Showing posts with label nanneri. Show all posts
Showing posts with label nanneri. Show all posts

Sunday, December 22, 2013

நன்னெறி - அறிவும் புலன்களும்

நன்னெறி - அறிவும் புலன்களும் 


ஐந்து புலன்களும் மனிதர்களை அலைக் கழிக்கும். ஆனால், அறிவுள்ளவர்களை அந்த ஐந்து புலன்களும் ஒன்றும் செய்யாது. அறிவில்லாதவர்கள்தான் அந்த புலன்கள் பாடாய் படுத்தும்.

சூறாவளி காற்று சிறு துரும்பை சுழற்றிப் போடும், ஆனால் கல் தூண் அசையாமல் நிற்கும்.

பாடல்

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே 
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 

பொருள் 

பொய்ப்புலன்கள் = பொய்யான இன்பத்தை தரும் புலன்கள்

ஐந்து நோய் = ஐந்து புலன்களும் நோய் செய்யும் 

புல்லியர் பாலன்றியே = அறிவில்லாத புல்லியர்களுக்கு

மெய்ப்புலவர் தம்பால் = உண்மையான அறிவு உடையவர்களை

விளையாவாம் = அவை பற்றாது

துப்பிற் = ??

சுழன்று கொல்= சுழன்று அடிக்கும் காற்று

கல்தூணைச் = கல் தூணை

சூறா வளிபோய்ச் = சூறாவளி காற்று

சுழற்றும் சிறுபுன் துரும்பு = சுழற்றும் சிறிய துரும்பை

Sunday, December 15, 2013

நன்னெறி - அழும் கண்

நன்னெறி - அழும் கண் 


உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.

வள்ளுவர் சொன்ன மாதிரி,

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தன் நோய் போல் போற்றாக் கடை

பாடல்

பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.

பொருள்

பெரியவர் = கற்றறிந்த பெரியவர்கள்

தம்நோய் போல் = தனக்கு வந்த நோய் போல

பிறர் நோய் = பிறரின் நோயை

கண்டு உள்ளம் =  கண்டு உள்ளம்

எரியின் இழுது ஆவர் என்க = நெருப்பில் இட்ட வெண்ணை போல உருகுவர்.

 தெரி இழாய் = தேர்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

மண்டு பிணியால் =  அதிகாமான நோயால்

வருந்தும் பிற உறுப்பைக் = வருந்தும் மற்ற உறுப்புகளை

கண்டு = கண்டு

கலுழுமே கண் = கலங்கும் கண்




Saturday, December 7, 2013

நன்னெறி - சொல்லும், சொல்பவரும்

நன்னெறி - சொல்லும், சொல்பவரும் 


பிள்ளைகளுக்கு பெற்றோரும் பெரியவர்களும் சொல்லும் அறிவுரைகள் மற்றும் நல்ல செய்திகள் பிடிக்காது. "இந்த வயசானவங்க எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எதையவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்" என்று அலுத்துக் கொள்வார்கள்.

ஆசிரியரோ, பெற்றோரோ சொல்லும் கடினமான சொற்கள் அவர்களுக்குப் பிடிக்காது. அதே சமயம் உடன் படிக்கும் மாணவர்கள் "சினிமாவுக்குப் போகலாம், தம் அடிக்கலாம்" என்று சொன்னால் ஆஹா இவன் அல்லவோ என் நலம் விரும்பி என்று அவன் பின்னே செல்வார்கள்.

பிள்ளைகள் மட்டும் அல்ல, நாமும் அப்படித்தான்.

நம் நலம் விரும்புவர்கள் சொல்லும் வன் சொற்கள் பிடிக்காது. மற்றவர்களின் இனிய சொற்கள் பிடிக்கும்.

அப்படி இருக்கக் கூடாது.

சிவ பெருமானை , அர்ஜுனன் வில்லை எறிந்து  தாக்கினான். அது சிவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்மதன் மலர் அம்பை சிவன் மேல் எறிந்தான். அதை கண்டு பொறுக்காமல், சிவன் அவனை நெற்றிக் கண்ணால் எரித்து விட்டார். 


பாடல்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு. 

பொருள்

மாசற்ற = குற்றம் அற்ற
நெஞ்சுடையார் = மனம் உள்ளவர்கள்
வன்சொலினிது = வன் சொல் இனிது = அவர்கள் சொல்லும் சொற்கள் கடினமாய் இருந்தாலும் நல்லது

ஏனையவர் = மற்றவர்கள்
பேசுற்ற = சொல்லிய
இன்சொல் = இனிமையான சொல்
பிறிதென்க = இனிமாயில் இல்லாதவை என்று உணர்க

ஈசற்கு = சிவனுக்கு
நல்லோன் = நல்லவனான
எறி சிலையோ = எறிந்த வில்லா ?
நன்னுதால் = அழகிய நெற்றியை கொண்ட பெண்ணே
ஓண்கருப்பு = உயர்ந்த கரும்பு
வில்லோன் = மன்மதன்
மலரோ விருப்பு = மலரா விரும்புதல் தரக் கூடியது ?


Tuesday, December 3, 2013

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல்

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல் 


கடுமையாக பேசி காரியம் சாதிக்க முடியாது. கோபப் பட்டு, கடுமையான சொற்களை கூறி , மிரட்டி காரியம்  சாதிக்க முடியாது.

சூரியன் மிகப் பெரியதுதான், மிகுந்த சக்தி வாய்ந்ததுதான் ஆனால் கடல் சூரியனின் கதிருக்கு பொங்காது. குளிர்ந்த கதிரை வீசும் நிலவின் கதிருக்கு கடல் பொங்கும்.

மக்கள் இனிய சொல்லுக்கு தலை சாய்ப்பார்கள்.....


பாடல்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல். 

பொருள் 

இன்சொலா லன்றி = இன் சொல்லால் அன்றி
இருநீர் வியனுலகம் = இரண்டு நீரைக் கொண்ட இந்த பெரிய உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே = வன்மையான சொற்களால் என்றும் மகிழாது
பொன்செய் = பொன்னால் செய்யப்பட்ட
அதிர்வளையாய் = அதிரும் வளையலை அணிந்த பெண்ணே
பொங்காது  அழல் கதிரால் = அனல் வீசும் கதிரால் பொங்காது
தண்ணென் = குளிர்ந்த
கதிர்வரவால் = கதிர்களை வீசும் நிலவின் வரவால்
பொங்குங் கடல் = பொங்கும் கடல்

இனிய சொற்களை பேசிப் பழகுங்கள். உலகம் உங்கள் சொல்லுக்கு தலை ஆட்டும்.

(மூணாபில் படித்த பாடல்...ஞாபகம் இருக்கிறதா ?...:))


Sunday, December 1, 2013

நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம்

நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம் 


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.

வெளியில் விட்ட மூச்சு மீண்டும் உள்ளே வருமா ? உள்ளே வரும் என்று என்ன உத்தரவாதம்.

போன நொடி துடித்த இதயம் அடுத்த நொடி அடிக்குமா ? அடிக்க வேண்டும் என்ற என்ன கட்டாயம் ?

யாரைக் கேட்டு இது எல்லாம் நடக்கிறது ? நாம் சொல்லித்தான் நடக்கிறது என்றால் கடைசியில் விட்ட மூச்சை ஏன் மீண்டும் இழுக்க முடியவில்லை ?

ஒவ்வொரு வினாடியும் இந்த உடலில் உயிர் உலவுவது மிகப் பெரிய அதிசயம்.

இந்த உடலை விட்டு உயிர்  போவது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை.

ஒன்பது வாயில்கள் இந்த உடலில். ஒன்றுக்கும் பூட்டு கிடையாது. இந்த ஓட்டை பலூனில் காற்று நிற்பது அதிசயமா , காற்று இறங்கிப் போவது அதிசயமா ?

பாடல்

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.



Saturday, June 29, 2013

நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள்

நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள் 


நல்லது செய்யலாம். உண்மை பேசலாம். தான தருமங்கள் செய்யல்லாம். இவற்றை எல்லாம் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்ய வேண்டும். அறியாமல் செய்யும் அறங்கள் அவ்வளவு வலிமையானது அல்ல என்று கூறுகிறது நன்னெறி.

ஏன் அப்படி ? செயல் செய்தால் போதாதா ? அது பற்றி ஏன் தெரிந்திருக்க வேண்டும் ?

தானம் செய்வது நல்லதுதான். யாருக்கு தானம் செய்ய வேண்டும், எந்த காரியத்திற்கு தானம் செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும். அந்த அறிவை தருவது நம அற  நூல்கள்.

தவறான ஆட்களுக்கு உதவி செய்தால் அது நமக்கே தீங்காய் முடியும்.

ஒரு கதவு எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும், ஒரு சின்ன தாழ்பாழ் இல்லையென்றால் அந்த கதவால் என்ன பயன்  ?

அது போல, எவ்வளவுதான் நல்ல குணங்கள் இருந்தாலும் அறிவு முக்கியம். அறிவில்லாத நல்ல குணம், தாழ்பாழ் இல்லாத கதவு போல்.

பாடல்

பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னுதால்
காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.

பொருள்