Showing posts with label கும்பகர்ணன். Show all posts
Showing posts with label கும்பகர்ணன். Show all posts

Friday, May 25, 2012

கம்ப இராமாயணம் -மழையின் நீர் வழங்கும் கண்ணான்


கம்ப இராமாயணம் -மழையின் நீர் வழங்கும் கண்ணான்

ஆண்களுக்கு தங்கள் அன்பை வெளிபடுத்துவது அவ்வளவு எளிதாய் இருப்பது இல்லை.

அன்பைச் சொன்னால் அது ஏதோ பலவீனம் என்று நினைப்பார்களோ என்னவோ.

அதுவும் அன்பின் மிகுதியால் அழுவது என்பது அரிதினும் அரிது.

முரடனான கும்பகர்ணன் போர் பாசறையில் இருக்கிறான்.

அவனை பார்க்க விபீஷணன் வருகிறான்.

விபீஷணன் வந்தது கும்பகர்ணனை இராமன் பக்கம் அழைத்துக் கொள்ள.

ஆனால், கும்பகர்ணனோ, விபீஷணன் மனம் மாறி இராவணன் பக்கம் வந்து விட்டதாய் நினைத்து கொண்டான்.

அப்படி வந்து விட்டால், அவனும் இறந்து போவானே என்று அவன் மேல் உள்ள பாசத்தால் அவனை கட்டிப் பிடித்து அழுகிறான்.

அழுகிறான் என்றால் ஏதோ இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது அல்ல... மழை பொழிவது மாதிரி கண்ணீர் பொழிந்தான்...

பின் சொல்லுவான்...

"ஏண்டா, நீ ஒருவனாவது பிழைத்து இருப்பாய் என்று நினைத்தேன்...இப்படி தனியே வந்து இருக்கிறாயே" என்று வருத்தப் படுகிறான்.


முந்தி வந்து இறைஞ்சினானை  மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய் என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித் தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியேஎன்றான் மழையின் நீர் வழங்கும் கண்ணான்.

முந்தி வந்து = முன்னால் வந்து

இறைஞ்சினானை = வணங்கிய (விபீஷணனை)

மோந்து = உச்சி முகர்ந்து

உயிர் மூழ்கப் = அன்பின் மிகுதியால் உயிர் நனைய

புல்லி = கட்டி அணைத்து (புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு (திருக்குறள்))

உய்ந்தனை = பிழைத்தாய்

ஒருவன் = ஒருவன்

போனாய் = நீ இராமனிடம் போனாய் என்று

என் மனம் உவக்கின்றேன் = நான் மனம் மகிழ்ந்து இருந்தேன்

என்  சிந்தனை முழுதும் = என் சிந்தனை முழுவதும்

சிந்தித் தெளிவிலார் போல = சிந்தனை தெளிவில்லாதவன் போல் (மனம் குழம்பி)

மீள் வந்தது என் தனியே? = ஏன் மீண்டும் இங்கு தனியாக வந்தாய்

என்றான் = என்றான்

மழையின் நீர் = மழை நீர் போல

வழங்கும் கண்ணான். = கண்ணில் இருந்து நீர் வழியும் கண்ணான்

அந்த முரட்டு உருவத்திற்குள்ளும் ஒரு அன்பு மனம்.