Saturday, June 30, 2012

தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்


தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்

கம்பனின் மகன் அம்பிகாபதி இறந்து போனான்.

கம்பனுக்கு சோகம் தாளவில்லை.

தன் நண்பன் ஓட்டகூத்தனிடம் சொல்வான்....

"மகன் கானகம் போன துக்கம் கூடத் தாளாமல் தசரதன் உயிர் விட்டான். நான் என் மகன் இறந்த பின் கூட இன்னும் உயிரோடு இருக்கிறேனே...நான் எவ்வளவு கல் நெஞ்சக்காரன்" என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்.

நாலடியார் - எதைப் படிப்பது?


நாலடியார் - எதைப் படிப்பது?


எதைப் படிப்பது, எவ்வளவு படிப்பது, எதை படிக்காமல் விடுவது, 

எல்லாவற்றையும் படிக்க முடியுமா ? போன்ற குழப்பங்கள் நமக்கு இருக்கும்.
எத்தனை ஆயிரம் புத்தகங்கள், வலை தளங்கள்...அனைத்தையும் படித்து மாளுமா ?

இந்த குழப்பம் இன்று வந்ததில்லை, நாலடியார் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. 

"படிக்க வேண்டியதோ கடல் போல் இருக்கிறது. படிக்க கிடைத்த நாட்களோ கொஞ்சம் தான். அந்த குறைந்த நாட்களிலும் ஆயிரம் தடங்கல்கள்.

எனவே, படிக்க வேண்டியதை ஆராய்ந்து, தெரிந்து எடுத்து படிக்க வேண்டும், நீரில் இருந்து பாலை பிரித்து உண்ணும் அன்னம் போல்"


Thursday, June 28, 2012

திருவாசகம் - கடவுள் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார்


திருவாசகம் - கடவுள் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார்


குழந்தையை பெற்ற தாய்மார்களுக்குத் தெரியும்...குழந்தைக்கு பால் தரவில்லை என்றால், அந்தப் பால் மார்பில் கட்டிக் கொள்ளும்.

அந்த கட்டியையை பின் அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற முடியும். 

அன்பும் அது போலத்தான், வெளிபடுத்தாத அன்பு உடலுக்குள் நஞ்சாகி விடும். 

கடவுள் அளப்பெரும் அன்புடையவன்.

அவன் அந்த அன்பை யாரிடம் போய் தருவான்?

பக்தர்களை தேடி தேடித் போய் தன் கருணையை பொழிவான்.

மீனவன் வலை வீசி மீனைப் பிடிப்பதைப் போல, இறைவன் பக்தர்களை தேடிக் கொண்டு இருக்கிறான் என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்


திருக்குறள் - பணம் சம்பாதியுங்கள்


நமது இலக்கியங்கள் பெரும்பாலும் துறவறம், நிலையாமை, ஈகை, மெய் பொருள் நாடுதல் என்று தான் சொல்லுகின்றன.

உடலை உறுதி செய்தல், பொருள் ஈட்டுதல் என்பன பற்றி சொல்லும் இலக்கியங்கள் மிகக் குறைவு.

திருக்குறளில், அதுவும், கட்டளை இடுவது போல் இந்த குறள் சற்று வித்தியாசமான குறள்.

"பணம் சம்பாதியுங்கள், உங்கள் பகைவர்களின் செருக்கை அறுக்க அதை விட கூரிய பொருள் இல்லை" என்கிறார் வள்ளுவர்.Tuesday, June 26, 2012

மூதுரை - மனைவியின் மகிமை


மூதுரை - மனைவியின் மகிமை


மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால் எல்லாம் இருக்கும்.

அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய் இருந்தாலோ, அந்த வீடு புலி இருக்கும் குகை போல் ஆகிவிடும்.

கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


முருகன் இந்துவா ? முஸ்லிமா ?

அருணகிரியார் முருகனை இராவுத்தனே என்று அழைக்கிறார் இந்த பாடலில்.

இராவுத்தன் என்றால் முஸ்லிம்தானே? முருகன் எப்படி முஸ்லிம் ஆனான்?

இராவுத்தன் என்றால் குதிரை விற்பவன்.

மாணிக்க வாசகருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி பாண்டிய மன்னனிடம் விற்றார்.

அப்படிப்பட்ட சிவனின் மகன் தானே முருகன். எனவே அவனும் ஒரு இராவுத்தன் தான்.

Monday, June 25, 2012

புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குகிறது என்கிறது புறநானூறு.

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.


Sunday, June 24, 2012

நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி என்ற நூல் ஔவையாரால் எழுதப்பட்டது.

எல்லாம் விதி வழி நடக்கும். ரொம்ப அலட்டிகொள்ளாதீர்கள் என்ற ரீதியில் எழுதப்பட்ட நூல்.

வாழ்க்கையில் பிரச்சனைகளும் சங்கடங்களும் வரும்போது புரட்டி பார்க்க உகந்த நூல். மன ஆறுதல் தரும்.

எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை.

அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் இந்த உலகை விட்டு சென்று விடுவோம்.

அதுவரை, பெரிதாக அலட்டி கொள்ளாமல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள்.

Saturday, June 23, 2012

திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?


திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?


நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? திருவள்ளுவர் சொல்கிறார் நம் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் என்ன என்று.

நமக்கு வரும் துன்பத்திற்கு எல்லாம் காரணம் நாம் மற்றவர்களுக்கு செய்த துன்பம் தான்.

எனவே, நமக்கு துன்பம் வேண்டாம் என்றால், நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்யக்க் கூடாது.

சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


பஞ்சம் என்றால் ஐந்து.
சிறு என்றால் சின்னது
ஐந்து சிறிய வேர்களை (மூலம்) கொண்டு உருவாக்கிய மருந்து எப்படி உடலுக்கு நன்மை செய்கிறதோ, அது போல், இந்த சிறு பஞ்ச மூலம் பாடல்கள் நம் வாழ்க்கைக்கு நன்மை செய்யும்.
அதில் இருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை தருகிறேன்.


ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


நம் உடல் நலம், தன் மனைவி, நம்மிடம் பொறுப்பாக பிறர் கொடுத்த பொருள், நம் வாழ்கைக்கு நாம் சேமித்து வைத்த செல்வம் இந்த நான்கையும் பொன் போல பாதுகாக்க வேண்டும்.

நளவெண்பா - காமனை எரித்தது பொய்


நளவெண்பா - காமனை எரித்தது பொய்


புராணகள் எல்லாம் சிவன் காமனை எரித்ததாக சொல்கிறது.

தமயந்தி அதை நம்பவில்லை. காமன் எரிந்து போனது உண்மையானால், தான் இப்படி காதலில் கஷ்டப் பட வேண்டியது இருக்காதே என்று நினைக்கிறாள்.

Thursday, June 21, 2012

ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது


ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது

சில சமயம் வயது வந்த ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் தனியே வீட்டில் விட்டுவிட்டு போக பெற்றோர்களுக்குத் தயக்கமாய் இருக்கும்.

சின்ன பசங்க, ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கும்.

ஆசாரக் கோவை ஒரு படி மேலே போகிறது.

தனிப்பாடல் - எப்பதான் விடியுமோ ?


தனிப்பாடல் - எப்பதான் விடியுமோ ?


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

இரவு அவளுக்கு நீண்டு கொண்டே போகிறது.

ஒருவேளை, இந்த இரவு இனிமேல் விடியவே விடியாதோ என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு.....

Tuesday, June 19, 2012

தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


சொர்க்கம் எங்கே இருக்கிறது ? மேலே எங்கேயோ இருக்கிறதா ? அது வேறு உலகமா ?

ஒரு சமயம் நாவுக்கரசர் கைலாய மலைக்கு செல்ல விரும்பினார்.

நடந்தே சென்றார். வயதான காலத்தில் அவரால் முடியவில்லை.

சோர்ந்து விழுந்து விட்டார்.

அப்போது, ஒரு அடியவர் அவரிடம் "ஐயா, நீங்க ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள்...இதோ இந்த குளத்தில் நீராடி வாருங்கள், உங்களுக்கு கைலாயத்தை நான் காட்டுகிறேன் என்றார்.

நாவுக்கரசரும் அந்த குளத்தில் மூழ்கி எழுந்தார். மூழ்கியது வட நாட்டில் ஏதோ ஒரு இடம்.

எழுந்தது திருவையாறு என்ற இடத்தில்.

நாவுக்கரசருக்கு மிகுந்த ஆச்சரியம்.

எப்படி ஒரு சுவடும் இல்லாமல் இங்கு வந்தோம் என்று.

குளத்தை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்.

அங்கே எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய் வருவதை பார்த்தார். 

அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது.

அனைத்தும் இறைவனும் இறைவியும் போல அவருக்கு தோன்றியது. 

இதுவரை காணாத ஒன்றை கண்டதாக அவரே கூறுகிறார்.

தேவாரத்தில், இந்த பத்து பாடல்கள் மிக முக்கியமான பாடல்களாக கருதப்படுகிறது. 

அதில் இருந்து ஒரு பாடல்

ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது


ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது


எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....:)

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

சகலகலாவல்லி மாலை - ஒரு அறிமுகம்

குமர குருபரர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை, செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய சகலகலாவல்லி மாலை, சரஸ்வதியை பற்றி எழுதியது. 

மிக மிக எளிய தமிழில் எழுதப்பட்ட சுகமான பாடல்கள்.

Monday, June 18, 2012

ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை


ஆசாரக் கோவை - சாப்பிடும் முறை


உணவு பற்றி ஆசாரக் கோவை நிறையவே சொல்கிறது. அதில் முதல் பாடல் 

Request to the readers of this blog

A Request to the readers of this blog...

Please make this more interactive.

Post your views, comments, inputs. It will make the blog more lively and interesting.

Thanks

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கேளுங்க, அவனை கேக்காதீங்க...


கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கேளுங்க, அவனை கேக்காதீங்க...


அசோக வனத்தில் தனிமையில் சீதை இருக்கிறாள்.

இரவு நேரம். 

சற்று யோசித்துப் பாருங்கள். 

செல்லமாய் வளர்ந்த சகரவர்த்தியின் மகள். இராமனுக்கு வாழ்க்கைப் பட்டு, தசரதனுக்கு மருமகளாக வந்தாள்.

இராமன் முடி சூட்டப் போகிறான். பட்டத்து இராணியாக வேண்டியவள், "நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம்" என்று அவன் பின்னால் கானகம் சென்றாள்.

இராவணனால் கடத்தப்பட்டாள். 

அந்த அசோக வனத்தில், இரவு நேரத்தில், நிலவை பார்க்கிறாள். 

"ஏய், அறிவு இல்லாத நிலவே, நகராமல் நிற்கும் இரவே, குறையாத இருளே, எல்லோரும் என்னையே சொல்லுங்க.
என்னை விட்டு தனியா இருக்கானே, அந்த இராமன், அவன் கிட்ட ஒண்ணும் கேக்க மாட்டீங்களா ?" என்று இரவோடும், நிலவோடும் சண்டை பிடிக்கிறாள்.

சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது


சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது

துயரம் நம் மனத்தில் இருக்க இடம் வேண்டும் அல்லவா ?

மனம் எல்லாம் அந்த கலைவாணியை நிறைத்து வைத்து விட்டால், துயர் எங்கிருந்து வரும்?


ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


உடை உடுத்தலை பற்றி ஆசாரக் கோவை சில வழி முறைகளை கூறுகிறது.

ஒரு ஆடை கூட உடுத்தாமல் நீராடக் கூடாது (இது பொது இடங்களில், ஆறு, குளம் போன்ற இடங்களை குறிக்கும் என்று நினைக்கிறேன்),

ஒரு ஆடை மட்டும் உடுத்து உணவு உண்ணக் கூடாது, குறைந்த பட்சம்

இரண்டு ஆடையாவது உடுத்தி இருக்க வேண்டும்,

உடுத்திய ஆடையை நீரினுள் பிழியக் கூடாது,

ஒரு ஆடை மட்டும் உடுத்து பொது சபையில் நுழையக் கூடாது


Sunday, June 17, 2012

ஆசாரக் கோவை - ஒரு அறிமுகம்


ஆசாரக் கோவை - ஒரு அறிமுகம்


வாழ்வில் கடை பிடித்து ஒழுக வேண்டிய நெறிமுறைகளை தொகுத்து தருகிறது ஆசாரக் கோவை.

இதை இதை செய்ய வேண்டும், இதை இதை செய்யக் கூடாது என்று பட்டியல் போட்டு தருகிறது. 

சமஸ்க்ரிதத்தில் இது போன்ற நூல்களை ஸ்மிர்திகள் என்று சொல்வார்கள்.

இது தமிழில் உள்ள ஸ்ம்ருதி என்று சொல்லலாம். பல வட மொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்த நூல்.

இதில் உள்ள பல வழி முறைகளை இன்று கடைபிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும், அறிந்து கொள்வது நல்லது தானே. முடிந்தவரை கடை பிடிக்காலாம்.

இதில் சொல்லப் பட்ட வழி முறைகளுக்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நூல் எழுதிய ஆசிரியரே, "இது முன்னோர் சொன்னது"., "இது கற்று அறிந்தோர் சொன்னது", என்று குறிப்பிடுகிறார். 

பல பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கிறது.

முதல் பாடலிலேயே ஆசிரியர் நேராக விசயத்துக்கு வந்து விடுகிறார். 

எது ஆசாரத்துக்கு வித்து ? அடிப்படை என்று ஆரம்பிக்கிறார்:

எட்டு விதமான குணங்கள் ஆசாரத்திற்கு வித்து என்கிறார்:

அவையாவன:

கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன்


கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன் 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான்.

அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.

"என் தோளின் மேல் ஏறிக்கொள், இப்போதே உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்..மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான். 

சீதை பதில் சொல்கிறாள்....

"துன்பம் தரும் விலங்குகளைப் போல உள்ள இந்த இலங்கை எம்மாத்திரம் ? 

எல்லையில்லா இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்.

நான் அப்படி செய்தால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைத்து அந்த எண்ணத்தை கூட குற்றம் என்று நினைத்து தூக்கி எரிந்து விட்டேன்" என்றாள்

நினைத்துப் பாருங்கள்.

ஒரு வேளை சீதை அவளே இராவணனை எரித்து விட்டு, நேரே இராமன் முன் வந்து நின்றால், எப்படி இருந்திருக்கும்?

இராமனை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கும் ?

கட்டிய மனைவியை எதிரியிடம் இருந்து காப்பாற்றத் தெரியாதாவன் என்று அல்லவா நினைக்கும்?

அந்த நினைப்புக்கு இடம் தரா வண்ணம் சீதை பொறுமை காத்தாள்.

அந்தப் பாடல்

Saturday, June 16, 2012

கம்ப இராமயாணம் - வார்த்தை நயம்


கம்ப இராமயாணம் - வார்த்தை நயம்


கம்ப இராமயாணத்தில் வார்த்தை நயம் மிக்க பாடல்கள் நிறைய உண்டு. அதில் இருந்து ஒன்று.

கார் காலமும் முடிந்து விட்டது. சீதையை தேட ஆள் அனுப்புகிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான்.

அவனுக்கு அதை நினைவு படுத்தி வருமாறு இலக்குவனிடம் இராமன் சொல்லி அனுப்புகிறான்.

அந்தப் பாடல்:

சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி


சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி


கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.


எப்படி தன்னால் எழுத முடிந்தது என்று அவரே கூறுகிறார்

கல்விக் கடவுளான சரஸ்வதியையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி சொல்லுமாம்.

நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


நான்மணிக்கடிகை - அனுபவ ஞானம்


எல்லாம் அறிந்தாரும் இல்லை.

ஏதும் அறியாதாரும் இல்லை

எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை

ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

மனிதர்களுக்குள் அறிந்ததும், அறியாததும், நல்லதும், கெட்டதும் கொஞ்சம் கூட குறைய இருக்கும்...மத்தபடி எல்லாரும் ஒண்ணுதான்

Friday, June 15, 2012

கம்ப இராமாயணம் - இராமனின் பிரிவு சோகம்


கம்ப இராமாயணம் - இராமனின் பிரிவு சோகம்


சீதையையை பிரிந்து இராமன் தனித்து இருக்கிறான்.

மழைக் காலம்.

கானகம்.

தனிமை.

மனைவியை பிரிந்த சோகம்.

பிரிந்த சோகம் கூட இல்லை, மனைவி தொலைந்த சோகம்.

அந்த நேரத்தில் பெய்யும் மழையை கம்பன் சொல்கிறான்....

மலையின் மேல் விழும் மழை, மன்மதன், சீதியையை பிரிந்த இராமனின் மேல் விடும் மலர் அம்புகள் போல இருந்ததாம்...


நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?


நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?


சில பெண்களை அவர்களின் இளமை காலத்தில் பார்த்திருப்போம். அவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள்.

இப்ப அவர்களை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கும்.

எப்படி இருந்த பொண்ணு, இப்படி ஆகிவிட்டாளே என்று.

இந்த பொண்ணுக்கா அந்த காலத்தில் படிப்பு, வேலை, வெட்டி எல்லாம் விட்டு விட்டு உருகினோம் என்று இருக்கும்.

இதை உணர்ந்த நாலடியார் பாடல் ஒன்று...

திருவருட்பா - கண்ணேறு


திருவருட்பா - கண்ணேறு 


இறைவா உன் திருவடி மிக மிக அழகாக இருக்கும்.

அதை பார்த்தால் அந்த அழகில் மயங்கி விடுவேன்.

அப்படி மயங்கி மனதை பறி கொடுத்து அந்த திருவடியில் மன லயித்து போனால், என் கண்ணே பட்டு விடும்.

அதனால் தான் நீ எனக்கு உன் திருவடியை கனவிலும் கூட காட்ட மறுக்கிறாயா என்று உருகுகிறார் வல்லாளர்

Thursday, June 14, 2012

நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்


நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்


நான் மணி கடிகை என்பது பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று.

கடிகை என்றால் உயர்ந்த ரத்தினம் என்று பொருள். நான் மணி கடிகையில் ஒவ்வொரு பாடலும் நாலு உயர்ந்த கருத்துகளை கொண்டுள்ளது.

யார் யாருக்கு தூக்கம் வராது என்று ஒரு பாடல்...

திருட நினைப்பவர்களுக்கு, காதல் வயப் பட்டவர்களுக்கு, சொத்து சேக்கணும் என்று நினைப்பவர்களுக்கு, சேர்த்த சொத்தை காபந்து பண்ண நினைப்பவர்களுக்கு தூக்கம் வராது.

தேவாரம் - பிறவா நாள்


தேவாரம் - பிறவா நாள் 


திரு பாதிரிப் புலியூர்.

கடலூர் மாவட்டத்தின் தலை நகர்.

புலிக்கால் முனிவர் பூஜை செய்த தலம்.

திரு நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் போட்ட இடம்.

"சொற்றுணை வேதியன்" என்ற நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல் தெப்பமாக மாற, அதில் மிதந்து கரை ஏறி வந்தார்.

இன்றும் "கரை ஏற விட்ட குப்பம்" என்ற இடம் கடலுருக்கு அருகில் உள்ள தேவனாம்பட்டினம் என்ற கடற் கரையில் உள்ளது.

அங்கே நாவுக்கரசருக்கு ஒரு கோயில் இருக்கிறது.


நாவுக்கரசர் சொல்கிறார்....இறைவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள் என்கிறார்.நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை


நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை


அவளின் கண்களை மீன் என்று எண்ணி கொத்தி தின்ன முயன்றது மீன் கொத்திப் பறவை. 

ஆனால், கிட்ட போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து கொத்தாமல் சென்று விட்டது.


Wednesday, June 13, 2012

திருக்குறள் - காதலா ? நாணமா ?


திருக்குறள் - காதலா ? நாணமா ?


இன்னைக்கு அவன் கிட்ட சொல்லிரலாமா நம்ம காதலை ?

எப்படி சொல்றது ? நேரா போய் "நான் உன்னை காதலிக்கிறேன்" அப்படினா ?

சீ... சீ ... அது ரொம்ப அசிங்கம். அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்?

பின்ன சொல்லாமையே இருந்திரலாமா ?

அது சரிப் படாது...சொல்லிற வேண்டியது தான்...

ஆனா...ரொம்ப வெட்கமா இருக்கு...ஒரு பொண்ணு போய் எப்படி சொல்ல முடியும்...

சரி அவனா கண்டு பிடிச்சு கேட்டா சொல்லிக்கலாம்...

ஒரு வேளை அவன் கண்டுக்கவே இல்லைனா ?

.................................

ஐயோ, இந்த காதலுக்கும் நாணத்துக்கும் நடுவில் நான் கிடந்து படும் பாடு இருக்கே...போதும்டா சாமி....


தேவாரம் - கப்பல் கவிழும் நேரம்


தேவாரம் - கப்பல் கவிழும் நேரம்


அது ஒரு அழகிய கப்பல்.

கடலின் மேல் ஆடி ஆடி சென்று கொண்டு இருக்கிறது.

திடீரென்று ஒரு பெரிய பாறையில் மோதி உடைந்து விடுகிறது.

அந்த கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளிக்கிறார்கள்.

நீந்தி கரை சேர முடியுமா ?

இன்னொரு கப்பல் வந்து அவர்களை காப்பாற்றுமா ?

அதுவரை உயிர் வாழ முடியுமா ?

அது என்ன கப்பல் ? மனம் என்ற கப்பல்.

எப்படி அது சென்றது ? நம் புத்தி என்ற துடுப்பால் துழாவி அதை செலுத்துகின்றோம்.

அதில் என்ன இருக்கிறது ? சினம் என்ற சரக்கு இருக்கிறது.

அது எங்கே போகிறது ? வாழ்கை என்ற அடர்ந்த கடலில் செல்கிறது

அப்ப என்ன ஆச்சு ? - காமம் என்ற பாறை தாக்கியது

அப்புறம் ? - ஒண்ணும் தெரியாமல் தத்தளிக்கிறோம்

அந்த நேரத்திலாவது, ஒற்றியூர் என்ற ஊரின் தலைவனாகிய சிவனே, உன்னை நினைக்கும் புத்தியை தருவாய் என்று வேண்டுகிறார் நாவுக்கரசர்.


Tuesday, June 12, 2012

நாலடியார் - அம்மாவா ? காதாலனா?


நாலடியார் - அம்மாவா ? காதாலனா?


அவள் காதலனோடு செல்ல முடிவு செய்து விட்டாள்.

யாரிடமும் சொல்லவில்லை. 

அவள் இருக்கும் வீடு, அப்பா, சகோதரர்கள், தோழிகள், வீட்டில் உள்ள சாமான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். இதை எல்லாம் விட்டு விட்டு போகப் போகிறோம் என்று அவளுக்குள் சோகம் ததும்புகிறது.

யாரிடம் சொல்வாள். சொல்லிவிட்டா ஓடிப் போக முடியும்.

அவளுடைய அம்மாவைப் பார்க்கிறாள். எப்படி இந்த அம்மாவை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்று மனம் தவிக்கிறது.

என்றும் இல்லாத வழக்கமாய் அம்மாவை கட்டிக் கொள்கிறாள். ரொம்ப இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.

அம்மாவிற்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.

கடைசியில் வீட்டை விட்டு காதலனோடு சென்று விட்டாள்.

அம்மா, தனிமையில் இருந்து யோசிக்கிறாள்.

"பாவம் ரொம்ப பயந்து விட்டாள் போல இருக்கிறது. அது தான் அவ என்னை அப்படி கட்டி கட்டி பிடிச்சாளா. அப்ப எனக்கு தெரியல ஏன் அந்த குழந்தை என்னை கட்டி கட்டி பிடிச்சுதுன்னு...ஹ்ம்ம்...இப்ப தெரியுது" என்று பெரு மூச்சு விடுகிறாள்.

நாலடியார் தரும் அந்தப் பாடல்

Monday, June 11, 2012

தேவாரம் - கெடில நதிக் கரை ஓரம்

தேவாரம் - கெடில நதிக் கரை ஓரம்கெடிலம் ஆறு.

கடலூரை சுற்றி ஓடும் ஆறு.

ஊரை எந்தப் பக்கம் இருந்து கடந்தாலும் இந்த ஆற்றை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நான் படித்த பள்ளிக்கு மிக அருகில் இந்த ஆறு இருக்கிறது.

பள்ளி முடிந்ததும் இந்த ஆற்று மணலில் பட்டம் விட்டது, கபடி விளையாடியது எல்லாம் ஞாபகம் இருக்கிறது.

பள்ளியில் இருந்து போகும் வழியில் ஒரு சர்ச் இருந்தது.

அதை தாண்டி ஒரு சுடுகாடு.

சுடுகாட்டை தாண்டி கொஞ்சம் அடர்ந்த காட்டுச் செடிகள்.

அதை தாண்டி இந்த ஆறு.

இந்த ஆறு போகும் வழியெல்லாம் நிறைய கோவில்கள் இருக்கின்றன.

திரு வீரட்டாணம் அதில் ஒரு தலம்.

நாவுக்கரசர் வயற்று வழியால் மிகவும் அவதிப் பட்டார். அப்போது அவர் சமண சமயத்தில் இருந்தார். 

சமண மத தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் நாவுக்கரசரின் வயற்று வலி போகவில்லை.

அவருடைய தமக்கையார் திலகவதியார் சிவ நாமத்தை சொல்லி திரு நீறு தந்தார். வயற்று வலி போய் விட்டது.

அப்போது நாவுக்கரசர் பாடிய பாடல் இது.

முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?


முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?

முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் மிக மிக இனிமையான பாடல்கள்.

காதலை மிக அழகாக சொல்லும் பாடல்கள்.

இங்கே ஒரு பெண் தன் தோழியிடம் கூறுகிறாள்....

அரசன் என்பவன் தன் குடி மக்களிடம் ஆறில் ஒரு பங்கைத்தானே வரியாக வாங்க வேண்டும்...

ஆனால் இந்த மன்னனோ என் மனமும், என் நாணத்தையும், என் பெண் நலன்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டானே..இது எந்த விதத்தில் தர்மம் என்று கேட்கிறாள்.

கம்ப இராமாயணம் - கோப்பையில் விழுந்த நிலா


கம்ப இராமாயணம் - கோப்பையில் விழுந்த நிலா


அவள் ஒரு இளம் பெண்.

ஒரு நாள், அவள் மதுவை ஒரு கோப்பையில் ஏந்தி வருகிறாள்.

பெண்கள் அந்த காலத்தில் தண்ணி அடித்திருக்கிறாள் !

அப்படி வரும் போது, அவளின் முகம் அந்த கோப்பையில் தெரிகிறது.

அதை நிலவு என்று நினைக்கிறாள். ஒரு புறம் நிலவு போன்ற அவளின் அழகு, மறு புறம் மது தந்த போதை.

அவள் அந்த நிலவிடம் சொல்கிறாள்...

"ஏய் நிலா, நான் என் காதலனோடு ஊடல் கொண்டு இருக்கும் போது நீ சுடாமல் குளிர்ச்சியாக இருந்தால் உனக்கு இந்த மதுவை தருவேன்" என்று போதையில் கூறுகிறாள்.

Sunday, June 10, 2012

கலிங்கத்துப் பரணி - நிலவின் ஒளியை துகில் என்று...


கலிங்கத்துப் பரணி - நிலவின் ஒளியை துகில் என்று...

காதலனோடு கலந்து மகிழ்ந்து இருந்தாள்.

அந்த மயக்கத்தில் நிலவின் ஒளியை உடை என்று எடுத்து அணிந்து கொண்டு போனவளே...கதவை திற 

புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்


புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்


உடன் கட்டை ஏறுதல் என்ற ஒன்றை இன்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

கலாசாரத்தில், பண்பாட்டில் எவ்வளவோ உயர்ந்த ஒரு இனம் இது போன்ற ஒரு வழக்கத்தை கொண்டு இருந்தது என்று நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது.

வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு விஷயம்.

பெண்களை ரொம்பவும் படுத்தி இருக்கிறார்கள், அந்த காலத்தில்.

உடன் கட்டை ஏறாத பெண்ணின் வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாய் இருந்து இருக்கிறது.

அந்த வாழ்க்கைக்கு, உடன் கட்டை எவ்வளவோ மேல் என்று ஒரு பெண்ணே சொல்வது, கொடுமையிலும் கொடுமை.

இனியவை நாற்பது - கூற்றம் வரவை சிந்தித்து வாழ்தல் இனிது


இனியவை நாற்பது - கூற்றம் வரவை சிந்தித்து வாழ்தல் இனிது


இனியவை நாற்பது என்ற நூலில், வாழ்க்கைக்கு இனிமையான, நன்மை தரும் நாற்பது பாடல்கள் உள்ளன.

பொதுவாக எல்லா பாடல்களும் நாம் அறிந்த விஷயங்களை தான் சொல்கின்றன. 

இந்த ஒரு பாடல் சற்று வித்யாசமாய் இருந்தது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?


Empathy என்றால் மற்றவர்களின் மனநிலையில் இருந்து உலகையும் அதில் நடக்கும் செயல்களையும் பார்ப்பது.

ஒரு நல்ல படைப்பாளிக்கு இது மிக அவசியம்.

கதா பாத்திரங்களின் மன நிலையில் இருந்து எழுதினால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஏறக்குறைய அனைத்து ஆழ்வார்களும் தங்களை தாயக, நாயகியாக, தந்தையாக, நினைத்து மிக அருமையான பாசுரங்களை தந்து இருக்கிறார்கள்.

குல சேகர ஆழ்வார் இராமன் மேல் மிகுந்த ஈடு பாடு உள்ளவர்.

தன்னை தசரதனாக பாவித்து, இராமன் கானகம் போனால் எப்படியெல்லாம் துன்பப் படுவானோ என்று நினைத்து உருகி உருகி பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்.

அதில் இருந்து ஒரு பாடல்:


Saturday, June 9, 2012

திரு நீற்றுப் பதிகம் - திரு நீற்றின் மகிமை


திரு நீற்றுப் பதிகம் - திரு நீற்றின் மகிமை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குருணி விநாயகர் சந்நிதி உண்டு.
அங்கே, கோவில் மடை பள்ளியில் சமையல் செய்த அடுப்பின் சாம்பலை போட்டு வைத்து இருப்பார்கள்.


அந்த சாம்பலை பூசி கொண்டால் நோய் குணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.

இன்றும் நடை முறையில் உள்ள வழக்கம் இது.

பாண்டிய நெடுஞ்செழியனுக்கு ஞானசம்பந்தர் அந்த சாம்பலை பூசி நோய் தீர்த்ததாக வரலாறு உண்டு.

அது பற்றி திரு நீற்று பதிகம் என்று பதிகத்தில் பாடியுள்ளார்.

திருக்குறள் - காதலை மறைக்க முடியாது


திருக்குறள் - காதலை மறைக்க முடியாது

தாய் (தன் கணவனிடம்): ஏங்க, நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கிறான்னு நினைக்கிறேன்.
தந்தை: எப்படி சொல்ற ? உன் கிட்ட வந்து ஏதாவது சொன்னாளா ?
தாய்: இல்லீங்க...எனக்கு என்னவோ தோணுது..கொஞ்ச நாளாவே அவ கிட்ட என்னவோ ஒரு மாத்தம் தெரியுது...
தந்தை; போடி, உனக்கு வேற வேலை இல்லை...காதலிச்சா என்ன..அது ஒண்ணும் பெரிய தப்பு இல்லையே....

--------------------------------

தோழி: ஏண்டி, என்ன ஏதாவது loves -ஆ ?
அவள்: இல்லையே .. உன்கிட்ட சொல்லாமலா ?
தோழி: இந்த கதை எல்லாம் என்கிட்டே விடாத...உன் முகத்தை பார்த்தாலே தெரியுது...நெஜமா சொல்லு...லவ் தான...அட இங்க பார்ரா வெட்கத்தை....

----------------------------------------
 

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் 
மறையிறந்து மன்று படும்


நிறையரியர் மன் = இவள் அடக்கம், கற்பு இவற்றால் நிறைந்தவள்
மன்அளியர் = இவள் மிக எளிமையானவள் என்று
என்னாது = நினைத்துப் பார்க்காமல்
காமம் = காதல்
மறையிறந்து = இரகசியம் இறந்து, அதாவது இரகசியம் இல்லாமல்
மன்று படும் = ஊர் அறிய வெளிப்பட்டு விடும்
அபிராமி அந்தாதி - அபிராமி போகாத இடம்


அபிராமி அந்தாதி - அபிராமி போகாத இடம்


பக்தி இலக்கியத்தில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அபிராமி அந்தாதி.

இதை படிக்கும் போது எனக்கு அபிராமி ஒரு அம்மனாக தோன்றவில்லை. ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக, எனக்குத் தோன்றுகிறது.

ரொம்பவும் அன்யோன்யமான பாடல்கள்.

"தொட்டு அணைத்து உன் தாமரை போன்ற அடியை தன் தலையில் வைத்துகொண்ட சிவனின் கையில் இருந்த தீயும், தலையில் இருந்த ஆறும் எங்கே? உண்மையான மனம் இல்லாதவர்களை தவிர மற்றவர்களின் மனத்தில் ஒரு போதும் செல்லாத பூங்குயிலே"

Friday, June 8, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவளை விட்டு இங்கு ஏன் வந்தாய் ?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவளை விட்டு இங்கு ஏன் வந்தாய் ?

இராத்திரி வேளையில், சின்ன இடையுள்ள ஒரு பெண்ணை திருட்டுத்தனமாய் நீ அழைத்துக்கொண்டு போகும் போது, எதிரில் வந்த இன்னொரு பெண்ணுக்கு கையால் ஜாடை செய்வதை நான் பார்த்தேன்.

இப்ப எதுக்கு அவளுகளை விட்டு விட்டு எங்கே வந்தாய்.

அங்கேயே போ என்று கண்ணனை செல்லமாக கோபிக்கிறாள் இந்த பெண். 

குலசேகர ஆழ்வாரின் ஆறாம் திருமொழி, 702 ஆவது பாசுரம்.
 

Thursday, June 7, 2012

கம்ப இராமாயணம் - உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை !


கம்ப இராமாயணம் - உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை !


இராமாயணத்தில் ஒரே ஒரு கதையை படித்தோர், உரைத்தோர், உரைத்ததை கேட்டோர், இது நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவர்கள் எல்லோரும் நரகம் போக மாட்டார்கள்.

உங்களுக்கு நிச்சயம் நரகம் இல்லை.....:)


திருக்குறள் - வாழ்வது எப்போது ?


திருக்குறள் - வாழ்வது எப்போது ?


எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பது அல்ல வாழ்கை.

வாழ்கை என்பது வாழ்வது.

நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்கத் தெரியும். அதை நல்ல வழியில் செலவழிக்கத் தெரியாது. நாளைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்க்கள்.

மனைவி மக்கள் எல்லோரும் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து செலவழிக்க நேரம் இருக்காது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுவார்கள்.

நல்ல புத்தகம், நல்ல இசை, நல்ல நண்பர்கள், (நல்ல blog !) இவற்றிற்கெல்லாம் நேரம் இருக்காது. ஏதோ கற்ப கோடி ஆண்டு வாழப் போவது போல் எதிர் கால கற்பனையில் நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் வாழத் தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

 

நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


ஒரு தாய் தனியே இருந்து யோசிக்கிறாள். 

அவளுடைய மகள் காதலனோடு சென்று விட்டாள்.

அவளோ செல்வச் சீமாட்டி. பணக்கார வீட்டுப் பெண்.

காதலன் ஒரு ஏழை பையன். எப்படி எல்லாம் செல்லமாய் வளர்ந்த பெண் இப்ப அந்த வீட்டில் போய் எப்படி எல்லாம் துன்பப் படப் போகிறாளோ என்று தவிக்கிறாள். 

"அந்த பெண் சின்னவளாக இருக்கும் போது ஒரு நாள், காலில் மருந்தாணி இட, அந்த மருதாணி குழம்பை பஞ்சில் தொட்டு தொட்டு வைத்தேன், அது கூட வலிக்கிறது "பைய , பைய" என்று காலை இழுத்துக் கொண்டாள். இப்ப அந்த காட்டில் கல்லிலும் முள்ளிலும் எப்படி தான் நடந்து போவாளோ" என்று எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்கிறாள்.


Wednesday, June 6, 2012

கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?


கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?

அவதாரம் என்றால் இறங்கி வருவது என்று பொருள். 

இறை நமக்காக இறங்கி வருவது அவதாரம்.

நம்மால் மேலே போக முடியாது. நம்மை ஏற்றி விட அவன் இறங்கி வர வேண்டும்.

இராமாயணம் பாடப் புகுந்த கம்பர், இராமனை இரு கை வேழம் என்கிறார் . 

ஏன் ? 

யானையின் குணம், தன் காலைப் பிடித்தவர்களை தலைக்கு மேல் தூக்கி விடுவது.

பாற்கடல் விட்டு இந்த மனித குலம் உய்ய மண் மீது வந்தது அந்த மன். 

எனவே இராமனை பற்றி சொல்ல வந்த கம்பர் "இரு கை வேழம்" என்றார்

இராமன் வந்ததின் நோக்கம் நம்மை மேலேற்றி விடுவது. எனவே "வேழம்"....

திருக்குறள் - கயமை


திருக்குறள் - கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கயமை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.

கயவர்களை, வள்ளுவர் மனிதரில் கூட சேர்க்க தயாராய் இல்லை. அவர்களை "கீழ்" என்கிறார். அவர்களை அஹ்ரினையாக மாற்றி விட்டார், ஒரே சொல்லில்.

இந்த "கீழ்"கள் தீயோருக்கும் கீழானதுகள்.

இந்த "கீழ்"களுக்கு ஒரு வலிமை உண்டு. "வற்றாகும் கீழ்" என்கிறார் வள்ளுவர். வற்றல் = வலிமை. 

என்ன வலிமைனா, மற்றவர்களை குறை சொல்லி அவர்களை துன்பபடுத்தி, அதில் இன்பம் காண்பது.

வடு என்றால் காயம் ஆரிய பின்னும் மறையாமல் இருக்கும் தழும்பு.

"தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"

"வடுகாண" இந்த கீழ் இருக்கிறதே அது வடு காண வலிமை பெற்றது.

பொறாமை வேறு, கீழ்மை வேறு. பொறாமை கொள்வதருக்கு மற்றவர்கள் வீடு, வாசல் என்று சொத்து பத்தோட இருக்கணும். 

கீழுக்கு அது எல்லாம் வேண்டாம். மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும், அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வடு காண தயாராகி விடும்.

எனவே இந்த கீழ்கள் பொறாமை கொண்டவர்களை விட கீழானவர்கள். அப்படி உடுத்தும் துணி பட்டு பீதாம்பரமாய் இருக்க வேண்டும் என்று இல்லை, உண்ணும் உணவு விருந்தாக இருக்க வேண்டும் என்று இல்லை, மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும்...கயமை தலைப் பட தொடங்கிவிடும்.


"காணின்" என்கிறார் வள்ளுவர். பார்த்தாலே போதும். மற்றவர்கள் உடுத்தும் உடையும், உண்ணும் உணவும் அவர்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்று இல்லை...மற்றவர்கள் உடுத்துவதையும், உணபதையும் பார்த்தாலே போதும், வடு காண கிளம்பிவிடும் கீழ்.


எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

இன்னும் யோசித்தால் மேலும் கூட அர்த்தம் தோன்றும்.நாலடியார் - உப்பு போட்ட காதல்


நாலடியார் - உப்பு போட்ட காதல்

நாலடியார் என்ற நூலிலும் காமத்துப் பால் உண்டு.

(ஹை...ஜாலி)

என் காதலியையை கட்டி அணைக்காவிடில் அவள் உடம்பில் பசலை நிறம் வந்து விடும்.

அதுக்காக எப்ப பார்த்தாலும் கட்டி அணைத்து கொண்டே இருக்க முடியுமா ?

ஊடல் இல்லாத காமம் உப்பில்லாத பண்டம் போல. காதலுக்கு சுவை சேர்பதே ஊடல் தானே.

காதலில் ஊடி, பின் கூடுவது ஒரு சிறந்த technique ஆகும்.


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


கம்ப இராமாயணம் - மெய் சிலிர்த்த பூமி


இராமன் நடந்து வருவதை சூர்பனகை பார்க்கிறாள். அவன் பாதம் பட்டு பூ மகள் உடல் சிலிர்க்கிறாள். அவளுக்கு உடல் எல்லாம் புல்லரிக்கிறது. பூமியின் மேல் உள்ள புற்கள் எல்லாம் சிலிர்த்து நிற்கின்றன. அது பூ மகள் உடல் சிலிர்த்ததை போல் இருக்கிறது என்று நினைக்கிறாள். 

விவேக சிந்தாமணி - சொல்லக் கூடாதது


விவேக சிந்தாமணி - சொல்லக் கூடாதது 

எது எல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்று விவேக சிந்தாமணி பட்டியல் தருகிறது.

Tuesday, June 5, 2012

விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை


பேருந்து நிலையத்தில் அவளுக்காக காத்திருக்கும் நேரம்.
இப்ப வந்துருவா.

அதோ தூரத்தில் வருவது அவ மாதிரி தான் இருக்கு.

அவளே தான்.

நெருங்கி வர வர இதயத் துடிப்பு எகிறுகிறது.

அந்த கரிய நீண்ட குழல், மயில் போன்ற சாயல், குழந்தை போல் களங்கமில்லா முகம்...

கையெடுத்து கும்பிடலாம்....தெய்வம் நேரில் வந்த மாதிரி இருக்கிறது....

விவேக சிந்தாமணியின் 107 ஆவது பாடல்....

Monday, June 4, 2012

விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


தமிழ் இலக்கியம் ஆண் சார்ந்ததாகவே இருந்து வந்து இருக்கிறது.

மனைவியை சந்தேகித்த இராமனை இந்த நாடு கடவுள் என்றே போற்றுகிறது.

விலை மகள் பின்னால் போய், சொத்தை எல்லாம் அளித்த கோவலனை கோவிக்காமல் ஏற்றுக் கொண்ட கண்ணகியை கற்ப்புக்கு அரசி என்று கொண்டாடுகிறது தமிழ் கூறும் நல் உலகம்.

மனைவியை வைத்து சூதாடிய யுதிஷ்டிரன், தர்ம ராஜா

மனைவியை விற்ற அரிச்சந்திரன், சக்ரவர்த்தி

நாடு கானகத்தில் மனைவியின் சேலை தலைப்பை திருடிக்கொண்டு அவளை தவிக்க விட்டு சென்ற நளன், மகாராஜா

கவி பாட பாரதி, குனிந்து கும்மி அடிக்க நாங்கள் என்று பெண்கள் குரல் கொடுத்தாலும், ஆணாதிக்கம்தான் ஆல மரமாய் விரிந்து கிடக்கிறது தமிழ் இலக்கியம் எங்கும்.

பெண்களை தெய்வம் என்று போற்றிக் கொண்டே, அவர்களை கீழே தள்ளி எட்டி உதைக்கிறது இந்த சமூகம்....

விவேக சிந்தாமணி, பெண்களைப் பற்றி பேசுகிறது இங்கே....

குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


அவன் இருக்கும் இடம் என் ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருக்கிறது.

என்னை பார்க்க அடிக்கடி வருவான்.

என் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பு.

அவன் வரும் வழியோ சரியான சாலை வசதி இல்லாத, மலை பாங்கான இடம்.

அங்கே மரத்திற்கு மரம் குரங்குகள் தாவிக் கொண்டு இருக்கும்.

ஒரு நாள் அப்படித்தான்,தாவும் போது, ஒரு ஆண் குரங்கு கை தவறி கீழே விழுந்து இறந்து விட்டது.

அதன் பிரிவை தாங்காத பெண் குரங்கு, முழுதும் வளராத தன் குட்டியையை அதன் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தானும் அந்த மலையில் இருந்து கீழு விழுந்து உயிரை விட்டுவிட்டது.

குரங்குக்கும் கை தவறும் ஆபத்தான இடம் அவன் வரும் வழி.

அது மட்டும் அல்ல, குரங்குகள் கூட தங்கள் ஜோடிகளிடம் அபரிமிதமான அன்பை செலுத்தும் ஊர் அவன் ஊர்.

அவன் வரவில்லை என்றால் அவனை தேடுகிறது.

வரவேண்டும் என்றால், இவ்வளவு ஆபத்தை கடந்து வர வேண்டுமே ?

அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால். அதுக்கு அவன் வராமலேயே இருப்பது நல்லது.

இப்படி அந்த குறுந்தொகை காதலியின் மனம் கிடந்து அலை பாய்கிறது.


திருக்குறள் - கொல்லாததும், சொல்லாததும்


திருக்குறள் - கொல்லாததும், சொல்லாததும்

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு.

சான்றான்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள்.

சான்றாண்மை என்றால் உயர்ந்த குணங்களை அடைந்து பின் அதில் இருந்து வழுவாமல் இருப்பது.

ஒருவன் சான்றோனாக வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரு பட்டியலை தருகிறார் வள்ளுவர். அதில் உள்ளது எல்லாம் முடியாவிட்டாலும், கொல்லாமை மற்றும் பிறர் தீமை சொல்லாமை எந்த இரண்டையாவது கடை பிடியுங்கள் என்கிறார்.

நோன்பு என்றால் விரதம் என்று கொள்ளலாம்.

நோன்பு என்பது ஒன்றை அடைய வேண்டி செய்வது. அடைந்த பின், நோன்பு முடிந்து விடும். சபரி மலைக்கு மாலை போடுவது மாதிரி. மலைக்கு போய் வந்தபின் நோன்பு, கார்த்திகை விரதம் முடிந்து விடும்.

ஏகாதசி விரதம். கார்த்திகை சோமவார விரதம்....மாதிரி.

சால்பு என்பது எப்போதும் கடைப்பிடித்து வாழ்வது. திருடாமல் இருப்பது, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது மாதிரி. எப்போதும் கடை பிடித்து வாழ்வது. 

சான்றாமை என்பது பிற உயிரை கொல்லா நோன்பும், பிறர் தீமை சொல்லா சால்பும் உடையது.

நோன்பை விட சால்பு உயர்ந்தது.

ஒரு உயிரை கொல்வது தீமைதான். அதை விட தீமையானது மற்றவர்களின் கெட்ட குணங்களை, தீமைகளை வெளியே சொல்வது என்கிறார் வள்ளுவர். எனவே தான் கொல்லாததை நோன்பு என்றும், சொல்லாததை சால்பு என்றும் சொல்கிறார்.

கொல்வதற்கு ஆயுதம் வேண்டும். ஆயுதம் இல்லாத சமயம் கொல்லாமல் இருக்க முடியும். ஆனால் மற்றவர்களைப் பற்றி பேசுவது அப்படி அல்ல. நாக்கு மட்டும் போதும்.

கொல்வதற்கு, கொல்லப்படுபவன் நேரில் இருக்க வேண்டும். பிறரை பற்றி பேச, பேசப்படும் ஆள் நேரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், வள்ளுவர் "நலத்தது" என்கிறார். 

அது என்ன நலத்தது ?

நல்லது என்று சொல்லவில்லை. நல்லவைகளோடு சேர்ந்தது என்கிறார்.

சான்றோன் என பெயர் எடுத்த யாரும், பிறர் தீமைகளை வெளியே சொல்ல மாட்டார்கள். 

ஏழே ஏழு வார்த்தை. எவ்வளவு அர்த்த செறிவு.

இன்னும் யோசித்தால், மேலும் அர்த்தம் தோன்றும் என்று நினைக்கிறேன்....


கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்


கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்


சூர்பனகை இராமனை முதன் முதலாகப் பார்க்கிறாள்.

அங்கே கம்பன் சூர்பனகை வாயிலாக இராமனின் சிறப்புகளை பாடுகிறான்.

இராமனின் வடிவழகை நோக்கினாள்.

சிறந்த உருவம்.

ஆனால் தவ வேடம்.

இந்த இராமன் தவம் செய்ய - அந்த தவம், என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.

கம்ப இராமாயணம் - பொங்குதே புன்னகை


கம்ப இராமாயணம் - பொங்குதே புன்னகை 


இராமனும் சீதையும் கோதாவரிக் கரையில் வசிக்கிறார்கள். 

"சான்றோர் கவி என கிடந்த கோதாவரி" என்பான் கம்பன்.

யாரும் அற்ற அடர்ந்த வனம். கரை புரண்டு ஓடும் கோதாவரி. கரையின் இருபக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள்.

அந்த மரங்களின் நிழால் குளிர்ந்து விளங்கும் ஆற்றங்கரை.

இராமனும், சீதையும் தனிமையில்.

அந்த கோதாவரி ஆற்றில் நீர் அருந்த சில அன்னப் பறவைகள் வருகின்றன.

அவற்றின் நடையையை இராமன் பார்க்கிறான்.

அதை, சீதையின் நடையோடு ஒப்பிட்டு ஒரு புன்னகை சிந்தினான்.

அதே ஆற்றில் நீர் அருந்த யானைகள் வருகின்றன. நீர் அருந்திச் செல்லும் ஆண் யானையை சீதை பார்க்கிறாள்.

இராமனின் நடையை நினைத்துப் பார்க்கிறாள். என்றும் இல்லாமல் அன்று புதியதாய் ஒரு புன்னகை சிந்தினாள்.


காதல் இரசம் சொட்டும் கம்பனின் அந்தப் பாடல்....