Showing posts with label ஆத்திசூடி. Show all posts
Showing posts with label ஆத்திசூடி. Show all posts

Monday, May 20, 2013

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்



உடல் நலத்திற்கு முதல் எதிரி அளவுக்கு அதிகமாக உண்பது. அதிலும் முக்கியமாக சாப்பாட்டிற்கு இடையில் கொறிக்கும் சிற்றுண்டிகள் - சமோசா, வடை, முறுக்கு, பிஸ்கட்,காபி, டீ  போன்ற நொறுக்கு தீனிகள் பானங்கள்.

இவற்றை முற்றுமாக தவிர்க்க வேண்டும் என்கிறார் அவ்வையார்.

நுண்மை என்றால் சிறிய என்று  பொருள்.

சின்ன சின்ன உணவு வகைகள், சிற்றுண்டிகள் இவற்றை தவிர்க்க சொல்கிறார்.

இதையே இன்னும் கொஞ்சம் விரித்து பார்த்தால் சிறிய விஷயங்கள் என்றால் வாழ்க்கைக்கு பயன் தராத சில்லறை விஷயங்கள் -   புகை பிடிப்பது, புறம் சொல்லுவது, சூதாடுவது, போன்ற பலன் இல்லாத விஷயங்கள் என்றும் கூறலாம்.

வாழ்க்கையில் பெரிய விஷயங்களை நுகருங்கள்.

கல்வி, ஒழுக்கம், சேவை என்று நீண்ட பலன் தரும் விஷயங்களை நுகருங்கள்.

இரண்டு வார்த்தைகள் ...எவ்வளவு விஷயங்கள்.


Monday, February 4, 2013

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல்

ஆத்திச் சூடி - மீதூண் விரும்பேல் 

உணவு. 

உயிர் வாழ மிக இன்றியமையாதது உணவு.

அதுவே அளவுக்கு மீறிப் போனால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் அதுவே காரணம் ஆகி விடும் 

மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும்  உணவைப் பற்றியே சொல்கிறார் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

அருந்தியது (உண்டது) அற்றது (நன்றாக செரிமானம்) போற்றி (அறிந்து) உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். 

ஔவையார்  இப்படி ஏழு வார்த்தைகள் எல்லாம் உபயோகப் படுத்த மாட்டார். இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வார்த்தைகள்தான் உபயோகப் படுத்துவார் 

மீதூண் விரும்பேல் 

அதிகமான உணவை விரும்பாதே. 

சில பேருக்கு உணவை கண்ட மாத்திரத்திலேயே எச்சில் ஊறும். அளவுக்கு அதிகமாக உண்டு விட்டு " மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டேன்...மூச்சு வாங்குது " என்று இடுப்பு பட்டையை (belt ) கொஞ்சம் தளர்த்தி விட்டுக் கொள்வார்கள். 

சாப்பிடும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வராது. 

சாம்பார், ரசம் இரசம் , காரக் குழம்பு, மோர் குழம்பு, தயிர், பழம், பீடா, ஐஸ் கிரீம், என்று ஒவ்வொன்றாக உள்ளே போய்  கொண்டே இருக்கும்.

எப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது ? 

மீதூண் விரும்பேல்.

முதலில் அதிகமாக சாபிடுவதற்கு விரும்புவதை நிறுத்த வேண்டும்.

அந்த உணவு விடுதியில் (hotel ) அது நல்லா இருக்கும், இந்த உணவு விடுதியில் இது நல்லா இருக்கும், என்று பட்டியல் போட்டுக் கொண்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைய கூடாது. 

அளவு இல்லாத (unlimited ) உணவை சாப்பிடக் கூடாது. அளவு சாப்பாடு நலம் பயக்கும் 

நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் உண்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். 

உணவின் மேல் விருப்பம் குறைய வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதை அடிக்கடி செய்வோம், அதே நினைவாக இருப்போம், அதை செய்வதில் சந்தோஷம் அடைவோம் 

விருப்பம் குறைந்தால் , அளவு குறையும்.

அளவு குறைந்தால் ஆரோக்கியம் நிறையும் 

மீதூண் விரும்பேல்...

Sunday, February 3, 2013

ஆத்திச் சூடி - உடையது விளம்பேல்


ஆத்திச் சூடி - உடையது விளம்பேல் 


வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது 

இன்று நண்பர்களாய் இருப்பவர்கள் நாளை வேறு மாதிரி மாறலாம்

இன்றைய உறவு   நாளைய   பகையாக மாறலாம்.

யார் யாரோடு எப்போது சேருவார்கள் என்று தெரியாது. 

நபர்கள் என்று நாம் எதையாவது சொல்லப் போக, நாளை அவர்கள் வேறு மாதிரி மாறிவிட்டால் கஷ்டம் தான். 

நம் நண்பர்கள் நம் எதிரிகளோடு கை கோர்த்து கொள்ளலாம். 

சில பேர் வீடு வேலைக்காரியிடம், வண்டி ஓட்டும் டிரைவரிடம், கடை காரரிடம் என்று எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வார்கள் 

பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்த்தால் நிச்சயம் ஆகும் வரை வெளியே சொல்ல மாட்டார்கள். நடுவில் யாரவது புகுந்து எதையாவது சொல்லி சம்பந்தத்தை கலைத்து விடலாம் எதுக்கு வம்பு. 



பொதுவாக யாரிடமும் அளவுக்கு அதிகமாக உள்ளதை சொல்வதை தவிர்ப்பது நலம் பயக்கும் 

உடையது விளம்பேல் என்றாள்  ஔவை  பாட்டி 

உன்னிடம் உள்ளதை பிறரிடம் சொல்லாதே....

அது சொத்து பற்றிய விவரமாய் இருக்கலாம், நட்பு, பகை, காதல் பற்றிய உறவை இருக்கலாம், நோய் பற்றிய சொந்த விஷயமாக இருக்காலாம். 

தோழனோடாயினும்  ஏழ்மை பேசேல் 

சொல்லாத சொல்லுக்கு நாம் அதிகாரி 
சொல்லிய சொல் நமக்கு அதிகாரி 

யோசித்துப் பேசுங்கள். குறைவாகப் பேசுங்கள். யாரிடம் எதை சொல்கிறோம் என்று அறிந்து பேசுங்கள்.


Monday, December 3, 2012

ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


அவ்வையார்: வள்ளுவரே, ஒருவர் தானம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் ஆட்களை பற்றி நீங்கள் ஏதாவது குறள் எழுதி இருக்கிறீர்களா?

வள்ளுவர்: என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்...இதோ நான் எழுதிய குறள் 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் 
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

ஔவ்: இதையே இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்ல முடியுமா ?

வ: இதை விட எப்படி சுருக்க முடியும் ? இருப்பதே ஏழு வார்த்தை...

ஔவ்: முடியும்...இதைப் பாருங்கள்...

ஈவது விலக்கேல் 

ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே. 

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம்...

ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே. 

ஈவது விலக்கேல். 

Saturday, December 1, 2012

ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


அது என்ன அறம் செய்ய "விரும்பு". 

அறம் செய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம் தானே. 

அது என்ன விரும்பு ? விரும்பினால் மட்டும் போதுமா ? அறம் "செய்ய" வேண்டாமா ?

உங்களுக்கு மிக விருப்பமான செயல் எது ? 

இசை, இலக்கியம், வித விதமான உணவு வகைகளை சமைப்பது/உண்பது, புது புது இடங்களை சென்று பார்ப்பது, வித விதமான உடைகளை அணிவது என்று ஏதோ ஒன்றில் விருப்பம் இருக்கும்.

நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம், பணத்தை செலவு செய்வோம், அதை பற்றி நம் நண்பர்களிடம் பெருமையாக சொல்வோம்...எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். 

மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம். புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே, புது டிசைனில் சேலை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்....

எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும். 

நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...மகிழ்ச்சியாக செய்வோம்...

எனவே, அவ்வை பாட்டி சொன்னாள் ...அறம் செய்ய விரும்பு என்று.

விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம், மீண்டும் மீண்டும் செய்வோம், தேடி தேடி போய் செய்வோம்...

அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, அவ்வை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்....


அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...அற  வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான,தர்ம வழியில் நிற்றல் என்று பொருள். அற  வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும். 

எனவே ... அறம் செய்ய விரும்புங்கள் 
 


Friday, November 30, 2012

ஆத்திசூடி - இயல்வது கரவேல்


ஆத்திசூடி - இயல்வது கரவேல் 


எது முடியுமோ, அதை மறைக்காமல் செய்ய வேண்டும்.  ஆங்கிலத்தில் சொல்லுவார்களே Realising one's potential என்று, அது போல. 

எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவு படிக்க வேண்டும்.


எவ்வளவு வேலை பார்க்க முடியுமோ, அவ்வளவு வேலை பார்க்க வேண்டும். 

எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு 

எவ்வளவு தானம் பண்ண முடியுமோ, அவ்வளவு. 

இயல்வது என்றால் முடிந்த வரை. 

கரவேல் என்றால் மறைக்காமல் என்று பொருள்

.......................
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

என்பார் மணிவாசகர் ...

செய்கிறோமா ? எட்டு மணிநேரம் வேலை செய்ய முடியும் என்றால், ஆறு மணி நேரம் செய்கிறோம். நம்மால் பிறர்க்கு உதவ முடியும், ஆனால் செய்வது இல்லை. 

சாலையில் அடி பட்டு கிடக்கும் மனிதனை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி போகிறோம். 

பசி என்று கை ஏந்துபவர்களுக்கு பத்து பைசா தர்மம் பண்ணுவது இல்லை. 

முடியாததை செய் என்று சொல்லவில்லை அவ்வை பாட்டி. முடிந்ததையாவது மறைக்காமல் செய் என்கிறாள். 

முடிந்த வரை செய்து கொண்டு இருந்தால், அந்த முடிந்தவற்றின் எல்லை கோடுகள் தானே விரியும். 

நாம் ஏன் முடிந்ததை செய்வது இல்லை ? 

என்னால் நிறைய செய்ய முடியும், செய்யவும் ஆசை இருக்கிறது...ஆனால் வாய்ப்பு இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்போருக்கு அவ்வை பதில் சொல்கிறாள்...அடுத்த ப்ளாக்-இல் 


Thursday, November 22, 2012

ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


ஆத்திசூடி - ஐயம் இட்டு உண்


தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது பற்றி தமிழ் இலக்கியம் குறிப்பாக பக்தி இலக்கியம் பக்கம் பக்கமாக சொல்கிறது. 

உடைந்த அரிசிக்கு நொய் அரிசி என்று பெயர். சமைக்க ருசியாக இருக்காது. வேண்டுமானால் கஞ்சி வைக்கலாம். சட்டென்று குழைந்து விடும். அந்த நொய் அரிசியில் ஒரு துணுக்காவது ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று கெஞ்சுகிறார் அருணகிரிநாதர். "நொயிர் பிள அளவேனும் பகிர்மின்கள் " என்று கூறுகிறார். 

(முழுப் பாடல் கீழே 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

)

தானம் பற்றி சொல்லவந்த வள்ளுவர் 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்த வற்றுள் எல்லாம் தலை 

என்றார்.

அதாவது நமக்கு கிடைத்த உணவை பகிர்ந்து உண்டு வாழுதல் சிறந்த அறம் என்றார். 

ஔவையார் அதை இன்னும் சுருக்கமாக சொல்ல vizhaikiraar. 

ஏழு  வார்த்தை  எல்லாம் அனாவசியம்  ... மூணே மூன்று வார்த்தையில் சொல்கிறார். 

Wednesday, November 21, 2012

ஆத்திசூடி - ஆறுவது சினம்

ஆத்திசூடி - ஆறுவது சினம் 

ஆத்திசூடி நாம் ஒன்றாம் வகுப்பிலோ இரண்டாம் வகுப்பிலோ படித்தது.

ஔவையார் எழுதியது. பெண் என்பதாலோ என்னவோ, அவள் எழுதிய பாடல்களுக்கு பெரிய சிறப்பு கிடைக்கவில்லை. 

திருவள்ளுவர் ஏழு வார்த்தைகளில் எழுதியதை இவள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் எழுதி விடுகிறாள். ஏழு வார்த்தைகளை பார்த்தே நாம் பிரமித்து போய் இருக்கிறோம். இரண்டு வார்த்தைகளை என்னவென்று சொல்லுவது ?

ஆத்திசூடியில் இருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.

ஆறுவது சினம்.

சினம் என்றால் அது ஆறுவது. மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம்.

சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல், காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும்.

சரி. ஆறுவது சினம் ... அதனால் என்ன ?

பாலோ காபியோ சூடாக இருந்தால் என்ன செய்வோம் ? அதை இன்னொரு கிளாசிலோ பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊத்துவோம். அதை ஆத்துவோம் அல்லவா ? அது போல், சினம் வந்தால் இடத்தை மாற்றினால் போதும். சினம் மாறி விடும். 

யார் மீதாவது கோவம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுங்கள். கோவம் ஆறும். 

இரண்டாவது, பால் பாத்திரம் சூடாக இருந்தால், அதை குளிர்ந்த நீரில் உள்ள பாத்திரத்தில் வைத்தால் அதன் சூடு குறைந்து விடும். அது போல், கோவம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று விட்டால், கோவம் ஆறி விடும். 

கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள், சண்டை போடாதீர்கள். அமைதியாய் இருங்கள்...ஏனென்றால் ...ஆறுவது சினம்....