Showing posts with label thiru arutpaa. Show all posts
Showing posts with label thiru arutpaa. Show all posts

Thursday, July 23, 2015

திருவருட்பா - கருணைக் கடலே

திருவருட்பா - கருணைக் கடலே 


வள்ளலாரின் பாடல்கள் மிக மிக எளிமையானவை. ஒரு தரம் வாசித்தால் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அப்படி ஒரு பாடல்

மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் 
          மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் 
     எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் 
          இல்லிடை மல்லிடு கின்றேன் 
     விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது 
          மெல்அடிக் கடிமைசெய் வேனோ 
     கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே 
          கடவுளே கருணையங் கடலே. 


பொருள்

மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால்

மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி

நாள் தோறும்  = தினமும்

எண்ணினுள் = எண்ணில்லாத

அடங்காத் துயரொடும் = அளவற்ற துயரத்தோடு

புலையர் = புலையர்

இல்லிடை மல்லிடு கின்றேன் = இல்லத்தின் இடையில் சண்டை பிடிக்கிறேன்.

விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் =  வானில் உள்ள சுடர் போன்ற

உனது = உனது

மெல்அடிக் கடிமைசெய் வேனோ = மெல் அடிகளுக்கு அடிமை செய்வேனோ

கண்ணினுள் மணியே = கண்ணில் உள்ள மணி போன்றவனே

ஒற்றியங் கனியே = திருவொற்றியூரில் உள்ள கனி போன்றவனே

கடவுளே கருணையங் கடலே. = கடவுளே, கருணைக் கடலே

சில சமயம் எளிமையாக இருக்கிறதே என்று நாம் அதில் உள்ள ஆழத்தை அறியாமல்  இருந்து விடுவோம்.

இந்தப் பாடலை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.


மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி 

அது என்ன மயக்கம் ?  

நாம் எதில் தான் மயங்கவில்லை எங்கே. இந்த உடல் நமது என்று நினைக்கிறோம். என்றும் இளமையாக இருப்போம் என்று நினைக்கிறோம். என்றும்  நிலைத்து இருப்போம் என்று நினைக்கிறோம். இந்த மனைவி, மக்கள் எல்லாம்  நம் மேல் எப்போதும் நம் மீது அன்புடன் இருப்பார்கள் என்று நினைத்து  மயங்குகிறோம். இந்த சொத்து எப்போதும் நம்மோடு இருக்கும் என்று  நினைக்கிறோம். பணம் நம்மை அனைத்து துன்பத்தில் இருந்தும் காப்பாற்றி  விடும் என்று நினைக்கிறோம். எத்தனை மயக்கம். 

எது உண்மை, எது பொய், எது நிரந்தரம், யார் நட்பு, யார் பகை, எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம். 

தெரிவது போல இருக்கிறது. ஆனால் முழுவதும் தெரியவில்லை. எனவே "மயக்கம்" என்றார். 

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால் 

ஒரு வினை செய்யும் போது அதன் விளைவு தெரியவில்லை. முதலில் நல்லா இருப்பது போல  இருக்கும். பின்னால் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற வினைகள் மட்டும் அல்ல,  அளவற்று  உண்பது, சோம்பேறித்தனம் போன்ற தீயவை போல தெரியாத வினைகள் கூட  பின்னாளில் தீமையாக முடியும். எனவே வஞ்சக வினை என்றார்.  பின்னாளில் தீமை வரும் என்றால் அது முதலிலேயே கடினமாய் இருந்து விட்டால்  நாம் செய்ய மாட்டோம். முதலில் சுகமாக இருக்கும், பின்னாளில் சிக்கலில் கொண்டு  போய் மாட்டி விடும். 



பொல்லா வினை உடையேன் புகழுமாறு ஒன்றறியேன் என்பார் மணிவாசகர். பொல்லாத வினை. 




மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி 

மனம் ஏன் தளர வேண்டும் ? நல்லது என்று ஒன்றை செய்கிறோம், அது வேறு விதமாக போய் முடிகிறது. எளிதாக கிடைக்கும் என்று நினைத்தது கை விட்டு நழுவிப் போகும், நமக்கு கிடைக்கும் என்று நினைத்தது வேறு யாருக்கோ கிடைத்து விடிகிறது.  வயதாக வயதாக உடல் நிலை மோசமாகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது மனம் தளரும். 

"சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே" என்பார் மணிவாசகர். 

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 


மேலும் சிந்திப்போம்.


Tuesday, December 9, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு - பாகம் 2

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு  - பாகம் 2 



மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.


இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

---------------------------பாகம் 2 ----------------------------------------------------------------------------------------------

ஏன் ஒவ்வொரு செயலையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறார்  ? ஒரு வேளை அவற்றிற்கு  ஒரு அழுத்தம் தர நினைத்து அப்படி சொல்லி இருப்பாரா ? அப்படி என்றால் ஒவ்வொரு  வார்த்தைக்கும் அழுத்தம் தர நினைத்து இருப்பாரா ? அல்லது வேறு ஏதாவது காரணம்  இருக்குமா ?

சிந்தித்துப் பார்ப்போம்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நினைந்து நினைந்து = முதலில் எதை நினைக்க வேண்டும் ? பின் எதை நினைக்க வேண்டும் ? 

முதலில் நம் சிறுமையை நினைக்க வேண்டும். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் யார், நம் நிலை என்ன , நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று நினைக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். அதற்குள் எவ்வளாவு ஆணவம், அகந்தை, சண்டை , சச்சரவு, பொறாமை, கோபம்....நம் உண்மை நிலையை நினைந்து பார்க்கும் போது ஆணவம் போகும். அடக்கம் வரும். சலனம் மறையும்.

இரண்டாவது, இந்த பிரபஞ்சம், இதன் சிருஷ்டி, அதன் தாளம் தவறாத கதி இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகின் லயம் புரியும். ஒரு வேளை,  அதில் இருந்து இறைவனும் புரியலாம். 


உணர்ந்து உணர்ந்து 

உணரத் தலைப் படும் போது முதலில் ஆராய்ச்சி வெளி நோக்கியே இருக்கும். உலகம், அதில் உள்ள மக்கள், அவர்கள் செய்யும் செயல், படைப்பு, இயற்கை, பொருள்கள், அவை தரும்  இன்பம் என்று உணரத் தலைப் படுவோம்.

நாளடைவில் இந்த உணர்தல் உள் நோக்கி செல்லத் தொடங்கும். நான் யார் என்ற கேள்வி நிற்கும். தன்னை உணர வேண்டும். 


நெகிழ்ந்து நெகிழ்ந்து = முதலில் நமக்கு கிடைத்த நல்லவற்றை நினைத்து மனம் நெகிழ வேண்டும். நாம் என்ன செய்து விட்டோம் , நமக்கு இவ்வளவு கிடைத்து இருக்கிறதே என்று மனம் நெகிழ வேண்டும். 

நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று  வித்து என்பார் மணிவாசகர். 

நாயிற் கிடையாய் கிடைந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே என்பதும் அவர் வாக்கே. 

அடுத்து, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று மனம் நெகிழ வேண்டும். ஏழைகள் மேல் கருணை பிறக்க வேண்டும், துன்பப் படுபவர்களுக்கு இரங்க வேண்டும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி நாதர். 

உடல் நெகிழ வேண்டும். பின் மனம் நெகிழ வேண்டும். 


நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால்

முதலில் துன்பக் கண்ணீர். என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை, நமக்கு ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது என்று வருத்தம், எப்படி கரை ஏறப் போகிறோம் என்ற ஏக்கம். பயம், கவலை, ஏக்கம் இதனால் வரும் கண்ணீர். 

இறை அருள் கிடைத்த பின், வரும் ஆனந்தக் கண்ணீர். உண்மை உணர்ந்த பின், தன்னைத் தான் அறிந்த பின் வரும் ஆனந்தக் கண்ணீர். அதனால் உடல் நனைய வேண்டும். 

காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும். 


உடம்பு நனைந்து நனைந்து= அந்தக் கண்ணீரால் உடம்பு நனைய வேண்டும். உடம்பு நனைந்தால் உடல் குளிரும். உள்ளமும் குளிர வேண்டும். உள்ளத்தில் காமமும், கோபமும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் உடல் குளிர்ந்தாலும் உள்ளம் குளிராது. கண்ணீரால் உடலும் குளிர வேண்டும். உள்ளமும் குளிர வேண்டும். 

மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி சொல்லுகிறார் வள்ளலார்.

Thursday, December 4, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு 


மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.




Sunday, July 7, 2013

திரு அருட்பா - மனமெனும் குரங்கு

திரு அருட்பா - மனமெனும் குரங்கு 


மனம் ஒரு குரங்கு என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். குரங்காவது ஒரு கிளையை விட்டு மறு கிளை தாவும். மனித மனம் அப்படியா ? இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் பறக்கும்.

வல்லாளர் சொல்கிறார் மனித மனம் - பேய் பிடித்த, கள் உண்ட, பிரம்பால் அடி கொண்டு, பைத்தியம் பிடித்த, கோபம் கொண்ட குரங்கு என்று. அப்படிப் பட்ட குரங்கு எப்படி நடந்து கொள்ளும் ? அது போன்றது மனித மனம்.

வள்ளலார் புலம்புகிறார் ....

வள்ளலே, நான் படும் பாட்டை வாயால் சொல்லி முடியாது...என்ன என்ன செய்வேன், என்ன செய்வேன்...

உன் திருவடிகளை அண்டாது, பொன்னாசை, மண் ஆசை, பெண் ஆசை என்று உழலும் என் மனது

பேய் பிடித்த, கள் உண்ட, கோலினால் அடி கொண்ட, பைத்தியம் பிடித்த, கோபம் கொண்ட குரங்கு போன்றது என் மனது,

அது எப்படி கிடந்து உழல்கிறது தெரியுமா ?

குயவன் மண் பாண்டம் செய்யும் போது சுற்றும் சக்கரம் போல சுழல்கிறது, சிறு பிள்ளைகள் விளையாடும் பந்து போல அங்கும் இங்கும் கிடந்து அலைகிறது....

அது மட்டுமா ?

பசி கொண்ட விலங்கு எப்படி மற்ற விலங்கின் மேல் பாயுமோ அப்படி பாய்கிறது என் மனது....பெரும் சூறாவளி காற்றில் கிடந்து உழலும் பட்டம் போல் அலைகிறது, காலம் எப்படி பொருள்களை மாற்றிப் போடுமோ அப்படி என் மனம் மாறுகிறது....இந்திர ஜாலமோ ? முன் ஜென்ம வினையோ...எனக்குத் தெரியாது

கந்த கோட்டத்தில்  உள்ள கந்தவேளே என்று உருகுகிறார் வள்ளல் பெருமான்...

அவர் மனம் அப்படி என்றால் நம் மனம் எப்படியோ



வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன் 
என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்

தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே......!

(எளிமையான பாடல் தான். எனவே ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் தரவில்லை . வேண்டுமா என்ன ?)

Wednesday, February 27, 2013

திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு


திரு அருட்பா - நள்ளிரவில் பெற்ற பேறு 



இராமலிங்க அடிகள் இரவு உறங்கிக் கொண்டிருக்கிறார். திடீரென்று விழிப்பு வருகிறது. என்னோவோ நடக்கிறது. ஒரே மகிழ்ச்சி.  வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

காலை எழுந்து அவர் எங்க போனாலும் எல்லாரும் கேக்குறாங்க, என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்க என்று....சந்தோஷம் தெரிகிறது, அதன் காரணம் தெரிகிறது, ஆனால் அதை சொல்ல முடியவில்லை....திணறுகிறார்...

"என்னால் சொல்ல முடியவில்லை....அந்த இன்பத்தை நீங்களும் அடைந்தால் தான் அது உங்களுக்கு புரியும் " என்கிறார் ....

என்ன நடந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை.

அந்த சந்தோஷம் எல்லோருக்கும் வேண்டும் என்று வேண்டுகிறார்.

எவ்வளவு பெரிய மனம். அருள் உள்ளம்.


பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே 

பாதி இரவில் = நள்ளிரவில்.


நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே "ஓ" வென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

என்பார் மாணிக்க வாசகர் 


எழுந்தருளிப் = இறைவா, நீயே எழுந்தருளி

பாவியேனை எழுப்பி = என்னை எழுப்பி

அருட் சோதி அளித்து = அருள் சோதி அளித்து

என் உள்ளகத்தே = என் உள்ளத்தின் உள்ளே (அகத்தே)

சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் = சூழ்ந்து + கலந்து + துலங்குகின்றாய் 

நீதி = உலகுக்கே நீதியாணவனே

நடஞ்செய் = நடம் ஆடும்

பேரின்ப நிதி = பேரின்ப நிதி போன்றவனே

நான் பெற்ற நெடும்பேற்றை = நான் பெற்ற இந்த பெரும் பேற்றை

ஓதி முடியாது = சொல்லி மாளாது

என்போல் = என்னை போல

இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  = இந்த உலகில் உள்ளவர்கள் அனைவரும் பெற வேண்டுவனே 




இந்த பாடலை பொய் என்று எப்படி நினைப்பது ?


Friday, January 4, 2013

திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்


திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்


பிறர்க்காக வாழ்வது, மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பம் காண்பது, தியாகம், போன்றவை மனிதர்களுக்கே உரித்தானது.இரத்த தானம் தரும் மான் இல்லை, காட்டின் விடுதலைக்காக சிறை சென்ற சிங்கம் இல்லை, நாள் எல்லாம் பறந்து களைத்து கொண்டு வந்த நெல் மணியை தானம் செய்யும் புறா இல்லை...பிற உயிர்களை சந்தோஷப் படுத்தி அதில் இன்பம் காணுவது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு. 

அதை விடுத்து வால் ஒன்று தான் நமக்கும் அதற்க்கும் வித்தியாசம் என்று வாழக் கூடாது. 

பால் சோறாக இருந்தால் வயிறு முட்ட சாப்பிடுவேன். வாழை, பலா, மா என்று பழம் ஏதாவது கிடைத்தால் அதன் தோலைக் கூட கிள்ளி யாருக்கும் தர மாட்டேன். எனக்கு வால் மாட்டும் தான் இல்லை. இருந்திருந்தால், வனத்தில் வாழும் ஒரு மிருகமாக இருக்க எல்லா தகுதியும் உள்ளவன். நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் வள்ளல் பெருமான்  

பாடல்   


பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய் 

பொருள் 

பாலிலே கலந்த சோறெனில் = பாலோடு கலந்த சோறு என்றால்

விரைந்தே = வேக வேகமாக

பத்தியால் = ஆர்வத்தோடு

ஒருபெரு வயிற்றுச் = என் பெரு வயிறு என்ற. பருத்த தொந்தி நம்மதென்று  நாம் இருக்க சுடுகாட்டு நாய் நரி பேய் கழுகும் தம்மதென்று  தாம் இருக்கும் தான் என்பார் பட்டினத்தார் 


சாலிலே = பெரிய பாத்திரத்தில் 

அடைக்கத் தடைபடேன் = அடைக்க தயக்கம் கொள்ள மாட்டேன்

வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = வாழை, பலா, மா முதலிய பழங்களின்

தோலிலே எனினும் = தோலில் கூட
 
கிள்ளி = நகத்தால் கிள்ளி  எடுத்து

ஓர் சிறிதும் = ஒரு சின்ன துண்டு கூட 

 சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = என்னிடம் வந்தவர்களுக்கு தர துணிய மாட்டேன்

வாலிலேன் = எனக்கு வால் மட்டும் தான் இல்லை 

 இருக்கில் = இருந்திருந்தால் 

வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = நான் காட்டிலே மற்ற மிருகங்களோடு ஒன்றாக வாழ நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்

என்செய்வேன் எந்தாய்  =நான் என்ன செய்வேன், என் தந்தையே 

Sunday, December 23, 2012

திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?


திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?


எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்...உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன், பொய் சொல்கிறேன், புறம் சொல்கிறேன்...ஆனால் இறைவா இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நீயும் எனக்கு வஞ்சனை செய்தால் நான் என்ன செய்வேன் ? எங்கு போவேன் ? நீயே சொல்லு. 

பாடல்

திருஅருட்பா - nuclear physics


திருஅருட்பா - nuclear physics 


திரு அருட்பாவில் சில ஆச்சரியமான பாடல்கள். 

பரந்து விரிந்த இந்த உலகம் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் (Big Bang ) இருந்து வந்தது என்று அறிவியல் சொல்கிறது.

ஆதியில் இருந்தது ஒரே விதமான பொருள். அதை அறிவியல் cosmic  soup என்கிறது. சூடான காற்றும், தூசியும் கலந்த ஒரு விதமான பொருள். மிக மிக பெரிய சக்தியின் வடிவம். ஒரே ஒளிக் கோளம். இருள் என்பதே கிடையாது. அதில் இருந்து அணுக்கள் (atoms ) பிறந்தன. அந்த அணுக்களுக்குள் ஒரு கரு...அணுக்கரு. அந்த அணு கருவுக்குள் அணு சக்தி (nuclear force or atomic force ). இத்தனையும் எப்படி வந்தது என்று சொல்ல வருகிறார் வள்ளலார். 

quantum  mechanics என்ற வார்த்தை கூட இல்லாத அந்த காலத்தில் எழுதப்பட்டது இந்தப் பாடல்....

பாடல்
           

Thursday, December 20, 2012

திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு


திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு


பையனோ பெண்ணோ ஏதோ தப்பு செய்து விட்டார்கள் (வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு சினிமாவுக்கு போதல், வீட்டுக்குத் தெரியாமல் தம் அடிப்பது, ). எப்படியோ உங்களுக்குத் தெரிந்து விடுகிறது. உங்களுக்குத் தெரிந்து விட்டது என்று அவர்களுக்கும் தெரிய வருகிறது. 

சரி தான், இன்னைக்கு நல்ல பாட்டு விழப் போகிறது என்று தயங்கி தயங்கி உங்களிடம் வருகிறார்கள். 

"நா  ஒண்ணு சொல்லுவேன்...கோவிக்கக் கூடாது " என்று அவர்கள் ஆரம்பிக்கும் முன்னமேயே, நீங்கள் அவர்களைப் பார்த்து, 

"ஒண்ணும் கவலைப் படாதே, எனக்கு ஒரு கோவமும் இல்லை, என் கிட்ட வா " என்று அவர்களை அனைத்து ஒரு முத்தம் கொடுத்தால் அவர்களின் மனம் எப்படி நெகிழும்...அப்படி நெகிழ்கிறார் வள்ளலார்....

இறைவனிடம் சென்று, தான் செய்த பாவங்களை சொல்லி, "மன்னித்துக் கொள், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று சொல்வதருக்கு முன்னேயே அவன் மன்னித்தது மட்டும் அல்ல...கருணையும் பொழிந்தான்...அதற்க்கு என்ன கை மாறு செய்வேன் என்று உருகுகிறார் வள்ளலார்....

பாடல் 
 

திரு அருட்பா - சும்மா இருக்கும் சுகம்


திரு அருட்பா - சும்மா இருக்கும் சுகம்


சும்மா இருப்பதுவே சுகம். மீண்டும் மீண்டும் இந்த கருத்து காலந்தோறும் மலர்ந்திருக்கிறது. 

ஆத்ம ஞானம் அடைந்தவர்களுக்கு கர்மம் தேவை இல்லை என்கிறது கீதை. 

"சும்மா இரு" அற சொல் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்பார் அருணகிரி நாதர். 

Sit quietly, doing nothing, spring comes, and the grass grows by itself.

என்கிறது zen தத்துவம்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து 
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் 

என்பார்  பத்திரகிரியார்.

அந்த சுகம் என்று வரும் என்று ஏங்குகிறார் வல்லாளர் இங்கே 

பாடல் 

Monday, August 13, 2012

திருஅருட்பா - பாடவா, உன் பாடலை


திருஅருட்பா - பாடவா, உன் பாடலை 


எல்லோரும் சொல்கிறார்கள், நான் மிக இனிமையான பாடல்களை பாடுகிறேன் என்று.

அதை கேட்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

நானா பாடினேன் ? 

இறைவா, நீ என்பால் மகிழ்ந்து உன் அருளை என்மேல் சுரந்து, என் மூலம் இனிய பாடல்களையும், உயர்ந்த கருத்துகளையும் வெளி படுத்துகிறாய். 

அதை எல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள்....

என்கிறார் வள்ளாலார்...

Sunday, July 1, 2012

திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


வள்ளலார் இறைவனிடம் சண்டை போடுகிறார். நீதி கேட்கிறார்.

"நீ எனக்கு அருள் புரியாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்" என்று முறையிடுகிறார்.



Saturday, April 21, 2012


திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்


சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது. 

மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.

மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.

அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.

மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது. 

அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.

அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....

திரு அருட்பா - கடவுளின் சுவை

திரு அருட்பா - கடவுளின் சுவை


கடவுள் எப்படி இருப்பாரு ? கறுப்பா ? சிவப்பா ? ஒல்லியா ? குண்டா ? உயரமா ? குள்ளமா ? 

கண்டவர் விண்டதில்லை 
விண்டவர் கண்டதில்லை

குழந்தைகள் எதையாவது எடுத்தால் உடனே வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும். பார்த்து அறிவது, தொட்டு அறிவது. சுவைத்து அறிவது.

இங்கு வள்ளலார் இறைவனின் சுவை

Thursday, April 19, 2012

திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

திரு அருட்பா - மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே


'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே ' இது ஏதோ வண்டிச் சக்கரம் படத்தில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல் மாதிரி இருக்கா ?

எழுதியவர் இராமலிங்க அடிகளார். படித்துப் பாருங்கள். எவ்வளவு அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று தெரியும்......

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

இறைவன் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கிறான். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், தன்னை மதிப்பவன், தன்னை மதிக்காதவன் நல்லவன், பொல்லாதவன் என்று அனைத்திற்கும் சாட்சியாக நடுவில் நிற்கிறான்.

வள்ளலார் பாடுகிறார்....

Monday, April 16, 2012

திரு அருட்பா - குடத்தில் அடங்கும் கடல்

திரு அருட்பா - குடத்தில் அடங்கும் கடல்



அன்பே சிவம்.

இறைவனை பக்தியால், அன்பால் எளிதாக அடைய முடியும் என்கிறார் வள்ளலார். அன்பின் பெருமையை சொல்ல வந்த வள்ளலார்....

Saturday, April 14, 2012

திரு அருட்பா - வள்ளலார் விண்ணப்பம்



இராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார், ஒரு சமய புரட்சியாளர். கோவில் பணம் பண்ணும் இடமாவது கண்டு இறைவனை ஜோதி ரூபகமாக வணங்கி, இறைவனை கோவிலில் இருந்து பக்தர்களின் பூஜை அறைக்கு கொண்டு வந்தார்.

அவரது திருஅருட்பா தித்திக்கும், உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல்களின் தொகுப்பு ஆகும். 


-------------------------------------------------------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
----------------------------------------------------------------------------------------------------

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். 

நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.
அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். 

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.
நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். 

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்

இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். 

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்துறணும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். 


தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே

வள்ளலார் காலத்தில் சென்னை வாழ் மக்கள் மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர்களாய் இருந்து இருக்கிறார்கள். ஒரு வேளை அவர் இப்போது இருந்து இருந்து இருந்தாலும் அப்படித்தான் நினைத்து இருப்பாரோ ? அப்படி பட்ட சென்னையில் உறையும் கந்தவேளே 

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்