Showing posts with label குசேலோபாக்கியானம். Show all posts
Showing posts with label குசேலோபாக்கியானம். Show all posts

Thursday, July 18, 2019

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 




நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

உயர்ந்த நூல்களை படிக்கும் போதெல்லாம் எப்படி அதன் உன்னதம், மகிமை, சிறப்பு நமக்குப் புரிகிறதோ அது போல நல்ல பண்பு உள்ளவர்களின் நட்பு ஒவ்வொரு முறை அவர்களோடு தொடர்பு கொள்ளும் போதும் நமக்கு ஒரு புது உற்சாகத்தை, மகிழ்ச்சியைத் தரும். 

தமிழில் அது போன்ற உயர்ந்த இலக்கியங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அதில் இருந்து புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். படிப்பவரின் மன நிலையை பொறுத்து அதில் அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். 

சில பல நாட்களுக்கு முன் குசேலோபாக்கியானத்தில் இருந்து ஒரு பாடலுக்கு பிளாக் எழுதி இருந்தேன் 

அதாவது, கண்ணனைப் பார்க்கப் போகும் போது, வழியில் உள்ள ஈ எறும்புகளுக்கு தன்னால் துன்பம் வந்து விடக் கூடாதே என்று அவை நடக்கும் மர நிழலைத் தவிர்த்து, வெயிலில், தலைக்கு மேல் கையை வைத்துக் கொண்டு நடந்து போனாராம் குசேலர். 



சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்


அன்று தோன்றியது, "அடடா எவ்வளவு பெரிய கருணை உள்ளம். ஜீவ காருண்யம்" என்று. 

மீண்டும் ஒரு முறை அந்தப் பாடலை நினைத்துப் பார்க்கிறேன். 


இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் நித்தமும் இறைவனிடம் பக்தர்கள்  வேண்டுகிறார்கள். 

இறைவன் அவர்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பானா? எப்படி இறைவனின் கருணையை பெறுவது?

முதலில் நாம் கருணை செலுத்த பழக வேண்டும். 

கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பிச்சைக்காரனை கண்டால் அவன் மேல்  வெறுப்பும், கோபமும் வருகிறது. "வந்துட்டானுக ...நிம்மதியா சாமி கும்பிட  முடியுதா..." என்று எரிச்சல் வருகிறது. 

உள்ளே போய் "ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு " என்று பிச்சை  எடுத்தால் ஆண்டவன் என்ன நினைப்பான். "நிம்மதியா இருக்க விடுறானுகளா ...வந்துட்டானுக காலங் காத்தால ...கைலாயம் கொடு, பாற்கடல் கொடு, சொர்ககம் கொடுனு ...பிச்சைக்கார பசங்க" என்று தானே ஆண்டவனும்  நினைப்பான். 

வீட்டில் வேலை செய்பவர்களிடம் நாம் எவ்வளவு அன்போடு இருக்கிறோம்? நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம் எவ்வளவு கருணை இருக்கிறது நம்மிடம்.  

வயதான காலத்தில், சாலையை மெதுவாக கடக்கும் முதியவர் மீது எவ்வளவு கோபம்  வருகிறது. 

அவ்வளவு ஏன், வயதான பெற்றோர், தாத்தா பாட்டி மேல் எவ்வளவு பேர் அன்போடு இருக்கிறார்கள்? "கிழத்துக்கு காதும் கேக்காது, கண்ணும் தெரியாது ...நம்ம உயிரை வாங்குது" 

எங்கிருந்து இறை அன்பு கிடைக்கும். 

கண்ணனின் அருள் வேண்டி சென்ற குசேலர், ஈ எறும்புகளின் மேல் அன்பு செலுத்தினார். அவற்றின் மேல் கருணை கொண்டார். தான் துன்பப் பட்டாலும் பரவாயில்லை, அந்த சிறிய உயிர்கள் துன்புறக் கூடாது என்று நிழலை தவிர்த்து  வேகாத வெயிலில் நடந்தார்.

அவருக்கு கண்ணனின் அன்பு முழுவதும் கிடைத்தது. 

இறைவன் ஒரு படி மேலே. 

கொஞ்சம் கீழே வருவோம். 

"என் மேல் யாருக்கும் அன்பு இல்லை. யாரும் என்னை நேசிக்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையான காதல் என்பதை நான் சினிமாவிலும் புத்தகங்களிலும் தான்  படித்து இருக்கிறேன். அனுபவித்தது இல்லை. " 

என்று பலர் ஏங்குவார்கள். 

என் உதவி வேண்டும். ஆனால், என் மேல் அன்பு செலுத்துவோர் யாரும் இல்லை  என்று தனிமையாக உணர்வார்கள். 

அவர்களுக்கும் இது ஒரு பாடம். 

நீங்கள் முதலில் அன்பை செலுத்தப் படியுங்கள். உங்களுக்கு அன்பு வந்து சேரும். 

ஒரு பலனும் எதிர் பார்க்காமல், கன்னுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் மேல்  அன்பு  செலுத்தினார் குசேலர்.

பலன் கருதாமல் எத்தனை பேர் மேல் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள்?

மற்றவர்களிடம் இருந்து அன்பும், காதலும், இறைவனிடம் இருந்து கருணையும் வேண்டுமா?  முதலில் நீங்கள் மற்ற உயிர்கள் மேல் அன்பு செலுத்தப் படியுங்கள். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்  என்று வேண்டிய வள்ளலார், முதலில் வேண்டியது "ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செய்ய வேண்டும்" என்று. 


அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


அன்பை அள்ளி அள்ளி கொடுங்கள். 

அது திரும்பி வரும்.


Thursday, February 21, 2019

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 


உயிர்களை வருத்தக் கூடாது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் , அதற்காக நாம் ரொம்ப சிரமம் எடுத்துக் கொள்வது கிடையாது. ஒரு கொசு கண் முன் பறந்தால் , ஒரே அடி.

குசேலர். கண்ணனின் தோழன். மிகுந்த வறுமையில் வாடினார். நிறைய பிள்ளைகள். வருமானம் இல்லை. பசி. பட்டினி. "கண்ணன் உங்கள் நண்பர் தானே, அவரிடம் சென்று ஏதாவது உதவி கேட்டால் என்ன " என்று கொஞ்சம் அவலை ஒரு பழைய துணியில் முடிந்து குசேலரை கண்ணனிடம் அனுப்பி வைக்கிறாள்.

குசேலர் கண்ணனை காண புறப்பட்டுப் போகிறார்.

போகிற வழியில் நல்ல வெயில். நிழல் பார்த்து மரத்தடியிலேயே போகலாம். நமக்கு எப்படி நிழல் வேண்டுமோ அது போலத்தானே எறும்பு போன்ற சின்ன உயிர்களுக்கும் நிழல் வேண்டும். அவைகளும் மர நிழலில் தானே நகரும். நாம் அந்த வழியில் சென்றால், அவற்றின் மேல் மிதித்து அவை இறந்து போகாதா? அவை பாவம் இல்லையா என்று நினைத்து, நிழலை விட்டு விட்டு வெயிலில் நடக்கிறார். வெயில் மண்டையைப் பிளக்கிறது. குடை எல்லாம் வாங்க வசதி இல்லை. தன் கையை விரித்து தலைக்கு குடை போல வைத்துக் கொண்டு நடந்து போகிறார். ....

பாடல்

சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
     போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
     ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
     காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்

ஜீவ காருண்யத்தின் உச்சம். தன்னால் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு வரக் கூடாது என்று எண்ணி, தன்னை வருத்திக் கொண்டு வெயிலில் நடந்தார்.

ஏழ்மை ஒரு புறம்.  பசி ஒரு புறம். வீட்டில் பிள்ளைகள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு புறம் நினைத்துப் பார்ப்போம். நாமாக இருந்தால் என்ன எல்லாம் நினைத்துப் பார்ப்போம் என்று.

ஏழையாக பிறந்ததற்காக பெற்றோரை ஏசுவோம், இந்த சமுதாயத்தை திட்டுவோம்,  அந்த கடவுளை தூற்றுவோம்.

எறும்புக்கு அருள் செய்ய மனம் வருமா அந்த சூழ்நிலையில் ?

அப்படிப்பட்ட அருளாளர்கள் பிறந்த மண் இது.

இவற்றை எல்லாம் படிப்பதன் மூலம், நம் மனத்திலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம்  அருள் சுரக்கத்தான் செய்யும்.

இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_21.html

Wednesday, August 14, 2013

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?


குசேலரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது எனக்கு.

வீட்டில் வறுமை. 27 பிள்ளைகள். அவர் ஒண்ணும் பெரிதாக வேலைக்குப் போய் சம்பாதித்தாகத் தெரியவில்லை.

பிள்ளைகள் அது வேணும், இது வேணும் என்று நாளும் கேட்டு தொந்தரவு செய்கின்றன.

சாதரணாமாக ஒரு பெண் என்ன செய்வாள் ?

கணவனை முதலில் திட்டித் தீர்பாள். அடுத்தது பிள்ளைகள் மேல் எரிந்து விழுவாள். ஏதோ பிள்ளைகள் பெறுவதும் , கணவனை குறை கூறுவதும் தான் தன்  முழு நேர வேலை என்று நினைத்துக்கொண்டு.

குசேலரின் மனைவி....

....வறுமை என்ற கடலில் அழுந்தினாலும், தன் கணவனை வெறுத்து பேச மாட்டாள், அவன் மேல் ஒரு பழியும் சொல்ல மாட்டாள், பிள்ளைகளை ஒரு சிறிதும் கடிந்து பேச மாட்டாள். இந்த வறுமை கடலை எவ்வாறு கடப்பது என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பாள்.....

பாடல்


இவ்வாறு மிடியென்னும் பெருங்கடலுள்
          அழுந்தியுந்தற் கினிமை சான்ற
செவ்வாய்மை அந்தணனை வெறுத்துரையாள்
          அலர்மொழிகள் சிறிதும் செப்பாள்
துவ்வாமை மைந்தர்கள்பால் மறந்துமியற்
          றாளவள்தன் சுகுணம் என்னே 
எவ்வாறித் துயர்க்கடல்நீந் துவமெனுமோர்
          எண்ணமுளத் தென்றும் உண்டால்.

பொருள் 

Wednesday, August 7, 2013

குசேலோபாக்கியானம் - ஊர் வளம்

குசேலோபாக்கியானம் - ஊர் வளம் 


 எத்தனையோ இலக்கியங்களில் ஊர் வளம் பற்றிப் படித்து இருக்கிறோம். ஆனால்,   குசேலோபாக்கியானம் போல ஒரு வர்ணனையை பார்த்து  இருக்க
முடியாது.

இந்த பொருள்களில் என்ன சுகம் இருக்கிறது என்று அவற்றை வெறுத்து துறவறம் போனவர்கள் கூட இந்த ஊருக்கு வந்தால் அடடா நாம் இதை எல்லாம் இழந்து விட்டோமே என்று எண்ணி வருந்தும் அளவுக்கு அந்த ஊரில் செல்வம் நிறைந்து  கிடந்தது.

சரி, துறவிகள் பாடு அப்படி என்றால் இல்லறத்தில் இருப்பவர்கள் சங்கடம் வேறு  மாதிரி  இருந்தது.அந்த ஊரில் உள்ளவர்கள் விருந்து என்று  வந்தாலும் விருந்தினர்களை நன்றாக உபசரித்து அவர்களுக்கு நிறைய பரிசுகள்  தருவார்கள். இப்படி கையில் இருந்ததை எல்லாம் மற்றவர்களுக்குத் தந்துவிட்டு அவர்கள் ஏழையாகப் போய் மற்றவர்கள் சிரிக்கும்படி  ஆகி,   யாரும் கண் காணாத இடத்திற்கு துறவியாகப் போய்  விடுவார்கள்.

இப்படி துறவிகள் இல்லறத்தானைப் பார்த்து ஏங்க , இல்லறத்தில் உள்ளவர்கள் துறவியாகப் போக எண்ண , அந்த ஊரில், போகத்தை விற்கும் பெண்கள் நிறைந்த  தெருக்கள்  பல இருந்தன.

பாடல்

 துறவறத் தடைந்தோ ரில்லந்
          துறந்தமைக் கிரங்க இல்லத்
     துறவிருக் கின்ற மாந்தர்
          உள்ளன வெல்லாம் ஈந்து
     பிறர்நகை பொறாமல் அந்தப்
          பெருந்துற வடையப் போகந்
     திறமுற விற்கும் மின்னார்
          செறிதருந் தெருக்கள் பல்ல.


சீர்  பிரித்த பின்

துறவரத்து அடைந்தோர் இல்லம்
இல்லம் துறந்தமைக்கு இரங்க

இல்லத்து உறவிருக்கின்ற  மாந்தர்
 உள்ளன எல்லாம் ஈந்து
பிறர் நகை  பொறாமல் அந்த
பெரும் துறவு அடைய

போகம் திறமுற விற்கும் மின்னார்
செறி தரும் தெருக்கள் பல்ல
 
அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....




Thursday, July 18, 2013

குசேலோபாக்கியானம் - கொடிது கொடிது, வறுமை கொடிது

குசேலோபாக்கியானம் - கொடிது கொடிது, வறுமை கொடிது 


கொடிது கொடிது வறுமை கொடிது என்றாள் ஔவை.

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் இந்த பாரினை அழித்திடுவோம் என்று வெகுண்டான் பாரதி.

இதற்கும் ஒரு படி மேலே போய் , பிச்சை பெற்றுதான் வாழ வேண்டும் என்றால் கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று அந்த இறைவனே கெட்டு ஒழிக என்று குறள் கொடுத்தார்

வறுமையில் பெரிய வறுமை பிள்ளைகள் பசித்து அழுவதை பார்ப்பது. அவர்களின் பசியை தீர்க்க முடியாத வறுமை மிகப் பெரிய கொடுமை.

குசேலரின் வீட்டில் வறுமை நடு வீட்டில் சம்மணம் இட்டு அமர்ந்து இருந்தது.

இருக்கும் உணவோ கொஞ்சம். பிள்ளைகளோ 27 பேர். உணவு பற்றாக் குறை. ஒரு பிள்ளைக்கு உணவு தரும்போது இன்னொரு பிள்ளை தனக்கும் வேண்டும் என்று அழும். அதற்கு தர முயலும் போது இன்னொன்று அழும்.

யாருக்கென்று தருவாள் அவள் ?  எந்தப் பிள்ளைக்கு என்று தருவது ? எந்த பிள்ளையை பட்டினி போடுவது ?

பாடல்


ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு
          கைநீட்டும் உந்திமேல் வீழ்ந்(து), 
     இருமகவுங் கைநீட்டு மும்மகவுங்
          கைநீட்டும் என்செய் வாளால்
     பொருமியொரு மகவழுங்கண் பிசைந்தழும்மற்
          றொருமகவு புரண்டு வீழாப், 
     பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங்
          ஙனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம். 

சீர் பிரித்த பின்


ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு 
கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து 
இரு மகவும் கை நீட்டும் மும் மகவும்
கை நீட்டும் என் செய்வாளால் 
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் 
மற்றொரு மகவு புரண்டு வீழாப் 
பேரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்கனம் 
சகிப்பாள் பெரிதும் பாவம் 

பொருள்


Wednesday, July 17, 2013

குசேலோபாக்கியானம் - வறுமையில் செம்மை

குசேலோபாக்கியானம் - வறுமையில் செம்மை 


இறைவனைப் பற்றி நினைக்கவும், கோவில்களுக்குப் போகவும் எங்கே நேரம் இருக்கிறது ? பணம் சம்பாதிப்பதிலேயே வாழ்க்கையின் அத்தனை நேரமும் போய் விடுகிறது. பிள்ளைகளை படிக்க வேண்டும், அவர்களை கட்டி கொடுக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், பாரின் டூர் போக வேண்டும்...இப்படி எல்லாவற்றிற்கும் பணம் தேவைப் படுகிறது.

எவ்வளவு இருந்தாலும் போத மாட்டேன் என்கிறது.

இந்த பணம் எல்லாம் சேர்த்த பின், இறைவனைப் பற்றி சிந்திப்போம் என்று தள்ளிப் போட்டு விடுகிறோம்.

என்று நிறைவது ? என்று நினைப்பது ?

நிறைய பேருக்கு உதவி செய்ய ஆசை தான். அனாதை ஆசிரமத்திற்கு, முதியோர் இல்லத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நல்ல எண்ணம் இருக்கும்.

ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது செலவு வந்து கொண்டே இருக்கும்.

இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்த பின் அனுப்பலாம் என்று நினைப்பார்கள்.

என்று நிறைவது ? என்று அனுப்பவது ?

தானம் பண்ணவும், இறைவனை நினைக்கவும் பணம் அவசியம் இல்லை. மனம் தான் முக்கியம்.

காட்டுக்குப் போய் , செடிகளில் முளைத்து உதிர்ந்து கிடந்த தானியங்களை பொறுக்கி எடுத்து வந்து மனைவியின் கையில் கொடுப்பார் குசேலர்.

அவர் மனைவி, அந்த தானியங்களை வாங்கி அதை குத்தி, பக்குவம் பண்ணி சமைப்பாள். சமைத்த அந்த உணவில், அதிதிகளுக்கு என்று கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு, மீதியில் குசேலருக்கு கொஞ்சம் தருவாள். அதை மகிழ்வுடன் உண்டு, மந்திரங்களுக்கும் மறைகளுக்கும் எட்டாத திருமாலின் திருவடிகளை நினைத்து இருப்பார் .


பாடல்


வந்துதன் மனைகைந் நீட்ட 
          வாங்கிமற் றவற்றைக் குற்றி
     அந்தமெல் லியல்பா கஞ்செய் 
     ததிதிக்கோர் பாகம் வைத்துத் 
          தந்ததன் பங்க யின்று
     தவலரும் உவகை பூத்து
          மந்திர மறைகட் கெட்டா
     மாலடி நினைந்தி ருப்பான்.


பொருள்


Monday, July 15, 2013

குசேலோபாக்கியானம் - வறுமை

குசேலோபாக்கியானம் - வறுமை 


குசேலனுக்கு இருபத்தி ஏழு பிள்ளைகள். வறுமை வறுமை எங்கு பார்த்தாலும். அந்த நிலையிலும்  சென்று பிச்சை பெறாமல் , காட்டிற்கு சென்று, அங்கு காட்டுச் செடியாய் வளர்ந்து இருக்கும் புற்களில் இருந்து விழும் யாரும் விரும்பாத தானியங்களை பொறுக்கி எடுத்து வந்து மனைவியிடம் தருவார்.

பாடல்

இருநிலத் தியாவர் கண்ணும் 
          ஏற்பதை இகழ்ச்சி யென்ன
     ஒருவிய உளத்தான் காட்டில் 
          உதிர்ந்துகொள் வாரும் இன்றி
     அருகிய நீவா ரப்புற் 
          றானியம் ஆராய்ந் தாராய்ந்(து)
     உருவவொண் ணகத்தாற் கிள்ளி
          எடுத்துடன் சேரக் கொண்டு.

சீர் பிரித்த பின் 

இரு நிலத்து யாவர் கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன 
ஒருவிய உள்ளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி 
அருகிய  நீவாரப் புல் தானியம் ஆராய்ந்து ஆராய்ந்து 
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேரக் கொண்டு 

பொருள் 

Thursday, July 11, 2013

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும்

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும் 


நிறைய செல்வம் இருக்கும். ஆனால், பிறருக்கு உதவி செய்யும் மனம் இருக்காது.

செல்வம் குறைவாக இருந்தால் கூட, சில பேருக்கு மற்றவர்களுக்கு உதவும் ஈர உள்ளம் இருக்கும்.

அது எப்படி இருக்கிறது என்றால்

கடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், கரையில் சின்ன சின்ன ஊற்று இருக்கும். அந்த ஊற்று, தன் நீரின் மூலம் மக்கள் தாகம் தீர்க்கும்

பாடல்


  பெருகிய செல்வ ருள்ளும் 
          பயனிலார் உளராற் பேணி 
     அருகிய செல்வ ருள்ளும் 
          பயனுளார் உளரென் றாய்ந்து 
     பெரியவர் சொலுஞ்சொல் தேற்றும் 
          பெரியநீர்க் கடலும் ஆங்காங்
     குரியவெண் மணற்சிற் றூறற்
          கேணியும் உரிய நீரால்.

பொருள் 

Monday, July 8, 2013

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும்

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும் 


குசேலருக்கு எல்லாம் கண்ணனாகத் தெரிகிறது.  கடலைப் பார்க்கிறார். அது கண்ணனாகவே தெரிகிறது.

எப்படி ?

கடலில் சங்கு இருக்கிறது, அதன் கரைகளில் தங்கிய நீர் நிலைகளில் குவளை மலர்கள் இருக்கிறது, ஆமையும் மீனுமாகி உயிர்களை காக்கிறது, சிவந்த பவளம் இருக்கிறது, அதன் அடியில் பொன் இருக்கிறது, குளிர்ச்சி இருக்கிறது, கருமை நிறமாக இருக்கிறது, மேகமாகப் பொழிகிறது.....

இது எல்லாம் கண்ணன் தானே .....கண்ணனிடமும் சக்கரம் இருக்கிறது, அவன் நாபிக் கமலத்தில் இருந்து தாமரை மலர் பூத்தது, மச்ச அவதாரமும், கூர்ம அவதாரமும் எடுத்து உயிர்களை காத்தான், அவன் அதரம் சிவந்த நிறம் பவளம் போல், பொன் போன்ற திருமகளை அணைத்தவன், கருமை நிறத்தவன், தன் அருளை மேகம் போல் பொழிபவன் ....

பாடல்

சீருறு சங்கம் வாய்ந்து
          செழுங்குவ லயமுண் டாக்கி
     ஓருறு கமடம் மீனம்
          உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி
     ஏருறு பவளச் செவ்வாய்
          இயைந்துபொன் புணர்ந்து தண்ணென்
     காருறு நிறமுங் காட்டிக்
          கண்ணனைத் துணையும் வாரி.


பொருள் 

சீருறு சங்கம் வாய்ந்து =  சிறப்பான சங்கை கொண்டு

செழுங்குவ லயமுண் டாக்கி = செழுமையான குவளை மலர்களை உண்டாக்கி

ஓருறு கமடம் மீனம் = (ஆராயும் போது , ஆமை மீன்

உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி = உருவம் கொண்டு உயிர்களைக்  காத்து

ஏருறு பவளச் செவ்வாய் =  அழகான பவளம் போன்ற சிவந்த வாய் (கபெற்ற)

இயைந்துபொன் புணர்ந்து  = பொன்னை தானுள் கொண்டு, பொன் போன்ற திருமகளைப் புணர்ந்து

 தண்ணென் காருறு நிறமுங் காட்டிக் = குளிர்ச்சியான கருமையான நிறத்தை காட்டி

கண்ணனைத் துணையும் வாரி = கண்ணன் போல் துணை புரியும் மழை



Saturday, July 6, 2013

குசேலோபாக்கியானம் - நடந்து சிவந்த சேவடிகள்

குசேலோபாக்கியானம் - நடந்து சிவந்த சேவடிகள் 



இது  ஒரு புது ப்ளாகின் ஆரம்பம். குசேலோபாக்கியானம், குசேலனுக்கும் கண்ணனுக்கும்  உள்ள ஆழமான பக்தி கலந்த நட்பை விவரிக்கும் கதை.

குசேலோபாக்கியானம் - இதில் உள்ள பாடல்கள் அத்தனையும் தேன் .  முழுவதும் படித்து விட்டேன்.  எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை.  அவ்வளவு அருமையான பாடல்கள். 

 அதில் இருந்து உங்களுக்காக சில பாடல்கள்.....

தாமரைப் பூ. மிக மென்மையானது. அதில் தோன்றிய திருமகள்.  அதைவிட மென்மையானவள். அவளுடைய கரம் முற்றாத தளிர் போல மென்மையானது. அப்படிப் பட்ட திருமகள், தன் தளிர் கரங்களால் மிக மிக மென்மையாக திருமாலின் பாதங்களை வருடுகிறாள். அந்த மென்மையைக்  கூட தாங்க மாட்டாமல், திருமாலின் பாதங்கள் சிவந்து போகின்றன. அப்படிப்பட்ட மென்மையான பாதங்கள் சிவக்க சிவக்க ஆடு மாடு மேய்க்க நடந்தான். அவன் புகழ் வாழ்க.

பாடல்  

முற்றா இளமென் தளிர்க்கரத்தால்
          முனிவி லாது மெல்லெனச்செம்
     பொற்றா மரையிற் குடியிருக்கும்
          பூவை வருடுந் தொறுஞ்சேக்கும்
     விற்றார் அணிநற் பதமிரண்டும்
          வியன்மா நிலந்தீண் டிடநடந்து
     கற்றா மேய்த்த சிற்றாயன்
          காமர் சீர்த்தி வாழியவே.



பொருள்

முற்றா = முற்றாத

இள = இளமையான

மென் = மென்மையான

 தளிர்க்கரத்தால் = தளிர் போன்ற கரங்களால்

முனிவி லாது = கோபம் இல்லாமல்,  இனிமையாக, மகிழ்ச்சியுடன்

மெல்லெனச் = மெல்லமாக

செம் = சிவந்த 

பொற்றா மரையிற் = பொன் போன்ற  தாமரையில்

குடியிருக்கும் = வசிக்கும்

பூவை = பூ போன்ற திருமகள்

வருடுந் = வருடும்

தொறுஞ் = ஒவ்வொரு முறையும்

சேக்கும் = சிவக்கும்

விற்றார் = வில் + தார் = பூமாலை

அணிநற் பதமிரண்டும் = அணிந்த பாதங்கள் இரண்டும்

வியன்மா நிலந்தீண் டிட = விரிந்த இந்த நிலத்தை கால் தரையில் பட

நடந்து = நடந்து

கற்றா = கன்று + ஆ = பசுவையும் கன்றையும்

 மேய்த்த சிற்றாயன் = மேய்த்த சிறிய  ஆயன்

காமர் சீர்த்தி வாழியவே. = பெரிய புகழ் வாழியவே

(if you like it and want me to continue with more writings on this, please click g+ button given below)