Saturday, May 4, 2019

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும்

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும் 



அவள் மேல் அவனுக்கு தீராத காதல். அவள் பெரிய இடத்துப் பெண். இவனோ சாதாரண நடுத்தர வர்க்கம். அவள், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இவன் ஒன்றும் அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காதல் இதை எல்லாம் கேட்டுக் கொண்டா வருகிறது ? அது பாட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்து கதவை தட்டுவது மட்டும் அல்ல, வீட்டுக்குள் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து கொள்கிறது.

எப்படி சொல்வது, எப்படி  சொல்வது என்று தவிக்கிறான் அவன்.

அவளை தூரத்தில் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதுக்குள் மழை. இவள் மட்டும் என் வாழ்க்கை துணையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு காண்கிறான். அவளை காதலியாக மட்டும் அல்ல, சில சமயம் பார்க்கும் போது, அவளின் அழகு, அந்த வெகுளித்தனம், களங்கம் இல்லாத அந்த முகம்...கை எடுத்து கும்பிடலாம் என்று தோன்றும் அவனுக்கு.

அவள் மடியில் குழந்தையாக தலை வைத்து படுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பான்.

காலம் அப்படியே கனவில் கரைந்து கொண்டிருந்தது....


பாடல்

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.


துணையும் -  மனைவியை வாழ்க்கை துணை என்றார் வள்ளுவர்.  வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார். அது என்ன துணை? அவர்தான் மெயின், நாங்க என்ன துணையா என்று பெண் விடுதலையாளர்கள் போர் கொடி தூக்கக் கூடும். ஏன், கணவன் என்பவன் எங்களுக்கு துணையாக இருக்கக் கூடாதா என்றும் கேட்கக் கூடும். 

துணை எப்போது தேவைப் படும்?

பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

"துணையோடல்லது நெடு வழி போகேல்" என்பார் ஒளவையார். 

"துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ " என்பார் திருநாவுக்கரசர். 


அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ 
               அன்புடைய மாமனும் மாமியும் நீ 
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
               ஒருகுலமும் சுற்றமும் ஒருரும் நீ 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ 
               துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ 
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ 
               இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

துணை என்பது பெரிய விஷயம். 


தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 

கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின்  வேரும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 

பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. மனதில் ஆசையை தருபவள். அப்படி ஒரு அழகு. 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு.  

ஆசையை தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவள் அல்ல அவள். அதை ஒரு கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவள் அவள். 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 


பெண் என்பவள் இன்பத்தின் இருப்பிடம் மட்டும் அல்ல.

அவள் துன்பம் வரும் போது துணையாக இருப்பவள். தளர்ந்த போது தோள் தந்து தாங்குபவள். 

குழப்பம் வரும் போது தெளிவு தரும் ஞானம் தருபவள். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ளவள் பெண் என்பான் பாரதி.
தாயக, தோழியாக, காதலியாக, தாரமாக, சகோதரியாக, மகளாக எல்லாமாக இருப்பவள்  அவளே. 

திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_4.html

2 comments:

  1. "துணையும்" என்ற சொல்லுக்கு "வாழ்க்கைத்துணை" என்ற பொருள் இருக்கலாம். சும்மா "வழித்துணை" என்ற பொருளும் இருக்கலாம். அல்லவா?

    ReplyDelete
  2. மிக அழகான முறையில் , மொழி பெயர்ப்பு .வாழ்த்துக்கள்.

    ReplyDelete