங்கும் = அடி மரத்தில் போகும் காற்று முழக்கம் செய்ய

புல்லென் = பொலிவற்ற (இலை , பூ இல்லாத)

உயர்சினை = சினை என்றால் உறுப்பு. இங்கே கிளை. உயர்ந்த கிளையில்


முடை நசை = மாமிச  நாற்றம் அடிக்கும்

இருக்கைப் = இருக்கும் இடம். கூடு

பெடை முகம் நோக்கி = பெண் பருந்தின் முகம் நோக்கி

ஊன் பதித்தன்ன = மாமிச துண்டை ஒட்டி வைத்தது போல

வெருவரு = அச்சம் தரும்

செஞ் செவி = சிவந்த காதுகளை கொண்ட

எருவைச் = பருந்து

சேவல் = சேவல்

கரிபு  = கரிந்து

சிறை  = சிறகு

தீய = தீய்ந்து போகும் படி

வேனில் நீடிய = உயர்ந்த மூங்கில்

வேய்  உயர் நனந்தலை = அகன்ற பெரிய காடுகளில்

நீ = நீ , தலைவன் தன் நெஞ்சுக்கு சொல்லுகிறான்

உழந்து எய்தும்  = கஷ்டப்பட்டு   அடையும்

செய்வினைப் = வேலை செய்ததால் கிடைக்கும்

பொருட் பிணி = ஈட்டிய பொருள்கள், செல்வங்கள்

பல் இதழ் = பல இதழ்கள் கொண்ட (மலர் போன்ற )

மழைக் கண்  = மழை போன்ற குளிர்ச்சியான கண்கள்

மாஅயோள்வயின் = மாநிறம் போன்ற அவளை

பிரியின் = பிரிந்த பின்

புணர்வது ஆயின் = அடைவது என்றால் (செல்வத்தை)

பிரியாது = அவளை விட்டுப் பிரியாமல்

ஏந்து முலை  = எடுப்பான மார்பகங்கள்

முற்றம் வீங்க = அன்பினால் நிறைவடைய

பல் ஊழ் = பல முறை

சேயிழை  = சிவந்த அணிகலன்களை   அணிந்த பெண்

தெளிர்ப்பக் = ஒலிக்க ,  அவள்அ கட்டி அணைக்கும் போது கேட்கும் வளையல் சத்தமும், உன்னை கண்டவுடன் ஆர்வமாக ஓடி வரும் அவளின் கொலுசு சத்தமும்

கவைஇ, நாளும் = நாள் தோறும்

மனைமுதல் = வீட்டில் இருந்து (உள்ளூரிலேயே இருந்து )

வினையொடும் = வேலை செய்து

உவப்ப = மகிழ்ச்சியோடு இரு

நினை = அது பற்றி நினை

மாண் நெஞ்சம்! = சிறந்த நெஞ்சே

நீங்குதல் மறந்தே = அவளை விட்டு நீங்குதலை மறந்தே

பொருள் தேவைதான். பொருளை விட சிறந்தது மனைவியின் அன்பு.

அப்படி சிறப்பாக நினைக்க வேண்டும் - கணவன்.

அது சிறப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும் - மனைவி.

 அன்புக்கும் நேரம் ஒதுக்குங்கள். வாழ்வு இனிக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_4.html



Saturday, April 12, 2014

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?


பெரிய எரி. பரந்த நீர் பரப்பு.  அதன் மேல் சிலு சிலுவென வீசும் காற்று.

அந்த ஏரியின் கரையில் பெரிய மூங்கில் காடு. அங்குள்ள மூங்கில் மரங்களில் (மூங்கில் ஒரு வகை புல் இனம்) வெள்ளை வெள்ளையாக பூக்கள் பூத்து இருக்கின்றன. அது ஏதோ பஞ்சை எடுத்து ஒட்டி வைத்தது மாதிரி இருக்கிறது.

அந்த மூங்கில்களை ஒட்டி சில பெரிய மரங்கள். அந்த மரங்களில் உள்ள இளம் தளிர்களை காற்று வருடிப் போகிறது.

ஏரியில் உள்ள மீன்களை உண்டு குருகு என்ற பறவை அந்த மர நிழலில் இளைப்பாறுகின்றன. உண்ட மயக்கம் ஒரு  புறம்.தலை வருடும் காற்று மறு பக்கம். சுகமான மர நிழல். அந்த குருகுகள் அப்படியே கண் மூடி உறங்குகின்றன.

ஊருக்குள் கரும்பும் நெல்லும் செழிப்பாக விளைந்திருகின்றன.

அந்த ஊரில் ஒரு விலைமாது, தலைவனைப் பற்றி இகழ்வாகப் பேசிவிட்டு சென்றாள் . அது மட்டும் அல்ல அவனை நோக்கி ஒரு பார்வையை  வீசிவிட்டு,அவன் அணிந்திருந்த மாலையை பறித்துச் சென்றாள் . அவள், தலைவி இருக்கும் வீதி வழியே சென்றாள். இதைத் தலைவி , தலைவனிடம் கூறுகிறாள்.



பெரும்பெயர் மகிழ்ந பேணா தகன்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
5. ஆர்குரு குறங்கும் நீர்சூழ் 1வளவயற்
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட
10. மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை யொருத்தி
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் 2பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறுதுனி செய்தெம்
15. மணன்மலி மறுகின் இறந்திசி னோளே.

Tuesday, February 26, 2013

அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்


அகநானுறு - அவனோடு சென்ற நெஞ்சம்

காதலனின் பிரிவால் காதலி வாடி இருக்கிறாள். அப்போது அவளுடைய தோழி வந்து கேட்க்கிறாள்...

தோழி: என்னடி, ஒரு மாதிரி இருக்க, உடம்பு கிடம்பு சரி இல்லையா ?

அவள்: அதெல்லாம் ஒண்ணும்  இல்லை, இந்த காலத்துல யாரை நம்பறது யாரை நம்பாம இருக்கிறது அப்படின்னு தெரியல..ஒரே குழப்பமா இருக்கு ...

தோழி: என்னடி ரொம்ப பொடி  வச்சு பேசுற...இப்ப என்ன ஆச்சு ? யாரு என்ன சொன்னாங்க ...யார நம்ப முடியல ?

அவள்: வேற யாரும் இல்லடி, என் மனசைத்தான்...

தோழி: என்னது உன் மனசை நீ நம்ப முடியலையா ? சரிதான் பித்து முத்தி போச்சுன்னு நினைக்கிறேன் ...விளக்கமா சொல்லுடி...

அவள்: அவன் ஊருக்கு போனானா ?

தோழி: யாரு ? ஓ ... அவனா ...சரி சரி...

அவள்: அவன் பின்னாடியே என் மனமும் போயிருச்சு....

தோழி: போயி?

அவள்: அவன் எப்படி இருக்கான் சாப்பிட்டானா, தூங்கினானா, நல்லா இருக்கானான்னு அவனையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தது...

தோழி: சரி..அப்புறம் ?

அவள்: அப்புறம் என்ன அப்புறம்...திருப்பி என் கிட்ட வரவே இல்லை...

தோழி: ஐயோடா...பாவம்...

அவள்: போடி, நீ ஒருத்தி, காலம் நேரம் தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு...ஒரு வேளை இப்படி இருக்குமோ ?

தோழி: எப்படி ?

அவள்: என் நெஞ்சம் திருப்பி வந்திருக்கும்...அவன பார்க்காமால் எனக்குத் தான் சோறு தண்ணி இறங்கலியே ...தூக்கமும் போச்சுல...நான் மெலிஞ்சு, சோர்ந்து இருக்கிறத பார்த்து இது வேற யாரோன்னு நினைச்சு என்னை கண்டு பிடிக்க முடியாமல் என் நெஞ்சம் தேடிக் கொண்டிருக்குமோ ?

தோழி: சரிதான்...ரொம்ப தான் முத்தி போச்சு ... கால காலத்துல ஆக வேண்டியதை பண்ணிற வேண்டியதுதான்...இப்படி கூடவா காதலிப்பாங்க உலகத்துல...

காலங்களை கடந்து உங்கள் கதவை தட்டும் அகநானூற்றுப் பாடல்



குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ 
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை 
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் 
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ  
அருளா னாதலின் அழிந்திவண் வந்து 
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி 
ஏதி லாட்டி இவளெனப்  
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. 


பொருள் 

குறுநிலைக் = சின்ன ஊரில்

குரவின் = குரா என்ற மரத்தின்

சிறுநனை = சிறிய அரும்புகள்

நறுவீ வண்டுதரு நாற்றம் = வண்டுகள் மொய்க்கும் மலரில் இருந்து வீசும் நறுமணம்  

வளிகலந்து ஈய  = காற்றில் மிதந்து வர

கண்களி பெறூஉங் = கண்கள் களிப்படையும்

கவின்பெறு காலை = கவித்துவமான இந்த காலை நேரத்தில்

எல்வளை = என்னுடைய வளையல்கள்

ஞெகிழ்த்தோர்க் = நெகிழ செய்தவர்க்கு (எப்படி ? ஒரு வேளை அவன் அதை கழட்டி விளையாடி கொண்டிருக்கலாம், அல்லது காதல் உணர்ச்சி மேலீட்டால் அவள் உணவு மறந்து மெலிந்து வளையல் நெகிழ்ந்து இருக்கலாம், அல்லது அவளுடைய நினைவாக அவன் அவளிடம் அதை வாங்கிச் சென்று இருக்கலாம் ... அனுபவித்தவர்களுக்குத் தெரியும் )


கல்லல் உறீஇயர் = எனக்கு துன்பம் தந்தவர் தான் என்றாலும் (என்ன வெல்லாம் துன்பம்...கன்னத்தை கிள்ளாமல் , விரல் நெறிய கை பற்றாமல், கண்ணீர் வர கண்ணில் கண் மை போட்டு விடாமல்...எவ்வளவு துன்பம் தருகிறார் )


சென்ற நெஞ்சு - அவர் பின் சென்ற என் நெஞ்சு

செய்வினைக் குசாவாய் = அவர் வேலை செய்யும் போது அவருக்கு உதவியாய் இருந்து

ஒருங்குவரல் = அவன் கூடவே இருந்து, அவனோடு ஒண்ணா வருவதருக்கு 

நசையொடு = நசை என்றால் அன்பு செய்தல்.

வருந்துங் கொல்லோ = அன்பும் செய்கிறது, வருத்தமும் படுகிறது
 
அருளா னாதலின் = அவன் எனக்கு அருள் செய்ய மாட்டான். அருளான் + ஆதலின்

அழிந்திவண் வந்து = அழிந்த, துன்பப்பட்ட என் நெஞ்சம் என்னிடம் வந்து

தொன்னலன் = தொன்மையான நலம் (பழைய அழகு )

இழந்தவென் = இழந்த என்

பொன்னிற நோக்கி = பசலை படர்ந்த என் மேனியின் நிறத்தை நோக்கி

ஏதி லாட்டி இவளெனப் = யார் இவள் என்று எண்ணி
 
போயின்று கொல்லோ = திரும்பி போய் விட்டதோ

நோய்தலை மணந்தே. = துன்பப்பட்டு, வருத்தப்பட்டு (என்னை காணாமல்)

அவளுடைய மனதிற்கே அவளை அடையாளம் தெரியவில்லை. அப்படி மாறிப் போனாள்.

கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல், பத்திரமாய் நீந்தி கரை சேர்ந்து வந்த இந்த பாடல்...இன்றும் காற்றில் கரைந்த கற்பூரமாய் மணம் வீசும் காதலை பேசிக் கொண்டே இருக்கிறது...இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளும் இது மனம் - மணம்  பரப்பும் ... 

இன்னும் கொஞ்சம் கூட விரிவாக எழுதலாம் ... கவிதையை கட்டுரை ஆக்குவது  பாவம் என்று கருதி விடுகிறேன்...

கவிதையை நேரடியாக உணர்வதுதான் சிறந்தது....சில பல வார்த்தைகள் புரியாமல் போகலாம்...

எல்லாம் புரிய அது என்ன கட்டுரையா ? கவிதை கண்ணா மூச்சி ஆடும்....கண்ணில் தின் பண்டத்தை காட்டி விட்டு தர மாடேன் என்று பின்னால் மறைத்து ஓடும் காதலி போல...ஓடிப் பிடித்து, அவள் கையில் இருந்து பிடுங்கி விடலாம் தான்....அதுவா சுகம்....? ... அவளிடம் கெஞ்சி அவள் கொஞ்சம் பிகு பண்ணி, "கண்ணை மூடு ..அப்பத்தான் தருவேன் " என்று  அவள் அன்புக் கட்டளை போட்டு ...பின் ஒரு துண்டு உங்கள் வாயில் போடும் சுகம், சுகமா ?

கவிதை அப்படித்தான்...கண்ணில் தெரியும், கைக்கு எட்டாமல் போக்கு காட்டும்...விட்டுப் பிடியுங்கள்... 

வார்த்தை வார்த்தையாய் கவிதையை பிரிக்காதீர்கள் 

ரோஜாவில் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாய் பிச்சு பிச்சு தேடித் பார்க்க முடியாது....

கடைசியில் காம்பு தான் மிஞ்சும்...அதுவா அழகு ?

மீண்டும் ஒரு முறை கவிதையை படியுங்கள்....உங்கள் உதட்டோரம் ஒரு புன்னகை மலர்ந்தால் உங்கள் கவிதை புரிந்து விட்டது என்று அர்த்தம் ....





Monday, October 15, 2012

அக நானூறு - அவள் வருவாளா ?


அக நானூறு - அவள் வருவாளா ?


அவன்: அவ வருவாளாடா ? 

தோழன் : நிச்சயம் வருவா. 

அவன்: எப்படிடா சொல்ற ? ஒரு வேளை வரட்டா ? என் கிட்ட என்ன இருக்கு ? நான் அவளை சந்தோஷமா வச்சுக்க முடியுமா ? என் கூட வந்தா அவ கஷ்டத்தான் படப் போறா. எனக்கு என்னவோ அவ வர மாட்டான்னு தான் தோணுது. 

தோழன்: டேய், உன்கிட்ட பணம் காசு இல்லாம இருக்கலாம்...ஆனா அவளுக்கு கொடுக்க நீ எவ்வளவு அன்பு வச்சிருக்க...உன்னை விட அவளை யாரும் இந்த உலகத்தில அதிகமா நேசிக்க முடியாது...


அது ஒரு வறண்ட கிராமம். தண்ணியே இல்லை. ஊருக்கு வெளியே ஒரு ஆறு இருக்கிறது. அதில் எப்ப தண்ணி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த ஆற்றுப் படுகையை தோண்டினால் கொஞ்சம் போல ஊத்துத் தண்ணி வரும். தாகம் கொண்டு ஒரு ஆண் யானையும் பெண் யானையும் அந்த பக்கமா வருகின்றன. இருக்கும் நீரோ கொஞ்சம். வெயில் சுட்டு எரிக்கிறது. 

அந்த ஆண் யானை அந்த தண்ணீரை எடுத்து பெண் யானையின் மேல் தெளித்து அதன் சூட்டை தணிக்கிறது. மீதம் இருக்கும் கலங்கிய சேற்று நீரை தன் மேல் வாரி இறைத்துக் கொள்கிறது.  பின் இரண்டும் நடந்து செல்கின்றன. ஒதுங்க நிழல் இல்லை. மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்டன. அந்த மரத்தின் மொட்டை கிளைகள் தரும் நிழலில் அந்த ஆண் யானை ஒதுங்குகின்றது. 

இன்னும் கொஞ்ச தூரம் போனால், அங்கே சில கிராம வாசிகள் நடந்து போய் கொண்டு இருக்கிறார்கள். பனை ஓலையில் செய்த குடையையை அவர்கள் வைத்து இருக்கிறார்கள். காற்று வேகமாக அடிக்கிறது.  அந்த காற்று, குடையில் மோதி ஒரு வித சத்தத்தை எழுப்புகிறது. அந்த சத்தம் தன்னுடைய பெண் மானின் சத்தம் என்று நினைத்து அதை தேடி ஆண் மான் காட்டுக்குள் ஓடுகிறது. 

எங்கு பார்த்தாலும் வறட்சியின் கோர தாண்டவம். கடினமான வாழ்க்கை. இருந்தாலும் காதல் அங்கே இழை ஓடிக்கொண்டிருக்கிறது. 

பாடல்

நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் 
வேனில் நீடிய வானுயர் வழிநாள்
வறுமை கூரிய மண்ணீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொரிபுறம் உரிஞிய நெறியயல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ நம்மொடு
தான்வரும் என்ப தடமென் தோளி
உறுகண் மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கனைவிசைக் கடுவளி யெடுத்தலின் துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்
கருமுக முசுவின் கானத் தானே.


நாம் நகை யுடையம் - நாம் மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தோம்

கடுதெறல் = மிகுந்த வரட்சியான

வேனில் = கோடைக் காலம்

நீடிய வான் உயர் வழி - இந்த சாலையோ ஒரு முடிவு இல்லாமல் ஏதோ 
வானத்திர்க்கே போவது மாதிரி போய் கொண்டே இருக்கிறது

நாள் வறுமை கூரிய - ஒவ்வொரு நாளும் வறுமை மிக (இங்கே தண்ணீர் 
என்ற செல்வம் குறைந்து கொண்டே போக என்று அர்த்தம்), 

மண்நீர்ச் = மண் நிறைந்த நீர் உள்ள 

சிறுகுளத் = சிறிய குளத்தில் (சேறு நிறைந்த ஒரு குட்டை)

தொடுகுழி = பள்ளம் பறித்து வைத்த ஒரு சின்ன குழியில்

மருங்கில் -  உள்ளே  

துவ்வாக் கலங்கல் - அருந்த முடியாத கலங்கிய நீரால்

கன்று உடை = கன்றை உடைய

மடப்பிடிக் = பெண் யானை

கயந்தலை மண்ணி -  அதன் தலையில் நீரை ஊற்றி (கழுவி) , 

சேறுகொண்டு ஆடிய = மீதியுள்ள சேற்றை மேலே பூசிக் கொண்டு ஆடிக் கொண்டு

வேறுபடு = நிறம் வேறு பட்ட

வயக் களிறு - வலிமையான ஆண் யானை 
 
செங் கோல் = சிவந்த காம்பினை உடைய

வால்இணர் = மலர் கொத்துகளை

தயங்கத் தீண்டி - தயக்கத்துடன் தும்பிக்கையால் பற்றி 

சொரிபுறம் = தன் முதுகை

உரிஞிய -  உறாய்துக்   கொண்டு 

நெறி = வழியில்

அயல்= பக்கத்தில் உள்ள (ரோட்டோரம்_

மராஅத்து -  வெண்மையான கடம்ப மரத்தின் 
 
அல்குறு = சுருங்கிய

வரி நிழல் = வரி வரியாக விழும் நிழல் (இலை இல்லாத மரத்தின் நிழல்)

அசைஇ - அசைந்து இருந்து  

நம்மொடு = நம்முடன்

தடமென் = அழகிய மென்மையான

தோளி வரும் என்ப  - தோளினை உடைய அவள் வருவாள் என்று இருப்போம்

நம்முடன் பெரிய மென்மை வாய்ந்த தோளை யுடைய தலைவி வரும் என்பர், 

உறுகண் = செல்கின்ற வழி

மழவர் = மழவர்களின் 

உருள் கீண்டிட்ட- வழித்தடம் உண்டாக்கிட, 

ஆறுசெல் மாக்கள் -  வழியே செல்லும்  மக்கள்  

சோறு பொதி = சோற்று மூட்டை போல பெரிதாக உள்ள  

வெண்குடை -  வெண்மையான பனை ஓலை குடை  

கனைவிசை = மிகுந்த விசையுடன்

கடுவளி = வேகமாக வீசும் காற்று

எடுத்தலின் - தூக்கும்   போது

துணை செத்து - தனது பிணையின் குரல் என்று எண்ணி  

வெருள் ஏறு -  அஞ்சிய மான் 

பயிரும் ஆங்கண் -  அந்த துணை இருக்கும் இடங்களை  


கருமுக = கரிய முகத்தை உள்ள

முசுவின் = முசுக்கள் உள்ள 

கானத்தான் -  காட்டில் 


.