Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts
Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts

Saturday, February 17, 2024

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_17.html

பட்டருக்கு அபிராமியின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. 


அவளைத் தவிர வேறு யாரையும் அவருக்குத் தெரியாது. 

மற்றவர்கள் எல்லாம் துச்சம் அவருக்கு. 


அபிராமி, அவளுடைய பக்தர்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் அவருக்கு வேண்டாம். 


அவர் சொல்கிறார், 


அபிராமி, நீ தான் எனக்குத் தெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் உனது பரிவாரங்கள் ஆனபடியால், அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன். அவர்களை எல்லாம் போற்றவும் மாட்டேன். மனதில் வஞ்சகம் உள்ளவர்களோடு சேர மாட்டேன். தன்னுடையது எல்லாம் நீ கொடுத்தது என்று இருக்கும் உன் பக்தர்களோடு வேறு பாடு கொள்ள மாட்டேன். எனக்கு என்ன தெரியும் உன்னைத் தவிர, உன் அருளைத் தவிர"


என்று. 


பாடல் 


 அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்

பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.


பொருள் 


அணங்கே! = தெய்வப் பெண்ணே


அணங்குகள் = மற்ற தேவ லோகப் பெண்கள் எல்லாம் (சரஸ்வதி, இலக்குமி) 


 நின் பரிவாரங்கள் = உன்னுடைய பரிவாரங்கள், உன் பின்னால் வரும் கூடத்தில் ஒருவர்கள் 


ஆகையினால் = ஆனபடியால் 


வணங்கேன் = அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன் 


ஒருவரை வாழ்த்துகிலேன் = அவர்களில் ஒருவரைக் கூட வாழ்த்தவும் மாட்டேன் 


நெஞ்சில் = மனதில் 


வஞ்சகரோடு = வஞ்சக எண்ணம் உள்ள ஆட்களோடு 


இணங்கேன் = சேர்ந்து இருக்க மாட்டேன் 



 எனது = தன்னுடையது எல்லாம் 


 உனது  = உன்னுடையது 


என்றிருப்பார் = என்று நினைக்கும் 


சிலர் யாவரொடும் = சிலரோடு 


பிணங்கேன் = மாறுபாடு கொள்ள மாட்டேன் 


அறிவொன்றிலேன்  = எனக்கென்று தனியே ஒரு அறிவும் இல்லை 


எண்கண் = என் மேல் 


நீவைத்த = நீ வைத்த 


பேரளியே = பெருங்கருணையே, பெரிய அன்பே, பெரிய கருணையே 


மத்தவங்க எல்லாம் தேவை இல்லை. நீ மட்டும் போதும். உன் அன்பு மட்டும் போதும். நான் ஒன்றும் சிந்திக்கப் போவது இல்லை. அறிவு என்று ஒன்று இருந்தால் அல்லவா சிந்திக்க. 


நீ என் மேல் அன்பு வைத்து இருக்கிறாய். நான் உன் மேல். இதில் அறிவுக்கு என்ன வேலை இடையில். 


அன்பு என்பது ஆராய்வது அல்ல. அனுபவிப்பது. 


எதோ ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு,  தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் சிலரோடு நான் சேர மாட்டேன். அவனுக எப்படியோ போகட்டும்.


எனக்கு நீ, உனக்கு நான். 


உலகில் மற்ற பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உனக்கு பக்கத்தில் கூட வர முடியாது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு ஒரு கவலை இல்லை. 


இந்த அன்பை புரிந்து கொள்ள தனி மனம் வேண்டும். 




.


 

 

Thursday, March 3, 2022

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

 அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். அவள் மேல் காதல் வருகிறது. அன்பு பிறக்கிறது. ஏன் அவள் மேல் மட்டும் அன்பு, காதல்? மற்ற பெண்கள் எல்லாம் பெண்கள் இல்லையா? 


மற்றவர்களும் பெண்கள் தான். ஆனால், இந்த ஒரு பெண் அவள் மேல் அன்பு செலுத்த என்னைத் தூண்டுகிறாள். நான் என்ன செய்வது? அவளின் அருகாமை அவள் மேல் அன்பு சுரக்கச் செய்கிறது. அவள் எனக்கு காதல் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தாள். 


அந்த ஒரு பார்வை, அந்தச் சின்ன புன்னகை, எல்லாம் அவள் மேல் காதலை மேலும் மேலும் தூண்டி விடுகிறது. 


என்று அவள் மேல் காதல் வந்ததோ, வேறு ஒரு சிந்தனையும் இல்லை. எந்நேரமும் அவள் நினைப்பு தான். 


உலகில் ஏதேதோ நடக்கிறது. எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. 


அவள் அன்பு ஒன்று போதும். ஜன்ம சாபல்யம் அடைந்து விடும். இனி ஒரு பிறவி இல்லை. செய்த அத்தனை பாவங்களும் அவள் அன்பில் கரைந்து போய் விட்டது. இனி பாவம் செய்யவே முடியாது. அவள் அன்பு இருக்கும் போது வேறு என்ன வேண்டும்? ஒரு ஆசையும் இல்லை. ஒரு தேடலும் இல்லை. கடவுளும், மதங்களும், சொர்கமும், வீடு பேறும் எல்லாம் அவளுள் அடக்கம். 


இனி இன்னொரு பெண்ணை பார்க்கும் ஆசை கூட இல்லை. அவளுக்கு மேலா இன்னொரு பெண் இருந்து விடப் போகிறாள்? 


அபிராமி அந்தாதி படிக்கும் போது மனம் கரைந்துதான் போகிறது. 



பாடல் 


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_51.html


(Please click the above link to continue reading)


உமையும்  = அபிராமியும் 


உமையொரு பாகனும் = அவளை தன் உடலில் பாதியாகக் கொண்ட அவனும் 


 ஏக உருவில் வந்து = ஒரே உருவில் வந்து 


இங்கு = இங்கு 


எமையும் = என்னை 


தமக்கு அன்பு செய்ய வைத்தார் = அவர்கள் மேல் அன்பு செய்ய வைத்தார்கள் 


இனி எண்ணுதற்குச் = இனி சிந்தித்து குழம்ப 


சமையங்களும் இல்லை = நேரம் இல்லை, மற்ற கொள்கைகள், மதங்கள் இல்லை 


 ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை = மீண்டும் என்னை பெற்று எடுக்க ஒரு தாயும் இல்லை 



அமையும் = அமைதியுறும் 


அமையுறு தோளியர் = அழகிய தோள்களைக் கொண்ட பெண்கள் 


மேல் வைத்த ஆசையுமே = மேல் வைத்த ஆசையுமே 


புரிந்தால், நல்லது. 


புரியாவிட்டாலும், நல்லது தான். 



Tuesday, November 23, 2021

அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே

 அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே


பயமாக இருந்தால் இன்னொருத்தர் கையை பிடித்துக் கொண்டால் பயம் போய்விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது. அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும், இருக்கும் இருக்கையின் கைப் பிடியை இறுகப் பற்றிக் கொள்கிறோம் அல்லவா? 


அன்பை வெளிப்படுத்த கை குலுக்குகிறோம்.


மனைவி/கணவன் மேல் அன்பு மேலீட்டால் அவர்கள் கையைப் பற்றிக் கொள்கிறோம். 


சில சமயம், காலையும் பற்றிக் கொள்ளலாம். பாதத்தை பற்றிக் கொல்வதும் ஒரு சுகம் தான். 


சிவனுக்கு குறை வந்தால், அபிராமியின் பாதங்களைப் பற்றி தன் தலை மேல் வைத்துக் கொள்வாராம். 


இதில் யார் பெரியவர், சிறியவர் என்பதல்ல கேள்வி. 


அளவு கடந்த பாசம். காதல். 


தலை மேல் வைத்துக் கொல்வதற்கு முன், அந்த சிவந்த பாதங்களை தொட்டு தன் மடி மேல் வைத்து இருப்பார். அதை மென்மையாக வருடி கொடுத்து இருப்பார். (பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்று முருகனைப் பற்றிச் சொல்வார் அருணகிரி), அந்தப் பாதங்களுக்கு முத்தம் தந்திருப்பார். இன்னும் இன்னும் காதல் ஏற, அந்தப் பாதங்களை தன் தலை மேல் வைத்து இருப்பார். 


இதை என்னவென்று சொல்லுவது? 


பக்தியை கடந்த, அன்யோன்யம். நெருக்கம். உருக்கம். 


அவள் பாதத்தை தூக்கி தலை மேல் வைத்தவுடன் அவருக்கு அவருடைய குறை எல்லாம் தீர்ந்த மாதிரி இருந்ததாம். 


பாடல் 


என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?

தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_23.html


Please click the above link to continue reading




என்குறை தீர = என்னுடைய குறைகள் தீர வேண்டி 


நின்று =உன் முன் நின்று 


ஏத்துகின்றேன் = உன்னைப் போற்றுகின்றேன் 


இனி யான் பிறக்கின் = இனிமேல் நான் பிறவி எடுத்தால் 


நின்குறையே அன்றி = அது உன் குறை.  உன் பக்தனுக்கு நீ முக்தி தராவிட்டால் அது உன் தப்புத்தான் 


யார் குறை காண் = வேற யாருடைய குறை? 


இரு நீள்விசும்பின் = இருண்ட நீண்ட வானத்தில் 


மின்குறை காட்டி = பளிச்சென்று குறைந்த நேரம் காட்டி மறைந்து விடும் மின்னலைப் போல 


மெலிகின்ற நேரிடை = மெலிந்த நேர்த்தியான இடையை உடையவளே 


மெல்லியலாய் = மென்மையானவளே 


தன்குறை தீர = தன்னுடைய குறைகள் தீர 


எங்கோன் = எங்கள் தலைவர் சிவ பெருமான் 


சடைமேல்வைத்த = தன்னுடைய தலைமேல் வைத்துக்கொண்ட 


தாமரையே.  = தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடையவளே 


அனுபவம் இருந்தால் அன்றிப்  புரியாது. 


"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆட்கொண்ட நேசத்தை என் சொல்வேன்" 


என்பார் பட்டர்.


அபிராமி அந்தாதி படித்தால் பாட்டை விட்டுவிடவேண்டும்.  அவர் காட்டும் அந்த நிகழ்வுக்குப் போய் விட வேண்டும். அந்த மன நிலையைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


மற்ற பாடல்கள் போல் சொல்லுக்கு பொருள் சொல்லி புரிந்து கொள்ளும் பாடல்கள் அல்ல அவை. 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எப்படி சொல்லி விளங்க வைப்பது. 


ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லாம் புரிந்து விடும். 


அபிராமி அந்தாதி கற்கண்டு போல. சொன்னால் புரியாது. மனதுக்குள் போட்டுக் கொண்டால் தித்திக்கும். 


வேறு என்ன சொல்ல?






Saturday, May 9, 2020

அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி 


எது இன்பம், எது துன்பம் என்று அறியாமல் உயிர்கள் தடுமாறுகின்றன.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்பம் எது துன்பம் எது என்று கூடவா தெரியாமல் இருப்பார்கள், அதெல்லாம் தெரியும் எங்களுக்கு என்று சிலர் கூறலாம். சிந்திப்போம்.

இனிப்பு சாப்பிடுவது இன்பமா, துன்பமா?

சந்தேகம் என்ன? இன்பம் தான்.லட்டு, பூந்தி, பாதுஷா, ஜாங்கிரி, ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிடுவது இன்பம்தான்.

அப்படியா? யோசித்துப் பாருங்கள்.

அவை எவ்வளவு துன்பம் தருகிறது என்று தெரியும்.

அதே போல் உடற் பயிற்சி செய்வது இன்பமா, துன்பமா?

புகை பிடிப்பது, மது அருந்துவது, திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது....?

துன்பத்தை, இன்பம் என்று நினைத்துக் கொண்டு உயிர்கள் அவற்றின் பின்னால் போகின்றன.

உள்ளத்துக்குள்ளேயே பெரிய துன்பம், இந்தப் பிறவியில் மீண்டும் மீண்டும் பிறந்து, வளர்ந்து, இறந்து, மீண்டும் அதே போல்...எவ்வளவு பெரிய துன்பம்.   அது தெரியாமல்,  காதல், கல்யாணம், பிள்ளைகள், வீடு, வாசல் என்று உயிர்கள்  அறியாமையில் கிடந்து உழல்கின்ற.

நாம், துன்பத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல், அதுவே இன்பம்  என்று   நினைத்துக் கொண்டு இருக்கின்றன.

பெரிய பெரிய ஞானிகள் எல்லாம், இந்த பிறவி  என்பது துன்பம் நிறைந்தது, அதில் இருந்து  விடுதலை பெற வேண்டும் என்றே நினைத்தார்கள்.

"அம்மா, அபிராமி, என்னால் முடியவில்லை. இந்த பிறப்பு, இறப்பு என்று பிறவிச் சுழலில் கிடந்து  தளர்கின்றேன்.  தயிர் மத்தில் அகப்பட்ட தயிர் போல, வெளியே போவதும், உள்ளே வருவதுமாக கிடந்து அலைகின்றேன் . என்னை இந்தத் துன்பத்தில்  இருந்து  காப்பாற்று"

என்று வேண்டுகிறார்.

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே


பொருள்


ததியுறு = தயிரை கடையும்

மத்தின்  = மத்தில் கிடந்து

சுழலும் என் ஆவி = சுழல்கின்றது என் ஆவி

தளர்விலதோர் = தளர்வில்லாத ஒரு

கதியுறு வண்ணம் = வழியை

கருது  = கருதுவாய். நினைப்பாய் .

கண்டாய் = நீ கண்டாய்

கமலாலயனும் = தாமரை மலரில் இருக்கும் அயனும் (ப்ரம்மா)

மதியுறு = திங்களை

வேணி  = சடை (சடையில் சூடிக் கொண்ட )

மகிழ்நனும் =  மகிழ்ந்து இருக்கும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = உன்னை வணங்கி

என்றும் = எப்போதும்


துதியுறு = துதிக்கும்

சேவடியாய் = சிறந்த திருவடிகளை கொண்ட

சிந்துரானன  = சிவந்த மேனியைக் கொண்ட

சுந்தரியே = அழகானவளே

திரும்ப திரும்ப பிறவி எடுப்பது நமக்கு ஒன்றும் தெரிவது இல்லை. போன பிறவியில் என்னவாக இருந்தோம்? தெரியாது. எனவே, அதில் வரும் களைப்பு தெரிவதில்லை.

நம்மை விட பல படி மேலே போனவர்கள் அவற்றை உணர்கிறார்கள்.

என் வீடு வாசலில் இருந்து  பார்த்தால், ஒரு பத்தடி தூரம் தெரியும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு  இருபது அடி தூரம் தெரியும். எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அந்த இருபதடிக்கு மேல் உலகமே கிடையாது என்று சொல்ல முடியுமா?

வீட்டு மாடி மேல் ஏறி நின்று பார்த்தால், சில பல கிலோ மீட்டர் தூரம் தெரியும்.

பெரிய கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால், இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால், வெகு  தூரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் மிகப் பெரிய பரப்பை பார்க்க முடியும் அல்லவா.

அது போல, நமக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.

ஞானிகளுக்கு பல பிறவிகள் ஞாபகம் இருக்கிறது....

"புல்லாய் புழுவாய்..." என்று ஆரம்பித்து....

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் "

என்பார் மணிவாசககர்.  பிறந்து  இறந்து , பிறந்து இறந்து இளைத்துப் போனேன் என்பார்.

"தளர்ந்தேன் என்னைத்  தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார் நீத்தல் விண்ணப்பத்தில்.

"புனரபி ஜனனம், புனரபி மரணம்..." என்பது ஆதி சங்கரர் வாக்கு.

ப்ரம்மா, திருமால் இருவரும் அபிராமியை தொழுதார்கள். சரி.

சிவன் ஏன் தொழ வேண்டும்?  சிவனின் மனைவி தானே அபிராமி? மனைவியை போய் யாராவது  தொழுவார்களா?

பெண்ணின் பெருமை அப்படி.

அவள் மனைவியாக இருப்பாள், சில நேரம் தோழியாக, சில நேரம் தாயாக இருந்து பார்த்துக் கொள்வாள், சில நேரம் சகோதரியாக இருப்பாள், சில நேரம் மகளாக கூட மாறி அடம் பிடிப்பாள், மந்திரியாக யோசனை சொல்வாள்.

பட்டர் ஒரு படி மேலே போகிறார்.

இத்தனையாகவும் இருக்கும் அவள், ஏன் தொழும் தெய்வமாகவும் இருக்க முடியாது?

அவளின் அன்பை, கருணையை, வாஞ்சையை, தியாகத்தை எண்ணி, சிவனே அவளே தொழுதார் என்கிறார் பட்டர்.

சிவன் அவளை தொழுதது அவளிடம் இருந்து ஏதோ வரம் வேண்டி அல்ல. அது ஒரு நன்றிக் கடன்.

அபிராமி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_9.html

Tuesday, March 3, 2020

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக 


பார்ப்பதற்கு அபிராமி எப்படி இருப்பாள்? மற்ற பெண்களைப் போல இருப்பாளா? திடீரென்று நாளை நம் முன் வந்து நின்றால், அவள் தான் அபிராமி என்று நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?

பட்டர் சொல்கிறார்....

அதிசயமான வடிவு உடையாள் ...என்ன அதிசயம் ? மூன்று கண், ஐந்து தலை என்று அதிசயமான வடிவமாக இருக்குமோ ?

மலர்களில் அழகியது தாமரை மலர். உலகில் உள்ள அனைத்து தாமரை மலர்களும் அவளுடைய முக அழகைப் பார்த்து வணங்குமாம். அப்படி ஒரு அதிசயம்.

அது மட்டும் அல்ல...

இரதி, மிக அழகானவள். அவளுடைய பதி மன்மதன், அவனும் சிறந்த அழகன். இராம பானத்துக்கு தப்பியவர்கள் கூட உண்டு, மன்மத பானத்துக்கு தப்பியவர் யாரும் கிடையாது. கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் போனால், தோல்வி என்பதே கிடையாது. வெற்றி மட்டும்தான். அப்படி எப்போதும் வெற்றி பெற்ற மன்மதன் தோற்ற இடமும் ஒன்று உண்டு. அது சிவனிடம். சிவன் மேல் மலர் அம்பை எறிந்தான். சிவனுக்கு காமம் வரவில்லை. கோபம் வந்தது. மன்மதனை எரித்து விட்டார்.

முதன் முதலில்  மன்மதனின் சயம் , அபசயம் ஆனது.

அப்படி மன்மத பானத்துக்கு மயங்காத சிவனும், அபிராமியின் அழகில் மயங்கி, தன் உடலில் இடப் பாகத்தை அவளுக்கு கொடுத்து விட்டார் என்றால், அபிராமி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்?

பாடல்


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


பொருள்


அதிசயம் ஆன வடிவு உடையாள் = அதிசயமான வடிவு உடையாள்

அரவிந்தம் எல்லாம் = தாமரை மலர்கள் எல்லாம்

துதி சய ஆனன = துதிக்கும்

சுந்தரவல்லி = அழகான பெண்

துணை இரதி பதி = இரதியின் துணையான பதி (மன்மதன்)

சயமானது = வெற்றியானது

அபசயம் ஆக = தோல்வியாக

முன் = முன்பு

பார்த்தவர்தம் =  நெற்றிக் கண்ணால் பார்த்தவருடைய

மதி சயம் ஆக அன்றோ = அறிவை வெற்றி கொண்டதால் அல்லவா

வாம பாகத்தை வவ்வியதே? = இடப்பாகத்தை பெற்றுக் கொண்டது

என்ன ஒரு தமிழ்.

"துணை இரதி பதி சயமானது , அபசயமக பார்த்தவர் தம் மதி சயமாக "


மன்மத அம்புக்கு மயங்காதவரையும் மயங்க வைக்கும் அழகு.



அதிசயமான வடிவு உடையாள் ....அபிராமி



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_35.html


Friday, November 15, 2019

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள்

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள் 


இங்கே யாரும் தனித்து ஆணும் இல்லை, தனித்து பெண்ணும் இல்லை.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஒரு ஆணும் (தந்தை) பெண்ணும் (தாய்) கலந்த கலப்பில் தான் நாம் எல்லாம் பிறக்கிறோம். தாயின் குணம் கொஞ்சம், தந்தையின் குணம் கொஞ்சம் இரண்டும் கலந்த கலவை நாம். நமக்குள்ளே ஆணும் உண்டு , பெண்ணும் உண்டு.

என்ன, புற உலகம், ஆணிடம் உள்ள பெண் குணத்தையும்  , பெண்ணிடம் உள்ள ஆண் குணத்தையும் மழுங்க அடித்து விடுகிறது. ஒரு சிறு பையன் அழுதால் , "சீ, என்னடா, பொம்பள புள்ளை மாதிரி அழுது கொண்டு" என்று அழுவது பெண்ணின் குணம், ஆண் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கிறது இந்த சமுதாயம். "என்ன ஆம்பிள்ளை பிள்ளை மாதிரி திங்கு திங்கு னு நடக்குற...மெல்ல நட " என்று பெண்ணுக்குச் சொல்லப் படுகிறது.

அபிராமியை ஒரு பெண்ணாகவே பார்த்த பட்டர், அவளுக்குள்ளும் இருக்கும் ஆணை காண்கிறார்.

ஆணும் பெண்ணும் கலந்த அர்த்த நாரியாக கண்டு அதிசயப் படுகிறார்.

பெண்ணை கட்டிக் கொடுத்து விட்டு, கொஞ்ச நாள் கழித்து அவள் வீட்டுக்குப் போகும் பெற்றோர் அதிசயப் படுவார்கள் "நம்ம வீட்டுல அப்படி இருந்த பெண்ணா, இங்க இப்படி பொறுப்பா இருக்கிறாள், வீட்டை நிர்வாகம் பண்ணுகிறாள், கணவனை , பிள்ளைகளை, வீட்டை, வெளி உலகை, அலுவலகத்தை எப்படி நிர்வாகம் பண்ணுகிறாள் " என்று வியப்பார்கள்.

பெண் அதியசமானவள் தான்.

உலகத்தையெல்லாம் தன் காம வலையில் வீழ்த்துபவன் மன்மதன். அவனை கண்ணால் எரித்தவர் சிவ பெருமான். அப்படி காமத்தை வென்ற சிவனை மயக்கி அவன் உடலில் ஒரு பாகமான அபிராமியே, நீ அதிசயமானவள் என்கிறார்.

பாடல்

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே



பொருள்

அதிசயம் ஆன வடிவுடையாள்  = அதிசயமான வடிவம் உடையவள்

அரவிந்தம் எல்லாம் = மலர்கள் எல்லாம்

துதிசய ஆனன = துதிசெய்யும்

சுந்தரவல்லி = அழகிய வல்லிக் கொடி போன்றவள்

துணை இரதி = இரதி தேவியின்

பதி = கணவன் (மன்மதன் )

சயமானது = அவன் இது வரை  பெற்ற வெற்றிகள் எல்லாம்

அபசயமாக = தோல்வி அடையும்படி

முன் = முன்பு

பார்த்தவர்தம் = நெற்றிக்கண்ணால் பார்த்தவர், எரித்தவர்

மதி = அவருடைய புத்தியை , மனதை

சயமாக அன்றோ = வெற்றி பெற்று அல்லவா

வாம பாகத்தை = இடப் பாகத்தை

வவ்வியதே = அடைந்ததே


அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் ஆயிரம் மின்னல் ஒன்றாக இறங்கியது போன்ற ஒரு சிலிர்ப்பு. அவளை தூரத்தில் பார்த்தாலே அவனுக்குள் ஆனந்த கங்கை கரை புரண்டு ஓடும்.

அவனுடைய  கனவும், நினைவும் அவளாகவே இருந்தாள்.

காலம் செய்த கோலம், அவர்கள் பிரிந்து போனார்கள். கால நீரோட்டம் அவர்களை  வேறு வேறு திசையில் கொண்டு சென்றது.

என்றேனும் அவளை காணலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தான்.

ஒரு நாள், கணவனுடன் அவள் வந்தாள்.

அவள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு சந்தோஷம்.

எப்படி அவள் இன்னொருவருக்கு மனைவியானாள் ?

அவர்களை ஒன்றாகப் பார்ப்பது அவனுக்கு பெரிய அதிசயமாக இருக்கிறது.

நான் பார்த்த பெண்ணா இவள்? அந்த சின்னப் பெண்ணா இவள் என்று அதிசயமாக பார்க்கிறான்.

அதிசயமான வடிவு உடையாள்....

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_78.html

Monday, October 21, 2019

அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே

அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே 


உணர்ச்சி வருவதற்கு காரணம் சொல்லலாம். ஆனால், ஒரு உணர்ச்சி எப்படி இருக்கிறது என்று விளக்கிச் சொல்ல முடியாது.

காதல் வந்தால், அதற்கு காரணம் சொல்ல முடியும். காதல் என்ற அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று எப்படி விளக்கிச் சொல்வது?

இறை அனுபவம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி அதை விளக்கிச் சொல்வது என்று தவிக்கிறார் பட்டர்.

எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன். ஆனால், அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது ?

ஒரு கள் குடித்து இருக்கிறான். போதையில் தடுமாறுகிறான். உளறுகிறான். ஆடுகிறான். தன்னை மறந்து நடந்து கொள்கிறான். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. தான் யார், சமுதாயத்தில் தன் நிலை என்ன, ஒரு தகப்பன், கணவன், பிள்ளை, சகோதரன், ஒரு அலுவலகத்தில் ஒரு பொறுப்புள்ள வேலையில் இருப்பவன் என்பதெல்லாம் மறந்து விடுகிறது. போதையில் இலயித்துக் கிடக்கிறான்.

அது போன்றது பக்தி என்கிறார் பட்டர்.

கள் தான். ஆனால் வெளியே வாங்கி வந்து அடித்த சரக்கு அல்ல. உள்ளுக்குள்ளேயே உருவான கள் என்கிறார். உள்ளத்தே விளைந்த கள்ளே என்கிறார்

வெளியில் வாங்கி வந்தால், ஏதோ ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் வாங்கி வரலாம். போதை தலைக்கு ஏறிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் குடிப்பதை நிறுத்தி விடலாம்.  இதுவோ உள்ளே விளைந்த கள். எப்படி நிறுத்துவது?  அது பாட்டுக்கு ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கிறது.

வேறு வழியில்லை. போதையில் தன் நிலை தடுமாற வேண்டியதுதான்.

அபிராமியைப் பார்க்கிறார்.

அவள் யார்? தாயா? தாரமா? சகோதரியா? நண்பியா? காதலியா ? ஒன்றும் புரியவில்லை.

என்னை காப்பாற்று என்று பக்தனாக வேண்டுகிறார்.

உன் மார்பகங்கள் அப்படி இருக்கிறது , இப்படி இருக்கிறது என்று குழந்தையாக  அவள் மடியில் கிடக்கிறார்.

உன்னுடைய மற்ற அவயங்கள் இப்படி இருக்கின்றன என்று வர்ணிக்கிறார்.  இப்படி  செய்யலாமா? இது சரியா ? இதுவா பக்தியா, பட்டர் போன்றவர்கள்   இப்படி  சொல்லலாமா ? ஒரு பெண்ணின் அந்தரங்க அவயங்களை பற்றி பேசுவது  நாகரீகமா என்று கேட்டால் கள் குடித்தவனுக்கு என்ன தெரியும்?

ஆண்டாளும் அப்படித்தான்.  பக்தி என்ற போதை. கள்.

பாடல்

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே


பொருள்


கொள்ளேன் மனத்தில் = என மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்

நின் கோலம் அல்லாது  = உன் உருவத்தை அன்றி மற்ற எதையும்

அன்பர் கூட்டம் தன்னை = உன்னுடைய அன்பர்கள் கூட்டம்

விள்ளேன்  = விட மாட்டேன்

பரசமயம் விரும்பேன் = மற்ற சமயங்களை விரும்ப மாட்டேன்

வியன் = வியக்கத்தக்க

மூவுலகுக்கு = மூன்று உலகங்களுக்கு

உள்ளே =உள்ளே

அனைத்தினுக்கும் புறம்பே = எல்லாவற்றிற்கும் வெளியே

உள்ளத்தே = மனதினில்

விளைந்த = தோன்றிய

கள்ளே = கள்ளே

களிக்கும் களியே = அனுபவிக்கும் இன்பமே

அளிய என் கண்மணியே = அதைத் தரும் என் கண்ணின் மணி போன்றவளே



"அனைத்தினுக்கும் புறம்பே"...எல்லாவற்றிற்கும் வெளியே. ஏதோ ஒன்று இருக்கிறது என்றால்  அது ஏதோ ஒன்றினுக்கு உள்ளேதான் இருக்க வேண்டும். அனைத்துக்கும் வெளியே என்றால் அது எங்கே?

பக்தியின் உச்சம். அவருக்குத் தெரிகிறது. சொல்ல முடியவில்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_21.html

Tuesday, October 15, 2019

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி


நேற்று சாப்பிட்டது ஞாபகம் இருக்கிறது. அதற்கு முந்தின நாள்? போன வாரம், போன மாதம், போன வருடம் இதே நாள் என்ன சாப்பிட்டோம் என்று நினைவு இருக்கிறதா? இல்லை அல்லவா.

ஒரு மாடு, நெல் விளைந்த ஒரு வயல் காட்டில் சென்று வளர்ந்து இருக்கின்ற நெல் பயிரை மேய்ந்து விடுகிறது. வயலுக்கு சொந்தக்காரன் வந்து தடியால் இரண்டு அடி போட்டு மாட்டை விரட்டுகிறான்.  மறு நாளும் அந்த மாடு அதே வயக்காட்டில் இறங்கி பயிரை மேயும். "அடடா, நேற்றுதானே இந்த பயிரை மேய்ந்ததற்கு தடியால் அடித்தார்கள்" என்ற நினைவு இருக்காது. செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யும். மறந்து போய் விடுகிறது.

நாமாக இருந்தால் அப்படி செய்வோமா? நம்மை சரியாக மதிக்காதவர் வீட்டுப் பக்கம் கூட நாம் போக மாட்டோம் அல்லவா? காரணம், அவர் செய்த மரியாதை குறைவான செயல் நம் மனதில் நிற்கிறது. அது மனதில் நிற்காவிட்டால்? மீண்டும் அவர் வீட்டுக்குப் போவோம் அல்லவா?

நேற்று சாப்பிட்டதே மறந்து போய் விடுகிறது. போன பிறப்பும் அதற்கு முந்தைய பிறப்பும் நினைவு இருக்குமா?

மாட்டுக்கு நினைவு இல்லாதது, நமக்கு நினைவில் இருக்கிறது.

நமக்கு நினைவில் இல்லாதது, பெரியவர்களுக்கு, சான்றோர்களுக்கு நினைவில் நிற்கிறது.

எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இப்படி துன்பப் படுவது என்று  அவர்கள் தளர்ந்து போகிறார்கள்.

பட்டர் சொல்கிறார்,

"தயிர் கடையும் மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் போல என் ஆவி ஆனது சுழல்கிறது. பிறக்கிறது, பிறக்கிறது, இறக்கிறது...நான் தளர்ந்து போய் விட்டேன். தளர்வு அடையாமல் நான் ஒரு நல்ல கதி அடைய எனக்கு அருள் செய்வாய். பிரமனும், திருமாலும், சிவனும், துதிக்கும் சிவந்த திருவடிகளை கொண்டவளே " என்று

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள்

ததி = தயிர்

உறு = அடைகின்ற

மத்தின் = மத்தின். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல

சுழலும் என் ஆவி = சுழலும் என் ஆவி

தளர்வு இலது ஓர் = தளர்வு இல்லாத ஒரு

கதியுறுவண்ணம் = கதியினை அடைய

கருது கண்டாய் = அருள் புரிவாய்

கமலாலயனும், = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

மதியுறு = நிலவை உள்ள

வேணி = சடை முடியுள்ள

மகிழ்நனும் = உன்னோடு சேர்ந்து மகிழும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = வணங்கி

என்றும் = எப்போதும்

துதியுறு = துதி செய்யும்

சேவடியாய் = சிவந்த அடிகளைக் கொண்டவளே

சிந்துரானன சுந்தரியே. = சிவந்த குங்குமம் அணிந்த அழகியே

மறு பிறப்பு உண்டா ? இது பற்றி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா?

மணிவாசகர் சொல்வார்

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று திருவாசகத்தில்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


புல் , பூண்டு, புழு, மரம், பலவிதமான மிருகங்கள், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள் , அசுரர், தேவர், முனிவர் என்று எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார்.

எப்படி எல்லாம் பிறந்திருக்கோம் என்பதல்ல முக்கியம், எப்படி எல்லாம் இனி பிறக்க  இருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது.

நமக்கு ஞாபகம் இல்லை. மறந்து போய் விட்டது.

அவருக்கு ஞாபகம் இருக்கிறது.

மீண்டும் மீண்டும் பிறந்து எல்லோருக்கும் சலிப்புத்தான் வருகிறது.

என்னை மீண்டும் மீண்டும் பெற்று என் தாயர்கள் உடல் சலித்து விட்டார்கள், நான் நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்துப் போய் விட்டான். இருப்பையூயூர் வாழ் சிவனே, இன்னம் ஒரு கருப்பையூர் வாராமல் காப்பாற்றுவாய் என்று கதறுகிறார் பட்டினத்தார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா


அறிவு இருந்தால், மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைக் கண்டு கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி

மற்று ஈண்டு வாரா நெறி.  மறுபடியும் இங்கு வராத வழி.

பட்டர் அதையெல்லாம் நினைத்து அலட்டிக் கொள்ளுவது இல்லை.

அபிராமி, நான் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைப் பார் என்று அவள்  மேல் பாரத்தை போட்டு விடுகிறார்.

அம்மாவின் இடுப்பில் இருக்கும் குழந்தை, தாய் தன்னை கீழே போட்டு விட மாட்டாள் என்று  எவ்வளவு உறுதியாக இருக்குமோ அப்படி உறுதியாக இருக்கிறார்.

பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். சிந்துரானன சுந்தரியே என்று கொஞ்சுகிறார்.

இப்படி வந்து கேட்டால், எந்த தாய் தான் மறுப்பாள் ?

கேட்டுப் பாருங்கள்.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_15.html

Tuesday, October 8, 2019

அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது

அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது 


பக்தி இலக்கியமாக இருக்கட்டும், அற நூல் இலக்கியமாக இருக்கட்டும், அடியவர்கள் பற்றி மிக மிக உயர்வாக பேசுகின்றன.

அப்படி என்ன அடியவர்களிடம் சிறப்பு இருக்கும்? அவர் ஒரு அடியவர் என்றால், நாம் இன்னொரு அடியவராக இருந்து விட்டுப் போகிறோம். அவர் என்ன பெரிய சிறப்பு?

ஒரு பெரிய மைதானத்தில் ஒரு ஓரம் நின்று ஒரு பந்தை உதைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மிக வேகமாக உதைக்கிறோம். நாம் உதைக்கும் கோணம் சற்றே மாறினால், அந்த பந்து சேர வேண்டிய இடத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்று விடும் தெரியுமா? தூரம் செல்ல செல்ல அது செல்ல வேண்டிய இடத்தை விட்டு விலகிச் சென்று கொண்டே இருக்கும்.

பூமியில் இருந்து இராக்கெட்டை ஏவுகிறோம். அது ஒரு டிகிரி கொஞ்சம் சாய்ந்தாலும், பல இலட்சம் கிலோ மீட்டர் செல்லும் போது, அந்த ஒரு டிகிரி மாற்றம் விரிந்து விரிந்து இராக்கெட் எங்கோ சென்று விடும் அல்லவா? அவ்வளவு பணம், நேரம், உழைப்பும் வீணாகிப் போய் விடும் அல்லவா?

அது போல, நல்லவர்கள், சான்றோர்கர்கள், அடியவர்கள் அல்லாதாவரிடம் நாம் தொடர்பு கொண்டால், சிறிது காலம் கூட போதும், அவர்களின் தாக்கத்தால், நாம் செல்ல வேண்டிய இடத்தை விட்டு எங்கோ போய் விடுவோம். எங்கே எப்போது தடம் மாறினோம் என்று தெரியாது. ஒரு சின்ன மாற்றம் தான்.  நமக்கு தெரியக் கூட தெரியாது. ஆனால், பல வருடங்கள் கழித்து, அடடா, இவ்வளவு நாள் வீணாகி விட்டதே...இனி இருக்கும் நாட்கள் கொஞ்சம் தானே....என்ன செய்வது என்று தவிப்போம்.

எனவே தான், எப்போதும் நல்லவர்கள், சான்றோர்கள், அடியவர்கள் கூட்டத்தோடு இருக்க வேண்டும்   என்பது.

பட்டர் சொல்கிறார்,

"உன்னுடைய திருவடிகள் எப்போதும் என் தலை மேல் இருக்கின்றன. நான் எப்போதும் சொல்லுவது உன் நாமமே. உன் அடியார்களுடன் கூடி  எப்போதும் உன்னைப் பற்றிய  வேதாகமங்களையே வாசிக்கிறேன்" என்கிறார்.

பாடல்

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே


பொருள்

சென்னியது = சென்னி என்றால் தலை. தலையில்

உன் = உன்னுடைய

பொன் = பொன் போன்ற

திருவடித் = திருவடி

தாமரை  = தாமரை மலர்கள்

சிந்தையுள்ளே = என்னுடைய சிந்தையில்

மன்னியது = மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.

உன் திருமந்திரம் = உன்னுடைய திரு மந்திரம்

 சிந்துர வண்ணப் பெண்ணே! = சிவந்த அழகிய பெண்ணே

முன்னிய = முன் வரும்

நின் அடியாருடன் = உன்னுடைய அடியவர்களுடன்

கூடி = கூடி

முறை முறையே = முறைப்படி

பன்னியது = திரும்ப திரும்ப சொல்லுவது

உந்தன் = உன்னுடைய

பரமாகமப் பத்ததியே!* = உயர்ந்த ஆகம நூல்களையே

ஏன் அடியவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும் ? நாம் தனியே படித்துக் கொள்ளலாமே ? என்றால் கூடாது.

நம் மரபில், உயர்ந்த நூல்களை ஒரு ஆசிரியர் மூலம்தான் கற்க வேண்டும்.

நாமே படித்து கற்றுக் கொள்ளலாம் என்றால், நாம் கற்றது சரியா தவறா என்று கூட  நமக்குத் தெரியாது.

மேலும், நாமே படிப்பது என்றால், ஒவ்வொரு சொல்லாக படித்து, அதன் பொருள் என்ன  என்று விளங்கத் தலைப்படுவோம்.

முன்பே படித்த அறிஞர்கள் இருந்தால், அவர்களுக்கு பொருள் தெரியும். பொருளில் இருந்து நமக்கு  சொல்லை சொல்லித் தருவார்கள்.

பட்டர் சொல்கிறார், அபிராமியின் அடியவர்களோடு சேர்ந்து படிப்பாராம். அவருக்கு அப்படி என்றால், நமக்கு ?

கம்ப இராமாயணத்துக்கு வை மு கோவின் உரையை படிக்கும் போதுதான் தெரியும், அடடா, என்ன ஒரு உரை என்று. நாமே படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால்  ஒரு காலும் அந்த நுண்ணிய பொருள் நமக்கு புலப்படாது.

திருக்குறளுக்கு, பரிமேலழகர் உரை போல. நம்மால் அந்த உயரத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சேர்ந்து படியுங்கள். படித்ததை பகிருங்கள். அனுபவம் ஆழமாகும். பொருள் விரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_8.html

Monday, October 7, 2019

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை


ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்தபின் பெறும் முதல் சுகம், தாயின் மார்பில் இருந்து பாலை சுவைப்பதுதான். அது பசியை தணிப்பது மட்டும் அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டும் அல்ல, அன்பை, காதலை , பாசத்தையும் தருகிறது. தாயின் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் பிள்ளை அவ்வளவு நன்றாக வளராது. பால் தரும் போது அந்தத் தாயின் அரவணைப்பு வேண்டும். அவள் உடல் சூடு வேண்டும்.

ஆண்கள் கொஞ்சம் வேகம் கொண்டவர்கள். உணர்ச்சி வேகம், உடல் தரும் வேகம் இவற்றால் எதையாவது செய்து விடுவார்கள். பின்னால், அப்படி செய்து இருக்கக் கூடாதோ, அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ  என்று யோசிப்பார்கள். என்ன செய்வது. செய்தாகி விட்டது. சொல்லியாகி விட்டது. அதன் வேண்டாத விளைவுகளை சரிப்படுத்த வேண்டும். அங்குதான் பெண் வருகிறாள். தன்னுடைய சாமர்த்தியத்தால் ஆணுக்கு வரும் துன்பங்களை நீக்குகிறாள்.

ஆணின் வேகமும் வேண்டும். பெண்ணின் நிதானமும் வேண்டும்.

பாடல்


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.


பொருள்

பொருந்திய = பொருத்தமான

முப்புரை = மூன்று சொல்லப்படக் கூடிய உரை. படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற செயல்கள்

செப்பு  = செப்பு கலசம் போல

உரை  செய்யும்  = சொல்லக் கூடிய

புணர் முலையாள் = ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் தனங்களை உடையவள்

வருந்திய = அதனால், அந்த பாரத்தால் வருந்தும்

வஞ்சி = வஞ்சிக் கொடி போன்ற

மருங்குல் = இடை, இடுப்பு

மனோன்மணி = மனோன்மணியைப் போன்ற சிறந்தவள்

வார் சடையோன் = சடை முடி நிறைந்த சிவன்

அருந்திய = குடித்த

நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுது ஆக்கிய = அமுது ஆக்கிய

அம்பிகை = அம்பிகை, அபிராமி

அம்புயமேல் = தாமரை மலரின் மேல்

திருந்திய சுந்தரி = அமர்ந்து இருக்கும் சுந்தரி

அந்தரி = அந்தரத்தில் இருப்பவள்

பாதம் = பாதம்

என் சென்னியதே. = எங்கு இருக்கிறது என்றால் என் தலை மேல்

நஞ்சை அமுதம் ஆக்கியவள்.

நமக்கு வரும் பெரிய பெரிய துன்பங்களை நீக்குவது மட்டும் அல்ல, அவற்றையே இன்பமாக  மாற்றித் தருபவள்.

நாம் செய்த வினை காரணமாக துன்பம் வந்து சேரும். அதில் இருந்து தப்ப முடியாது.  ஆனால், அபிராமி அந்த துன்பங்களை இன்பங்களாக மாற்றி விடுவாள்.

ஆலகால விஷத்தை அமுதமாக மாற்றியவளுக்கு நம் துன்பங்கள் எம்மாத்திரம்.

என்னடா இது ஒரு பக்தனாக இருந்து கொண்டு, கடவுளின் மார்பகங்களை இப்படி கொஞ்சம் கூட  கூச்சம் இல்லமால் பேசுகிறாரே என்று சிலர் நினைக்கலாம்.

ஒரு தாயின் மார்பகத்தை ஒரு குழந்தை பார்க்கும் பார்வை வேறு, கணவனோ மற்றவர்களோ  பார்க்கும் பார்வை வேறு.

பட்டர் குழந்தையாகி விடுகிறார். கொஞ்சம் கூட  விகல்பம் இல்லை. கூச்சம் இல்லை.

அபிராமி அந்தாதி புரிய வேண்டும் என்றால், பட்டரின் மனநிலைக்கு போய் விட வேண்டும். ஒரு குழந்தையின் மன நிலையில் இருந்தால்தான் அது புரியும்.

சொல்லுக்கு பொருள் தேடும் கவிதை விளையாட்டு அல்ல இது.

சொல்லைக் கடந்து, காதலில் கரையும் இரசவாதம் இது.

அந்த சித்தி உங்களுக்கும் வாய்க்கட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_9.html

Friday, August 30, 2019

அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே 


கால வெள்ளம் அவர்களை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துச் சென்றது. அவளுக்கு திருமணம் ஆகி, குழந்தை குட்டி என்று அவள் ஒரு பக்கம். வேலை, குடும்பம் என்று இவன் ஒரு பக்கம் போய் விட்டார்கள்.

எப்போதாவது தனிமையில் இருக்கும் போது அவள் நினைவு வரும். "...ஹ்ம்...அவள் எப்படி இருக்கிறாளோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். அவள் கணவன் எப்படி இருப்பான்? அவள் குணத்துக்கு நல்ல கணவன் தான் கிடைத்திருப்பான் அவளுக்கு என்று நினைத்துக் கொள்வான்.

நினைவு வரும்போதெல்லாம், "சே ...இத்தனை நாள் எப்படி அவளை மறந்து இருந்தேன் " என்று அவனுக்குள் ஒரு சின்ன வருத்தம் வரும். என் நினைவை விட்டுப் போனது அவ தப்புத்தான் என்று அவளை செல்லமாக கோபித்துக் கொள்வான்.

"நீயும், உன்  husband ம் ஒழுங்கா இனி மேல் என் நினைவில் இருக்க வேண்டும்" என்று அவளிடம் கண்டிப்பாக சொல்லிவிடுவான்....

அது ஒரு புறம் இருக்கட்டும் ....

பட்டர் சொல்லுகிறார்



"மனிதரும், தேவரும்,  முனிவரும்  வந்து உன் சிவந்த திருவடிகளில்  வணங்குகிறார்கள். சடை முடி மேல் நிலவையும், பாம்பையும், கங்கையையும் கொண்ட உன் கணவரோடு நீ என் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் " என்று



பாடல்


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி*
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்*
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த*
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!


பொருள்


மனிதரும் = மனிதர்களும்

தேவரும்  = தேவர்களும்

மாயா = இறப்பில்லாத

முனிவரும் = முனிவர்களும்

 வந்து = உன்னிடம் வந்து

சென்னி = தலை

குனிதரும் = வணக்கம் செய்யும்

சேவடிக்  = சிவந்த திருவடிகளை உடைய

கோமளமே! = கோமளமே

கொன்றைவார் = கொன்றை மலர் அணிந்த

சடைமேல் = சடையில்


பனிதரும் திங்களும் = பனி பொழியும் நிலவும்

பாம்பும் = பாம்பும்

பகீரதியும் = ஆகாய கங்கையும்

படைத்த  = கொண்ட

புனிதரும் = புனிதரான சிவனும்

நீயும் = நீயும்

என் = என்னுடைய

புந்தி = புத்தியில்

எந்நாளும் = எப்போதும்

பொருந்துகவே! = பொருந்தி இருக்க வேண்டும்.


ஒரு பட்டியல் சொல்லும் போது, ஒரு முறை இருக்கிறது.

முதலில் சிறந்ததைச் சொல்லி, பின் சிறப்பு குறைவானதைச் சொல்ல வேண்டும்.

ஆசிரியரும், மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

மாணவர்களும், ஆசிரியரும் வந்தனர் என்று சொல்லக் கூடாது.

ஆசிரியர் உயர்ந்தவர்.

ஒரு மேடையில் வணக்கம் சொல்லும் போது , முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், பின் ஏனையோர் என்று ஒரு வரிசை வைத்துச் சொல்ல வேண்டும்.

முதலில் மைக் போட்டவரே , சீரியல் லைட் போட்டவரே , விழாவுக்கு வந்திருக்கும்  சிறுவர் சிறுமிகளே , தலைவர் அவர்களே என்று சொல்லக் கூடாது.

இங்கே பட்டர்,

மனிதரும், தேவரும், மாயா முனிவரும் என்று சொல்லுகிறார்.

மனிதர்களுக்கு என்ன அவ்வளவு சிறப்பு?

தேவர்களும், முனிவர்களும் இறைவனை வழிபடுவதையே தொழிலாக கொண்டவர்கள்.

மனிதர்களுக்கு ஆயிரம் வேலைகள். அதற்கு நடுவில் வழிபாடும் செய்கிறார்கள் என்றால்  அது சிறப்புத்தானே என்று அவர் நினைத்து இருக்கலாம்.

அபிராமியுடன் ஒரு அன்னியோன்னியம்...."நீ வந்துரு" என்று

.அவளுடய கணவரை பற்றி பேசும்போது "புனிதரும்" என்று அவருக்கு  மட்டும் மரியாதை சேர்த்துக் கொள்கிறார்.

"நீ வந்துரு. வரும் போது அவரையும் கூட்டிகிட்டு வா" என்று சொல்லுவது போல.

பட்டர் இப்படி எல்லாம் நினைத்தாரா என்றால்...பாட்டில் கரைந்து பாருங்கள்...புரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_73.html


Monday, July 22, 2019

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை 


நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்?

அதை சாதித்தவர்களை கண்டு, அவர்களிடம் அறிவுரை பெறுவோம். அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் , எப்படி செய்கிறார்கள் என்று அறிந்து கொண்டு அது போல செய்ய முயற்சி செய்வோம்.

நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருக்கிறது. இந்த கடவுள், வேதம், சுவர்க்கம், நரகம், என்றெல்லாம் பல விஷயங்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.

யாரிடமாவது போய் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வருகிறது

பட்டர் சொல்கிறார் ....

"நான் அறிந்து கொண்டேன். எதைத் தெரியுமா ? யாருமே அறிந்திராத மறைப் பொருளை. அறிந்த பின் என்ன செய்தேன் தெரியுமா ? அபிராமி உனது திருவடிகளை பற்றிக் கொண்டேன். அது மட்டும் அல்ல பயம் கொண்டு பிரிந்தேன். யாரைப் பிரிந்தேன் தெரியுமா ? உன்னுடைய அன்பர்களின் பெருமையை அறியாத, நரகத்தில் விழ இருக்கும் மனிதர்களை"

பாடல்


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.


பொருள்

அறிந்தேன், = அறிந்து கொண்டேன். துணிவாகச் சொல்கிறார். எனக்குத் தெரியும். நான் அறிவேன் என்கிறார்.

எவரும் = வேறு யாரும்

அறியா மறையை = அறியாத மறை பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு

செறிந்தேன் = நெருங்கினேன்

நினது திருவடிக்கே = உனது திருவடிகளுக்கே

திருவே. = சிறந்தவளே

வெருவிப் = பயந்து

பிறிந்தேன் =  பிறிந்தேன்

நின் = உன்

அன்பர் = அன்பர்கள்

பெருமை எண்ணாத  = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = கர்மம் செய்யும் நெஞ்சால்

மறிந்தே = தலைகீழாக

 விழும் = விழும்

நரகுக்கு  = நரகத்துக்கு

உறவாய = உறவான

மனிதரையே. = மனிதர்களையே


தீயவர்களைக் கண்டால் பயந்து ஓடி விட வேண்டும் என்கிறார்.

படித்தவர்தான், அறிவாளிதான், அம்பாளின் அருள் பெற்றவர்தான், இருந்தும், தீயவர்களைக் கண்டால் "வெருவிப் பிறிந்தேன்" என்கிறார்.

பயந்து விலகி விட வேண்டும்.

தீயவர்கள் என்றால் ஏதோ, பெரிய கடா மீசை வைத்துக் கொண்டு, கன்னத்தில் ஒரு வெட்டுத் தழும்போடு, கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது.

நேரத்தை வீணே செலவழிப்பவர்கள், பொய் பேசி திரிபவர்கள், கோபம், காமம், ஆணவம் , பொறாமை போன்ற தீய குணங்கள் கொண்டவர்கள், வெட்டி அரட்டை பேசுபவர்கள் , ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் எல்லோருமே தீயவர்கள்தான்.

நல்லவர்களோடு சேர்ந்தேன்

தீயவர்களை விட்டு விலகினேன் என்கிறார்.

நல்லவர்களைத் தேடி கண்டு பிடித்து அவர்களோடு சேர்வது என்பது கடினமான காரியமாக  இருக்கலாம்.

தீயவர்களை விட்டு விலகி விடுவது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லையே?

பட்டியல் போடுங்கள். உங்கள் வட்டத்தில் உள்ள தீயவர்களை. களை எடுங்கள்.




https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_31.html

Thursday, May 30, 2019

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன்

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன் 


உறவினர்களை பெரும்பாலும் நாம் தேர்ந்து எடுப்பதில்லை. அது அமைந்து விடுகிறது. திருமணம், அது சம்பந்தப்பட்ட உறவுகள் வேண்டுமானால் நாம் தேர்ந்து எடுக்கிறோம் என்று சொல்லலாம். அது தவிர ஏனைய உறவுகள், தானே அமைவதுதான்.

நண்பர்களும் அப்படித்தான். நாம் தேடிப் போய் தேர்ந்து எடுப்பது இல்லை. நம் வாழ்வில் எதிர்படுபவர்களில் , நமக்கு பிடித்தவர்களை நாம் நண்பர்களாகக் கொள்கிறோம். அலுவலகம், வேலை செய்யும் இடம், குடி இருக்கும் இடம் என்று பொதுவாக அனைத்து இடங்களிலும் நமக்கு ஏற்படும் தொடர்புகள் நம்மால் முடிவு செய்யப் படுபவை அல்ல. அவை அப்படி நிகழ்ந்து விடுகின்றன.

அப்படி நிகழ்ந்தவைகள், அந்த உறவுகள் நமக்கு நன்மை பயக்கும் என்று எப்படிச்  சொல்வது?

நம் நண்பர்களில், நம் உறவினர்களில் நம்மை விட மிக மிக அதிகம் படித்தவர்கள், அறிந்தவர்கள் எத்தனை பேர்? அப்படி ரொம்ப அறிந்தவர்கள் இருந்தாலும், நாம் அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

நமக்குத் தேவை, அரட்டை அடிக்க ஆள், whatsapp போன்றவற்றில் வெட்டிப் பேச்சு பேச, துணுக்குகள் அனுப்ப, கதை பேச, அரசியல் நையாண்டிகள் வாசிக்க , பகிர ஆட்கள்.

சரி, எப்படியோ உறவும், நட்பும் அமைந்து விடுகிறது . அதில் சில நமக்கு நன்மை பயக்காவிட்டாலும் தீமை  பயப்பவை என்று அறிந்தும் அவற்றை விட முடிகிறதா?

இருந்து விட்டுப் போகட்டும். அந்த whatsapp குரூப் இல் இருந்து விலகினால் தப்பா நினைப்பாங்க,  அந்த association மீட்டிங்குக்கு போகாட்டி நல்லா இருக்காது,  என்று தேவை இல்லாத, தீமை பயக்கும் உறவுகளை தூக்கிச் சுமந்து திரிகிறோம்.

அந்த உறவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கணவன், மனைவி, உற்றார், உறவினர், ஆசிரியர், ஆச்சாரியார், என்று எந்த உறவும், தீமை பயப்பதாக இருந்தால்,  அது தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

விடுவது கடினம்.

"கல்யாணம் ஆயிருச்சு, இனிமே என்ன பண்றது...ஒண்ணா வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான் " என்று உழலும் எத்தனை உறவுகள் நமக்குத் தெரியும்.

அபிராமி பட்டர் துணிந்து முடிவு எடுக்கிறார்.

"தீய வழியில் செல்லும், நரகத்துக்கு செல்லும் மனித உறவுகளை வெறுத்து, அவற்றில் இருந்து பிரிந்து  வந்து விட்டேன்"

என்கிறார்.

அது மட்டும் அல்ல, "தீயவர் தொடர்பை விட்டது மட்டும் அல்ல, நல்லவர்கள் நட்பை, உறவை தேடி கண்டு பிடித்து ஏற்றுக் கொண்டேன்" என்றும் சொல்கிறார்.

அற்புதமான பாடல்.

சறுக்குப் பலகையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல, கை பிடித்து அழைத்துச் செல்லும் பாடல்

பாடல்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!


பொருள்

அறிந்தேன் = நான் அறிந்து கொண்டேன்.  எதை அறிந்து கொண்டேன் என்கிறார் ?

எவரும் அறியா மறையை = யாரும் அறியாத ஒரு மறைவான, இரகசியமான பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு.

செறிந்தேன் = நெருங்கி வந்தேன். நெருங்கி எங்கே வந்தார்?

உனது திருவடிக்கே = உன்னுடைய திருவடிக்கே. உன்னுடைய என்றால் யாருடைய என்ற கேள்வி வரும் அல்லவா?

திருவே! = திரு என்றால் சிறப்பு, செல்வம், உயர்வு, மதிப்பு என்று பல பொருள் உண்டு. சிறந்தவளே என்று பொருள் கொள்ளலாம்

வெருவிப் = வெறுத்துப் போய்

பிறிந்தேன் = பிரிந்தேன். பிரிந்து விட்டேன். எதை விட்டு பிரிந்தார்?

நின் அன்பர் = உன்னுடைய அன்பர்களின்

பெருமை எண்ணாத = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = வினைப் பயனால், அதை அறிய மாட்டாத என்னுடைய மனதால்

மறிந்தே = மறித்தல் என்றால் தடுத்தல். மறியல் என்றால் strike. தடுமாறி

விழும் = விழும்

நரகுக்குறவாய = நரகத்துக்கு உறவான

மனிதரையே! = மனிதர்களையே

ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்றால் ?


முதலாவது, "அறிந்தேன்" . அறிய வேண்டும். எது நல்லது, எது கெட்டது , நமக்கு எது நன்மை  பயக்கிறது, எது நமக்கு தீமை பயக்கிறது என்று அறிய வேண்டும்.

இரண்டாவது, "அறிந்து கொண்டு"...அறிந்தால் மட்டும் போதாது. நம்மிடம் உள்ள பெரிய  குறையே அது தான், அறிந்து கொண்ட பின் அதன் படி நடப்பதே இல்லை. சர்க்கரை உடலுக்கு நன்மை பயக்காது என்று அறிவோம். இருந்தாலும்  இனிப்பு பண்டங்கள், ஐஸ் கிரீம் என்று ஒன்று விடாமல் சாப்பிடுவோம். நொறுக்குத் தீனி கெடுதல் என்று அறிவோம். உடற் பயிற்சி நல்லது என்று அறிவோம்.  என்ன பலன். அறிந்து கொண்டு, ஒன்றும் செய்வது கிடையாது.

கற்ற பின் நிற்க அதற்கு தக 

என்பார் வள்ளுவப் பேராசான்.

கற்றால் மட்டும் போதாது. கற்பது மிக எளிது. அதன் படி நிற்பது மிகக் கடினம்.

மூன்றாவது "கரும நெஞ்சால்". நாம் நம் நண்பர்களை, நாம் சார்ந்த உறவினர்களை  எவ்வாறு தேர்ந்து எடுக்கிறோம்? இவர் நமக்கு பிடித்தமானவர் என்று எவ்வாறு  முடிவு செய்கிறோம்? நம் மனம் சொல்கிறது. நம் மனதுக்கு எப்படி தெரியும்?  அனுபவ வாசனை. நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்வது இல்லை. ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு, இயந்திர கதியில்  செய்கிறோம். அதை பட்டர் , வினைப் பயன் என்கிறார். நம் அறிவு, உணர்ச்சிகள், விருப்பு வெறுப்பு எல்லாம் நாம் விரும்பி தேர்ந்து எடுப்பது இல்லை. அவை நம்முள் ஏற்கனவே இருக்கின்றன.

நான்காவது, "நின் அன்பர் பெருமை எண்ணாத". நல்லவர்களின் சிறப்பை அறியாமல். உலகில் எத்தனை நல்லவர்களை, உயர்ந்தவர்களை நமக்குத் தெரியும்?

ஐந்தாவது, "வெருவிப் பிரிந்தேன்". தீயவர்களின் உறவை வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். ஐயோ, இவர்களின் உறவை விட்டு விட்டுப் போகிறோமே என்று வருத்தம் அல்ல.  "இவ்வளவு நாளா இவர்களோடு இருந்து  எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டேன் " என்று வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். 


சிந்தியுங்கள்.

தேவை இல்லாத உறவுகளை உதறுங்கள்.

நன்மை தரும் உறவுகளை தேடிக் கண்டு பிடியுங்கள்.

இது யாரும் அறியாத இரகசியம் ("எவரும் அறியா மறை"). பட்டர்  நமக்குச் சொல்லித் தருகிறார்.

வினைப்பயன் இருந்தால் அறிந்து கொண்டு முன்னேறுவோம்.

இல்லை என்றால் , இருக்கவே இருக்கிறது "...இது எல்லாம் சரி தான்...நடை முறைக்கு  ஒத்து வருமா " என்று பெரிய ஞானி போல பேசி விட்டு, whatsapp , youtube , facebook, டிவி ல் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போகலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_30.html 

Saturday, May 4, 2019

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும்

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும் 



அவள் மேல் அவனுக்கு தீராத காதல். அவள் பெரிய இடத்துப் பெண். இவனோ சாதாரண நடுத்தர வர்க்கம். அவள், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இவன் ஒன்றும் அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காதல் இதை எல்லாம் கேட்டுக் கொண்டா வருகிறது ? அது பாட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்து கதவை தட்டுவது மட்டும் அல்ல, வீட்டுக்குள் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து கொள்கிறது.

எப்படி சொல்வது, எப்படி  சொல்வது என்று தவிக்கிறான் அவன்.

அவளை தூரத்தில் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதுக்குள் மழை. இவள் மட்டும் என் வாழ்க்கை துணையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு காண்கிறான். அவளை காதலியாக மட்டும் அல்ல, சில சமயம் பார்க்கும் போது, அவளின் அழகு, அந்த வெகுளித்தனம், களங்கம் இல்லாத அந்த முகம்...கை எடுத்து கும்பிடலாம் என்று தோன்றும் அவனுக்கு.

அவள் மடியில் குழந்தையாக தலை வைத்து படுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பான்.

காலம் அப்படியே கனவில் கரைந்து கொண்டிருந்தது....


பாடல்

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.


துணையும் -  மனைவியை வாழ்க்கை துணை என்றார் வள்ளுவர்.  வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார். அது என்ன துணை? அவர்தான் மெயின், நாங்க என்ன துணையா என்று பெண் விடுதலையாளர்கள் போர் கொடி தூக்கக் கூடும். ஏன், கணவன் என்பவன் எங்களுக்கு துணையாக இருக்கக் கூடாதா என்றும் கேட்கக் கூடும். 

துணை எப்போது தேவைப் படும்?

பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

"துணையோடல்லது நெடு வழி போகேல்" என்பார் ஒளவையார். 

"துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ " என்பார் திருநாவுக்கரசர். 


அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ 
               அன்புடைய மாமனும் மாமியும் நீ 
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
               ஒருகுலமும் சுற்றமும் ஒருரும் நீ 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ 
               துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ 
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ 
               இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

துணை என்பது பெரிய விஷயம். 


தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 

கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின்  வேரும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 

பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. மனதில் ஆசையை தருபவள். அப்படி ஒரு அழகு. 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு.  

ஆசையை தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவள் அல்ல அவள். அதை ஒரு கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவள் அவள். 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 


பெண் என்பவள் இன்பத்தின் இருப்பிடம் மட்டும் அல்ல.

அவள் துன்பம் வரும் போது துணையாக இருப்பவள். தளர்ந்த போது தோள் தந்து தாங்குபவள். 

குழப்பம் வரும் போது தெளிவு தரும் ஞானம் தருபவள். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ளவள் பெண் என்பான் பாரதி.
தாயக, தோழியாக, காதலியாக, தாரமாக, சகோதரியாக, மகளாக எல்லாமாக இருப்பவள்  அவளே. 

திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_4.html

Monday, April 15, 2019

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே


பையன்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி அது.  அவர்கள் முதன் முதலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதுக்குள் ஆயிரம் மின்னல். விட்ட குறை தொட்ட குறையாக எங்கேயோ எப்போதோ தொடங்கிய சொந்தம் இந்தப் பிறவியிலும் தொடர்கிறதோ என்று இருவர் மனத்திலும் ஒரு மெல்லிய உணர்வு.

பேச்சு எல்லாம் இல்லை. எல்லாம் கண் பார்வைதான். அதில் ஆயிரம் கவிதைகள்.

தொடாமல் பேசாமல் அவர்கள் காதல் நாளொரு வண்ணமாய் வளர்கிறது.

அவனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம்...."அவள் உண்மையிலேயே என்னை விருப்புகிறாளா அல்லது நான் தான் ஏதோ நினைத்துக் கொண்டு அலைகிறேனா " என்று. நேரே போய் கேட்டு விட்டால் என்ன? ஒரு வேளை "அப்படி எல்லாம் இல்லை " என்று சொல்லி விட்டால் ? அந்தப் பயத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது.

ஒவ்வொரு நாளும் அவள் வரும் வழி பார்த்து காத்திருப்பான். தூரத்தில் அவள் வருவது தெரிந்தால் அவன் மனதில் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரு சேர மலரும். அவள் அருகில் வர வர அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.


கண்ணை மூடி அபிராமியை நினைக்கிறார் அபிராமி பட்டர்.

அவள் முகம், அவள் கண், அவள் உதடு, அவள் நெற்றி ஒவ்வொன்றாக அவர் மனக்கண்ணில் வந்து போகிறது. அவளின் ஒவ்வொரு அவயவமும் அவ்வளவு அழகு. அவ்வளவு பிரகாசம்.

பாடல்

‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழத்துணையே’’ 


பொருள்


‘‘உதிக்கின்ற செங்கதிர் = உதிக்கின்ற சூரியன்.

உதித்தல் என்றால் இதுவரை மறைந்து இருந்தது, தெரியாமல் இருந்தது, இப்போது தோன்றுவதற்கு உதித்தல் என்று பெயர்.

சூரியன் இன்று தோன்றவில்லை. அது என்றுமே உள்ளது. இரவில் தெரியாமல் இருந்தது, இப்போது உதித்தது.

"ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்பர் கந்த புராணத்தில்.


அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.

இறைவன் என்றும் உள்ளவன். அவன் தோன்றாத தன்மையன். எனவே தான் முருகன் உதித்தான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

சூரியன் ஒளி போல் பிரகாசமாய் இருந்தது...எது ?

 உச்சித் திலகம்  = அவளுடைய உச்சியில் வைத்த திலகம்

 உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = உணர்வு உடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.

அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லி இருக்கலாம் தானே. அறிவு, மேலும் மேலும் குழப்பத்தையே தரும். உணர்வு அப்படி அல்ல. அதில் ரொம்ப குழப்பம் இல்லை.


 மாதுளம் போது = மாதுளை மொட்டு

மலர்கமலை = தாமரை மலர்

துதிக்கின்ற மின் கொடி =   வணங்கத்தக்க மின்னல் போன்ற கொடி

எவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைப்பவள். மின்னல் அடிக்கும் நேரத்தில். எனவே மின் கொடி

மென்கடிக் = மென்மையான வாசனை கலந்த

குங்கும தோயமென்ன =குங்கும நீர் போல

விதிக்கின்ற மேனி = விளங்குகின்ற மேனி

அபிராமி  = அபிராமி

என்தன் = என்னுடைய

விழுத்துணையே’’ = சிறந்த  துணையே


உதிக்கின்ற செங்கதிர் 
உச்சித் திலகம் 
மதிக்கின்ற மாணிக்கம் 
மாதுளம் பூ 
குங்குமம் 

எல்லாம் சிவப்பு மயம். அவள் சிவந்த மேனியள். 

அம்பாளை பலர் பச்சை நிறம் என்று சொல்லுவார்கள், கறுப்பு நிறம் என்று சொல்லுவார்கள். 

பட்டர் சிவந்த மேனியாக பாக்கிறார். கண்ணை ஒரு நிமிடம் மூடிப் பாருங்கள். 

சிவப்பும், ரோஸ் கலரும் கண்ணுக்குள் குழைந்து ஓடுவதை காண்பீர்கள். 

அப்படிப்பட்ட அவள், என்னுடையவள். எனக்கு வழி காட்டுபவள் என்கிறார் பட்டர்.

"விதிக்கின்ற மேனி, அபிராமி, "எந்தன்" விழுத் துணையே"

என்னுடைய துணை அவள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். 

"விதிக்கின்ற மேனி , அபிராமி, "நமக்கு" விழுத் துணையே"

என்று சொல்லவில்லை. 

அவ்வளவு அன்யோன்யம்.



Saturday, July 28, 2018

அபிராமி அந்தாதி - திரிபவராம்

அபிராமி அந்தாதி - திரிபவராம் 



எதற்காக பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இந்த வாழ்வின் நோக்கம் என்ன? அர்த்தம் என்ன? இவ்வளவு இன்பம், துன்பம், சுகம், துக்கம், சண்டை, சச்சரவு, நேசம், பாசம், அடி தடி, கருணை, காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், என்று இவை எல்லாம் எதற்காக?

நமக்கு முன்னால் எவ்வளவோ பேர் பிறந்து, வளர்ந்து , இறந்தும் போனார்கள். அவர்கள் செய்ததுதான் என்ன? சாதித்தது என்ன? நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? அப்படியே சாதித்தாலும் அதனால் என்ன ஆகி விடப் போகிறது?

நாம் ஒரு புதிதாக ஒரு இயந்திரத்தைப் பார்க்கிறோம்.  நமக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தால் ஏதோ ஒரு இயந்திரம் போல இருக்கிறது. ஆனால், அது என்ன செய்யும், எப்படி செய்யும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.

எப்படி கண்டு பிடிப்பது ?

அந்த இயந்திரத்தை  செய்தவனை பார்த்து கேட்கலாம் "இது என்ன மாதிரி இயந்திரம், இது எப்படி வேலை செய்யும்? எதற்காக இதை செய்தாய்?" என்று கேட்கலாம்.

ஒருவேளை, அவன் "இது எதுக்காக செய்தேன் என்று எனக்குத் தெரியாது. சும்மா பொழுது போகல. என்னத்தையோ சேர்த்து வைத்தேன். அவ்வளவுதான். ஒரு பெரிய நோக்கம் எல்லாம் இல்லை " என்று சொன்னால்  நாம் என்ன செய்வோம்? சரி தான், இந்த இயந்திரம் ஏதோ வேலை செய்கிறது. அதற்கென்று ஒரு நோக்கமும் கிடையாது என்று நினைத்துக் கொள்வோம் அல்லவா ?

அது போல,

நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று நம்மை படைத்தவனை போய் அபிராமி பட்டர் கேட்டார் ...அதற்கு அவன் சொன்னான் "பெரிய அர்த்தம் எல்லாம் இல்லை. சும்மா விளையாட்டுக்கு செய்தேன் அவ்வளவுதான் " என்று.

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மட்டும்தான். வேறு பெரிய நோக்கம் எல்லாம் கிடையாது. போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பாடல்


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் 
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு 
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென் 
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு  நகையுடைத்தே.


பொருள்

ஏத்தும் அடியவர் = போற்றும் அடியவர்கள்

ஈரேழ் உலகினையும் = பதினான்கு உலகையும்

படைத்தும் = படைத்து

காத்தும் = காத்து

அழித்தும் = அழித்து

திரிபவராம் = திரிபவராம்

கமழ் பூங்கடம்பு = மணம் வீசும் கடம்ப பூவின் மாலையை

சாத்தும் = அணிந்து இருக்கும்

குழல் = குழலை (தலை முடி) உடைய

அணங்கே = பெண்னே (அபிராமியே)

மணம் நாறும் = மணம் வீசும்

நின் = உன்

தாளிணைக்கு = தாள் + இணைக்கு = இணையான இரண்டு திருவடிகளுக்கு

கென் = என்

நாத்தங்கு = நா+ தங்கு = நாவில் தங்கும்

புன்மொழி = மோசமான வார்த்தைகள்

ஏறிய வாறு = சென்று அடைந்தது எவ்வாறு ?

நகையுடைத்தே = ஒரே சிரிப்புக்கு இடமாக இருக்கிறது. நகைக்கும் படி இருக்கிறது.


ஒருவன் வேலை வெட்டி இல்லாமல், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால், "பாரு வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுத்திக்கிட்டு திரிகிறான்" என்று சொல்லுவார்கள்.

திரிதல் என்றால் ஒரு நோக்கமும் இல்லாமல் காரியம் செய்தல்.


இறைவன், இந்த உலகை படைத்தும், காத்தும், அழித்தும் செய்யும் செய்கைக்கு ஒரு நோக்கமும் இல்லை.

"படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்"

அவனுக்கே ஒரு நோக்கமும் இல்லை என்றால், உங்களுக்கு எங்கிருந்து ஒரு நோக்கம் வருகிறது?  விட்டுத் தள்ளுங்கள்.

சரி, இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இந்த உலகை படைத்து, காத்து, அழித்து செய்யும் செயலுக்கு ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லி விட முடியுமா ?


நல்ல கேள்வி. முடியாதுதான்.

வேறு எங்காவது இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்ப்போம்.

கம்ப இராமாயணம். மிதிலை நகர். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருப்பது மட்டும் அல்ல, அழகாகவும் நடப்பார்களாம். பெண்களின் நடை அழகுக்கு அன்னப் பறவையை  உதாரணம் சொல்லுவார்கள். ஆனால், மிதிலை நகர் பெண்கள் அன்னப் பறவையை விட அழகாக நடக்கிறார்கள். இதனால், அந்த ஊர் அன்னப் பறவைகளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியாவது  தங்கள் நடை அழகை சரி செய்ய வேண்டும் என்று அவை எவ்வளவோ முயன்றன. முடியவில்லை. வெறுத்துப் போய் , கால் போன போக்கில், ஒரு நோக்கம் இல்லாமல் "திரிய" ஆரம்பித்து விட்டன.


சேலுண்ட ஒண்க ணாரின் திரிகின்ற செங்கால் அன்னம் 
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை 
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த 
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா ராட்டும் பண்ணை

அன்னங்கள் திரிந்தன. ஒரு நோக்கமும் இல்லாமல்.

அது மட்டும் அல்ல, கம்பர் சொல்கிறார்,  இறைவன் இந்த உலகை படைப்பதும் , காப்பதும், அழிப்பதும் ஒரு விளையாட்டு என்கிறார்.

விளையாட்டு என்றால் என்ன ? ஒரு தீவிர நோக்கம் இல்லாதது. சும்மா ஒரு பக்கம் பந்தை போடுவார்கள், இன்னொரு பக்கம் அடிப்பார்கள். அதில் என்ன பெரிய   காரியம் நடக்கிறது. ஒன்றும் இல்லை.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே

இறைவன் செய்யும் இந்த வேலை ஒரு விளையாட்டு. பெரிய காரியம் ஒன்றும் கிடையாது.

நீங்களும் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். எதற்கு இவ்வளவு தீவிரம் (seriousness ), tension , anxiety , மன அழுத்தம், போட்டி, பொறாமை, ஏமாற்றம் எல்லாம் ?

நெகிழ விடுங்கள். விளையாட்டாக எடுங்கள். எல்லாம் இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/07/blog-post_28.html





Friday, June 8, 2018

அபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி

அபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி 


ஒரு விவசாயி தன் நிலத்துக்கு நீர் வேண்டும் என்று கிணறு தோண்டினான். ஒரு 25 அடி தோண்டியிருப்பான், நீர் வரவில்லை . சரி, இங்கே நீர் இல்லை போல் இருக்கிறது என்று முடிவு செய்து , தோண்டிய கிணற்றை மூடி விட்டு, மற்றொரு மூலையில் சென்று தோண்டத் தொடங்கினான். அங்கு ஒரு 25 அடி தோண்டிய பின், அங்கும் நீர் வரவில்லை என்று அந்தக் கிணற்றையும் மூடி விட்டு இன்னொரு மூலையில் தோண்டினான். இப்படி நாலு இடத்தில் தோண்டிய பின்னும் நீர் வரவில்லை.

அப்போது அங்கே ஒரு துறவி வந்தார். அவர் அந்த விவசாயியிடம் , "ஏனப்பா இவ்வளவு கவலையாக இருக்கிறாய் " என்று கேட்டார்.

அதற்கு அவன் "ஐயா, நீர் வேண்டி நாலு இடத்தில் கிணறு தோண்டினேன். ஒரு இடத்திலும் நீர் கிடைக்கவில்லை ...என்ன செய்யவது என்று தெரியவில்லை...அதனால் கவலையாக இருக்கிறேன் " என்றான்.

அதற்கு அந்த துறவி சிரித்துக் கொண்டே சொன்னார், நீ ஒரே இடத்தில் தோண்டி இருந்தால் அம்பது அல்லது அறுபது அடியில் நீர் கிடைத்திருக்கும். நீ நாலு இடத்தில் 100 அடி தோண்டியும் நீர் கிடைக்காததன் காரணம் நீ உன் முயற்சியை சிதற அடித்ததனால் " என்றார்.

நாமும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நாள் தேவாரம், ஒரு நாள் திருவாசகம், இன்னொரு நாள் கீதை, மற்றொரு நாள்  திவ்ய பிரபந்தம், அப்புறம் அதற்கு உரை, சொற்பொழிவு என்று மரம் தாவும்  குரங்காய் அலைந்து கொண்டிருக்கிறோம்.

அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்று பட்டினத்தடிகள் சொன்னது போல அலைந்து கொண்டு இருக்கிறோம்.

எதிலும் ஒரு நம்பிக்கை இல்லை. விடா முயற்சி இல்லை.


அபிராமி பட்டர் உருகுகிறார்.

"அபிராமி, உன் பெயரைச் சொன்ன ஒரு நிமிடத்தில் என் மனம் உருகி விட்டது. உன் பாதத்தையே என் மனம் பற்றிக் கொண்டு இருக்கிறது. நீ என்னை உன் வழியில் கொண்டு செல்ல அடிமையாக ஏற்றுக் கொண்டு விட்டாய்.  நீயே வந்து என்னை ஏற்றுக் கொண்டபின் , நான் எதற்கு மற்றவர் கருத்தை கேட்டு குழம்பப் போகிறேன். கேட்க மாட்டேன்.  உன்னைத்தான் அனைத்து தேவர்களும் போற்றுகிறார்கள். உனக்கு மேலே ஒரு கடவுள் இல்லை "

என்று பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்.

பாடல்

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே


பொருள்

பதத்தே = ஒரு வார்த்தையில்

உருகி = உருகி. மனம் உருகி

நின் பாதத்திலே = உன் திருவடிகளில்

மனம் பற்றி = மனம் பற்றி

உந்தன் = உன்னுடைய


இதத்தே = திருவுளப் பாடிய

ஒழுக = நான் வாழ

அடிமை கொண்டாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்

இனி யான் = இனிமேல் நான்

ஒருவர் = மற்றவர்

மதத்தே மதி மயங்கேன் = மாதங்களில் மதி மயங்க மாட்டேன்

அவர் போன வழியும் செல்லேன் = அவர் போகின்ற வழியில் செல்லவும் மாட்டேன்

முதல் தேவர் = மூல தேவர்கள்

மூவரும் = மும் மூர்த்திகள்

யாவரும் = அனைவரும்

போற்றும் = போற்றும்

முகிழ்நகையே = மலரும் சிரிப்பை உடையவளே


பாட்டு வேண்டாம், பூஜை வேண்டாம், ஒன்றும் வேண்டாம்..."அபிராமி" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்...மனம் அப்படியே உருகி விடுகிறது.  ஒரே ஒரு பதம்  போதும்.

மனம் உருகி ஓடி , அவள் பாதங்களில் சென்று அடைந்து விடுகிறது. நதி நீர் கடலை செண்டு அடைவதைப் போல.

ஒரே கடவுள் - அபிராமி.  அவ்வளவுதான். வேறு எங்கும் மனம் செல்லாமல் அவளிடமே  தஞ்சம் அடைந்து விட்டார்.

எவ்வளவு சுகம்.  தாயின் தோளில் தூங்கும் குழந்தையைப் போல...ஒரு கவலையும் இல்லை. அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை.

ஒரு மானிடத் தாயின் மேல் அவள் குழந்தைக்கு அவ்வளவு நம்பிக்கை.

அபிராமியிடம் விட்டு விட வேண்டும். மதத்ததைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.

எனக்கு என் அபிராமி. அவ்வளவுதான்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_85.html

Thursday, February 22, 2018

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 


பெண் !

பெண் என்பவள் இயற்கையின் ஒரு உன்னதம்.

ஆணால் புரிந்து கொள்ளவே முடியாத புதிர். ஒன்றும் அறியாத வெகுளிப் பெண்ணாக திருமணம் ஆகி கணவன் வீடு வருவாள். பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண். புகுந்த வீட்டில் , தன் ஆளுமையை நிலை நிறுத்துவாள்.

கணவன் பார்ப்பான்....

ஒரு சமயம் இளம் பெண்ணாக, கூச்சம், நாணம் நிறைந்த பெண்ணாக காட்சி தருவாள்.

அவன் உடல் நலம் குன்றி படுத்து விட்டால், பத்து அம்மா செய்யாததை அவள் ஒருத்தி செய்வாள்.

சரி, இவ்வளவு பொறுமையும், மன உறுதியும் உள்ள பெரிய பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்தாள் , ஒன்றும் இல்லாததற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கவலைப் படுவாள்.

ஒரு கணம் மகளாக இருப்பாள். மறு கணம் மனைவியாக. இன்னொரு கணம் தாயாக. சில நேரம் தமக்கையாக. தோழியாக.

நிறம் மாறிக் கொண்டே இருப்பாள்.

அவளை என்ன என்று நினைப்பது. தாயென்று நினைத்து கும்பிடுவதா ? தாரம் என்று நினைத்து அணைப்பதா ? மகள் என்று நினைத்து கொஞ்சுவதா ? தோழி என்று நினைத்து பட்டும் படாமல் சற்றே விலகி நிற்பதா ?

விடை தெரியாத புதிர் அவள்.

அவள் எப்படி இருக்கிறாளோ அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதுதான்  ஆணுக்கு சிறந்த வழி.

அவள் தாயானாள் , பிள்ளையாக மாறு.

அவள் தாரமானாள் , கணவனாக மாறு.

அவள் மகளானாள் , தகப்பனாக மாறு.

அவள் காதலியானால், காதலனாக மாறு.

அவள் ஒரு நிலையி இருப்பது இல்லை.

அபிராமி பட்டர் பார்க்கிறார். அபிராமி, எப்படி பட்டவள் என்று. அவருக்குப் புரியவில்லை. ஒரு சமயம் சிவனை விட மூத்த பெண்ணாக தெரிகிறாள். இன்னொரு முறை விஷ்ணுவுக்கு இளையவளாகத் தெரிகிறாள்.

பெண் அப்படித்தான்.

பாடல்

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


பொருள் 


பூத்தவளே புவனம் பதினான்கையும் = புவனம் பதினான்கையும் தோற்றி வித்தவளே. ஆண்களிடம் ஒரு வேலை சொன்னால், வேலையை விட சத்தம் அதிகமாக இருக்கும். பதினான்கு உலகத்தையும் ஒரு பூ பூப்பது போல மென்மையாக, சத்தம் இல்லாமால், தோற்றி வித்தாள்.


பூத்தவண்ணம் காத்தவளே = அந்த உலகங்களை காக்கிறாள். அதுவும் , எப்படி தோற்றுவித்தாளோ அதே மாதிரி காக்கிறாள். பூத்த வண்ணம் காக்கிறாள்.


பின் கரந்தவளே = அவற்றை பின்னாளில்  மறைத்து அருளுகிறாள்

கறைகண்டனுக்கு மூத்தவளே = கழுத்தில் கறை உள்ள சிவனுக்கு மூத்தவளே. உண்மையில் அவள் இளையவள். இருந்தாலும், அவள் சிவனை பராமரிக்கும் நிலையை பார்த்தால், இவள், அவனுக்கு மூத்தவள் போலத் தெரிகிறாள்.


என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே =  என்றுமே மூப்பு அடையாமல் இருக்கும் திருமாலுக்கு இளையவளாக இருக்கிறாள். அது எப்படி முடியும்.

சிவனுக்கு மூப்பு. திருமாலுக்கு இளையவள்.

அது தான் பெண்.


மாத்தவளே = மா தவம் உடையவளே

உன்னை அன்றி =   உன்னைத் தவிர

மற்றோர் தெய்வம் = வேறு ஒரு தெய்வத்தை

வந்திப்பதே = வணங்குவது இல்லை

பெண் அனைத்துமாக இருக்கிறாள்.

எல்லா பெண்களும் அபிராமியின் கூறுகள்தான்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_22.html

Monday, September 19, 2016

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு


பாடல்

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

பொதுவாக எல்லா பாடல்களுக்கும் முதலில் கொஞ்சம் முகவுரை எழுதிவிட்டு பின் பாடலும், பொருளும் எழுதுவது என் வழக்கம்.

அபிராமி அந்தாதி மட்டும் விதி விலக்கு . இவ்வளவு அழகான , உணர்ச்சிமயமான பாடலை முதலில் நீங்கள் படித்து விடுங்கள். பொருள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

அபிராமி அந்தாதிக்கு பொருள் எழுதுவது என்பது அதை அவமதிப்பதாகவே கருதுகிறேன். அது அதுதான். அதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் ?

இருந்தும், ஒரு சேதி சொல்ல ஆசை.

முதலில் பொருள் ,பின்னர் சேதி

சிறக்கும் = சிறந்து கொண்டே இருக்கும்

கமலத் = தாமரை மலரில் இருக்கும்

திருவே = திருமகளே

நின் சேவடி =   உன்னுடைய செம்மையான திருவடிகளை

சென்னி = தலையில்

வைக்கத் = வைக்க

துறக்கம் தரும்= துறக்கம் தரும்

நின் துணைவரும் = உன் கணவரும்

நீயும் = நீயும்

துரியம் அற்ற = துரியம் அற்ற

உறக்கம் தர வந்து = உறக்கத்தை தர வந்து

உடம்போடு = உடலோடு

உயிர் உறவு அற்று = உயிர் தன் தொடர்பை அறுத்துக் கொண்டு

அறிவு = அறிவானது

மறக்கும் பொழுது  = மறக்கும் போது

என் முன்னே வரல் வேண்டும் = என் முன்னே வரவேண்டும்

வருந்தியுமே = உனக்கு அது கடினமாக இருந்தால் கூட

அது என்ன துறக்கம், துரியம் ?

மனிதர்களை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்.

உடல் சார்ந்தார்கள். உணவு, புலன் இன்பம், உறக்கம், இதுதான் இவர்களுக்குத்  தெரியும். இதுதான் இவர்களுக்குப் பிரதானம். தன்    சுகம்.  அது உடல் சார்ந்த சுகம்.  உடலை வைத்துத்தான் எல்லாம் அவர்களுக்கு. விலங்குகளுக்கு சற்று மேலே. அவ்வளவுதான்.

அதை அடுத்த உயர்ந்த நிலை,  அறிவு சார்ந்த நிலை. சிந்தனை, யோசனை, என்பது இவர்களின்   பிரதானம். அவர்கள் தங்களை அறிவால் செலுத்தப் படுபவர்களாக  காண்பார்கள்.  They identify themselves with intelligence.  எதையும் அறிவு பூர்வமாக   அணுகுவார்கள்.  இசை, இலக்கியம், ஓவியம், கணிதம், அறிவியல், தர்க்கம்,  நடனம், என்று இவர்களின்  உலகம்    விரியும்.

அதை அடுத்த உயர்ந்த நிலை, மனம் சார்ந்தவர்கள். உணர்ச்சியை மையமாக  கொண்டவர்கள். அன்பு, காதல், பக்தி, பாசம், உறவு என்பது  இவர்கள் உலகம்.

யாரும் ஒரு நிலையில் மட்டும் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு நிலையில்  அதிகமான நேரம் இருப்பார்கள். ஒரு அறிவியல் அறிஞர் கூட  காதலிக்கலாம். ஆனால் அந்த உணர்வு சார்ந்த நேரங்கள் மிக   மிக கொஞ்சமாக இருக்கும்.

இந்த நான்கு நிலைகளையும் கடந்த நிலை துரிய நிலை. துரிய என்றால்  நான்காவது.

அது என்ன நான்காவது ? அது எதை சார்ந்து நிற்கும் ? தெரியாது. அதனால் தான்   அதை "நாலாவது நிலை " என்றார்கள்.

இந்த மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

உடல், அறிவு, மனம் என்ற மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

அந்த நிலையில்  கூட தெரியாது.  கடவுள் தெரிய வேண்டும் என்றால்  அறிவு   வேலை செய்ய வேண்டும்.

இது கடவுள் என்று  அறியும் அறிவு வேண்டும்.

துறக்க நிலை இந்த மூன்றையும் கடந்த நிலை.

நான் அந்த நிலை அடையும் போது , அபிராமி நீயே வந்துரு. உன்னை நினைக்க வேண்டும், கூப்பிட வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது.   எனவே,இப்பவே சொல்லி  வைக்கிறேன். அந்த சமயத்தில் நீயும் உன் கணவரும் வந்து விடுங்கள்.

நீங்கள் வந்தாலும் நான் அடையாளம் கண்டு கொள்ள மாட்டேன்.உனக்கு அது  ஒரு சிக்கல் தான்.  வருத்தம் தான். இருந்தாலும்   வந்துரு.

என்று பதறுகிறார் பட்டர்.


(தொடர்ந்தாலும் தொடரும் )

Saturday, March 12, 2016

அபிராமி அந்தாதி - பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

அபிராமி அந்தாதி -  பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.


பாடல்

தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு 
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?-- 
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள் 
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

பொருள்

தைவந்து = மலர்களோடு வந்து (தைத்த மலர்கள் என்று கூறுகிறார்கள்)

நின் = உன்

அடித் தாமரை = திருவடியாகிய தாமரையில்

சூடிய சங்கரற்கு  = தலையை வைத்த சங்கரற்கு

கைவந்த தீயும் = கையில் உள்ள தீயும்

தலை வந்த ஆறும் = தலையில் உள்ள கங்கை ஆறும்

கரந்தது எங்கே? = மறைந்தது எங்கே

மெய் வந்த நெஞ்சின் அல்லால் = உண்மை ஒளி விடும் மனதைத் தவிர

ஒருகாலும் = ஒருபோதும்

விரகர் தங்கள் = தீயவர்கள்

பொய்வந்த நெஞ்சில் = பொய் இருக்கும் மனதில்

புகல் அறியா = செல்லத் தெரியாத

மடப் பூங் குயிலே = பூங்குயிலே

பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம் நான் எனது என்ற எண்ணங்களே.

எனக்கு வேண்டும் என்ற ஆசை. என் பொருள், என் மனைவி, என் சொத்து , என் கார் , என் வீடு என்ற பெருமிதம்.

அவை கை விட்டுப் போய் விடுமோ என்ற பயம்.

என்னை விட மற்றவன் அதிகம் வைத்து இருக்கிறானே என்ற பொறாமை, ஆதங்கம்.

என் திறமை மேல் கொண்ட பெருமிதம். அதற்கு ஒரு பங்கம் வரும் போது வரும் அவமானம்.

என்று நமக்கு வரும் அத்தனை துபங்களுக்கும் காரணம் நான், எனது என்ற அகங்காரம், மமகாரங்களே.

இவற்றை எப்படி விடுவது ? இவற்றைத் தாண்டி எப்படி போவது ?

மனிதன் எத்தனையோ வழிகளை தேடிகொண்டிருக்கிறான்.

சிலர் மதுபானம் அருந்தி தன்னை மறக்கிறார்கள்.

சிலர் சினிமா, நாடகம், விளையாட்டு என்று அதில் மூழ்கி தங்களை மறக்கிறார்கள்.

சிலர் படிப்பு, இசை, ஊர் சுற்றுவது என்று தன்னை மறக்கிறார்கள்.

அனைத்து முயற்சிகளும் "நான்" என்ற இந்த அகங்காரத்தை இழந்து, அதன் சிறையில் இருந்து  விடுபடுவதுதான்.

தன்னை மறப்பது பெரிய சுகம்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரிநாதர்.

சரி அதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?

அபிராமியைக் காண சிவன் வருகிறான்.

அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறான். அவளுடைய திருவடிகளை   தன் தலையில் சூடிக் கொண்டான்.

அந்த சமயத்தில், அவன் தன்னையே இழக்கிறான்.

அவன் கையில் உள்ள தீயும், தலையில் உள்ள கங்கையும் மறைந்து போய் விட்டது என்கிறார் பட்டர்.

நான் பெரிய ஆள், கங்கையை தலையில் கொண்டவன், தீயைக் கையில் கொண்டவன் என்பவை போய் விட்டது.

அவளில் அவன் கரைந்தான்.

தான் என்ற ஒன்று இல்லாமல் சிவம் சக்தியில் கரைவதுதான் உலகம் முழுதும் நடக்கும் லீலை.

கைலாய காட்சி கண்டபின் நாவுக்கரசர் உலகம் முழுவதும் ஆண் சக்தியும் பெண் சக்தியும் பின்னி பிணைந்து கிடப்பதைக் காண்கிறார். அதைத் தவிர வேறு எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை.

ஆண் யானையும், பெண் யானையும், (மடப் பிடியோடு களிறு) வருவன கண்டேன், கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன் என்று வியக்கிறார்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.

இதில் இன்னும் ஆழமான கருத்து என்ன என்றால்,

இந்த ஆணும் பெண்ணும்  வெளி உருவங்கள் அல்ல.

நாம் ஒவ்வொருவரும் தாய் (பெண்) மற்றும் தந்தையின் (ஆண் ) கலப்பில் தான் உருவாகிறோம்.

நமக்குள் ஆணும், பெண்ணும் சரி விகிதத்தில் இருக்கிறது.

இதை அறிந்த நம்  முன்னவர்கள்,அர்த்த நாரி என்ற வடிவை படைத்துக் காட்டினார்கள். ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் கலந்த கலவை தான் என்று சொல்லும் வடிவம் அது.

நம் சமூகச் சூழ்நிலை ஆணுக்கு சில குணங்கள் என்றும் பெண்ணுக்கு சில குணங்கள் என்று வரையறத்து வைத்து இருக்கின்றது. நாம் அந்த வரையறைக்கு உட்பட்டு  வாழ்கிறோம்.

நாளடைவில், ஒரு ஆணுக்கு, அவனுக்குள் இருக்கும் பெண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அதே போல் பெண்ணுக்கும், அவளுக்குள் இருக்கும் ஆண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அழுந்திக் கிடக்கிறதே தவிர , அழிந்து போவது இல்லை.

ஒவ்வொருஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடுகிறான். பெண்ணும் அப்படியே.

உள்ளுக்குள் இருக்கும் பெண்ணோடு ஒரு ஆண் இணைவதுதான் உண்மையான திருமணம். அப்போது அந்த ஆணோ பெண்ணோ முழுமை அடைகிறார்கள். அது வரை, ஒரு பாதி இன்னொரு பாதியைத் தேடி அலைந்து கொண்டே தான்  இருக்கும்.

தேடுங்கள்,

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் பெண்ணையும்,
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும் தேடுங்கள்.

அதுதான் உண்மையான கலவி. கலப்பு. கரைதல்.

சிவன் அபிராமியோடு கரைந்தான்.

உங்கள் அபிராமியை ,உங்களுக்குள்ளேயே கண்டு பிடியுங்கள்.

(For other poems - http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_12.html )