Showing posts with label நீதி நெறி விளக்கம். Show all posts
Showing posts with label நீதி நெறி விளக்கம். Show all posts

Thursday, October 19, 2023

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம்

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம் 


சில விடயங்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


அது என்ன விடயங்கள்?


நிறைய படித்து இருப்பான். ஒரு சபையில், நாலு பேர் முன்னால் படித்ததை சொல் என்றால் நடுங்குவான். அவையைக் கண்டால். அப்படிப் பட்டவன் படிப்பதை விட படிக்காமல் இருப்பதே மேல். 


சில பேர் மிக அழகாக பேசுவார்கள். அடுக்கு மொழி, எதுகை மோனை, குரலில் ஏற்ற இறக்கம், நகைச்சுவை எல்லாம் இருக்கும். ஆனால் அவர்கள் பேச்சில் ஒரு துளியும் பயன் இருக்காது. ஏதோ கேட்டோம், இரசித்தோம், சிரித்தோம் என்று வர வேண்டியதுதான். கல்வி அறிவு இல்லாதவன் பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. 


சில பேர் எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டார்கள். ஒருத்தருக்கு ஒரு பைசா தந்து உதவி செய்ய மாட்டான். அவனிடம் செல்வம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


சில பேர் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார்கள். ஆனால், கையில் அவ்வளவாக செல்வம் இருக்காது. அவனிடம் உள்ள வறுமை, அது இல்லமால் இருப்பதே நல்லது. 


பாடல்  


அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்

அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்

பூத்தலின் பூவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_42.html


(pl click the above link to continue reading)


அவை அஞ்சி = அவையை அஞ்சி அல்லது அவைக்கு அஞ்சி. (அவை = சபை, கூட்டம்) 


மெய்விதிர்ப்பார் = உடம்பு உதறும் 


கல்வியும் = கற்ற கல்வியும் 


கல்லார் = படிக்காதவன் 


அவை அஞ்சா = சபைக்கு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் 


ஆகுலச் சொல்லும் = ஆரவாரமாக பேசும் பேச்சும் 


நவை அஞ்சி = பாவத்துக்குப்   பயந்து, குற்றத்துக்குப் பயந்து 


ஈத்து உண்ணார் செல்வமும் = பிறருக்கு கொடுத்து, தான் உண்ணாதவன் செல்வமும் 


நல்கூர்ந்தார் = வறுமையில் வாடும் நல்லவர்களின்  


இன் நலமும் = இனிய குணமும் 


பூத்தலின் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் 


ஏன் என்றால் அதனால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அது இருந்தாலும் ஒண்ணுதான் இல்லாவிட்டாலும் ஒண்ணுதான். 


படிக்காதவனுக்கு, நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லத் தெரியாது.எனவே சொல்ல மாட்டான். படித்தவனுக்கு சபையை கண்டால் பயம், எனவே அவனும் சொல்ல  மாட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். படிக்காமல் இருந்திருந்தால், அந்த நேரமாவது மிச்சமாயிருக்கும். 


எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குணம் இருக்கும். கையில் காலணா இருக்காது. அந்த நல்ல குணத்தால் யாருக்கு என்ன பயன்?  


உலோபியின் செல்வத்தால் என்ன பயன். அந்த செல்வம் அவனிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? 


எனவே, படித்தால் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும், செல்வம் சேர்த்தால், மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பது பெறப் பட்டது. 




Wednesday, October 18, 2023

நீதி நெறி விளக்கம் - கல்வி

 நீதி நெறி விளக்கம் - கல்வி 


ஒரு பொருளைச் சிறப்பித்து கூற வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைச் சொல்லி, அது போல இது இருக்கிறது என்று கூறுவது மரபு. 


உதாரணமாக, ஒரு பெண்ணின் முகம் அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், அது நிலவு போல இருக்கிறது, தாமரை மலர் போல இருக்கிறது என்று சொல்வது மரபு. 



கல்வின்னா என்ன, அதை அடைவதால் என்ன பலன், என்ன சுகம், அது இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும் என்று எப்படி விளக்குவது? படித்து அறிவு பெற்றால் நல்லது என்று சொன்னால் என்ன புரியும்?  மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதான். 


அதைவிட சிறந்த ஒன்றை உதாரணமாகச் சொல்லி விளங்க வைக்கிறார்.


கல்வியை விட சிறந்தது எது ?


ஒருவனுக்கு வாழ்வில் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது எது என்று சிந்திக்கிறார். 


அன்புள்ள மனைவி, அருமையான பிள்ளைகள், தேவையான அளவு செல்வம்.. இதைத் தவிர வேறு என்ன என்ன வேண்டும். கல்வி இந்த மூன்றுக்கும் ஒப்பானது என்கிறார். 


பாடல் 



கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்

செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்

செல்வமும் உண்டு சிலர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_18.html


(pl click the above link to continue reading)



கல்வியே = கல்விதான் ஒருவனுக்கு 


கற்பு உடைப் பெண்டிர்  = கற்பு உள்ள மனைவி 


அப்பெண்டிர்க்குச் = அந்த அன்பான மனைவியின் 


செல்வப் புதல்வனே = அருமையான பிள்ளையே 


தீங்கவியாச் = கல்வியால் பிறக்கும் அழகான கவிதை 


சொல்வளம் = அந்தக் கவிதையில் உள்ள சொல் வளம் (அர்த்தம், அழகு, நயம்) 


மல்லல் வெறுக்கை = மிகுந்த செல்வம் 


யா = அவை 


மாண் அவை மண்ணுறுத்தும் = மற்றவருக்குச் சொல்லுதல் 


செல்வமும் = அந்த செல்வமும் 


உண்டு சிலர்க்கு = உண்டு சிலருக்கு 


அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், செல்வச் சிறப்பு இது ஒரு புறம். 


கல்வி, கல்வியால் விளையும் கவிதை, அந்தக் கவிதையை சபையில் மற்றவர்க்கு சொல்லும் ஆற்றல் இது மறு புறம். 


அன்பான மனைவி இருந்தாலும், பிள்ளை இல்லாவிட்டால் அந்த இல்லறம் சிறக்குமா?  கணவன் மனைவி அன்பாகத்தான் இருக்கிறார்கள். குழந்தை இல்லை என்றால் எவ்வளவு தவிக்கிறார்கள். எத்தனை கோவில், எத்தனை மருத்துவம் ? 


செல்வம் இருக்கலாம். அதை மற்றவருக்கு கொடுக்கும் குணம் எத்தனை பேருக்கு இருக்கும். படிப்பார்கள். இரசிப்பார்கள். அதை மற்றவர்களோடு அவர்களுக்கு புரியும்படி சொல்லும் திறம் எத்தனை பேருக்கு இருக்கும். 


கல்வி கற்றால் மட்டும் போதாது, அதை கவிதை/கட்டுரை போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்  ஆற்றலும் வேண்டும். அப்போதுதான் கல்வி பூரணப்படும் என்கிறார். 


மனைவியும் வேண்டும், பிள்ளைகளும் வேண்டும், செல்வமும் வேண்டும், அந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படவும் வேண்டும். 


கல்வியும் வேண்டும், அது கவிதை, கட்டுரையாக வெளிப்படவும் வேண்டும், அதுவும் மற்றவர்களுக்கு பயன்படவும் வேண்டும். 




Wednesday, February 22, 2017

நீதி நெறி விளக்கம் - பூத்தலின் பூவாமை நன்று

நீதி நெறி விளக்கம் - பூத்தலின் பூவாமை நன்று 


நிறைய வாசிக்கிறோம். புத்தகங்களில் மட்டும் அல்ல  ஊடகங்களில் எல்லாம் நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. வாசைக்கவும் செய்கிறோம். தெருவில் சென்றால் ஏறக்குறைய எல்லோருமே தங்கள் கை பேசியில் ஏதோ வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல, எதையும் சரியாக புரிந்து கொள்வது இல்லை. வாசிப்பது எல்லாம் உண்மை என்று நினைத்துக் கொள்கிறார்கள். எதையும் அரைகுறையாக படித்து விட்டு எல்லாம் தெரிந்த மேதாவி போல பேசத் தலைப்படுகிறார்கள்.

ஒரு புத்தகத்தை கூட முழுமையாக வாசிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றும் கேட்டுவிட்டு அதை வைத்துக் கொண்டு அனைத்தும் தெரிந்தவர்களை போல அடித்து விடுகிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் படித்தவர்கள் , தாங்கள் படித்ததை பயமில்லாமல் எடுத்துச் சொல்ல முடியாமல் தயங்குகிறார்கள். சரியோ தவறோ என்று திணறுகிறார்கள்.

படிக்காதவன் எல்லாம் படித்தவனைப் போல பேசுகிறான். படித்தவன் பேசத் தயங்குகிறான்.

அதைப் போல, நிறைய  செல்வம் உள்ளவன் யாருக்கும் ஒன்றும் தர மாட்டான். வறுமையில் இருப்பவனிடம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் நிறைந்து நிற்கிறது.

 இவை எல்லாம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்கிறார் குமர் குருபரர்.

பாடல்

அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் 
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி 
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும் 
பூத்தலின் பூவாமை நன்று

பொருள்

அவை அஞ்சி = கூட்டத்தைப் பார்த்து

மெய்விதிர்ப்பார் = உடல் நடுங்குவர்

கல்வியும் = கற்ற கல்வியும்

கல்லார் = படிக்காதவர்கள்

அவை அஞ்சா  = அவைக்கு அஞ்சாமல் பேசும்

ஆகுலச் சொல்லும் = ஆரவார சொல்லும்

நவை =குற்றத்திற்கு , பிழைக்கு பிழைக்கு , தவறுக்கு

அஞ்சி = அச்சப்பட்டு

ஈத்து உண்ணார் செல்வமும் =  வறியவர்களுக்கு கொடுத்து உண்ணாதார்  செல்வமும்

நல்கூர்ந்தார் = வறுமை பட்டவர்

 இன் நலமும் = கொடை போன்ற இனிய குணங்களும்

பூத்தலின் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது.


என்ன சொல்ல வருகிறார் குமரகுருபரர் ?

கல்வி கற்றால் அதை தெளிவாக , பயமில்லாமல் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அரைகுறையாக படித்து விட்டு பேசிக் கூடாது.

செல்வம் இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து இன்பமாய் இருக்க வேண்டும்.

நல்ல மனம் இட்டும் இருந்தால் போதாது, மற்றவர்களுக்கு உதவும் செல்வமும் இருக்க வேண்டும்.

சிந்திப்போம்.



Tuesday, February 7, 2017

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று 


குமரகுருபரர் அருளிச் செய்தது நீதி நெறி விளக்கம். இவர் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பிறந்து ஐந்து வருடம் வரையில் வாய் பேசாமல் இருந்ததாகவும், பின் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசினார் என்றும் இவரின் வரலாற்று குறிப்பு கூறுகிறது.

இவருடைய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் கேட்க மீனாட்சியே நேரில் வந்து அவள் கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட்டாள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.

நீதிநெறி விளக்கம் என்ற இந்த நூல் 102 பாடல்களைக்  கொண்டது.அத்தனையும் வாழ்க்கைக்கு வழி காட்டும் அற்புதமான பாடல்கள். எளிய தமிழில் இனிமையான பாடல்கள்.

சில பாடல்களை இந்த பிளாகில் பார்ப்போம். முடிந்தால் மூல நூலைப் படித்துப் பாருங்கள். தேனினும் இனிய தமிழ் பாடல்கள்.

மனிதன் மூன்று விஷயங்களை நிரந்தரமானது என்று பிடிவாதமாக  நினைக்கிறான்.  இல்லை,அவை நிரந்தரமானவை இல்லை என்று எவ்வளவு சாட்சிகள் தந்தாலும் அனைத்தையும் மறுதலிக்கிறான்.  ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

அவை - இளமை, செல்வம், வாழ்க்கை (உயிர்).

முடி நரைக்கிறது . பல்  விழுகிறது.தோலில் சுருக்கம்  வருகிறது. ஞாபக சக்தி குறைகிறது.  இருந்தும், ஏதோ இளமை நிலையானது என்று விடாப்பிடியாக  நினைக்கிறான். முடி கறுத்தால் அதற்கு சாயம் பூசி மறைக்கிறான். பல் விழுந்தால் அதற்கு பொய் பல் கட்டிக் கொள்கிறான். பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதைப் போல நாளும் ஆடி ஓடி சாகும் வரை சொத்து சேர்கிறான். அனுபவிக்காமலே இறந்தும்  போகிறான்.

இவை நிலையானவை என்று நினைக்காமல் இருந்தால், வாழ்வு எவ்வளவோ சுகமாக இருக்கும்.

பாடல்

நீரில் குமிழி இளமை நிறை செல்வம் 
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் 
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே 
வழுத்தாதது எம்பிரான் மன்று


பொருள் 

நீரில் குமிழி இளமை = நீரில் தோன்றும் குமிழி போன்றது இளமை

நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் = நிறைகின்ற செல்வம் நீரில் தோன்றும் அலை 

நீரில் எழுத்து ஆகும் யாக்கை = நீரில் மேல் எழுத்து ஆகும் இந்த உடல் 

நமரங்காள் = நம்மவர்களே

என்னே = ஏன்

வழுத்தாதது = வாழ்த்தாதது

எம்பிரான் மன்று = இறைவன் சந்நிதியில்

இளமையை நீரின் குமிழி என்றும், செல்வத்தை நீரில் தோன்றும் அலை என்றும்,  உடலை நீர் மேல் எழுத்து என்று கூறுகிறார்.

ஏன் ?

நீர் குமிழி முதலில் சாதாரணாமாகத் தோன்றும் பின் வான வில் நிறம் காட்டி பின் உடையும். அது போல, இளமை என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பலப் பல வண்ணம் காட்டி  மறையும்.

பெண்ணைப் பார்த்தால் அழகு. அவள் சிரித்தால் அழகு. நடந்தால் அழகு. வெட்கப் பட்டால் அழகு....என்று மயங்கும் போது தெரிய வேண்டும் இது நீர் குமிழி என்று.


செல்வம் நீர் மேல் தோன்றும் அலை. அலை மேலே எழும் பின் கீழே விழும். செல்வமும் அப்படித்தான்.  ஒரு கால கட்டத்தில் மேலே வரும், பின் சட்டென்று  மறையும். மேலே வரும்போது இப்படியே வந்து கொண்டே இருக்கும் என்று மகிழக் கூடாது.  குறையும் போதும் இப்படியே இருந்து விடும் என்றும் நினைத்து வருந்தக் கூடாது. கூடுவதும் குறைவதும் செல்வத்தின் இயல்பு.

நீர் மேல் எழுத்து உடல்.

கடற் கரையில் எழுதி வைத்தால் எந்த அலை அந்த எழுத்தை அழிக்கும் என்று  தெரியாது.  அது போலத்தான் இந்த உடலும். எந்த நேரமும் மறைந்து விடும். மரணம் என்ற  அலை அடித்துக் கொண்டே இருக்கிறது. எந்த அலை நம்மை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரியாது.

சரி,  இளமையும்,செல்வமும், உடலும் நிலை இல்லாதது.

 புரிகிறது. அதனால் என்ன ? அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்.

நமது பெரும்பாலான கவலைகளுக்கு , துன்பங்களுக்குக் காரணம் நம் ஆணவம்.

எப்படி ?

நான் , எனது என்ற எண்ணங்கள் தான் ஆணவத்திற்கு காரணம்.

நான் பெரிய ஆள், படித்தவன்/ள் , அழகானவள் / ன் , பணக்காரன், செல்வாக்கு  உடையவன் , அதிகாரம் உடையவன் என்று நினைத்து நமது ஆணவத்தை வளர்த்துக்  கொள்கிறோம்.

என் வீடு, என்  கார்,என் வேலை, என் மனைவி, என் பிள்ளை என்று நமக்கு உரியவற்றினால் நமக்கு ஆணவம் வருகிறது.

இப்படி ஆணவம் வருவதால் அவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் , மேலும் பெருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.  நம்மை விட மற்றவன் அதிகம்  பெற்று விடுவானோ , அவன் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள்,  அவன் பிள்ளை என் பிள்ளையை நன்றாகக் படிக்கிறான்  என்ற பொறாமை வருகிறது. இருக்கிற செல்வம் , இளமை போய் விடுமோ   என்ற பயம் வருகிறது.

இப்படி ஆசை, பொறாமை, பயம் என்று பலப் பல துன்பங்களுக்கு காரணமாய் இருப்பது  இந்த ஆணவம்.

ஆணவத்திற்கு காரணம் நான் , எனது என்ற எண்ணம்.

 நான் எனது என்ற எண்ணத்திற்கு காரணம் இளமையும், செல்வமும், இந்த உடலும்.

இவை நிரந்தரமானவை என்று நினைத்தால் ஆணவம் போகும்.

ஆணவம் மறைந்தால் துன்பம்  விலகும்.

"எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்பார் அருணகிரி.

துன்பம் நீங்கினால் , இன்பம் தான். 

Friday, July 6, 2012

நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


சில விஷயங்கள் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பதே மேல் என்று குமர குருபரர் நீதி நெறி விளக்கத்தில் கூறுகிறார்.

Thursday, July 5, 2012

நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும்


நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும் 


நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமர குருபரர் எழுதியது.

தமிழில் உள்ள அற நெறி நூல்களில் மிக மிக அருமையான நூல்.

கல்வி, ஆரம்பிக்கும் போது கஷ்டமாய் இருக்கும்.

இரவு பகலாய் கண் விழித்து படிக்க வேண்டும்.

மனப்பாடம் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் பரீட்சை எழுத வேண்டும்.

முதலில் கடினமாய் இருந்தாலும், பின் நல்ல வேலை கிடைத்து, நிறைய பணம் சம்பாதிக்கும் போது, கல்வியால் புகழ் வரும் போது சந்தோஷமாய் இருக்கும். கல்வியின் தொடக்கம் கடினம், முடிவு இனிமை.

காமம், முதலில் இன்பம் தருவது போல் இருக்கும். ஆனால் போகப் போகப் அதனால் வரும் துன்பம் பெரிது. "நெடுங்காமம்" என்கிறார். இதற்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்.

ஒன்று, வரம்பற்ற காமம். ஒரு வழிமுறை இல்லாத காமம். விதிகளை மீறிய காமம். முறையற்ற காமம்.

இன்னொன்று, காலங்கடந்து வரும் காமம்.

உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.