Monday, December 31, 2012

வில்லி பாரதம் பிறந்த கதை


வில்லி பாரதம் பிறந்த கதை 


வில்லிபுத்துராழ்வார் ஒரு தீவிர வைணவ பக்தர். சிறந்த தமிழ் அறிஞர். தமிழில் வரும் படைப்புகளில் தவறு இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். புலவர், கவிஞர் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை அவர் வாதுக்கு அழைப்பார். அப்படி வாதிடும் போது ஒரு நிபந்தனை வைப்பார். இரும்பினால் செய்த கொக்கி போன்ற ஒரு கூறிய ஆயுதத்தை அவர்கள் காதில் மாட்டி அதன் ஒரு முனையையை தன் கையில் வைத்துக் கொள்வார். அதே போல் ஒன்றை தன் காதில் மாட்டி அவர்கள் கையில் கொடுத்து விடுவார். வாதில் வென்றவர் கொக்கியை ஒரு இழு இழுத்தார் தோற்றவரின் காது அறுந்து விழுந்து விடும்.  இப்படி பல பேரின் காதுகளை அறுத்தவர் வில்லிபுத்துராழ்வார். 

இதை கேள்விப் பட்ட அருணகிரிநாதர் , காதறுப்பது தகாது என்று எண்ணி, வில்லிபுத்துராழ்வாரோடு வாதுக்குப் போனார். 

வில்லியார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அருணகிரி பெருமான் விடை பகர்ந்தார். 

பின் அருணகிரி நாதர் ஒரு பாடலை கூறி அதற்க்கு பொருள் கேட்டார். அதன் பொருள் தெரியாமல் வில்லிபுத்தாரழ்வார் திகைத்தார். "காதை அறுக்கலாமா " என்று அருணகிரி கேட்க, சரி என்றார் வில்லிபுத்துராழ்வார். 

அறுப்பாரா அருணகிரி ? காதறுப்பது தகாது என்று கூறி...காதறுத்த பாவம் போக தமிழில் பாரதம் பாடுக என்று அவரைப் பணித்தார். 

அருணகிரி பாடி, வில்லிபுத்துராழ்வார் பதில் தெரியாமல் தவித்த அந்தப் பாடல் 

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

வாரியார் ஸ்வாமிகள் அருளிய உரை 


திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற

தாதை – பரமசிவனும்

தாத – பிரமனும்

துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய

தா – இடத்தையும்

தித – நிலைபெற்று

தத்து – ததும்புகின்ற

அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி – தயிரானது

தித்தித்ததே – தித்திக்கின்றதென்று

து – உண்ட கண்ணனும்

துதித்து – துதி செய்து வணங்குகின்ற

இதத்து – பேரின்ப சொரூபியான

ஆதி – முதல்வனே!

தத்தத்து – தந்தத்தையுடைய

அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத – தொண்டனே!

தீதே – தீமையே

துதை – நெருங்கிய

தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து – மரணத்தோடும்

உதி – ஜனனத்தோடும்

தத்தும் – பல தத்துக்களோடும்

அத்து – இசைவுற்றதுமான

அத்தி – எலும்புகளை மூடிய

தித்தி – பையாகிய இவ்வுடல்

தீ – அக்கினியினால்

தீ – தகிக்கப்படுகின்ற

திதி – அந்நாளிலே

துதி – உன்னைத் துதிக்கும்

தீ – புத்தி

தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
 

வில்லி பாரதம் - சிறப்பு பாயிரம்


வில்லி பாரதம் - சிறப்பு பாயிரம்


வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லி புத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார். 

காப்பியத்தின் முதலில் இறை வணக்கம் பாடுவது மரபு.

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள் வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது. 

வில்லிபுத்துராழ்வார் பாடிய தமிழ் தாய் வாழ்த்து....

பொதிகை மலையில் பிறந்து, பாண்டியர்களின் அரவணைப்பிலே வளர்ந்து, முச்சங்கத்தின் கவனிப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே நீந்தி, கற்றோர் நினைவிலே நடந்து, ஆதி நாள் திருமால் பூமி நீரில் மூழ்கியபோது பன்றியாக அவதாரம் எடுத்து அதை தன் கொம்பிலே தாங்கி வெளியே கொண்டு வந்தார், அப்போது அந்த பூமா தேவியோடு கூடவே பிறந்து வளர்ந்து வந்தவள் இந்த தமிழ் தாய் என்று தமிழின் பெருமையை எடுத்து உரைக்கிறார்.


பாடல் 

Sunday, December 30, 2012

சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?


சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?


கண்ணன் தான் எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறான்.

பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருந்தது.

பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான்.

துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான்.

அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான்.

தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான்.

அவனைப் போற்றாத நா என்ன நாவே....

பாடல்


இராமாயணம் - தூங்கும்போதும் அருள் பொழியும் கண்கள்


இராமாயணம்  - தூங்கும்போதும் அருள் பொழியும் கண்கள்


கைகேயி புரிந்து கொள்ள முடியாத ஒரு பாத்திரம். அவள் நல்லவளா, கெட்டவளா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

சிலர் தூங்குவதை பார்த்தால் பயமாக இருக்கும். வாய் பிளந்து, குறட்டை விட்டுக் கொண்டு பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும். சில பேர் தூங்கும் போது பார்த்தால் உயிரோடு இருக்கிறானா இறந்து விட்டானா என்று தெரியாது. வெட்டிப் போட்ட பனை மரத் துண்டு போல கிடப்பான். தூங்கும்போதும் அழகாக இருப்பது குழந்தைகள் தான். 

கைகேயி தூங்கும் போதும் அவள் கண்ணில் இருந்து அருள் வழிகின்றது. மனதில் எத்தனை அன்பும் கருணையும் இருந்தால் உறக்கத்திலும் அருள் தெரியும்?

கைகேயி பஞ்சணையில் படுத்து இருக்கிறாள். வெள்ளை வெளேர் என்ற பட்டு மெத்தை. அதன் மேல் விரித்த வெள்ளை விரிப்பு ஒரு சில இடங்களில் மடிந்தும் சுருங்கியும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற் கடலில் அலை அடிப்பது போல இருக்கிறது. மடிப்புகளும் சுருக்கங்களும் அலை போல இருக்கிறது. 

தசரதன் சக்கரவத்தி. அவனுக்கு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் படுக்கை விரிப்பு கொள்ள முடியும். ஆனாலும் வெள்ளை நிறம் தான் அவன் அரண்மனையில் இருந்து இருக்கிறது. படுக்கை விரிப்புக்கு வெள்ளை நிறம் தான் சிறந்தது என்பது ஒரு கருத்து இதில் இருந்து பெறப் படுகிறது.

அதன் மேல் அவள் படுத்து இருக்கிறாள். அவள் சிவந்த முகம் உடையவள். மேலிருந்து பார்த்தால் பாற்கடலில் பூத்த தாமரை போல் இருக்கிறது. 

அவள் உடல் கொடி போல் மெலிந்து வளைந்து வளைந்து இருக்கிறது. தாமரை கொடியில் பூத்தது மாதிரி இருக்கிறது. நீர் நிலையில் தாமரை கொடி நீரின் சலனத்திற்கு ஏற்ப ஆடுவது மாதிரி இருக்கிறது அவள் படுத்து இருப்பது, அவள் அசைவது எல்லாம். 

அவளின் அவயங்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட மணிகள் மாதிரி இருக்கிறது. அப்படி ஒரு ஜொலிக்கும் அழகு. 

அமைதியாகத் தூங்குகிறாள். முகத்தில் ஒரு அமைதி, சாந்தம். உறங்கும் போதும் கண் ஓரம் ஒரு அருள். 

உறங்கும் போது ஒருவன் தன்னை மறக்கிறான். அந்த நிலையிலும் அருள் வெளிப் படும் என்றால், அவன் இயற்கையாகவே அருள் உள்ளம் கொண்டவனாக இருக்க வேண்டும். விழித்து இருக்கும் போது அருள் இருப்பதை போல் நடிக்க முடியும். உறக்கத்தில் அது முடியாது. 

சக்கரவர்த்தியின் மனைவி என்ற அகம்பாவம் இல்லை. 
தான் பெரிய அழகு உள்ளவள் என்ற பெருமிதம் இல்லை. 
அவள் கண்ணில் அருள் வழிகிறது. 

பாடல்
 

இராமாயணம் - நல்லாருக்குச் செய்த உதவி


இராமாயணம் - நல்லாருக்குச் செய்த உதவி

வாமனன் மூன்றடி நிலம் கேட்டு வந்தான். மாபலியும் கேட்ட மூன்றடி நிலத்தை தானமாக தந்தான். நீர் வார்த்து தானம் தந்தவுடன், எதிரில் நின்றவர்கள் பயப்படும்படி வானம் வரை வளர்ந்தான். அவன் எப்படி வளர்ந்தான் என்றால், நல்லவர்களுக்கு செய்த உதவி போல் வளர்ந்தானாம். 

நல்லவர்களுக்கு செய்த உதவி நாளும் நாளும் வளர்ந்து நன்மை தருவதை போல அவன் வளர்ந்தான். 

நல்லவர்களுக்குச் செய்த உதவி முடிவில்லா இன்பத்தை தருவதைப் போல முடிவில்லாமல் வளர்ந்து கொண்டே போனான். 

தீயவர்களுக்குச் செய்த உதவி மூலம் நமக்கு முதலில் நன்மை விளைவது போல் தோன்றினாலும் பின் ஒரு நாளில் அது நம்மை கீழே தள்ளி முன் இருந்த நன்மைகளையும் சேர்த்து கொண்டு போய் விடும். 

பாடல்'

Saturday, December 29, 2012

இராமாயணம் - கானும் கடலும் கடந்து போய்


இராமாயணம்  - கானும் கடலும் கடந்து போய்


இந்த உலகம், இதில் உள்ள பொருள்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன ? 

ஏதோ ஒன்றிலிருந்து வந்தது என்று வைத்துக் கொள்வோம். 

அப்படி என்றால் எல்லாவற்றிற்குள்ளும் அந்த ஏதோ ஒன்று தான் இருக்க வேண்டும் இல்லையா?

 அது தானே மூலப் பொருள் ? 

சரி எல்லாவற்றிக்குள்ளும் அது இருக்கிறது, ஒத்துகொள்ள கூடிய விஷயம் தான். 

எல்லா பொருள்களுக்கும் வெளியே என்ன இருக்கிறது ?

வெளியே இருப்பதும் ஒரு பொருள் தானே ?

அந்தப் பொருளும் அந்த மூலப் பொருளில் இருந்து தானே வந்து இருக்க வேண்டும் ?

அப்படிப் பார்த்தால் நாம் காணும் அனைத்துப்  பொருள்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பது அந்த ஆதி மூலப் பொருள் தானே ? 

அது எப்படி ஏதோ ஒன்று அனைத்துப் பொருள்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் ? 

அது அப்படியே இருக்கட்டும். 

இந்த பொருள்களில் இருந்து உயிர்கள் பிறந்தன.

அப்படிஎன்றால் இந்த உயிர்களுக்குள்ளும் அந்த மூலப் பொருள் தானே இருக்க வேண்டும் ?

உயிர்கள் தோன்றியபின் அவற்றிற்கு உணர்வு தோன்றியது...நல்லது, கெட்டது, அன்பு, பாசம், காதல், பக்தி என்ற உணர்வுகள் தோன்றின...உடலும், உயிரும், உணர்வுமாய் இருப்பது அந்த ஆதி மூலப் பொருள் தானே ? சந்தேகமில்லையே ? இதில் ஒரு குழப்பமும் இல்லையே ?

அனாதியான அந்த மூலப் பொருள் அல்லது சக்தி எது ? அதை நாம் அறிய முடியுமா ? அதை நீங்கள் பொருள் என்று சொல்லுங்கள், சக்தி என்று சொல்லுங்கள், ஆண் என்று சொல்லுங்கள், பெண் என்று சொல்லுங்கள்...எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். 

கம்பர் அதை ஆணாக வைத்து கொள்கிறார்....அவன், கூனியும், சிறிய தாயும், அவனுக்கு கொடுமை இழைக்க, அதனால் அவன் தன் செங்கோல் துறந்து காட்டையும், கடலையும் கடந்து போய், இமைக்காத தேவர்களின் துன்பம் தீர்த்த வீரக் கழல் அணிந்த வேந்தன் (இராமன்)....

அந்த ஆதி மூலம் இராமனாக அவதரித்தது....

பாடல் 

Friday, December 28, 2012

திருக்குறள் - பயன் இல்லாத சொல்


திருக்குறள் - பயன் இல்லாத சொல்


யாரவது அவர்களின் கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ, பெற்றோருக்கோ , நெருங்கிய நண்பர்களுக்கோ தீமை செய்ய நினைப்பார்களா ?  அப்படி செய்தால் அது எவ்வளவு மோசமான ஒன்று ? அதை விட மோசமானது பலபேர் முன்னால் பயன் இல்லாத சொற்களை கூறுவது. பயன் இல்லாத சொற்களை கூறுவதை வள்ளுவர் மிக மிக வெறுக்கிறார். 

பாடல்

நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


கல்வி அறிவை பெறுவது என்பது நம் கலாசாரமாய் இருந்திருக்கிறது. நம் இலக்கியங்களில் எவ்வளவு தூரம் பின்னோக்கி போனாலும், கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள். செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது. அது இன்றும் தொடர்வது இதம் அளிக்கும் செய்தி. 

இங்கே நாலடியார் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

படிக்காத முட்டாள், படித்தவர்கள் மத்தியில் இருப்பதை பார்க்கிறோம். அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கினால், பணத்தினால் கற்றோர் நிறைந்த சபையில் இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி இடம் பிடித்தாலும் பரவாயில்லை, எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறந்து என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ? அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா ? இனிமை இருக்குமா ? 

பாடல் 

பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?


பட்டினத்தார் - என் பூசையை எவ்வாறு கொள்வாய் ?


கடவுளை வணங்க வேண்டும் என்று நினைக்கிறார் பட்டினத்தார். கண் ஒரு பக்கம், மனம் ஒரு பக்கம், நாக்கு ஒரு பக்கம் என்று அவரை பல பக்கங்களில் இழுத்துக் கொண்டு அலைகிறது. மனம் ஒரு நிலை பட மாட்டேன் என்கிறது. 

எல்லாம் துறந்த பட்டினத்தாருக்கு அந்த நிலை. 

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க -  அறியாத
சடகசட மூட மட்டி 

என்று நோகிறார் அருணகிரி. அவன் திருவடி என்ற தாமரையில் மனதை அரை நிமிடம் கூட முறைப் படி தியானம் பண்ண முடியாத சட - கசட - மூட - மட்டி என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் அவர்.

பட்டினத்தாருக்கும் அருணகிரிக்கும் இந்த நிலை என்றால் நம்ம நிலை என்ன ?

பாடல்

Thursday, December 27, 2012

இராமாயணம் - உரு பெற்ற மன்மதன்


இராமாயணம் - உரு பெற்ற மன்மதன் 


இராமனைப் பார்த்த சூர்பனகை முதலில் அவன் மன்மதனோ என்று சந்தேகப் பட்டாள். "இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே...இவனுக்கு உருவம் இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது " என்று நினைத்தாள். இருந்தாலும் அவளுக்கு சந்தேகம் தீரவில்லை. ஒரு வேளை அந்த மன்மதன் நல்ல தவம் செய்து, சாப விமோசனம் பெற்று, அதன் மூலம் எல்லோரும் காணும் உருவத்தை பெற்றுவிட்டானோ என்று மீண்டும் நினைக்கிறாள். 

ஜொள்ளு யாரை விட்டு வைத்தது....

பாடல்

பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்


பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்


இறைவனிடம் என்ன வேண்டலாம் ? நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம் என்று இப்படி எதையாவது கேட்கலாம். 

இதை எல்லாம் விட்டு விட்டு காரைக்கால் அம்மையார் வேறு என்னனமோ கேட்கிறார்....

இறவாத அன்பு வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும், எல்லா நேரத்திலும் இறவாத அன்பு வேண்டுமாம். உயிர் உள்ளது வளர்ந்து கொண்டே இருக்கும். இறந்தது வளராது. இறவாத அன்பு நாளும் வளரும். 

அதற்க்கு அடுத்து பிறவாமை வேண்டுமாம்....எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால் அது நல்ல வினை தானே. அதன் காரணமாக ஒரு வேளை பிறவி வந்து விட்டால் ?

அப்படி பிறந்து விட்டால், இறைவன் திருவடி மறவாமை வேண்டுமாம்...

திருவடியையை மறவாமல் இருந்தால் மட்டும் போதாது, அந்த திருவடியின் கீழ் என்றும் இருக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினாராம். 

அவர் அப்படி வேண்டியதாக சேக்கிழார் பெருமான் சொல்கிறார், பெரிய புராணத்தில், பன்னிரண்டாம் திருமுறை.

பாடல் 

Wednesday, December 26, 2012

பிரபந்தம் - உன்னை மகனாய் பெற


பிரபந்தம் - உன்னை மகனாய் பெற 


வள்ளுவரை கேட்டால் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி (கடமை), இவனை மகனாகப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லும் படி வாழ்வது என்பார். 

குலசேகர ஆழ்வார் ஒரு படி மேலே போகிறார். 

தசரதன், இராமனைப் பார்த்து கூறுகிறான்....இன்னும் வரும் பிறப்பில் எல்லாம் உன்னையே மகனாகப் பெரும் வரம் வேண்டும் என்று இராமனைப் பார்த்து உருகுகிறான். 

இராமன் நினைத்து இருந்தால், கானகம் போக மாட்டேன் என்று மறுத்து இருக்கலாம். சட்டப்படி அரசு அவனுக்கு வர வேண்டிய ஒன்று. அரசை பரதனுக்குத் தர தசரதனுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது. அது மனு தர்மமும் அல்ல. இராமன் மறுத்திருந்தால் யாரும் அவனைக் குறை சொல்ல முடியாது. 

தரசதன் சொன்ன வார்த்தை பொய் ஆகி விடக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக இராமன் கானகம் போனான். 

தசரதனுக்குத் தாங்க முடியவில்லை. தான் சொன்ன ஒரு வார்த்தையை மெய்யாக்க கானகம் போகிறானே தன் மகன் என்று அவன் மேல் பாசம் பொங்கி பொங்கி வருகிறது. "அப்பா, உன்னையே ஏழேழ் பிறவிக்கும் மகனாய் பெரும் வரம் வேண்டும் " என்று வேண்டுகிறான். 

பாடல்

இராமாயணம் - யாரோ , இவர் யாரோ ?


இராமாயணம் - யாரோ , இவர் யாரோ ?


சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். அவன் அழகில் மயங்குகிறாள். ஜொள்ளு ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. 

யார் இவன் ? இவ்வளவு அழகாக இருக்கிறானே, இவன் மன்மதனோ ? இருக்காது, ஏனென்றால் மன்மதனுக்கு உருவம் கிடையட்து. இவனுக்கு உருவம் இருக்கிறதே. 

ஒரு வேளை இந்திரனை இருக்குமோ ? இல்லையே, இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் என்று சொல்வார்களே...இவனூக்கு அப்படி இல்லையே....

இல்லைனா அந்த சிவனை இருக்குமோ ? ம்ம்ஹும்....சிவனுக்கு மூணு கண்ணு இருக்குமே...இவனுக்கு இரண்டு தானே இருக்கு...

பிரம்மனை உந்தியில் உண்டாக்கிய திருமாலாய் இருக்குமோ...இல்லையே அவனுக்கு நான்கு கைகள் உண்டே...இவனுக்கு இரண்டு கைகள் தானே இருக்கு...

யாராய் இருக்கும் ?

பாடல் 

Tuesday, December 25, 2012

பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து


பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து 


பெரிய புராணத்தில் முதல் செய்யுள்.

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


உலகில் உள்ளவர்கள் எல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன். நிலவு திகழும் கங்கை நீர் கொண்ட சடையை கொண்டவன். அளவு கடந்த ஜோதி வடிவானவன். அம்பலத்தில் ஆடுவான். சிலம்பு திகழும் மலர் போன்ற திருவடியை வணங்குவோம்.

சரி, இந்த பாட்டில் என்ன சிறப்பு ? 

Monday, December 24, 2012

இராமாயணம் - துயில் துறந்த ஐயன்


இராமாயணம் - துயில் துறந்த ஐயன்


முன்பொருநாள் தேவர்கள் எல்லோரும் திருமாலிடம் சென்று "அரக்கர்கள் எங்களோடு வேறுபட்டு எங்களை துன்புறுத்துகின்றனர். அதிலிருந்து எங்களை காப்பாற்று" என்று வேண்டினர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று, ஆதி சேஷன் மேல் துயில் கொண்டிருந்த ஐயனாகிய திருமாலும், தன் துயிலை விட்டு பூலோகத்தில் அவதரித்தான். அப்படி அவதரித்தவனை தன் குலத்திற்கே முடிவை தேடித் தரும் சூர்பனகை கண்டாள்.

  
பாடல்

தேவாரம் - கொதிக்கும் நீரில் ஆமை போல் தெளிவு இல்லாதேன்


தேவாரம் - கொதிக்கும் நீரில்  ஆமை போல் தெளிவு இல்லாதேன்


ஒரு ஊரிலே ஒரு பெரிய குளம் இருந்தது. அந்த குளத்தில் ஒரு ஆமை வசித்து வந்தது. ஒரு நாள் அந்த ஊருக்கு ஐந்து மீனவர்கள் வந்தனர். வந்தவர்கள் அங்கிருந்த பெரிய குளத்தைப் பார்த்தவுடன் "ஆஹா, இதில் மீன் பிடித்தால் நிறைய மீன் கிடைக்கும் " என்று வலை வீசினர். மீனோடு கூட அந்த அமையும் சிக்கியது. 

அடடா எவ்வளவு பெரிய ஆமை என்று அதை தனியே எடுத்துப் போய், மூணு பெரிய கல்லை வைத்து, பெரிய ஒரு அண்டாவை அதன் மேல் வைத்து, அதில் நிறைய நீர் விட்டு, இந்த ஆமையை தூக்கி அதில் போட்டு, அண்டாவுக்கு கீழே நெருப்பு பத்த வைத்தார்கள். சூட்டிலே ஆமை வெந்து விடும், ஆமை கறி சாப்பிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

நீர் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. ஆமைக்கு ஒரே சந்தோஷம். வெது வெதுப்பான நீர் எதுவரை காணாத இன்பம்   இங்கும் அங்கும் நீந்தி விளையாடி கொண்டிருந்தது.  கீழே சூடு நீர் மேலே குளிர்ந்த நீர். சூடு இன்னும் முழுவதுமாக பரவவில்லை. ஆமை கீழே போகும், "ஆ...ரொம்ப சூடு" என்று மேலே வரும்..."இது ரொம்ப ஜில்லுனு" இருக்கு என்று கீழே போகும்...ஒரே கும்மாளம் தான். 

நேரம் ஆக ஆக , தண்ணீர் சூடு ஏறும்....ஆமை சூடு தாங்க முடியாமல் தவிக்கும்...போக இடம் இல்லாமல் அங்கும் இங்கும் அலையும்...இறுதியில் நொந்து வெந்து சாகும். 

அந்த முட்டாள் ஆமைக்கும் எனக்கும் என்ன வேறுபாடு ? புலன்கள் தரும் இன்பம் தான் வெது வெதுப்பான நீர். சுகமாக இருக்கிறதே என்று அது வேண்டும், இது வேண்டும் என்று அலைந்து தேடி சேர்க்கிறோம். மனைவி/கணவன் வந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமை என்று திருமணம் செய்து கொள்கிறோம், பின் பிள்ளைகள் இருந்தால் இன்னும் சுகம் என்று அவர்களை பெற்றுக் கொள்கிறோம், பின் வீடு, வாகனம், சொத்து என்று ஓடி ஓடி சேர்க்கிறோம்....எல்லாமா சந்தோஷத்தை தருகிறது ? 

அவ்வளவு ஏன், இனிப்பு பண்டங்களை சாப்பிடுகிறோம்...அடடா என்ன சுகம்...வாயில் அப்படியே கரைந்து உள்ளே போகும் போது கண் மூடி இரசிக்கிறோம் அல்லவா ...அதுவே பின் சர்க்கரை வியாதி வரும் போது ஐயோ கொஞ்சம் குறைத்து சாப்பிட்டு இருக்காலாமே என்று வருந்துகிறோம்....எல்லா இன்பங்களும் அப்படித்தான்...முதலில் சுகம்..பின் துக்கம் ....


நாவுக்கரசர் பாடல்

Sunday, December 23, 2012

திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?


திரு அருட்பா - நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?


எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்...உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன், பொய் சொல்கிறேன், புறம் சொல்கிறேன்...ஆனால் இறைவா இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நீயும் எனக்கு வஞ்சனை செய்தால் நான் என்ன செய்வேன் ? எங்கு போவேன் ? நீயே சொல்லு. 

பாடல்

திருஅருட்பா - nuclear physics


திருஅருட்பா - nuclear physics 


திரு அருட்பாவில் சில ஆச்சரியமான பாடல்கள். 

பரந்து விரிந்த இந்த உலகம் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் (Big Bang ) இருந்து வந்தது என்று அறிவியல் சொல்கிறது.

ஆதியில் இருந்தது ஒரே விதமான பொருள். அதை அறிவியல் cosmic  soup என்கிறது. சூடான காற்றும், தூசியும் கலந்த ஒரு விதமான பொருள். மிக மிக பெரிய சக்தியின் வடிவம். ஒரே ஒளிக் கோளம். இருள் என்பதே கிடையாது. அதில் இருந்து அணுக்கள் (atoms ) பிறந்தன. அந்த அணுக்களுக்குள் ஒரு கரு...அணுக்கரு. அந்த அணு கருவுக்குள் அணு சக்தி (nuclear force or atomic force ). இத்தனையும் எப்படி வந்தது என்று சொல்ல வருகிறார் வள்ளலார். 

quantum  mechanics என்ற வார்த்தை கூட இல்லாத அந்த காலத்தில் எழுதப்பட்டது இந்தப் பாடல்....

பாடல்
           

இராமாயணம் - இறுதி தான் , ஆனால் எதன் இறுதி ?


இராமாயணம் - இறுதி தான் , ஆனால் எதன் இறுதி ?


சூர்பனகை சிலவற்றிற்கு இறுதியாய் வந்தாள். முதலில் "தன் கிளைக்கு இறுதி ஈட்டுவாள்" என்றான் கம்பன். அவள் இன்னும் சிலவற்றிற்கு முடிவு கட்ட வந்தாள். 

தேவர்களுக்கும், தவ சீலர்களுக்கும், மனிதர்களுக்கும் ஓர் இறுதி கொண்டு வந்தாள். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவர்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வந்தாள் என்று ஒரு பொருள் தரும். 

அவர்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களுக்கு ஒரு இறுதி காண வந்தாள் என்று இன்னொரு பொருள். அவள் இராமன் மேல் காதல் கொள்ள விட்டால், இராமன் அவளை வெறுக்கா விட்டால், அவள் சென்று இராவணனிடம் சீதை மேல் காதலை உண்டாக்கா விட்டால், இராமன் இராவணை வதைக்க விட்டால் இவர்களின் துன்பம் எப்படி தீரும். ? அவர்களின் துன்பங்களுக்கு இறுதியாய் வந்தாள். 


கூனியும் சூர்பனகையும் இரண்டு வணங்கத் தக்க தாய்மார்கள். அவர்கள் இல்லை என்றால் இராமயணம் இல்லை. இந்த மின் அஞ்சலும் இல்லை. 


பாடல் 

தேவாரம் - வாராத செல்வம்


தேவாரம் - வாராத செல்வம்


எப்போதும் அவனைப் பிரியாத அடியார்களுக்கு அவன் "வாராத செல்வம்" அருளுவான். 

அது என்ன வாராத செல்வம் ?

மீண்டும் இங்கு வந்து பிறந்து வராமல் இருக்கும் செல்வம். 

இன்னொரு பொருள் 

இங்கு வாராத செல்வம். அங்கு போனால் கிடைக்கும். அங்கு போவதுதான் அந்த செல்வம். அதாவது வீடு பேறு. அதை, அவன், அடியார்களுக்கு வருவித்து தருவான். 

பாடல் 

Thursday, December 20, 2012

இராமாயணம் - உடன் பிறந்தே கொல்லும் வியாதி


இராமாயணம் - உடன் பிறந்தே கொல்லும்  வியாதி


மாரடைப்பு, சர்க்கரை வியாதி, மூச்சிறைப்பு (ஆஸ்துமா ) என்று மருத்துவரிடம் போனால், அவர் முதலில் கேட்பது உங்கள் அப்பா, அம்மா அல்லது தாத்தா பாட்டிக்கு இந்த வியாதி இருந்ததா என்றுதான். 

அவர்களுக்கு இருந்தால், உங்களுக்கும் வரும் சாத்திய கூறுகள் அதிகம். 

இன்று நிறைய வியாதிகள் மரபு சார்ந்தவை என்று மருத்துவர்கள் கூறக் கேட்க்கிறோம். 

இந்த வியாதிகள் நாம் பிறப்பதற்கு முன்னே நம் பெற்றோரிடமோ அல்லது அவர்களின் பெற்றோரிடமே பிறந்து அவர்களிடம் இருந்து நமக்கு மரபணுக்கள் மூலம் நமக்கு வந்து சேர்கின்றன. இந்த நோய்கள் நாம் பிறக்கும் போதே நம்மோடு கூடப் பிறந்து விடுகின்றன. நாம் வளரும் போது, நம்மோடு வளர்ந்து...சரியான காலம் பார்த்து நம்மை பிடித்துக் கொள்ளும், கொல்லும். 

அது போல் சூர்பனகை இராவணின் கூடவே பிறந்தாள்...அவனை கொல்ல பிறந்த நோய் போல். 

பாடல் 

திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு


திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு


பையனோ பெண்ணோ ஏதோ தப்பு செய்து விட்டார்கள் (வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு சினிமாவுக்கு போதல், வீட்டுக்குத் தெரியாமல் தம் அடிப்பது, ). எப்படியோ உங்களுக்குத் தெரிந்து விடுகிறது. உங்களுக்குத் தெரிந்து விட்டது என்று அவர்களுக்கும் தெரிய வருகிறது. 

சரி தான், இன்னைக்கு நல்ல பாட்டு விழப் போகிறது என்று தயங்கி தயங்கி உங்களிடம் வருகிறார்கள். 

"நா  ஒண்ணு சொல்லுவேன்...கோவிக்கக் கூடாது " என்று அவர்கள் ஆரம்பிக்கும் முன்னமேயே, நீங்கள் அவர்களைப் பார்த்து, 

"ஒண்ணும் கவலைப் படாதே, எனக்கு ஒரு கோவமும் இல்லை, என் கிட்ட வா " என்று அவர்களை அனைத்து ஒரு முத்தம் கொடுத்தால் அவர்களின் மனம் எப்படி நெகிழும்...அப்படி நெகிழ்கிறார் வள்ளலார்....

இறைவனிடம் சென்று, தான் செய்த பாவங்களை சொல்லி, "மன்னித்துக் கொள், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று சொல்வதருக்கு முன்னேயே அவன் மன்னித்தது மட்டும் அல்ல...கருணையும் பொழிந்தான்...அதற்க்கு என்ன கை மாறு செய்வேன் என்று உருகுகிறார் வள்ளலார்....

பாடல் 
 

திரு அருட்பா - சும்மா இருக்கும் சுகம்


திரு அருட்பா - சும்மா இருக்கும் சுகம்


சும்மா இருப்பதுவே சுகம். மீண்டும் மீண்டும் இந்த கருத்து காலந்தோறும் மலர்ந்திருக்கிறது. 

ஆத்ம ஞானம் அடைந்தவர்களுக்கு கர்மம் தேவை இல்லை என்கிறது கீதை. 

"சும்மா இரு" அற சொல் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்பார் அருணகிரி நாதர். 

Sit quietly, doing nothing, spring comes, and the grass grows by itself.

என்கிறது zen தத்துவம்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து 
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் 

என்பார்  பத்திரகிரியார்.

அந்த சுகம் என்று வரும் என்று ஏங்குகிறார் வல்லாளர் இங்கே 

பாடல் 

Wednesday, December 19, 2012

திருவெம்பாவை - வணங்க கூசும் மலர் பாதம்


திருவெம்பாவை - வணங்க கூசும் மலர் பாதம்

இது மார்கழி மாதம். மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை பற்றி சிந்திக்க உகந்த மாதம்.


ஏதோ ஒரு காரியம் வேண்டி ஒருவரை பார்க்க போகிறோம். நமக்கு அவரிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருப்பதால், அவரை பற்றி கொஞ்சம் புகழ்ந்து பேசுகிறோம். அப்படி பேசும் போது நமக்குள் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்யும். ஒரு கூச்சம் இருக்கும்.

நாம் இறைவனை தொழும்போதும் ஏதோ ஒரு காரியத்திற்காகத்தான் தொழுகிறோம். அது அவனுக்கும் தெரியும். அவன் நம்மை பார்த்து புன்முறுவல் பூக்கிறான். நமக்கே ஒரு சின்ன வெட்கம் பிறக்கிறது.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்  பாதம் 

நிறைய பேர் இறைவனைப் பற்றி நிறைய புத்தகங்களைப் படிப்பார்கள், வேதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என்று...மனதிற்குள் அன்பு , கருணை, இருக்காது. மற்ற உயிர்களை தன் உயிர் போல் நினைக்கும் நேசம் இருக்காது. உலகம் எப்படி போனால் என்ன, நமக்கு வேண்டியது உணவு, உறக்கம், சுகம் என்று இருப்பார்கள்.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப் பகல் நாம் 
பேசும் போது 
இப்போது போதார் அமளிக்கே நேசமும் வைத்தாய்

இறைவன் இருக்கிறானா, இல்லையா ? இருந்தால் அவனை காண்பி...அவன் இருந்தால் ஏன் இதை இப்படிச் செய்யவில்லை, அதை அப்படி செய்யவில்லை என்று கால காலமாய் ஆத்திகர்களும் நாத்திகர்களும் யார் சொல்வது சரி என்று சண்டை இட்டுக் கொண்டிருகிறார்கள். இப்படி சண்டை போட நேரம் இதுவல்ல. நமக்கு நிறைய நேரம் இல்லை. வாழ்நாள் வேகமாக முடிந்து கொண்டே இருக்கிறது. அவன், தன் அருளை, நமக்குத் தர காத்திருக்கிறான். நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு விளையாடி கொண்டிருக்கிறோம். இவற்றை விட்டு விட்டு அவனிடம் நேரே போனால் அவன் அருள் கிடைக்கும்.

இவையும் சிலவோ, விளையாடி ஏசும் இடம் இதுவோ 
விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர் பாதம் 
தந்து அருள வந்து அருளும் 

அப்படியா? அவன் எங்கே இருக்கிறான் ? எங்கு போனால் அவன் அருள் கிடைக்கும். அவன் விலாசம் என்ன ? அதை தானையா இத்தனை நாள் தேடிக் கொண்டிருக்கிறோம்.....அவன் தேசம் தேசமாக சுற்றி கொண்டிருப்பவன், எல்லா தேசத்திலும் இருப்பவன், சிவ லோகத்தில் இருப்பவன். அப்படி அவனை உங்களால் எல்லா இடத்திலும் அவனைக் காண முடியவில்லையா ? சிவ லோகம் போக முடியாதா ? பரவாயில்லை, இதோ இங்கே தில்லை சிற்றம்பலத்தில் இருக்கிறான்.

ஒரு எச்சரிக்கை, அவனிடம் போகும் முன்னால். அவனிடம் போய் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நின்றால் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். நீங்கள் யார், அவன் யார், நீங்கள் அவன் மேல் வைத்த அன்பு எது என்று ஒன்றும் தெரியாது எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் மறைந்து போய் விடும்....

ஈசனார்க்கு அன்பு யார், யாம் யார் 

பாடல்


Tuesday, December 18, 2012

திருக்குறள் - விரும்பும் பொழுது


திருக்குறள் - விரும்பும் பொழுது


நாம் ஒன்றை அடைய விரும்பும் போது அந்த ஒன்றின் மேல் நமக்கு மிகுந்த விருப்பம் உண்டாகும். அது வீடு, தொலைக்காட்சி பெட்டி, புது கைபேசி, நகை, புடவை, உணவு, பார்க்க விரும்பும் இடம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன், அது இன்னொரு உயிராகக் கூட இருக்கலாம்...ஆணோ, பெண்ணோ...அவர்களை நாம் விரும்பும் போது அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும், ஆசையும், ஆர்வமும் உண்டாகும். 

அப்படி நாம் விரும்பும் பொருள் கையில் கிடைத்து விட்டால், அதன் மேல் உள்ள ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து சில சமயம் அதன் மேல் வெறுப்பு கூட வரலாம். 

நாம் விரும்பும் ஒரு பொருள் நமக்கு எப்ப எப்ப தேவை படுகிறதோ அப்பப்ப நமக்கு கிடைத்தால், நமக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்குமோ 

பாடல் 

அபிராமி அந்தாதி - அபிராமி எப்படி இருப்பாள் ?


அபிராமி அந்தாதி - அபிராமி எப்படி இருப்பாள் ?


அபிராமி எப்படி இருப்பாள் ? மற்ற பெண்களை போல் இருப்பாளா ? ரொம்ப அழகான பெண்ணாக இருப்பாளோ ? அவள் கண் எப்படி இருக்கும் ? மான் போல இருக்குமா ? அவள் மார்பகங்கள் எப்படி இருக்கும் ? தாமரை மொட்டு போல் இருக்குமா ? அவளை மலை மகள் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் அவளும் ஒரு சாதாரண பெண் போலத்தானே இருப்பாள் ? 

இப்படித்தான் அவளை எல்லோரும் கூறுகிறார்கள். இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின் உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர். 


பாடல் 

பட்டினத்தார் - எரிந்த கட்டை மீது எரித்து


பட்டினத்தார் - எரிந்த கட்டை மீது எரித்து 


நான் எவ்வளவு பெரிய ஆள். எனக்கு கீழே எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள். எனக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு. நான் எவ்வளவு படித்து இருக்கிறேன்....இப்படி இந்த "நான்" என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. 

இத்தனை சுகங்களையும், உறவுகளையும், சேர்த்து வைத்த சொத்தையும் விட்டு போக மனம் இல்லை. 

இது எல்லாம் ஒன்றும் இல்லை. நம்மை விடவும் பெரிய பெரிய அரசர்கள் இதற்க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். அப்படி பட்ட மன்னர்களையும், அவர்கள் இறந்த பின், புது இடத்தில் கூட இல்லை முன்பு ஏதேதோ உடல்களை எரித்த அதே இடத்தில் வைத்து, கட்டி இருந்த உள் ஆடைகளை கூட எடுத்து விட்டு எரித்து சாம்பலாக்கி இருக்கிறார்கள். நாம் எல்லாம் எம்மாத்திரம். 

அதை எல்லாம் பார்த்த பின்னும் , இந்த வாழ்க்கையில், இந்த சுக போகங்களில், இந்த பிறவியில் இன்னுமா உங்களுக்கு ஆசை என்று கேட்க்கிறார் பட்டினத்தார்...
 
பாடல்

பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்


பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்ஒரு நாள் இறைவன் பக்தன் முன் தோன்றி, "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றான்.

பக்தன்: ஒண்ணும் வேண்டாம் இறைவா 

இறைவன்: என்ன, ஒண்ணும் வேண்டாமா ?

பக்தன்: ஆம், ஒண்ணும் வேண்டாம். 

இறைவன்: உனக்கு எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தருகிறேன்...கேள் 

பக்தன்: தங்கமும், வைர வைடூரிய செல்வங்களும், வீடு கட்டும் ஓடும் ஒண்ணு தான் எனக்கு. அதெல்லாம் வேண்டாம் இறைவா. 

இறைவன்: ஹ்ம்ம்...சரி அதை விடு, உனக்கு சொர்க்கம் வேண்டுமா...தருகிறேன். 

பக்தன்: அதுவும் வேண்டாம்

இறைவன்: ஒண்ணுமே வேண்டாம் என்றால், பின்ன எதற்க்காக என்னை வணங்குகிறாய்?

பக்தன்: ஓ...அதுவா...எனக்கு உன் மேல் அன்பு, காதல்....உன்னை வணங்கனும் போல இருந்தது...மத்தபடி எனக்கு ஒண்ணும் வேண்டாம்....

பாடல்: 

Monday, December 17, 2012

பட்டினத்தார் - உருகும் மொழி


பட்டினத்தார் - உருகும் மொழி


உபதேசம். பட்டினத்தார், அருணகிரியார், மாணிக்க வாசகர் என்று எல்லோரும் அவர்களுக்கு இறைவன் உபதேசம் பண்ணியதாகவே சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய், முருகன் தனக்கு உபதேசம் மட்டும் அல்ல ஜெப மாலையும் சேர்த்து தந்ததாக கூறுகிறார் ("ஜெப மாலை தந்த சற் குருநாதா, திருவாவினன் குடி பெருமாளே).

இங்கே பட்டினத்தார் தனக்கு இறைவன் உபதேசம் செய்ததாக கூறுகிறார். அந்த உபதேச மொழியையை கேட்டால் ...


தேவாரம் - தென்றல் அடி வருட


தேவாரம் - தென்றல் அடி வருட


நாள் எல்லாம் அலைந்து, களைத்துப் போய் வீடு வருகிறீர்கள். கால் எல்லாம் அப்படி வலிக்கிறது. அப்பாட என்று நாற்காலியில் கால் நீட்டி உட்காருகிறீர்கள். அப்போது, உங்கள் மனம் கவர்ந்தவரோ/ளோ வந்து, air conditioner ஐ ஆன் பண்ணி, உங்களுக்கு பிடித்த இசையை காற்றில் இழைய விட்டு, சுட சுட ஒரு காப்பியும் கொண்டு வந்து தந்து, உங்கள் அருகில் அமர்ந்து உங்கள் காலை மெல்ல அமுக்கி விட்டால் எப்படி இருக்கும் உங்களுக்கு...

திருவையாறு என்ற ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன, மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது...அந்த தென்றல் காற்றில் கரும்பு வயலில் கரும்புகள் லேசாக அங்கும் இங்கும் ஆடுவதைப் பார்க்கும் போது ஏதோ இந்த காற்றில் அவை சொக்கிப் போய் கண் மூடி தலை ஆட்டுவதைப் போல இருக்கிறது....

திருஞான சம்பந்தரின் பாடல் 

Sunday, December 16, 2012

திருக்குறள் - சூதும் உயிரும்

திருக்குறள் - சூதும் உயிரும் 


சூதாட்டத்தில் தோர்க்க தோர்க்க, விட்டதை பிடிக்க வேண்டும் என்ற வெறி வரும். இந்த குதிரை மேல் கட்டலாமா, அந்த குதிரை மேல் கட்டலாமா என்று மனம் அலை பாயும். அதிர்ஷ்டம் எப்படியாவது ஒருதடவை அடித்தால் போதும், காசை அள்ளிரலாம் என்று இழக்க இழக்க சூதின் மேல் மேலும் மேலும் காதல் வரும். அதை விட்டு விட்டு வர மனம் இருக்காது. 

அது எப்படி இருக்கிரதென்றால்...

இந்த உடல் எவ்வளவுக்கு எவ்வளவு துன்பப் படுகிறதோ, இந்த உயிருக்கு அந்த உடல் மேல் மேலும் மேலும் ஆசை பெருகிக் கொண்டே இருக்கும். வயதாக வயதாக உடல் பலம் குன்றி நோய் வாய்ப் படும். நைந்து போன உடலை உயிர் விட்டு விட்டு போய் விடாது. நோயோடு போராடும். வாழுகின்ற ஆசை உடல் தேய தேய கூடிக் கொண்டே போகும். 

வயதானவர்களைப் பார்த்தால் தெரியும்...அவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆசை கூடி கொண்டே போகும்...நல்ல சாப்பாடு, நாலு இடம் பார்க்க வேண்டும், எல்லா விழாக்களிலும் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை...முடியவில்லையே என்று விடுவது கிடையாது.

சர்க்கரை வியாதி உள்ளவனுக்கு இனிப்பின் மேல் தோன்றும் ஆசை போல...

சரி இவ்வளவு பணம் போச்சே, இதை இனியாவது விட்டு தள்ளுவோம் என்று சூதை யாரும் விடுவது கிடையாது. 

பாடல்

இராமாயணம் - தீராக் காதலன்


இராமாயணம் - தீராக் காதலன்


இராமன் இருப்பதோ சிறிய குடில். அயோத்தியில் இருந்து வந்து இருக்கிறான். கங்கை கரையில் பெரிய வீடு ஒன்றும் இருக்க சாத்தியமில்லை. அங்குள்ள முனிவரிகள் ஏதாவது ஒரு சிறய குடில் அமைத்து தந்திருக்கலாம் அல்லது தங்களது குடிசை ஒன்றை தந்திருக்கலாம். குகனோ தன் பரிவாரங்களோடு வந்து இருக்கிறான். அவர்களை எங்கு தங்க வைப்பது ? அதை மிக நாகரீகமாக குகனுக்கு உணர்த்தினான் இராமன் " நீ போய் உன் சுற்றத்தாரோடு இரவு தங்கிவிட்டு நாளை காலை வா" என்றான். 

கேட்டால் தானே ? குகனுக்கு புரியவில்லை. உன்னை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். 

இராமனுக்கு தர்ம சங்கடம். இருக்கிறேன் என்று சொல்பவனை எப்படி போகச் சொல்வது ? சரி இரு என்று சொன்னால், எங்கு தங்க வைப்பது ? 

நம் வீடுகளில் பார்த்து இருக்கிறோம். மனைவியிடம் முன்ன பின்ன சொல்லாமல், கணவன் சில நண்பர்களை அழைத்து வந்து விடுவான். " எல்லாருக்கும் காபி டிபன் பண்ணு " இல்லை என்றால் " அவங்க  எல்லாம் இன்னைக்கு இரவு இங்க தான் சாப்பிடப் போகிறார்கள், உணவு தயார் பண்ணிவிடு" என்று சொல்லவதை கண்டிருக்கிறோம்.  மனைவிக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. என்ன செய்வது. சங்கடப் படுவார்கள். 

இராமன் அப்படி பட்டவன் அல்ல. குகன் இருக்கிறேன் என்று சொன்னவுடன், சீதையின் முகத்தை பார்க்கிறான். அவள் கண்ணாலேயே சரி என்று சொல்லி இருக்க வேண்டும். அப்புறம் லக்ஷமணனை பார்க்கிறான். அவனும் " சரி அண்ணா, சமாளித்துக் கொள்ளலாம் " என்று ஜாடையால் உணர்த்துகிறான். 

சீதை சாப்பாடு தயார் பண்ணிவிடுவாள், இலக்குவன் தங்க வசதி பண்ணி விடுவான் என்று அறிந்த பின் அவர்களிடம் "இந்த குகன் தீராத காதலன்" என்று சொல்லி விட்டு , குகனை நோக்கி " யாதினும் இனிய நண்பனே, நீ எங்களோடு இரு" கருணையோடு சொன்னான். 


தீராத காதலன் - இராமன் குகனுக்கு தந்த அடை மொழி.

யாதினும் இனிய நண்ப - இதுவும் இராமன் குகனுக்குத் தந்த அடை மொழி. யாதினும் என்பது அஹ்ரினை. யாரினும் என்று சொல்லி இருந்தால் எல்லோரையும் விட என்று பொருள் தரும். கம்பன் அப்படி சொல்லவில்லை. யாதினும் என்று சொன்னான். மனிதர்கள் சில நேரம் நட்பாய் இருப்பார்கள், சில சமயம் அவர்களே நட்பில்லாமலும் போய் விடலாம். யாதினும் என்பது எல்லாவற்றையும் விட என்று பொருள் தரும். மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள், பொருள்கள், பிடித்தமான உணவு, இசை, பொழுது, தத்துவம், நம்பிக்கை, உடை, என்று எல்லாம் அந்த "யாதினும்" என்ற சொல்லில் அடங்கும். எல்லாவற்றையும் விட இனிய நண்பனே என்று இராமன் குகனை அழைக்கிறான்.


Friday, December 14, 2012

குறள் - ஆத்திசூடி - சூது


குறள் - ஆத்திசூடி - சூது


வெல்வது சர்வ நிச்சயம் என்று தெரிந்தால் கூட, சூதாடாதே. சூதில் வரும் வெற்றி என்பது தூண்டிலில் உள்ள இரையை கவ்விய மீனின் வெற்றியை போன்றது. முதலில் நன்றாக இருக்கும், கொஞ்சம் கடித்தவுடன் முள் வாயில் ஏறி வேதனை செய்யும், அதில் இருந்து தப்பிக்க வேகமாக அங்கும் இங்கும் துள்ளும் போது அந்த முள் இன்னும் ஆழமாகத் தைக்கும். இரத்தம் வரும். தூண்டிலில் மீன் துள்ளுவதைப் கண்டு தூண்டில் போட்டவன் அதை மேலே இழுப்பான். நீரை விட்டு வெளியே வந்த மீன் மூச்சு முட்டி இறந்து போகும். அதுபோல சூதில் வரும் வெற்றி. முதலில் சுகமாகத் தோன்றினாலும் பின்னால் மிகுந்த துன்பத்தை தரும் எனவே சூதாடக் கூடாது என்கிறார் வள்ளுவர். 

பாடல் 

Thursday, December 13, 2012

இராமாயணம் - வைத்த கண்ணை எடுக்காமல்


இராமாயணம் - வைத்த கண்ணை எடுக்காமல் 


நீ போய் உன் சுற்றத்தாருடன் இரவு தங்கி விட்டு நாளை காலை கங்கையின் அக்கறை செல்ல படகு கொண்டு வா என்று குகனிடம் இராமன் கூறினான். 

குகனுக்கு போகவே மனம் இல்லை. 

இராமா உன்னை பார்த்த கண்ணை என்னால் எடுக்க முடியவில்லை. உன்னை விட்டு போகவே முடியவில்லை. உன் கூடவே இருந்து உனக்கு உதவி செய்கிறேனே என்று கெஞ்சுகிறான். 

இன்னொரு பொருள், எப்படி சக்கரவர்த்தியாய் இருக்க வேண்டிய நீ இப்படி தவ கோலத்தில் இருக்கும் கோலத்தை பார்த்த பின்னும் அந்த கண்ணை பிடுங்கி எரியாமல் இருக்கும் நான் உன் மேல் அன்பு கொண்டவன் போல் நடிக்கும் பெரிய கள்வன். 

ஈர்த்தல் என்ற சொல்லுக்கு கவர்தல், பிடுங்குதல், வசப்படுதல் (காந்தம் இரும்பை ஈர்க்கும்). 

குகனால் இராமனை விட்டு பிரிய முடியவில்லை. அவ்வளவு காதல்.


பாடல்

Wednesday, December 12, 2012

இராமாயணம் - உபசரிக்கும் பண்பாடு


இராமாயணம் - உபசரிக்கும் பண்பாடு


நாம சில பேரோட வீட்டுக்குப் போனால் சாப்பாடு போட்டே கொன்று விடுவார்கள். இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க என்று அளவுக்கு அதிகமாக நம்மை உண்ண வைத்து ஒரு வழி பண்ணி விடுவார்கள்."எனக்கு சர்க்கரை வியாதி ... இனிப்பு ஆகாது" என்று சொன்னாலும் கேட்பது இல்லை. "ஒரு நாள் சாப்பிட்டால் ஒண்ணும் பண்ணாது...வேணும்னா ஒரு மாத்திரை அதிகமா போட்டுகோங்க " என்று உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததையும் உண்ண வைத்து விடுவார்கள். உண்ட பின் சிரமப் படுவது நாம் தான். 

குகன் மூலம் கம்பன் உபசரிக்கும் பண்பாடை காட்டுகிறான்....

Tuesday, December 11, 2012

இராமாயணம் - தாயினும் நல்லான் - ஏன் ?


இராமாயணம் - தாயினும் நல்லான் - ஏன் ?

இராமனை பார்க்க கானகத்திற்கு அவனுடைய தாய்மார்கள் வந்தார்கள், பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள், அமைச்சர்கள் வந்தார்கள்....ஆனால் யாரும் இராமன் காட்டில் சாப்பாடுக்கு என்ன பண்ணுவான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. கொண்டு வந்ததாக கம்பன் எங்கும் கூறவில்லை. அவர்களுக்கு எப்படியாவது இராமனை மீண்டும் நாட்டுக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவன் நேரத்திற்கு சாப்பிட்டானா என்ற கவலை இருக்க வில்லை. 

குகன் ஒருவன் தான், இராமனுக்கு பசிக்குமே என்று உணவு கொண்டு வந்தான். 

குழந்தையின் பசி அறிந்து உணவு ஊட்டும் தாய் போல, இராமனுக்கு பசிக்குமே என்று உணவு கொண்டு வந்தான்.....

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்க வாசகர் இறைவனைக் கூறினார். 

தாயை விட நம்மேல் அன்பு கொண்டவன் இறைவன் என்பது மணிவாசகர் வாக்கு.

தாயை விட நல்லவன் என்று குகனை இறைவனின் அளவுக்கு உயர்த்துகிறார் கம்பர். 

பாடல் 

Monday, December 10, 2012

இராமாயணம் - தாயின் நல்லான்

இராமாயணம் - தாயின் நல்லான் 


குகனைப் பற்றி ஒரு முழு புத்தகமே எழுதலாம். கம்பன் இழைத்து இழைத்து பண்ணுகிறான் இந்த பாத்திரத்தை. படிக்க படிக்க திகட்டாத பாத்திரப் படைப்பு. 

எந்த பாத்திரத்துக்கும் தராத ஒரு அடை மொழியையை குகனுக்குத் தருகிறான் கம்பன் "தாயின் நல்லான்". கண்ணை இமை போல் பார்த்துக் கொண்ட இலக்குவனுக்கு கூட அந்த அடை மொழியை கம்பன் தரவில்லை. பரதனுக்கு தரவில்லை. குகனுக்கு மட்டும் தந்தான் அந்த அடை மொழியையை. 

இலக்குவனும், பரதனும் இராமனின் உடன் பிறந்தவர்கள். அவர்கள் இராமன் மேல் அன்பு செலுத்தியதில் பெரிய ஆச்சரியம் இல்லை. முன்ன பின்ன அறியாத குகனின் அன்பு அளவிட முடியாதது. 

முதலில் பாடலைப் பார்ப்போம். 

குகன் இராமன் கங்கை கரையை அடைந்ததை அறிந்து அவனை காண வந்து இருக்கிறான், தன் பரிவாரங்களுடன்.....

இலக்குவன் அவனை வெளியில் நிறுத்தி விட்டு இராமனிடம் குகனின் வருகையையை அறிவிக்கச் செல்கிறான்...

பாடல்

Saturday, December 8, 2012

இராமாயணம் - தையல் கடலும், தைலக் கடலும்


இராமாயணம் - தையல் கடலும், தைலக் கடலும்


தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்...என்ன செய்ய விதி...சாகும் போது பிள்ளைகள் பக்கத்தில் இல்லை. 

பரதனும் சத்ருக்கனனும் வரும் வரை தசரதனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும். அவன் உடலை தைலத்தில் போட்டு வைத்தார்கள்...கோசலை, கைகேயி, சுமித்தரை என்ற பட்டத்து இராணிகளோடு அவனுக்கு பதினாயிரம் மனைவிகள்...தையல்  (பெண்கள் ) என்னும் கடலில் கிடந்தவனை தைலக் கடலில் இட்டு வைத்தார்கள். 

கம்பனின் சொல் விளையாட்டு....

பாடல் 

பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பட்டினத்தார் - கரை அறியா ஆற்றில்


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்க்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலையும் மக்களைப் பார்த்து பாடுகிறார்....

பாடல்

Friday, December 7, 2012

கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல்


கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல் 


நாம் மற்றவர்களுக்கு ஒரு கெடுதலை காலையில் செய்தால், நமக்கு ஒரு கெடுதல் மாலையில் தானே வரும் என்கிறார் வள்ளுவர். 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 
இன்னா = கெடுதல்
முற்பகல் = காலையில்
செய்யின் = (நாம் வலிய சென்று) செய்தால்
தமக்கு = நமக்கு 
இன்னா = கெடுதல்
பிற்பகல் = மாலையில் 
தாமே வரும் = யாரும் செய்யாவிட்டாலும், தானாகவே வந்து சேரும். 

கெடுதல் செய்தால் கெடுதல் வரும், சரி. 

நல்லது செய்தால், நல்லது வருமா ? ஏன் வள்ளுவர் கெடுதலை மட்டும் சொல்கிறார் ? நல்லது செய்தால் நல்லது வரும் என்றும் சொல்லி இருந்தால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம் அல்லவா ? சொல்லாமல் விட்டு விட்டார். திருக்குறளை படிப்பவன் என்ன நினைப்பான். கெட்டது செய்தால் கெட்டது வரும். சரி கெட்டது செய்ய வேண்டாம். நன்மை செய்தால் நன்மை வருமா என்று தெரியவில்லை. எதுக்கு கஷ்டப் பட்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் ஒன்றும் செய்யாமல் இருந்து விடலாம் அல்லவா ? 

பார்த்தாள் அவ்வை, இது சரிப் படாது. நன்மைக்கு நன்மை விளையும் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். 

அப்படி சொல்லாவிட்டால் நாட்டில் ஒருத்தனும் நல்லது செய்யமாட்டான் என்று நினைத்தாள் .

ஏற்கனவே ஏழு வார்த்தைகள் ஆகி விட்டது. இதை சேர்க்கவும் வேண்டும், மொத்த வார்த்தகைளை குறைத்து நாலே நாலு வார்த்தையில் சொல்லவும் வேண்டும்...எப்படி ?

சொல்கிறாள் பாருங்கள்....

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

கணித சமன்பாடு போல் எழுதி விடலாம்

அவ்வளவு தான். 

நீங்கள் எதை செய்கிறீர்களோ அது உங்களுக்கு வந்து சேரும். அதுவும் உடனுக்குடன். 

செய்யின் என்றால் செயல்பாடு என்று பொருள். முனைந்து செய்ய வேண்டும்.

விளைதல் தானாக நிகழும். விதை போட்டு விட்டால் போதும். 

எந்த விதை போடுகிறோமோ, அந்த செடி விளையும். 

எவ்வளவு வார்த்தையில் நுட்பம்.... 

விதை ஒன்று போடுகிறோம். ஒரே ஒரு விதை மட்டுமா விளைந்து வருகிறது ? ஒரு ஆல  மர  விதையில் இருந்து ஒரு பெரிய ஆல  மரமே வருகிறது...கிளை, இல்லை, காய், கனி, அந்த கனியில்  ஆயிரம் ஆயிரம் விதைகள் வருகின்றன...எனவே நாம் நன்மை செய்தால் நன்மை ஒன்றுக்கு பத்தாக விளையும். தீமைக்கும் அதுவே விதி.


பட்டினத்தார் - பகலை இரவென்பார்


பட்டினத்தார் - பகலை இரவென்பார் 


படித்தால் புரிகிறது. ஆனால் உணர முடிவதில்லை. 

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்று பெரிது பெரிதாய் புத்தகங்கள். கக்கத்தில் வைத்து தூக்கிக் கொண்டு போகலாம். மனம் அதை வாங்கி உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

அது மட்டும் அல்ல, ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு ஏதோ எல்லா உண்மையும் அறிந்தவர்கள் போல் அடித்துப் பேசும் ஆட்களைப் பார்த்து சொல்கிறார் பட்டினத்துப் பிள்ளை...பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாத பாதகர்கள் என்று.....

அந்த திருவருட் பிரகாசம் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது...பார்த்தால்தானே?...கவனம் எல்லாம் புத்தகத்திற்குள்.... 

பாடல் 

Wednesday, December 5, 2012

இராமயாணம் - பணம் வந்தால் குணம் மாறும்


இராமயாணம் - பணம் வந்தால் குணம் மாறும் 


கூனி, கைகேயின் மனத்தை கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறாள். இராமனை பெற்ற எனக்கு என்ன துன்பம் வரும் என்று பதில் கேள்வி கேட்டால் கைகேயி. 

கூனியின் வாயிலாக கம்பன் ஒரு மிகப் பெரிய உண்மையை எடுத்து வைக்கிறான். 

"அடியே கைகேயி, இராமன் இன்று நல்லவனாய் இருக்கலாம். ஆனால் நாளை செல்வம் (நாடு) வந்தபின் அப்படியே இருப்பானா என்று கேள்வி எழுப்புகிறாள். அற வழியில் நிற்கும் தவ சீலர்கள் கூட செல்வம் வந்த பின் மாறி விடுவார்கள். உன்னை இன்று வீரத்தின் பாற்பட்ட நெறியின் காரணமாக கொல்லாமல் விட்டாலும், நாளை உனக்கு மன உலைச்சைளை சந்து நீயே உன்னை மாய்த்துக் கொள்ளும்படி செய்து விடுவான்"

என்று கூறினாள்.

பாடல் 

Tuesday, December 4, 2012

தேவாரம் - அவன் பாதம் சேர்


தேவாரம் - அவன் பாதம் சேர் 


தாத்தாவுக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. பேரன் பேத்திகள் எல்லாம் சுத்தி நிற்கிறார்கள். மகன்களும் மகள்களும் வந்து இருக்கிறார்கள். பாட்டி முன்னாலேயே போய் சேர்ந்து விட்டாள். மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் "பசிக்குது...கொஞ்சம் கஞ்சி கொண்டு வா " என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்த அப்பா / தாத்தா இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள். 

அப்படி ஒரு காலம் வரும் முன்னே திரு துருத்தி என்ற ஊரில் உள்ள சிவனின் பாதம் சேர் என்கிறார் நாவுக்கரசர்....

பாடல் 

இராமாயணம் - இராமனுக்கு முடியும், கோசலையின் துயரும்


இராமாயணம் - இராமனுக்கு முடியும், கோசலையின் துயரும் 


மகன் உள்ள எந்த பெண்ணிடமும் கேட்டுப் பாருங்கள்....உனக்கு கணவன் பிடிக்குமா, மகன் பிடிக்குமா என்று. 

என்ன சொல்லுவாள் ? இருவரையும் பிடிக்கும் என்பாள். 

யார் ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால், மௌனம் தான் பதிலாக இருக்கும். 

சரி, அடுத்த கேள்வி, கணவனுக்கு ஒரு இழப்பு ஏற்பட்டால், மகனுக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டால் என்ன பதில் வரும் ?  

மகனுக்கு நன்மை என்றால் மகிழ்ச்சிதான் ...ஆனால் கணவனுக்கு ஒரு இழப்பு என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தவிப்பாள்.

அதை அப்புறம் பார்ப்போம்.....


கடல் பார்த்து இருக்குறீர்களா ? எவ்வளவு தண்ணி. எப்படி அவ்வளவு தண்ணியும் ஒரே அளவில் எப்போதும் இருக்கிறது ? இவ்வளவு தண்ணீர் கொண்ட கடல் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு இந்த நிலத்தை மூழ்க அடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ? எது அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ?

நமது புராணங்களில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு நம்பிக்கை.

கடல் நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று இருக்கிறது. கடல் நீரின் அளவு அதிகமாகும் போது வடவை  கனல் அதிகப்படியான நீரை வற்றச் செய்துவிடும். ஊழி காலத்தில் வடவை கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது நம்பிக்கை. 

அது அப்படியே இருக்கட்டும். 

கதைக்கு வருவோம். 

இராமன் முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும் ஒரு சின்ன துன்பம் என்றேன். அதில் அவளுக்கு என்ன துன்பம் இருக்கும் ?

இராமனுக்கு முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன் தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான் இராமன் முடி சூட முடியும்.

இராமனுக்கு முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம். 

உடனே நினைத்துப் பார்க்கிறாள், இராமன் முடி சூட வேண்டுமானால் தசரதன் முடி துறக்க வேண்டுமே என்று நினைக்கிறாள். அப்படி நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல் எழுந்து கடலை வற்ற வைப்பது மாதிரி  வற்றிப் போய் விட்டது. 

இராமனுக்கு முடி - மகிழ்ச்சிக் கடல்
தசரதன் முடி துறத்தல் - மகிழ்சிக் கடலை வற்றவைக்கும் வடவைக் கனல்.

எவ்வளவு நுணுக்கமாக கம்பன் யோசித்து எழுதி இருக்கிறான்....

பாடல்

Monday, December 3, 2012

ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


அவ்வையார்: வள்ளுவரே, ஒருவர் தானம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் ஆட்களை பற்றி நீங்கள் ஏதாவது குறள் எழுதி இருக்கிறீர்களா?

வள்ளுவர்: என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்...இதோ நான் எழுதிய குறள் 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் 
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

ஔவ்: இதையே இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்ல முடியுமா ?

வ: இதை விட எப்படி சுருக்க முடியும் ? இருப்பதே ஏழு வார்த்தை...

ஔவ்: முடியும்...இதைப் பாருங்கள்...

ஈவது விலக்கேல் 

ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே. 

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம்...

ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே. 

ஈவது விலக்கேல். 

இராமாயணம் - வயிற்றில் அடக்கியவனை வயிற்றில் அடக்கியவள்


இராமாயணம் - வயிற்றில் அடக்கியவனை வயிற்றில் அடக்கியவள்


இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள். பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள். 

பிராரர்த்தனை  செய்தது யார் ?

இந்த அகிலத்தை எல்லாம் தன் வயிற்றில் அடக்கிய திருமாலை தன் வயிற்றில் அடக்கியவள்.

அவளின் தவம் தான் எத்துணை சிறந்தது ?

பாடல்

அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே


அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே 


 எவ்வளவோ நல்லது கேட்டது எல்லாம் எடுத்துச் சொன்னாலும், தாம் தவறு செய்யாமல் இருப்பதில்லை. அப்பப்ப ஏதாவது தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம்...

தெரிந்து கொஞ்சம், தெரியாமல் மிச்சம் என்று பிழைகள் செய்வது நமது பிழைப்பாய் இருக்கிறது...

அதற்காக, அபிராமி என்னை கை விட்டு விட்டாதே...சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை அல்லவா..இது ஒண்ணும் புதுசு இல்லையே...அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்...அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை காத்தாய்...அவ்வளவு பெரிய ஆலகால விஷத்தின் தன்மையையே நீ மாற்ற வல்லவள் ... நான் செய்யும் சிறு பிழைகள் எம்மாத்திரம் உனக்கு....

அப்படியே நீ எனக்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலும்...நான் உன்னை கோவிக்க மாட்டேன் ...ஏன் என்றால் எனக்கு எது நல்லது கெட்டது என்று உனக்குத் தெரியாதா ?

பாடல் 

Saturday, December 1, 2012

ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


அது என்ன அறம் செய்ய "விரும்பு". 

அறம் செய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம் தானே. 

அது என்ன விரும்பு ? விரும்பினால் மட்டும் போதுமா ? அறம் "செய்ய" வேண்டாமா ?

உங்களுக்கு மிக விருப்பமான செயல் எது ? 

இசை, இலக்கியம், வித விதமான உணவு வகைகளை சமைப்பது/உண்பது, புது புது இடங்களை சென்று பார்ப்பது, வித விதமான உடைகளை அணிவது என்று ஏதோ ஒன்றில் விருப்பம் இருக்கும்.

நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம், பணத்தை செலவு செய்வோம், அதை பற்றி நம் நண்பர்களிடம் பெருமையாக சொல்வோம்...எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். 

மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம். புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே, புது டிசைனில் சேலை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்....

எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும். 

நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...மகிழ்ச்சியாக செய்வோம்...

எனவே, அவ்வை பாட்டி சொன்னாள் ...அறம் செய்ய விரும்பு என்று.

விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம், மீண்டும் மீண்டும் செய்வோம், தேடி தேடி போய் செய்வோம்...

அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, அவ்வை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்....


அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...அற  வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான,தர்ம வழியில் நிற்றல் என்று பொருள். அற  வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும். 

எனவே ... அறம் செய்ய விரும்புங்கள்