Showing posts with label நந்திக் கலம்பகம். Show all posts
Showing posts with label நந்திக் கலம்பகம். Show all posts

Saturday, August 28, 2021

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்


நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும் இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது. 


தலைவனைப் பிரிந்த தலைவி தனிமையில் வருந்துகிறாள்.


எப்படியோ, இரவு போய் விட்டது. பகல் வந்து விட்டது. எல்லோரும் விழித்து விடுவார்கள். வேலை தொடங்கி விடும். தலைவனின் பிரிவை கொஞ்சம் மறந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த இரவும் நிலவும் மீண்டும் வேகமாக் வந்து விட்டது. 


இப்ப தான் விடிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள திரும்பியும் நிலவு வந்து அவளை வருத்தத் தொடங்கி விட்டது. 


நிலவு வேகமாக வந்ததற்கு ஒரு உதாரணம் கூறுகிறாள் தலைவி. 


ஒரு ஊரில் பெண்களே இல்லை என்றால் அந்த ஊர் எப்படி இருக்கும்? 


அந்த ஊரில் அன்பு இருக்காது. கருணை இருக்காது. அரவணைப்பு இருக்காது. ஈரம் இருக்காது. அருள் இருக்காது. 


அம்மா இல்லை, அக்காள் தங்கை இல்லை, மகள் இல்லை, காதலி இல்லை, மனைவி இல்லை...அது என்ன ஊர்? 


அங்குள்ள மக்கள் ஈவு இரக்கம் அற்று கொடியவர்களாக இருப்பார்கள் அல்லவா?


அப்படிப் பட்ட கொடியவர்களைப் போல நீ வேகம் வேகமாக வந்து என்னைத் துன்பப் படுத்துகிறாய் என்கிறாள். 



பாடல் 


 மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்

 தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்

பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_28.html


(Please click the above link to continue reading)


மண்ணெலாம் = இந்த மண் உலகம் எல்லாம் 


உய்ய = பிழைக்க 


மழைபோல் = மழையைப் போல 


வழங்குகரத் = வழங்கும் கைகளைக் கொண்ட 


தண்ணுலாமாலைத் = குளிர்ச்சி நிலவும் மாலையை அணிந்த 


தமிழ் நந்தி நன்னாட்டில் = நந்திவர்மன் உள்ள இந்தத் தமிழ் நாட்டில் 


பெண்ணிலா = பெண்களே இல்லாத 


ஊரில் = ஊரில் 


பிறந்தாரைப் போலவரும் = பிறந்தாரைப் போல வரும் 


வெண்ணிலாவே = வெண்ணிலாவே 


இந்த வேகம் உனக்காகாதே. = இத்தனை வேகம் உனக்கு ஆகாதே 


என்ன ஒரு கவிதை!


சமயம் இருப்பின் மூல நூலை தேடித் பிடித்து படியுங்கள். அத்தனையும் தேன்.