Showing posts with label விஷம். Show all posts
Showing posts with label விஷம். Show all posts

Saturday, May 26, 2012

கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


மனிதன் எல்லா இன்பத்தையும் தனியாக அனுபவிக்க முடியும், காதலும் கலவியும் தவிர.

காதலுக்கு இன்னொரு உயிர் வேண்டும்.

என் சந்தோஷத்திற்கு என்னை விட நீ முக்கியம் என்று ஒருவன்/ள் ஒத்துக்கொள்ளும் இடம் காதல்.

இராவணன் காதலுக்கு ரொம்ப ஏங்கி இருப்பானோ ?

அவனுக்கு வேண்டியது எல்லாம் கிடைத்தது, அவன் வீரத்திற்கு பயந்து 
அவன் வேண்டி கிடைக்காதது, ஜானகியின் காதல்.


போரில் இராவணன் இறந்த பின், விபீஷணன் அவன் மேல் விழுந்து அழுகிறான்...

எந்த விஷமும், உண்டால் தான் உயிரைப் பறிக்கும்.

ஆனால், இந்த சீதை என்ற விஷமோ கண்ணில் பார்த்த மாத்திரத்திலேயே உன் உயிரை பறித்து விட்டதே என்று புலம்புகிறான்.



உண்ணாதே உயிர்உண்ணாது ஒருநஞ்சு சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட்டாயே
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் எண்ணுதியோ எண்ணில் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே

உண்ணாதே = சாப்பிடாமல்

உயிர்உண்ணாது = உயிரை எடுக்காது

ஒருநஞ்சு = எந்த நஞ்சும்

சனகி என்னும் = ஜானகி என்ற

பெருநஞ்சு = பெரிய நெஞ்சு

உன்னைக் = உன்னை

கண்ணாலே நோக்கவே = கண்ணால் பார்த்த மாத்திரத்தில்

போக்கியதே உயிர் = உன் உயிரை போக்கி விட்டதே

நீயும் = நீயும்

களப்பட்டாயே = களத்தில் இறந்து பட்டாயே

எண்ணாதேன் = சிந்திக்கத் தெரியாதவன் (என்று நீ சொல்லிய)

எண்ணிய சொல் = நான் சிந்தித்து சொல்லிய சொல்லை

இன்றினித்தான் = இன்று இனிதான்

எண்ணுதியோ = எண்ணப் போகிறாயோ?

எண்ணில் ஆற்றல் = எண்ணிலாத ஆற்றல் (கொண்ட)

அண்ணாவோ அண்ணாவோ = அண்ணனே அண்ணனே

அசுரர்கள் தம் பிரளயமே = அசுரர்களின் பிரளயம் போல உள்ளவனே

அமரர் கூற்றே = அமரர்களின் (தேவர்களின்) எமனே