Monday, June 11, 2012

தேவாரம் - கெடில நதிக் கரை ஓரம்

தேவாரம் - கெடில நதிக் கரை ஓரம்



கெடிலம் ஆறு.

கடலூரை சுற்றி ஓடும் ஆறு.

ஊரை எந்தப் பக்கம் இருந்து கடந்தாலும் இந்த ஆற்றை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நான் படித்த பள்ளிக்கு மிக அருகில் இந்த ஆறு இருக்கிறது.

பள்ளி முடிந்ததும் இந்த ஆற்று மணலில் பட்டம் விட்டது, கபடி விளையாடியது எல்லாம் ஞாபகம் இருக்கிறது.

பள்ளியில் இருந்து போகும் வழியில் ஒரு சர்ச் இருந்தது.

அதை தாண்டி ஒரு சுடுகாடு.

சுடுகாட்டை தாண்டி கொஞ்சம் அடர்ந்த காட்டுச் செடிகள்.

அதை தாண்டி இந்த ஆறு.

இந்த ஆறு போகும் வழியெல்லாம் நிறைய கோவில்கள் இருக்கின்றன.

திரு வீரட்டாணம் அதில் ஒரு தலம்.

நாவுக்கரசர் வயற்று வழியால் மிகவும் அவதிப் பட்டார். அப்போது அவர் சமண சமயத்தில் இருந்தார். 

சமண மத தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் நாவுக்கரசரின் வயற்று வலி போகவில்லை.

அவருடைய தமக்கையார் திலகவதியார் சிவ நாமத்தை சொல்லி திரு நீறு தந்தார். வயற்று வலி போய் விட்டது.

அப்போது நாவுக்கரசர் பாடிய பாடல் இது.


கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

ரொம்ப கடினமாய் இல்லை. இருந்தாலும் சீர் பிரித்தால் படிக்க எளிமையாய் இருக்கும்.

கூற்று ஆய்ன வாறு விலக்க அகலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதே என் வயிற்றின் அகம் படியே குடலோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டான துறை அம்மானே



கூற்றாயின வாறு = கூற்று + ஆயின + வாறு. கூற்று என்றால் பிரிப்பது. கூற்றுவன் உடலையும், உயிரையும் பிரிப்பவன். அந்த கூற்றுவனைப் போல வந்தது இந்த வயற்று வலி.

விலக்ககிலீர் = அதை நீ விலக்கவில்லை. நான் அதனால் அவதிப் படுகிறேன்.
கொடுமைபல செய்தன = நான் பல கொடுமைகளை செய்திருக்கலாம்
நான்அறியேன் = எனக்கே தெரியாமலே கூட
ஏற்றாய் = ஏரின் (எருது) மேல் ஏரியவனே
அடிக்கே = உனது திருவடிக்கே
இர வும்பகலும் = இரவும் பகலும் (24 x 7 )
பிரியாது வணங்குவன் = பிரியாமல் வணங்குவன்
எப்பொழுதும் = எப்போதும்
தோற்றா = எப்படி வந்தது என்று தெரியாமல்
தென் வயிற்றின் = என் வயற்றில்
அகம்படியே = என் உடல் முழுதும் (அகம் = உள்)
குடரோடு = குடலோடு
துடக்கி முடக்கியிட = என்னை முடக்கி இட்டு விட்டது இந்த வயற்று வலி
ஆற்றேன் = பொறுக்க மாட்டேன்
அடி யேன் = அடியேன்
அதி கைக்கெடில = திருவதிகை என்ற கெடில நதிக்கரையில் உள்ள
வீரட்டா னத்துறை = அட்ட வீரட்டானத் தனகளில் உறையும்
அம்மானே. = என் தலைவனே



7 comments:

  1. கூற்றாயின வாறு- superb. Any body can understand the intensity of the pain .
    மன்மதனை எரித்த இடமும் இந்த இடம் தான் என்று நினைக்கிறேன். சரியாய் தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா?
    கடலூருக்கு பக்கத்தில் ஒரு சிவன் கோயில்.. அங்கே சிவன் பார்வதிக்கு திரை போட்டு இருப்பார்கள். அவர்கள் தனிமையில் இருப்பதாக ஒரு ஐதீகம்.எந்த திருத்தலம் என்று கூற முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. காமனை எரித்த இடம் திருக் குறுகை. மாயவரத்திற்கு அருகில் உள்ளது.

      அவன் காமன். இந்துகளுக்கு தனி, முஸ்லிம்களுக்கு தனி, கிறித்துவர்களுக்கு தனி என்று கிடையாது...எல்லோருக்கும் common , எனவே அவன் காமன்..:)

      Delete
    2. எட்டு வீரட்டான தலங்கள்: சிவபெருமான் அசுரர் முதலியோரைத் தண்டித்த எட்டுத் தலங்கள்.

      திருக்கண்டியூர்- பிரம்மாவின் 5-ஆவது தலையைக் கொய்தது;

      திருக்கோவலூர்- அந்தகாசுரனைக் கொன்றது;

      திருவதிகை- திரிபுரம் எரித்தது;

      திருப்பறியலூர்- தக்கன் சிரங்கொய்தது;

      திருவிற்குடி- ஜலந்தராசுரனைக் கொன்றது;

      வழுவூர்- கஜாசுரனைக் கொன்றது;

      திருக்குறுக்கை- காமனை எரித்தது;

      திருக்கடவூர்- யமனை உதைத்தது.

      Delete
  2. THANK YOU. COMMON- காமன்.. கி.வா.ஜ levelல் இருக்கீங்க. Good one.

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ...பெரியவர் கி.வா. ஜா எங்கே, நான் எங்கே.
      அப்படியெல்லாம் நினைப்பதே கூட தவறு என்று நினைப்பவன் நான்.
      அது நான் அவர்களுக்கு காட்டும் மரியாதை.

      Delete
  3. இந்தப் பாடல் வயிற்று வலி தீர்ந்ததும் பாடியதா, முன்பே பாடியதா? வலியின் கொடுமை நன்கு புரிகிறது.

    ReplyDelete
  4. திரை போடும் கோவில் திருமாணிக்குழி .

    ReplyDelete